Sunday, July 30, 2017

Atmanadeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை .கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   (29)
🍁 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 திரு ஆலம் பொழில். 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்:
ஆத்ம நாதேஸ்வரர், வடமூலஸ்வரர்.

இறைவி:ஞானாம்பிகை.

தீர்த்தம்: குடமுருட்டி, வெண்தாமரைத் தீர்த்தம்.

தலமரம்: ஆல் (தற்போது இல்லை.)

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128- தலங்களில் பத்தாவதாகப் போற்றப்படுகிறது இத்தலம்.

இருப்பிடம்:
திருக்கண்டியூரிலிருந்து  திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம்.

கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன.

சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் சென்றால் இத்தலத்திலேயே இறங்கிக் கொள்ளலாம்.

பெயர்க் காரணம்:
ஆலமரம் தலமரமாக இருந்ததால் ஆலம்பொழில் என்றாயிற்று.

மக்கள் வழக்கில் திருவாலம் பொழில், திருவாம்பொழில் என வழங்கப் படுகிறது.

அப்பர் பெருமானும் தம் திருத்தாண்டகத்தில் தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று பாடிப்பரவியுள்ளார்.

இதிலிருந்து இவ்வூர்-- பரம்பைக்குடி என்றும், கோயிலை- திருவாலம் பொழில் என்றும் வழங்கப்படுகிறது.

தேவாரம் பாடியவர்கள்:
அப்பர்-- 6-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

கோவில் அமைப்பு:
சந்நிதி மேற்கு பார்த்த வண்ணம் இருக்கிறது.

சிறிய ராஜ கோபுரமானாலும், இக்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோபுரத்தை சிவ சிவா என தரிசித்துக் கொள்கிறோம்.

வாயிலில் துவாரபாலகர்கள் இருபுறமும் இருக்க அவர்களை வணங்கி அனுமதிக்கக் கேட்டு உள் புகுகிறோம்.

கோயிலுனுள் உள்புகுந்ததும் இடது புறமாய் இருந்து அருளும் முருகப் பெருமான் சந்நிதி இருக்க அவரை வேண்டி விரும்பித் தொழுது கொள்கிறோம்.

அம்பாளை வணங்கிச் சந்நிதியைச் சுற்றி வரும்போது பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன.

இவர்களையெல்லாம் வணங்கித் திரும்பவும்,அங்கே தென்படும் மண்டபத்தில் வலப்பக்கமாக நவக்கிரக சந்நிதி இருக்கிறது.

இடப்பக்கமாய் அம்பாள் சந்நிதி இருக்கின்றது.

அம்பாள் நின்ற கோலத்தில் அருளைத் தந்து கொண்டிருக்கிறாள்.

விஷ்ணு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, அரசமர விநாயகர், பிரம்மா, பஞ்ச லிங்கங்கள் ஆகிய தெய்வங்களையும் தரிசித்துக் கொள்கிறோம்.

இத்தலத்தில் இருக்கும் இறைவன் மேற்கு நோக்கி அருளிக்கொண்டிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இவ்வாலயத்தைக் கட்டியவர் மாமன்னனான இராஜராஜசோழன் ஆவார்.

நேரே தெரியும் மூலவரைத் தரிசனம் செய்து கொள்கிறோம்.

உள் மண்டத்திற்கு வரும் போது வலப்பக்கமாய் நால்வர் பெருமான்கள் காட்சி தருகின்றார்கள்.

அணுக்க வாயிலில் மிகவும் பழமையான அப்பர் திருமேனி தனியாக இருக்கின்றது.

தேவ கோஷ்டத்தில் லிங்கோத்பவர், சண்டேசர், கணபதியார், கந்தன், கஜலட்சுமிக்கும் இங்குத் தனித்தனியாக சந்நிதிகள் இருக்க ஒவ்வொன்றாய் வணங்கி நகர்கிறோம்.

இங்கு பாயும் குடமுருட்டி நதி ஆலயத்தின் தென்புறத்தில் பாய்ந்தோடி இறைகிறது.

இவ்வாலயத்திற்கு எதிரே வெண்தாமரைத் தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது. இறங்கி  தீர்த்தைத்தை எடுத்து தலைக்குத் தெளித்து வணங்கிக் கொள்கிறோம்.

தல அருமை:
இத்தலத்திலிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் இருக்கின்றன தென்குடித்திட்டை.

வசிஷ்ட முனிவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தலத்தில், அம்முனிவர் வழிபட்ட சிவனார்க்கு வசிஷ்டேஸ்வரர் எனும் திருநாமம்.

காமதேனுவை வசிட்டர் வழிபட்டதும் இத்தலத்தில்தான்.

இத்தலத்தில் காமதேனு மேய்ச்சலில் இருந்த போது, நகர்ந்து நகர்ந்து மேய்ந்த வண்ணமாய் ஆலம்பொழிலுக்கு வந்து விட்டதாம்.

அச்சமயம் அங்கு வசித்த அஷ்ட வசுக்கள் காமதேனுவைக் கண்டுவிட்டனர்.

காமதேனுவின் சிறப்பினை ஏற்கனவே அஷ்ட வசுக்களுக்குத் தெரிந்து வைத்திருந்ததனலால், அக்காமதேனுவை சிறைபிடித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வை வசிட்டர் அறிந்து கொண்டதனால், சிறைபிடித்த அஷ்ட வசுக்களைச் சபித்தார்.

சாபம் கிடைத்ததனால் காமதேனுவை விடுவித்தடுடன் அஷ்டவசுக்கள்,  புஷ்கரணியில் நீராடி ஆத்மநாதேஸ்வரரை வழிபடவும், அவர்கள் பெறப்பட்டிருந்த சாபம் விலக, சாப விமோசனம் பெற்றனர்.

தல பெருமை:
சூரியன், இந்திரன் ஆகியோர் வெண்பொற்றாமரைக் குளத்தில் நீராடி தங்களுக்கிருந்த சாப விமோசனம் பெற்றனர் இத்தலத்தில்.

இங்கிருக்கும் தட்சிணாமூர்த்திமேதா தட்சிணாமூர்த்தியாக இருக்கிறார்.

ஆண்டுகள் தோறும் ஏப்ரல் மாதம் இருபத்தொன்றாம் தேதி முதல் இருபத்திமூன்றாம் தேதி வரை, எம்பெருமான் லிங்கத் திருமேனியில் சூரியக் கதிர்கள் தழுவிக் கொள்கிறது.

திருப்பூந்துருத்திக்கு அப்பர் பெருமான் வந்திருந்ததை அறிந்து, சம்பந்தர் பெருமான் இத்தலத்திலிருந்து அவரைத் தரிசிக்க பல்லக்கில் விரைந்தோடினார்.

அந்த ஊருக்குள் நுழைந்ததும், அப்பர் பெருமான் எங்கே இருக்கிறார்? என சம்பந்தர் பெருமான் கேட்கவும்,..........

.............நான் இங்கேதான் இருக்கிறேன் என்று குரல் கேட்டது.........

சம்பந்தர் உள்பட அனைவரும் தேடிய போது,,,,,,,,,,

சம்பந்தரை பல்லக்கில் தூக்குவோர் மத்தியிலிருந்து குரல் வந்தது.

குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பந்தர் அப்படியே உறைந்துபோய் பல்லக்கில் கீழிறங்கினார். 

அப்பர் திருவடியை சம்பந்தர் வணங்கினார்-----சம்பந்தர் திருவடியை அப்பர் வணங்கினார் இருவரும் திருச்சிற்றம்பலம் கூறி.......

இந்நிகழ்வே நடந்த இந்த இடத்தை சம்பந்தர் மேடு என்றானது.

இச்சம்பந்தர் மேடு இன்றைக்குப் போனாலும், காணலாம்.

இந்நிகழ்வை நினைவு படுத்தும் நிகழ்வாகவே தோள் கொடுத்த பெரு விழா என்று-- வைகாசியில் மிக விமரிசையாக நடக்கும்.

திருவிழா:
ஆவணி மூல விழா.
ஐப்பசி கந்த சஷ்டி.
நவராத்திரி.
கார்த்திகைச் சோமவாரங்கள்.
சிவராத்திரி முதலிய விழாக்கள் நடந்து வருகின்றன.

ஆல விருட்சத்தின் சிறப்பு:
இதன் வேரின் மீதுள்ள பட்டையை வெட்டித் தூளாக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம். 

சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், மிக இரத்தப் போக்கு ஆகிய நோயைக் குணமாக்கும் வல்லமை இவ்வாலமரபட்டைக்கு இருந்து வந்தது. (இப்போது இந்த ஆல் இல்லை.)

கல்வெட்டு:
தென்பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்- என்று இறைவனைக் கல்வெட்டில் குறித்திருக்கிறார்கள்.

பூஜை:
சிவாகம முறையில் இரண்டு கால பூஜைகள்.

காலை 7.00- மணி முதல், பகல் 12.00- மணி வரை,
மாலை 4.09- மணி முதல் , இரவு 8.00- மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், 
திருவாலம் பொழில்- அஞ்சல்,
திருப்பூந்துருத்தி-so- 613 103
(வழி) திருக்கண்டியூர்,
திருவையாறு வட்டம்,
தஞ்சை மாவட்டம்.

தொடர்புக்கு:
சரவணன், சீனிவாசன்.
04365- 284538,
04356- 284573,
04356- 322290,
92454 19919

            திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment