Tuesday, August 8, 2017

Teerthamalai

தீர்த்தமலை....
தர்மபுரி மாவட்டம்... அரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் (அரூரில் இருந்து 16கி.மீ தொலைவில் உள்ள ஊர் தீர்த்தமலை).

மலைகளில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளத்தால் தீர்த்தமலை என பெயர் பெற்ற இடம். 

ராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.. 

இங்கு தட்சிணாமூர்த்தி கடவுளே மலை வடிவில் எழுந்தருளி உள்ளார்...
இந்த மலை லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றது ... 
ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். 

பூஜைக்காக காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது. 

ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது. அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. 

மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங்கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.
அன்று இராமரால் உருவான தீர்த்தம் இன்றுவரை நம் பாவங்களை போக்கவும் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தினசரி பூஜைகளும் உண்டு. தவிர ஆடி அமாவாசை வழிபாடு ..
மாசி மாத தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெறும் .... .

தீர்த்தங்கள் : இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும்.

அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். 

மலை மீது அமைந்துள்ள இக்கோயிலில் இந்த தீர்த்தங்களின் சிறப்பு பின்வருமாறு :

ராமர் தீர்த்தம் : 
(சிவன் கோவிலில் ராமர் பெயரால் தீர்த்தம்!)
மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. இராமனுக்காக அருளப்பெற்று இதில் ராம ஜெயம் என்று முழுகினால் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

குமார தீர்த்தம் : முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர் என புராணம் கூறுகிறது. முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

கௌரி தீர்த்தம் : 
இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும்.சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்.

அகஸ்தியர் தீர்த்தம் : அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் அல்சர் நீங்கி ஜீரண சக்தி கிடைக்கும். வயிற்று வலியும் குணமடையும்.

அக்னி தீர்த்தம் : 
அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா அடிக்கடி சளிப்பிடித்தலும் குணமாகும்.....

மலை உச்சியில் இருந்து 24 மணி நேரமும்..365 நாட்களும் தொடர்ந்து தீர்த்தம் கொட்டிக் கொண்டே இருக்கிறது.. பாறைகளில் சுனை நீர் சுரப்பது இயற்கை.. ஆனால் இங்கு 1 இன்ச் பைப் அளவு தீர்த்தம் 25 அடி உயரத்தில் இருந்து கொட்டி கொண்டே இருக்கிறது.

பலர் இந்த தீர்த்தம் எங்கு இருந்து உற்பத்தி ஆகின்றது என கண்டறிய முயன்றும் முடியவில்லை .

இந்த 5 தீர்த்தங்களிலும் குளித்து இறைவனை வழிபட்டால் ..
தீராத நோய்களும் குணமாவதாக ஐதிகம்.

1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது. 

அருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது..

முகவரி :
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்,
தீர்த்தமலை- 636906,
தர்மபுரி மாவட்டம்.
கோயில் தொலைபேசி: +91-4346 -253599.

தீர்த்தமலையின் மகத்துவத்தை,  ஊரின் பெருமையை உலகறியச் செய்வோம்.
(நன்றி: தினமலர்.)

No comments:

Post a Comment