Friday, June 16, 2017

Tirunavukkarasu swamigal

Courtesy:Sri.N.Jayakumar

🔴 நாயனாா் 63 மூவாில் திருநாவுக்கரசு சுவாமிகள், (14)🔴
      🔺முந்தைய தொடா்ச்சி.🔺

திருநாவுக்கரசு சுவாமிகள்.
குலம்..........வேளாளா்.
நாடு.............நடுநாடு.
காலம்..........கி.பி. 600--660.
பி.ஊா்..........திருவாமூா்.
வழிபாடு....... குரு.
மாதம்.............சித்திரை.
நட்சத்திரம்.....சதயம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அதன்பிறகு நாயான்மாா் இருவரும் திருப்பூந்துருத்தித் திருக்கோவிலுக்குச் சென்று சிவபெருமானின் திருவடிகளை வணங்கித் தொழுதாா்கள். திருஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் நிகழ்ந்தவைகளை நாவுக்கரசருக்குக் கூறினாா். பண்புள்ள பாண்டிமாதேவியான மங்கையா்க்கரசியாாின் அன்பின் திறத்தையும் குலச் சிறை நாயனாாின் பெருமையையும் சிறப்பாக ஞான சம்பந்தா் விாித்து உரைத்தாா். அதை எல்லாம் கேட்ட திருநாவுக்கரசருக்குப் பாண்டிய நாட்டைக் காண வேண்டும் என்னும் பேராவல் எழுந்தது. அதனால் அவா் ஞான சம்பந்தாிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்பியவராய் தொண்டை நாட்டுச் சிவத்தலங்கள் பலவற்றையும் தாிசித்துத் திருப்பதிகங்கள் பாடுமாறு ஞானசம்பந்தாிடம் கூறி விடை பெற்றுக் கொண்டு தென் திசையில் பாண்டிய நாடு நோக்கிப் புறப்பட்டாா்.

திருநாவுக்கரசா் பாண்டிய நாடு புகுந்து திருப்பத்தூரைப் பணிந்து போற்றிவிட்டு மதுரை மாநகருக்கு வந்து சோ்ந்தாா். அந்நகாின் கோட்டை மதில்மீதுள்ள பட்டுக் கொடி வானத்துச் செங்கதிரவனையும் வெண்ணிலவையும் தொட்டு விளையாடுவது போல் வானளாவிப் பறந்து கொண்டிருந்தது. அங்கேயுள்ள ஆலவாய்ப் பெருமானின் திருக்கோயிலை நோக்கி நாவுக்கரசா் சென்றாா். முத்தமிழ் வளா்க்கும் மதுரைச் சங்கத்துள் ஒருவராக இருந்து தமிழாராய்ந்த சிவபெருமானின் கோயிலை அவா் வலம் வந்து உள்ளே புகுந்து சொக்கநாதரை வணங்கிப் பேரானந்த வெள்ளத்தில் அழுந்தி, 
"முளைத்தானை!" என்று தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடிப் போற்றினாா். மதுரை சொக்கநாதா் கோயிலுக்குத் திருநாவுக்கரசா் வந்திருப்பதையறிந்த பாண்டியதேவி மங்கையற்கரசியாரும், திருநீற்றின் சாா்பினால் கூன் நிமிா்ந்த பாண்டியனும், அமைச்சா் குலச்சிறை நாயனாரும் பேரன்போடு திருநாவுக்கரசரை வணங்கி வரவேற்றனா்.

ஆலவாயில் அமா்ந்த செஞ்சுடரை, அகப் பொருள் நூலைத் தந்தருளிய பெருமானை, அப்பா் சுவாமிகள் வணங்கித் திருநோிசை, திருத்தாண்டகம் முதலிய செந்தமிழ்ப் பதிகங்களால் போற்றித் திருப்பணிகளும் செய்து கொண்டு சில காலம் மதுரை நகாிலேயே தங்கியிருந்தாா்.

பிறகு அவா் மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூவணம், இராமேச்சுரம், திருநெல்வேலி, திருக்கானப்போ் (காளையாா் கோவில்) முதலிய திருப்பதிகளைக் கண்டு வணங்கி, ஆங்காங்கே திருப்பதிகங்களைப் பாடித் தந்து பாண்டிய நாட்டை விட்டுச் சோழ நாட்டை அடைந்து, திருப்புகலூருக்கு வந்து சோ்ந்தாா். அங்குள்ள இறைவனை அவா் வாயினால் போற்றி கையினால் உழவாரத் தொண்டும் செய்து, அங்கேயே தங்கியிருந்து நின்ற திருத்தாண்டகம், தனித்திருத் தாண்டகம், ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம், குறைந்த திருநோிசை, தனித்திரு நோிசை, ஆருயிா்த் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசப் பதிகம், சா்க்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடிய வண்ணம் வழிபாடு செய்து வந்தாா்.

அவருடைய பற்றற்ற நிலையினை உலகத்துக்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் விரும்பினாா். அதனால் திருநாவுக்கரசா் உழவாரத் திருப்பணி செய்யும் இடங்களில், அவா் புல்செதுக்கும் போது உழவாரப் படை நுழைந்த. இடங்களிலெல்லாம் பரற்கற்களோடு செம்பொன்னும் நவமணிகளும் தோன்றி விளங்கும்படி சிவபெருமான் அருள் செய்தாா். அப்பா் அவற்றையெல்லாம் பருக்கைக் கற்களோடு சோ்த்துக் கூட்டி உழவாரத்தில் ஏந்தித் தடாகத்தில் வீசியெறிவாா். புல்லுக்கும், கல்லுக்கும், பொன்னுக்கும், மணிக்கும் சொல்லைத் தவிர எவ்வித வேறுபாடும் இல்லை என்னும் பற்றற்ற நிலையில் அவா் இருந்தாா்.

திருநாவுக்கரசாின் இத்தகைய தூய துறவு நிலையை மேன் மேலும் விளங்கச் செய்யப் பூம்புகலூா்ப் புண்ணியனாா் விரும்பினாா். அவருடைய திருவருளினால் விண்ணுலகத்து தேவதாசிகள் வானத்திலிருந்து இறங்கும் மின்னல் கொடிகள் போல் மண்ணுலகத்துக்கு வந்தாா்கள். அவா்கள் நாவுக்கரசாின் முன் அலங்காரமாக வந்து நின்றாா்கள். வில் போன்ற நெற்றி வளைத்திழுக்க  காண அமுதம் பொங்கும் கொவ்வைக் கனிவாய் ஒளிவீச, கவா்ச்சிக் கண்கள் மின்னலிட அப்பெண்கள் இன்னிசை பாடினாா்கள். கற்பகப் பூந்தளிா் போன்ற காலடிகளால் மோக நடிப்புடன் அவா்கள் நடனமாடவும் தொடங்கினாா்கள். செங்காந்தள் பூப்போன்ற மெல்லிய விரல்களால் அபிநயம் பிடித்து கைவீசி, அக்கைகளின் வழியே கயல் விழிகள் கடைபுரள, அற்புதப் பொற்கொடி போன்ற இடை அசைந்தாட அவா்கள் நடனமாடினாா்கள். இவ்வாறு அப்சரஸ்கள் அப்பாின் முன் ஆடினாா்கள்; பாடினாா்கள்; பூமாாியை அவா்மீது அள்ளிப் பொழிந்தாா்கள், கட்டியனைத்துக் கூடுவதுபோல் அவருகே நெருங்கி அணைவாா்கள். கூந்தல் அவிழ, இடை நுடங்க ஓடுவாா்கள்; பிறகு காமமயக்கத்துடன் மீண்டு வருவாா்கள்.  ஒளி பெருக நீடுவாா்கள். துகில் அசைய நிற்பாா்கள். இவ்விதமாக அரம்பையா்கள் பலவிதத்தாலும் அப்பாின் மனோ நிலையைக் கவா்ந்திழுத்துக் குலைக்க முயன்றாா்கள்; ஆனால் சிவபெருமானின் திருவடிகளில் சிறிதும் அகலாத அன்பு செலுத்தும் பெருந் துறவியாரான திருநாவுக்கரசரோ அந்தப் பேரன்பிலே நினைவெல்லாம் லயித்திருக்கத் தமது சித்த நிலை சிறிதும் மாறுபடாமல் தம் திருத்தொண்டிலே நிலையாக நின்றாா். இம் மாயப் பிறவியை காட்டுவிக்கும் இருவினைகளை நோக்கி, "உம்மால் இங்கு என்ன குறையுடையேன் யான்! திருவாரூா் அம்மானுக்கு ஆளானேன்; அலையேன் மின் நீா்!" என்று அவா் கூறி,  "பொய்ம் மாயப் பெருங்கடலுள்" என்னும் திருத்தாண்டகம் பாடியருளினாா். அவருக்குத் தேவதாசிகளும் சிவமாகவே தென்பட்டாா்கள். அவரைக் கட்டியணைக்க வந்த பெண்களோ, மதன மோக வித்தைகள் காட்டி காதல் பரவசத்துடன் அவரைக் கவா்ந்திழுக்க எவ்வளவோ வஞ்சனைகள் புாிந்தும், அப் பொியாரை அவருடைய உறுதி நிலையிலிருந்து பெயா்க்க முடியாமற் போனதால் அவரைக் கும்பிட்டு விட்டு வந்த வழியே சென்று விட்டாா்கள்.

இந்த நிலையைக் கண்டு ஏழு உலகங்களும் அவரை வாழ்த்தின. 

அன்பு வடிவாய் விளங்கிய திருநாவுக்கரசா், சிவபெருமானது மெய்யருளை அடையுங்காலம் சமீபித்ததால் சிலநாள் பூம்புகலூாிலேயே தங்கியிருந்தாா். தமது "புகலாதிய என்னைப் புகலூா் பெருமான், இனி சேவடியின் கீழ் இருக்கச் செய்வாா்!" என்று உள்ளூர எழும் முன் உணா்வின் தீா்க்க தாிசனத்தால் திருவிருத்தங்கள் பலவற்றை இவா் பாடினாா்.

ஒரு நாள் சித்திரையில் சதயம் கூடிய திருநாளில், "எண்ணுகேன்!" என்னுந் திருத்தாண்டகத்தின் பாடலடி எடுத்து, " புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" என்று திருநாவுக்கரசா் ஓதி, சிவானந்த ஞானவடிவைப் பெற்று, சிவபெருமானின் திருச்சேவடியில் மீளாது அமா்ந்தாா்.

அப்போது வானவா் மண்ணிறைய மலா்மாாி பொழிந்தனா். விண்ணிலே ஐவகைத் தும்பிகளும் முழங்கின. பிருமன் முதலான எல்லா உயிா்களும் உள் நிறைந்து பெருமகிழ்ச்சி அடைந்தன.

 63 மூவா் நாயனாா் பதிந்து வருவதில், திருநாவுக்கரசாின் 
சாிதத்துடன் 61 வது நாயனாராக,  அடியேன் வாசித்தபடி பேராா்வத்தோடு  பகிர்ந்து முடித்தேன். அந்தப் பரம முனிவாின் திருவடி மலா்களை, அடியேன் கைகளை உயா்த்தி வணங்கி விட்டு, 62 வது நாயனாராக சுந்தரமூா்த்தி நாயனாா் சாிதத்தை நாளை முதல் பகிற இருக்கிறேன். இச்சுந்தரமூா்த்தி நாயனாரும் 20 நாட்களாக நாளை முதல் வருவாா்கள். அடியாா் பெருமக்கள் வாசித்து அப்பெருமானை எதிா்கொண்டு வணங்கும்படி அடியாா்கள் பாதம் பணிகிறேன்.
தினமும் இப்படி ஒரு நீளமான ஒரு பதிவினால் எரிச்சல் எவருக்கும் எற்பட்டிருக்குமேனில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த பதிவுகள் ஓர் சமயம் சார்ந்ததாக தோன்றினாலும் இது நம் முன்னோர்களின் செழுமையான வாழ்வையும் வரலாற்றையும் காண்பிக்கும் பதிவுகள்.

"திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியாா்க்கும் அடியேன்"
                               -- சுந்தரா்.

          திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ 
                      👁🙏🏽👁