Thursday, July 6, 2017

Thiruvazhundur temple

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
        🌿 *தல தொடர் 56.* 🌿
🌿 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🌿
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
      🌿 *திருவழுந்தூர்.* 🌿
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*
வேதபுரீஸ்வரர். அத்யாகேசர். 

*இறைவி:* செளந்தராம்பிகை. 

*தலவிருட்சம்:*சந்தன மரம்.

*தீர்த்தம்:*வேதாமிர்த தீர்த்தம்.

*தலவிநாயகர்:* ஞானசம்பந்த விநாயகர்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள நூற்று இருப்தெட்டு தலங்களுள் இத்தலம் முப்பத்து எட்டாவது தலமாகப் பொற்றப் பெறுகின்றன.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கோமல் செல்லும் சாலையில் திரும்பி மூவலூர் தாண்டிச் சென்றால் *தேரழுந்தூர்* அடையலாம்.

மயிலாடுதுறையில் இருந்து பதினோறு கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரின் தொடக்கத்திலேயே - *"கம்பர் நினைவாலயம்"* என்னும் பெயர்ப் பலகையுள்ள இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பினால் வீதியின் கோடியில் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் அவ்வீதியின் கோடியில் ஆமருவியப்பன் ஆலயமும் (108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று) அதற்கு முன்பாகவே கம்பர் நினைவு மண்டபமும் உள்ளன. இத்தலம் சைவம் வைணவம் இரண்டிற்கும் சிறப்புடையது.

மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*கோவில் அமைப்பு:*
தேரெழுந்தூருக்குக் கிழக்கே உள்ள கீழையூர் எனுமிடத்தில் கோயில் சுமார் ஒன்னேகால் ஏக்கர் பரப்பளவில் சுற்றுப்பிராகாரங்களுடன் அமைந்துள்ளது.

இராஜகோபுரமான ஐந்து நிலைகளுடன் கானப் பெற்றதும், சிரம் மேல் கரம் உயர்த்தி  *சிவ சிவ* என வணங்கிக் கொண்டோம்.

மேற்குப் பார்த்த வண்ணமிருந்த சந்நிதிக்குள் உள்ளே நுழைந்தோம்.

உள்ளே அகலமான விசாலமான இடமிருந்து. அவ்விடத்தின் இடப்பக்கமாய் இருக்கும் திருமகுடேஸ்வரர் ஆலயத்தை அடைந்தோம்.

அவன் முன் நின்று மனமுருகத் தொழுது அவனருளைப் பெற்றுக் கொண்டோம்.

சுவாமி சந்நிதியின் வலப்பக்கமாய் நகர்ந்து வர அம்பாள் சந்நிதிக்குள் வந்து சேர்ந்தோம்.

அம்பாளை நோக்கி, நாங்கள் அவளின் கருணையருள்  பார்வைக்கு ஏங்க, அவளும் சுவாமியை பார்த்த வண்ணம் காட்சியருளிக் கொண்டிருந்தாள்.

உட்பிராகாரத்தில் செல்லும் போது,  சுப்பிரமணியர், நவக்கிரகம், ஷேத்திர லிங்கம், கடம்பவனேஸ்வரர், ஆகிய மூர்த்தங்களையும், அதனருகே இருந்த வலஞ்சுழி விநாயகரையும் தொடர்ச்சியாக வணங்கிச் சென்றோம்.

வலம் வந்த சுற்று முடியவும் உள் மண்டபத்துக்குள் நுழைந்தோம். அங்கே தலத்தினைப் பற்றிய கல்வெட்டுகளைக் கண்டோம்.

மண்டபத்தின் மேற்புரத்தில் திசைபாலகர்களின் வண்ண ஓவியங்கள் வரைந்திருந்ததை அன்னாந்து பார்த்து கழுத்து வலிக்கும் வரை அதன் அழகை கண்டு ரசித்தோம்.

சுதையாலான துவார பாலகர்கள், கோஷ்ட மூர்த்தங்களான விநாயகர், தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் கண்டு வணங்கி நகர்ந்தோம்.

*தல அருமை:*
சம்பந்தர் குழந்தையாக இந்த ஊருக்கு வந்த போது இரண்டு திசைகளிலும் இரண்டு கோபுரங்கள் உயர்ந்து இருந்ததால் எது சிவன் கோவில் என்ற எண்ணம் எழுந்தது.

அப்போது இந்தத் தலத்தில் இருந்த பிள்ளையார் *அதோ அதுதான் ஈஸ்வரன் கோவில்* எனச் சுட்டிக் காட்டினார்.

ஆகவேதான் இப்பிள்ளையாரை, ஞானசம்பந்தன் விநாயகர் என அழைக்கப்பட்டு வந்தார்.

கம்பர் பிறந்த ஊர். அவர் வாழ்ந்த இடம் கம்பர் மேடு என வழங்கப்படுகிறது.

இவ்விடம் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளது.

தமிழ்ச் சான்றோரான இரும்பிடர்த் தலையார் வாழ்ந்த தலம். 

வேதங்கள், தேவர்கள், திசை பாலகர்கள், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

ஊரின் தொடக்கத்திலேயே கம்பர் நினைவாலயம் எனும் இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பினால், வீதியின் கடைசியில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது.

சிவனும் பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபத்தைக் கண்டோம் ஆனந்தித்தோம்.

சிவனும்ஜசக்தியும் பிரிந்த காலத்தில் அவர்களைச் சந்திக்க இந்திரன் முதலான தேவர்கள் இங்கு வந்தனர்.

ஆனால் நந்தி அவர்களை, சிவனை சந்திக்க அனுமதிக்க மறுத்தார். எனவே அஷ்டதிக் பாலகர்களும் இந்த ஊரைச் சுற்றி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

அந்த அஷ்டலிங்கங்களைக் கண்டு கை தொழுதோம்.

காவிரிக்கும், அகஸ்தியருக்கும் இங்கு சாப விமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனிச் சந்நிதி இருக்கிறது.

கிழக்குப் பிரகாரத்தில் தல விருட்சமான சந்தன மரம் இருக்கிறது. இம்மரத்தினடியில் தான் சிவபெருமான் அந்தணர்களுக்கு வேதம் பயிற்றுவித்ததாக தலபுராணம் கூறுகிறது. அதன் அடையாளமாக பக்கத்தில் ஷேத்திர லிங்கத்தையும், நந்தியையும் காணலாம்.

தென் பிரகாரத்தில் கிழக்கே நோக்கியபடி உள்ள வலஞ்சுழி விநாயகர் சந்நிதி உள்ளது. இந்த வெளிப் பிரகாரத்தில் தான் தென்மேற்குப் பகுதியில் ஸ்ரீமடேஸ்ரர் சந்நிதிக்கு எதிரில் இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி கிழக்கு நோக்கி சிவன் சந்நிதியை நோக்கி தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது.

*பெயர்க் காரணம்:*
ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது.

ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். 

அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் *தேரழுந்தூர்* என்று பெயர் பெற்றது. 

மேலும் சீர்காழிப் பிள்ளையான திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை *"அழுந்தை"* என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்று மாறியது என்றும் கூறுவர்.

திருவழுந்தூர் வேதம் தழைத்த ஊர். வேத முழக்கம் எதிரொலித்த ஊர். ஒமப்புகை எங்கும் பரவிய ஊர். இங்குள்ள அந்தணர்கள் பெருமளவில் வாழ்ந்து வேதம் ஓதி, வேத தர்மத்தில் திளைத்து, வேதத்தை பறை சாற்றி இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்களாக விளங்கினர். 

இத்தலத்திற்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் அழுந்தூர் வாழ் மறையவர்களின் பெருமையைப் போற்றி ஒரு பதிகமே பாடியிருக்கிறார்.

அழுந்தை மறையோர் என்ற் ஒவ்வொரு பாட்டிலும் அவர்களுக்குத் தனி ஏற்றம் தருகிறார். திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. *தொழுமாறு வல்லார் துயர் தீர நினைந்து எழுமாறு வல்லார் இசைபாட விம்மி அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர் வழிபாடு செய் மாமடம் மன்னினையே.* 

2. *கடலேறிய நஞ்சமுது உண்டவனே உடலே உயிரே உணர்வே எழிலே அடலேறு உடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழ மாமடம் மேவினையே.* 

3. *கழிகாடலனே கனல் ஆடலினாய் பழிபாடு இலனே அவையே பயிலும் அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் வழிபாடு செய் மாமடம் மன்னினையே.*

4. *வானே மலையே என் மன் உயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தையவர் எம் மானே என மாமடம் மன்னினையே.*
5. *அலையார் புனல் சூழ் அழுந்தைப் பெருமான் நிலையார் மறியும் நிறைவெண் மழுவும் இலையார் படையும் இவை ஏந்து செல்வ நிலையாவது கொள்க என நீ நினையே.* 

6. *நறவார் தலையின் நயவா உலகில் பிறவாதவனே பிணி இல்லவனே அறையார் கழலாய் அழுந்தை மறையோர் மறவாது எழ மாமடம் மன்னினையே.*

7. *தடுமாறு வல்லாய் தலைவா மதியம் சுடும் ஆறு வல்லாய் சுடரார் சடையில் அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் நெடுமா நகர் கைதொழ நின்றனையே.*

8. *பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும் கரியாய் கரிகாடு உயர்வீடு உடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழ மாமடம் மேவினையே.*

9. *மணீ நீள் முடியால் மலையை அரக்கன் தணியாது எடுத்தான் உடலம் நெரித்த அணியார் விரலாய் அழுந்தை மறையோர் மணி மாமடம் மன்னி இருந்தனையே.* 

10. *முடியார் சடையாய் முனநாள் இருவர் நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் அடிமேல் அறியார் அழுந்தை மறையோர் படியால் தொழ மாமடம் பற்றினையே.*

11. *அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத் திருஞானசம்பந்தன செந்தமிழ்கள் உருஞானம் உண்டாம் உணர்ந்தார்*

*திருவிழாக்கள்:*
சித்ராபெளர்ணமிக்கு பத்து நாட்கள் முன்னதாக கொடியேற்றி தேர்த் திருவிழாவுடன் நிறையும்.

ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள்,  மார்கழித் திருவாதிரை ஆகியன சிறப்பானதான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாசியில் நடைபெறும் புனர்வசு விழா சிறப்பானது.

*கல்வெட்டுக்கள்:*
இங்கிருக்கும் ஆறு கல்வெட்டுக்களும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தவை.

*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேரழுந்தூர் அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்-609 805

*தொடர்புக்கு:*
நவநீத பட்டாச்சாரியார் (திவ்ய தேசம்).
04364--237690
04364--237952

      திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம் ...மயிலாடுதுறை.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*