Tuesday, June 27, 2017

Who is the real friend?

Courtesy:Sri.Vasudevan Srinivas

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ? 

உங்களின் நல்ல நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் தருவீர்கள். 

நல்ல நண்பன் என்றால் யார் ? 

ஆபத்துக்கு உதவுபவன், நம்ம வீட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் கூட இருந்து உதவி செய்பவன், நம் அந்தரங்கங்கள் தெரிந்தவன், நமக்கு சமயத்தில் புத்தி சொல்லுபவன் என்று ஒரு கணக்கு வைத்திருப்போம். 

இதுதான் சரியான கணக்கா ? 

நல்ல நண்பன் என்றால் யார் என்று அறநெறிச்சாரம் சொல்கிறது.... 

"இந்தப் பிறவியில் நம் புலன் அடக்கத்திற்கு உதவி செய்து, நாம் புகழ் அடைய துணை செய்து, மறுமையில் உயர்த கதிக்கு உயர்த்த பாடு படும் நல்ல குணம் உள்ளவரே நண்பர் என்று சொல்லப் படுவார்கள் " 

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி 
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே 
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே 
நாட்டா ரெனப்படு வார். 

இம்மை அடக்கத்தைச் செய்து புகழ் ஆக்கி 
உம்மை உயர் கதிக்கு உய்தலால் -மெய்ம்மையே 
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே 
நாட்டார் எனப் படுவார். 

இம்மை - இந்தப் பிறவியில் 

அடக்கத்தைச் செய்து = புலன் அடக்கத்திற்கு வழி செய்து 

புகழ் ஆக்கி = நமக்கு புகழ் உண்டாகும் படி செய்து 

உம்மை = மறு பிறப்பில் 

உயர் கதிக்கு = வீடு பேற்றை அடைய 

உய்தலால் = வழி செய்து 

மெய்ம்மையே = உண்மையிலேயே 

பட்டாங்கு = உலகில் 

அறம் உரைக்கும் = அறத்தை கூறும் 

பண்புடையாளரே = நல்ல பண்பு உள்ளவர்களே 

நாட்டார் எனப் படுவார் = நண்பர்கள் என்று கூறப் படுவார்கள். 

எனவே நண்பன் என்று சொல்லுவதற்கு என்னென்ன குணம் வேண்டும் ? 

- புலன் அடக்கத்திற்கு வழி செய்ய வேண்டும். "வாடா , தண்ணி அடிக்கப் போகலாம், தம் அடிக்கப் போகலாம்" என்று கூட்டிக் கொண்டு போகக் கூடாது. 

- புகழ் அடைய வழி செய்ய வேண்டும் - புகழ் எப்படி வரும் ? கடின உழைப்பு, புத்திசாலித் தனம் போன்றவை இருந்தால் புகழ் வரும். தவறு செய்யாமல் இருந்தால் புகழ் வரும். வாய்மையை கடை பிடித்தால் புகழ் வரும். நல்ல ஒழுக்கம் இருந்தால் புகழ் வரும். 

- மறு பிறப்பில் உயர் கதி அடைய வழி காட்ட வேண்டும் 

- நல்ல அறங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் 

- நல்ல பண்பு உள்ளவனாக இருக்க வேண்டும். 

உங்கள் நண்பர்களை விடுங்கள். 

நீங்கள் எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட நல்ல நண்பனாக , நண்பியாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment