Tuesday, August 8, 2017

Apatsahayeswarar temple Thenkurangaduturai

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
   🌺 *தல தொடர் 49.* 🌺
🌺 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.* 🌺
(நேரில் சென்று தரிசித்ததைப் போல....)
★★★★★★★★★★★★★★★★★★★★★★
🌺 *தென் குரங்காடுதுறை.* 🌺
(ஆடுதுறை.)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* ஆபத்சகாயேஸ்வரர்.

*இறைவி:* பவளக் கொடியம்மை, பிரபாளவல்லி.

*தலமரம்:*பவள மல்லிகை.

*தீர்த்தம்:*சகாய தீர்த்தம், சூரிய  தீர்த்தம்.

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களுள் 31-வது தலமாக இத்தலம் போற்றப்பெறுகின்றது.

*'குளிரும் புனல்சூழ் குரங்காடுதுறை கோயில்'* என்று அப்பர் பெருமான் அகம் குளிரப் பாடிய தலம் தென் குரங்காடுதுறை எனும் ஆடுதுறை ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் கோயிலாகும். 

*இருப்பிடம்:*
கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

தென்னலக்குடி (திருநீலக்குடி) யிலிருந்தும் பாதை இருக்கிறது.

ஆடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் சாலையில் சென்றால் சாலையோரத்தில் குளம் தெரியும். 

அந்தக் குளத்தை ஒட்டிச் செல்லும் இடப்புறமாகத் திரும்பினால் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் கோடியில் கோவிலுள்ளது.

*கோவில் அமைப்பு:*
ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலையுடன் காணக்கிடைக்க,  *சிவ சிவ* எனச் சொல்லி வணங்கிக் கொள்கிறோம்.

கோயில் இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

நந்தியை பணிந்தெழுந்து வணங்கிக் கொண்டோம். 
பலி பீடத்தின் முன்பும் வேண்டுதலை வைத்தோம்.

முன்பாக மண்டபத்தில் தலத்தின் தலப்பதிகக் கல்வேட்டைக் காணமுடிகிறது.

சற்று தள்ளி புராண மண்டபம் உள்ளது.

வாயிலைக் கடக்கிறோம். உள் நுழைகிறோம். அங்கே பிரகாரத்தில் நால்வர் பெருமான்களைக் காண்கிறோம். வணங்குகிறோம்.

மேலும், விநாயகர், சிவலிங்கம், அம்பாள், சுக்கிர்வன் அமைந்த சந்நிதியும், விஸ்வநாதர், மயில் வாகனர், கஜலட்சுமி, நடராஜர்சந்திதி, சனீஸ்வரன்,  சூரியன், சந்திரன், நவக்கிரகம் ஆகியோரின் காட்சியருள்களைக் கண்டு கை தொழுது கொண்டோம்.

நேராக மூலவரைக் காட்சியருள் கிடைக்க, கண்ணிமை விலகாது அருளழகைக் கண்டு வணங்கி நகர்கிறோம்.

கோஷ்ட மூர்த்தங்களான நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

நாங்கள் சென்றிருந்த சமயம் இங்கிருக்கும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷோகம் நடைபெற ஆனந்தார்தமாக பொறுமையாக நின்று அபிஷோக காட்சியருளைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

அதற்கடுத்ததான இரண்டாவது வாயிலுக்கு முன்பாக நடந்து வரும்போது, அங்கே தெற்கு பார்த்த திசையுடன் அருள்தரு பவளக்கொடியம்மையைப் பார்த்து கண்குளிர வணங்கினோம்.

அம்பாள் சந்நிதிக்கு எதிராக எழுந்தருளியிருக்கும் மூத்த பிள்ளையாரை அவருக்குண்டான முறையில் வணங்கினோம். 

தொடர்ந்து செல்ல, எதிரில் தெரியும் மேல் மாடப் பத்தியில் சுக்ரீவன், இறைவனை வணங்கும் கோலக் காட்சியைத் தரிசித்தோம்.

கருவறை வாயிலில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் புடைச் சிற்பங்களான இரண்டு துவார பாலகர்களையும் காண்கிறோம்.

தெற்குப் புறத்தில் பஞ்சலோகத்தாலான அமைந்திருக்கும் நடராசர் திருமேனியையும், சிவகாமி சுந்தரியம்மையையும், சோமாஸ்கந்தர் ஆகியோரையும் திருவுருவங்களைக் கண்டு வணங்கி  நகர்ந்தோம்.

இதனின் தென்புறத்தில், இக்கோவிலைக் கற்கோவிலாகக் கட்டிய கண்டராதித்தியர் தேவியரான செம்பியன்மாதேவி, ஈசனை வழிபடுவதாக புடைச் சிற்பத்தைக் கண்டு ஆணந்தமானோம்.

முருகனை வணங்கித் திரும்பிய போது, முனிவர்கள் வழிபட்டத் திருமேனிகள் காணக் கிடைக்க அவர்களையும் கண்டு கை தூக்கி தொழுதோம்.

நடராசர் சபைக்கும் மேற்கான திசையில் சுவர்ண பைரவர், சூரியன் சனீஸ்வரர், பாணலிங்கம், அரதத்தர் ஆகியோரின் உருவங்களைக் காணக்கிடைத்தது.

*தல அருமை:*
ஒரு சமயம் சுக்ரீவன் தென்குரங்காடுதுறை ஈசனை வழிபட வந்தான். அப்போது பகை காரணமாக அவனை அழிக்க வாலி வந்தான். வாலிக்கு அஞ்சிய சுக்கிரீவன் தென்குரங்காடுதுறை சிவனிடம் தன்னைக் காக்குமாறு வேண்டினான். அவனது அன்புக்கு மனமிரங்கிய சிவன் அவனை அன்னப்பறவையாக வேற்றுருக்கொள்ளச் அவனுக்குச் சகாயம் செய்தார்.

இதனால் 'ஆபத்சகாயேஸ்வரர்' என்று வழங்கப்படுகிறார். 

*தல பெருமை:*
ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் கல்லும் கரையும் படி இசை பாடிக்கொண்டிருந்தான் அனுமன். 

அப்போது அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையில் மெய் மறந்து தம் கையில் இருந்த மகதி எனும் வீணையைக் கீழே வைத்தார். 

நேரம் அதிகமானதால் வீனணயின் மீது பனி மூடியது. அதனை எடுக்க முடியாமல் அவதியுற்ற நாரதர் சினத்துடன் அனுமனிடம், *'நீ உன் இசையை மறப்பாயாக'* என்று சபித்தார். 

தன் இசையை மறந்த அனுமன் அந்த சாபம் நீங்க வழி தேடினான். சுக்ரீவன் வழிகாட்டுதலால் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை அனுதினமும் வழிப்பட்டான்.

ஈசன், அவன் மறந்துபோன இசைஞானத்தை அவனுக்கு மீண்டும் அருளினார்.

ஸ்ரீநடராஜப் பெருமான் தில்லை பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடியருளினார். அந்த நடனத்தைக் கோடானுகோடி தேவர்கள் கண்ணுற்று மகிழ்ந்தனர். ஆனால், அகத்தியரும் சில முனிவர்களும் இந்நடனத்தைக் காணாது வருந்தினர். 

அதோடு பல தலங்களை வழிபட்டு தென்குரங்காடுதுறை வந்த அகத்தியர், இத் தலத்து இறைவனிடம் வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த பெருமான் ஆனந்த நடனத்தை இத்தலத்திலேயே ஆடியருளினார். இதனால் இப்பகுதிக்கு  *'நடராஜபுரம்'* என்ற பெயரும் வழங்கப்படுது உண்டு. 

இறைவன் ஆனந்த நடனமாடியதற்கு அடையாளமாக கோயில் தெற்குப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் அகத்தியர், நடராஜர் திருவுருவப்புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.

ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் கோபுரமும், விமானமும் சிறியதாயினும் சிறப்புடையன. அகத்தியர்க்காக நடனம் ஆடிய ஆடல்வல்லான் பேரழகுடன் சுவாமி சந்நதிக்கு அருகில் அருள்பாலிக்கின்றார். அப்பெருமானின் திருவாசி மிகுந்த வேலைப்பாடுகளுடன் அழகாக காட்சி தருகின்றன.

காவிரித்தாய் வளமாக்கும் திருவூர்கள் நிறைந்த சோழநாட்டின் தேவாரத் தலங்களுள் தென்குரங்காடுதுறை அமையப் பெற்றுள்ளது. 

தற்போது இத்தலம் ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. 

சோழதேசத்தில் இரண்டு குரங்காடுதுறைகள் உண்டு. ஒன்று காவிரியின் வடகரையின் மீது திருவையாறுக்கு அருகில் உள்ள வடகுரங்காடுதுறை; மற்றொன்று ஆடுதுறை எனப்படும் இந்த தென்குரங்காடுதுறை.

எதிரியின் பாதிபலத்தைப் பெற்றுவிடும் வரம் பெற்ற வாலிக்கு பயந்து, இத்தலத்தில் தஞ்சம் புகுந்த சுக்ரீவன் இத்தல இறைவனை வழிபட்டதால் இப்பதி குரங்காடுதுறை.

அகத்தியர் இங்கே சொர்ண பைரவர் திருவுருவத்தினை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வரங்கள் பல பெற்று மகிழ்ந்தார். 

அதோடு, உடன் வந்த ஏனைய ரிஷிகளும் இறைவனிடம் திருநடனக் காட்சியை வேண்டிட, அதன்படி ஈசன் தன் நடனக் கோலத்தை அவர்களுக்கு காட்டியருளினார். அதனால் இவ்விடம் நடராஜபுரம் என போற்றப்பட்டது. தென் பிராகார கோஷ்டத்தில் அகத்தியர் மற்றும் நடராஜப் பெருமானின் கற்சிற்பங்களை தரிசித்து மகிழலாம்.

திருமங்கலக்குடியில் வாழ்ந்து வந்த ஒரு பெண், ஆபத்சகாயர் மீது அளவற்ற பக்தி கொண்டு வழிபட்டு வந்தாள். நிறைமாத கர்ப்பிணியான அவள் ஆடுதுறை அரனை தரிசித்து விட்டு திரும்புகையில் காவிரியில் வெள்ளம் பெருகியது. ஓடக்காரனும் இல்லை. ஊர் செல்ல இயலாமல் மீண்டும் இத்தலம் திரும்பினாள். வலி ஏற்பட்டுத் துடித்தாள். இறைவன் தாயாகத் தோன்றி பிரசவம் பார்த்தார். சுகப் பிரசவம் ஆனது. பின் திருமங்கலக்குடி சென்று இவளது பெற்றோரிடம் தாயும் சேயும் நலம் எனக்கூறி ஆடுதுறைக்கு அழைத்துவந்து விட்டு விட்டு மறைந்தார்.

கஞ்சனூரில் வாழ்ந்த ஹரதத்தர், தினமும் கஞ்சனூர், ஆடுதுறை உட்பட ஏழு சிவாலயங்களை தரிசிப்பது வழக்கம். ஒருமுறை அவர் ஆடுதுறையை வழிபட்டு விட்டுத் திரும்புகையில் கடும் மழை பெய்தது. இருள் சூழ்ந்தது. வழியறியாது திகைத்து நின்ற அவருக்கு வயோதிகர் வடிவம் கொண்டு கையில் கோலைத் தாங்கி வழித்துணையாகச் சென்று இல்லத்தில் விட்டு வந்துள்ளார் இத்தல ஈசன்.

கண்டராதித்ய சோழன் மனைவியார் செம்பியன்மாதேவி கட்டிய பெரியதொரு கோயில் நெடுஞ்சாலைக்கு சற்றுத் தள்ளி பிரமாண்டமாக அமைந்துள்ளது.

கோயிலுக்கு முன்பு சகாய தீர்த்தக் குளம் அமைந்துள்ளது.

சுவாமி கருவறை, அகழி அமைப்புடையது. தேவ கோஷ்டத்தில் முறையான தெய்வங்களை தரிசிக்கிறோம். பிள்ளையாரின் தனி சந்நதி, நிருருதி மூலையிலும் முருகன் சந்நதி, வாயு மூலையிலும் அமைந்துள்ளன. கந்தன் ஆறுமுகப்பெருமானாக தனது இரு மனைவியரோடு அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

பின் வரிசையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், கஜலக்ஷ்மி ஆகியோர் சிலை வடிவங்களைக் காணலாம். இத்தல துர்க்கை மிகவும் விசேஷமானவள். தன்னை வந்து சரணடைவோர் தம் வினைகள் யாவையும் அகற்றி, அருள்புரிந்து காக்கின்றாள். அருகே கங்காவிஜர்ஸனமூர்த்தியின் அருட்கோலத்தை தரிசிக்கலாம்.

அறுபத்து மூவரின் கற்சிலை உருவங்களும் இங்கே பாங்குற அமையப்பெற்றுள்ளன. சொர்ணபைரவர் இங்கே விசேஷமாக உள்ளார். அகத்திய மாமுனியும் இங்கு சிலை வடிவில் அருள்கிறார்.

சோழர்கால 15 கல்வெட்டுகள் சுவாமி சந்நதியின் வெளிப்புறச் சுவரில் நிறைந்து காணப்படுகின்றன. இத்தல விருட்சமான பவழமல்லி மரம் பிராகாரத்தில் கவினுறத் திகழ்கிறது.

வாசம் மிக்க அதன் பூக்கள் ஈசனுக்கும் அம்பிகைக்கும் மிகவும் ஏற்றதாகும். இத்தல வழிபாடு வாழ்வில் வரும் பெரும் ஆபத்துகளை நீக்கவல்லது.

வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். 

இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். 

அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். 

நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். 

அடுத்தகட்டமாக அந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை வதம் செய்து அழித்த வாலி பெருமிதமாகக் குகைக்குள் இருந்து வெளிவர முயன்றான். முடியவில்லை. குகையின் வாயிலை மூடி இருந்த பெரிய பாறாங்கல்லைத் தகர்த்து எறிந்து வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சி. அரியணையில் சுக்ரீவன் இருந்தான்.

சதிசெய்து தன்னை ஏமாற்றி விட்டு சுக்ரீவன் ஆட்சியில் அமர்ந்து விட்டான் என்று தவறாக எண்ணிய வாலி சுக்ரீவனை அடித்துவிரட்டி மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அடித்து துரத்தப்பட்ட சுக்ரீவன் எங்கெங்கோ சுற்றினான். இறுதியில் இந்தத் தென்குரங்காடுதுறை தலத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரரை வணங்கினான். இந்த ஈஸ்வரனின் அருள் பெற்றான்.

பின்  எதிர்காலத்தில் கிஷ்கிந்தையின் அரசனானான். இழந்த சுகபோகங்களை மீட்டுத்தர இந்த ஈஸ்வரரை வணங்கினால் அருள் புரிவார். அனைத்தையும் பெற்றுத்தருவார்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 2-ல் இரண்டு பதிகமும்,
*அப்பர்*5-ல் ஒரே ஒரு பதிகமும், ஆக மொத்தம் மூன்று பதிகங்கள்.

தென் குரங்காடுதுறை
*சம்பந்தர்* (2ம்திருமுறை )
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.

*அப்பர்* (5ம் திருமுறை )
நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்அழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடம்
கூடு மின்குரங் காடு துறையையே!.

*கல்வெட்டுக்கள்:*
இக்கோயிலில் பதினைந்து கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கல்வெட்டுக்களில் இரண்டு கல்வெட்டுக்கள் பாண்டியருடையது.

மற்ற கல்வெட்டுக்கள் சோழர்களுடையது. சோழர் கல்வெட்டுக்களில் உத்தம சோழன், முதலாம் இராசராசன், முதற் குலோத்துங்கன்,  வீர ராசேந்திரன், இரண்டாம் இராசராசன் ஆகியோர்களுடையதாகும்.

இறைவர், திருக்குரங்காடுதுறை மகாதேவர் என்றும், இவ்வூர் முதலாம் இராசராசன் காலத்தில் தென்கரை திரைமூர் திருத்தென்குரங்காடுதுறை எனவும் வழங்கப்பட்டது.

*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூசை.

காலை 7.30 மணி முதல், பகல் 12.00 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
ஆடுதுறை அஞ்சல், 
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்- 612 101

*தொடர்புக்கு:*
நந்தகுமார். 0435-2470215
94424 25809.....944434 63119

           திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்........திருநீலக்குடி. (தென்னலக்குடி.)*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment