Tuesday, June 27, 2017

Vinayaka marriage

Courtesy:Sri.Kovai K.Karuppusamy

விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது சித்தி, புத்தியுடன் திருமணம் ஆனவரா?
முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக இருக்கும் போது பிரம்மச்சாரியாக உள்ளார். வள்ளி, தேவசேனாவுடன் இருக்கும் போது திருமணமானவர் என்கிறோம். அது போலத்தான். பால கணபதி பிரம்மச்சாரி, திருமணமான பிறகு சித்தி, புத்தி சமேத கணபதி என்று போற்றப்படுகிறார். இன்னொரு விஷயம் உலகியல் திருமணங்களோடு இவற்றை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தம்மை வழிபடுபவர்களுக்கு வெற்றியைத் தருபவர் என்பதை சித்தி தேவியும், நல்லறிவைத் தருபவர் என்பதை புத்தி தேவியும் குறிக்கிறார்கள்.

விநாயகருக்கு திருமணம் நடந்த கதை.

பிரம்மன் சோர்ந்து விட்டார். படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவருக்கு விரக்தி ஏற்பட்டது. 

என்ன காரணம்?
எண்ணற்ற உயிரினங்களை ஒவ்வொன்றாகப் படைத்துக்கொண்டே வந்த அவர், அவற்றில் இருந்த சில குறைபாடுகளை உணர ஆரம்பித்தார். 

பிறவிகளில் குறை இருக்கலாம். ஆனால், அவையும் முற்பிறவி பலாபலன்களை ஒட்டித்தான் அமைய வேண்டும். 

ஆனால் இப்போது முதல் முதலாக, குறைபாடுகள் அதிகம் தோன்றுவானேன்? எதனால் ஏற்பட்டது அது?
மனதில் கிலேசத்துடன் துயரப்பட்டுக் கொண்டிருந்த அவரை நாரதர் அணுகினார். 

அவனுடைய வருத்தத்தைத் தெரிந்து கொண்டார். ''எல்லா விவரமும் தெரிந்த பிரம்மனே, நீ கூடவா தவறு செய்வது? எந்தத் தொழிலையும் யாரும் துவங்குமுன் விநாயகரை வேண்டிக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நியதியை ஏன் மறந்தாய்? போ, அவரிடம் போய் முறையாக அனுமதி பெற்றுக்கொள்" என்று உபதேசித்தார்.
பிரம்மன் தன் தலையில் குட்டிக் கொண்டார். ஏற்கனவே கயிலாயத்திற்குப் போனபோது முருகனை அவமதித்ததால் சிறைப்பட்டதும் அவர் நினைவுக்கு வந்தது. இப்போது விநாயகரையும் மதிக்கத் தவறிவிட்டோமே, இதனால் என்ன அபவாதம் நேருமோ என்று தன்னைத்தானே நொந்து கொண்ட அவர், மனமுருக வேண்டிக்கொண்டார்.
உடனே பிரத்யட்சமானார் வேழமுகத்தோன்.
''ஐயனே, என்னை மன்னித்துவிடுங்கள். முழு முதற் கடவுளாகிய தங்களை துதிக்காமல், என் தொழிலில் ஈடுபடத் துவங்கி விட்டேன். என் சிருஷ்டிகள் அனைத்துமே சிதிலமடைந்தனவாகவே உள்ளன. அருள்கூர்ந்து அவை முழுமையடைய எனக்கு உதவுங்கள்" என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
விநாயகர் அவரை அன்புடன் நோக்கினார். ''எந்தச் செயலைச் செய்யத் துவங்கும் முன்னரும் என்னைத் துதிக்க வேண்டும் என்ற நியதி, சம்பிரதாயமல்ல. என்னைத் துதித்தால், செய்யப்போகும் காரியங்களில் மனம் முழுமையாக ஒன்றிவிடும். எந்த மனச் சலனமும் ஏற்படாது. எந்த இடையூறும் தோன்றாது. திண்ணியராக எண்ணம் பெறும் பாக்கியம் கிடைக்கும். வலுவான எண்ணம், சீரான நேர் நோக்கு இவை அமைந்துவிட்டாலேயே போதுமே! எடுக்கும் செயல்கள் எல்லாம் செவ்வனே நிறைவேறுமே" என அறிவுறுத்தி ஆசீர்வதித்தார்.
''ஐயனே, தங்களை நினையாது காரியத்தைத் துவக்கிய என்னைப் பொறுத்தருள வேண்டும். இனி நான் மேற்கொள்ளும் என் தொழிலில் எந்த விக்னமும் நேராதபடி காத்தருளுங்கள்" என்று விநயமாக வேண்டிக்கொண்டார் பிரம்மன்.
விநாயகரும் மனமகிழ்ந்து பிரம்மன் கோரிய வரத்தை அளித்தார். மேலும் தன்னிடம் இருக்கும் ஞானம், கிரியை ஆகிய இரு சக்திகளை தியானித்து தொழிலை மேற்கொள்ளும்படி பிரம்மனுக்கு அறிவுறுத்தினார்.
பிரம்மனும் அவ்வாறே தியானிக்க, அந்த இரு சக்திகளும் சித்தி, புத்தி ஆகிய இரு பெண்களாக அவர் முன் தோன்றினார்கள். அவர்களையும் வணங்கினார் பிரம்மன். ''என் தொழிலுக்கு நீங்கள் இருவரும் உறுதுணையாக இருந்து காத்தருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்ட அவர், ''கூடவே ஒரு விண்ணப்பம்" என்றார்.
''என்ன?"& இருவரும் கேட்டார்கள்.
''நீங்கள் இருவருமே என் புத்திரிகளாக அவதரிக்க வேண்டும்" என்று வேண்டினார்.
சித்தி, புத்தி இருவரும் அவருடைய வேண்டுகோளுக்கு மனமொப்பினர்.
பிரம்மன் தன் படைப்புத் தொழிலை தொடர்ந்தார். சித்தி, புத்தி அவருடைய மகள்களானார்கள். அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அண்டசராசரங்களையும், அவற்றில் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்தார். எந்தக் குறையும் இல்லாமல், தன் பணி செவ்வனே நிறைவேறுவது கண்டு மனமகிழ்ந்தார்.
சித்தி, புத்தியர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அழகு மேலிட வளர்ந்தார்கள்.  திருமணப் பருவத்தை அவர்கள் அடைந்ததும், இயல்பான கடமை உணர்வோடு பிரம்மன் அவர்களுக்கு மாப்பிள்ளைகளை தேடினார்.
அப்போது நாரதர் அங்கே வந்தார்.
''பிரம்மா, சித்தி&புத்தியர் இரட்டைப் பிறவிகள். அவர்களுக்குத் தனித்தனியாக மாப்பிள்ளை பார்ப்பதைவிட, இருவருக்கும் ஒரே மாப்பிள்ளையாகப் பார்த்துவிடு" என்று யோசனை தெரிவித்தார்.
நாரதர் ஏதோ குட்டையைக் குழப்ப வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார் பிரம்மன். ''இருவருக்கும் ஒரே கணவனா? அதெப்படி? இருவருக்குள்ளும் பிரச்னைகள் வராதா?" என்று கேட்டார்.
''வராது. அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஆனால் அந்த வழியில் தடையேதும் இல்லை என்பதை நான் முதலில் உறுதி செய்து கொண்டு விடுகிறேன். அதற்குப் பிறகு நீ உன் மனதுக்கேற்ற முடிவை எடுக்கலாம்" என்று கூறினார் நாரதர்.
''அப்படியானால் சரி" என்று ஒப்புக் கொண்டார் பிரம்மன்.
நாரதர் நேராகக் கயிலாயம் சென்றார். விநாயகரைக் கண்டு தொழுதார். ''ஐயனே தங்களையே மணந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் சகோதரிகள் இருவர் ஏங்கிக் காத்திருக்கிறார்கள். தங்களது பிரம்மச்சர்யம் அவர்களால்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவர்களை மணந்து கொண்டு அனைத்து உலகுக்கும் நன்மைகளை அள்ளித் தந்து, அருள்
பாலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
''நாரதா, உன்னுடைய கோரிக்கையின் அடிப்படை நோக்கம், அந்தப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் என்பதைவிட என் பிரம்மச்சர்யத்தைக் குலைப்பதுதான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும், இல்லையா? சரி, அந்தப் பெண்களை நான் மணக்கிறேன்" என்றார் விநாயகர்.
நாரதருக்கு ஆச்சர்யம். அதெப்படி தன்னுடைய பிரம்மச்சர்ய விரதத்தை இவ்வளவு எளிதில் கைவிட விநாயகர் முன்வந்தார்?
விநாயகர் சிரித்தார். ''உனக்கே விரைவில் புரியும். போய் அந்தப் பெண்களின் குடும்பத்தாரோடு பேசி நிச்சயம் செய்துவிட்டு வா" என்றார்.
நாரதர் பிரம்மனை வந்தடைந்தார். ''ஒரு சந்தோஷமான செய்தி பிரம்மா! விநாயகரே உன் இரு பெண்களையும் மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்..." என்று உற்சாகமாகச் சொன்னார். ஆனால் பிரம்மன் உற்சாகமாக இல்லை. இரு பெண்களுக்கும் ஒரே கணவரா?
பிறகு நாரதர், சித்தி, புத்தியரைச் சந்தித்தார். பிரம்மனின் மனக்கிலேசம் அவருக்குப் புரிந்திருந்தது. சகோதரிகள் மனம் ஒப்பினால் அதற்கு பிரம்மன் தடையொன்றும் சொல்லப் போவதில்லை. ஆகவே முதலில் சகோதரிகளின் மனதை அறியவும்; அவர்களுக்கு விருப்பம் இல்லாதது போலத் தோன்றினால் அவர்கள் மனதில் விநாயகரைப் பற்றிய நல்லெண்ணத்தை விதைத்து காதலை அறுவடை செய்யவும் தீர்மானித்தார்.
''உங்கள் தந்தையார், உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்..." என்று ஆரம்பித்தார் நாரதர். ''உங்கள் இருவரையும் மணந்துகொள்ள ஒருவர் முன் வந்திருக்கிறார்..."
சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தமக்கு மட்டும் புரியும்படியாக சிரித்துக்கொண்டார்கள். ''நாங்கள் சம்மதிக்கிறோம்" என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
நாரதருக்கு மேலும் ஆச்சர்யம். அதெப்படி இரு பெண்களும் ஒருவரை மணக்கத் துணிகிறார்கள்?
''உங்களுக்கு விரைவில் இதற்கெல்லாம் காரணம் புரியும்" என்றார்கள் சகோதரிகள்.
இந்தப் பதிலைத்தானே விநாயகரும் சொன்னார்? அப்படியானால் அவர் இந்தப் பெண்களின் மனதை முன்பே ஆக்கிரமித்து விட்டாரா?
நாரதர் மகிழ்ச்சியுடன் பிரம்மனிடம் சென்றார். சகோதரிகளின் விருப்பத்தைத் தெரிவித்தார். பிரம்மனுக்கும் ஆச்சர்யம். எல்லையில்லா உற்சாகமும்கூட.
தவித்தவர் நாரதர் மட்டும்தான். இந்தத் திருமணத்தின் நோக்கம் பின்னால் புரியும் என்று விநாயகரும் சகோதரிகளும் சொன்னார்களே, என்ன ரகசியம் அது?
திருமண நாள் வந்தது. பார்வதி&பரமேஸ்வரர், லட்சுமி&மகாவிஷ்ணு முதல் எல்லா தேவர்களும் குழுமியிருக்க சித்தி, புத்தி விநாயகர் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.
நாரதருக்குத் தன்னுடைய சந்தேகம் தீராததால் ஏக்கத்துடனேயே இருந்தார். பிரம்மனும் தன் புத்திரிகள் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்ததை அதிசயமாக நோக்கினார்.
''சித்தி, புத்தியர் இருவருமே என் அம்சங்கள்தான் என்பதை மறந்துவிட்டாயா பிரம்மா?" விநாயகர்  கேட்டார். ''உன் படைப்புத் தொழிலில் பங்கம் ஏற்பட்டபோது, என்னை நீ துதித்ததும் அப்போது என்னுடைய இரு சக்திகளை உனக்கு வழங்க, அவர்களுடைய ஆசியால் உன் தொழில் விக்னம் இல்லாமல் நடந்ததும், பிறகு இச்சக்திகளே உனக்குப் புத்திரிகளாகப் பிறக்க வேண்டும் என்று நீ வேண்டிக் கொண்டதும் மறந்து விட்டதா உனக்கு?" என்று கேட்டார் விநாயகர்.
பிரம்மன் முகம் தெளிவடைந்தது.
''என்னை விட்டு சிலகாலம் பிரிந்திருந்த என்னுடைய சக்திகள் மீண்டும் என்னிடமே வந்து சேர்ந்து விட்டன. இதற்குதான் திருமணம் என்று ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடித்திருக்கிறோம், அவ்வளவுதானே?" என்று முத்தாய்ப்பாக விளக்கம் அளித்தார் வேழமுகத்தான்.
பொதுவாகவே திருமண பந்தம் என்பதெல்லாம் ஏற்கனவே சேர்ந்திருந்து பிறகு பிரிந்து மறுபடி சேரும் ஒரு தெய்வீக விஷயம்தானோ, அதனால்தான் எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவோ! நாரதருக்குப் புரிந்தது. ஆனாலும் தான் விநாயகரின் பிரம்மச்சர்யத்தை சந்தேகப்பட்டு விட்டதற்காக வருந்தி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அனைவரும் சித்தி, புத்தி விநாயகரை வணங்கி பேறு பெற்றார்கள்.
                திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment