Thursday, June 1, 2017

Kundantai Kaaronam temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
           *(தல தொடர்.46)*
🌸 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌸 * குடந்தைக் காரோணம்.*🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*
சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.

*இறைவி:* சோமசுந்தரி, தேனார் மொழியாள்.

*தலமரம்:* வில்வம்.

*தீர்த்தம்:* சோம தீர்த்தம், மகாமக தீர்த்தம்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் 28- வது ஆகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணத்தில்- கும்பேஸ்வரர் கோவில் பொற்றாமரைக் குளத்தின் கீழ்கரையில் இக்கோவில் உள்ளது.

இது சாரங்கபாணி கோவிலை ஒட்டி தெற்கு மதிலைச் சார்ந்துள்ளது. 

தஞ்சை செல்லும் சாலையின் கடைவீதி, இக்கோவிலின் தெற்கு வீதியாகும்.

முன்பு சாரங்கபாணிக் கோயிலும் இதுவும் ஒன்றி இருந்ததாகக் கூறுவார்கள்.

இன்றும் இட அமைப்பு அதை வலியுறுத்துகிறது. மக்கள் சோமேசர் கோவில் என்றும் அழைப்பர்.

*பெயர்க்காரணம்:*
மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கி கொண்ட தலம் காரோணம் எனப்படும்.

இக்கோவிலின் அம்பிகை இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று.

*கோவில் அமைப்பு:*
சோமேசர் என வழங்கும் இத்தலம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய இராஜகோபுரம் நம் கண்களுக்கூத் தெரிய *சிவசிவ* என கோபுரத் தரிசனம் செய்து கொள்கிறோம்.

ஒரே பிரகாரத்துடன் கோவில் அமைந்திருக்கிறது.

பழையதான ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது.

ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோவிலில் சந்திரனும், வியாழனும் பூசித்துள்ளனர்.

எனவே, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்ததாகுமாம்.

இக்கோவில் மூன்று வாசல்களைக் கொண்டது.

இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்கள நாயகியைத் தரிசிக்கலாம்.

திருமால் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது.

கட்டைக் கோபுரத்தைக் கடந்து வந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழியாளை தரிசிக்கலாம்.

வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேசுவரரையும் சோமசுந்தரியையும் தரிசிக்கலாம்.

ஆக, எத்திசையிலிருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது.

உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார்.

கருவறைச் சுவர்களில் எட்டு பேர் வணங்கிய நிலையிலான சிற்பங்கள் உள்ளன.

காணா நட்டம் உடையார் என்பது இத்தலத்தில் அருளும் நடராசரின் பெயர். நடராசர் தனிச் சந்நிதியில் சிவகாமியுடன் உள்ளார்.

இவரை வணங்கினால் வியாபார விருத்தி, உத்தியோகத்தின் மேன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

வாயிலில் திருமுறைக் கோயில் இருக்கிறது.

இதற்கடுத்ததாக, விநாயகர், சேக்கிழார் நால்வர் திருமேனிகள் இருக்கின்றன.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

*மூப்பூர்நலிய நெதியார் விதியாய் முன்னே யனல்வாளி*

*கோப்பார் பார்த்தனிலை கண்டருளுங் குழகர்குடமூக்கில்*

*தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்*

*காப்பார் காலனடையா வண்ணம் காரோணத்தாரே"*

                                            சம்பந்தர்.
*தல அருமை:*
அமுதக் குடம் உடைந்த போது சிதறிய தீர்த்தம் இத்தலத்தின் முன்பு குளம் போலப் பெருகியது.

இக்குளத்திற்கு சந்திர புஷ்கரணி எனப் பெயர்.

காலப்போக்கில் இக்குளம் அழிந்து விட்டது.

முருகன் மயில் மீது அமர்ந்து ஒற்றைக் காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை இக்கோவிலில் காணலாம்.

மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள காசி விசுவேசம் எனும் கோவிலை குடந்தைக் காரோணம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

(காசி விசுவேசம்--இத்தலத்தில் இராமன், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோணிக்கப் பெற்றதால் காய-ஆரோகணம்= காரோணம் என பெயராயிற்று.)

அமுதக் கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலம் இது.

(சிக்கம்-உறி) எனவே சிக்கேசம் என்றும் பெயர்.

இங்குள்ள மாலீசருக்கு பெரிய திருமேனி.

மேற்குப் பார்த்த சந்நிதி.

கோமுகமும் வடக்குப் பார்த்தது.

கோமுகம் இருக்கும் பக்கம் தாயார் இருப்பதே இடப்பக்க மரபை வலியுறுத்தி விட்டது.

இருவரும் சோழர் காலத்தவர்கள்.

தேனார்மொழி என்றாலும், சோமசுந்தரி என்றாலும் ஏறத்தாழ ஒன்றுதான்.

சோம என்ற சொல் நிலவை உணர்த்தி, யோக சாஸ்திரப்படி சந்திர கலையாகிய அமுதை உணர்த்தி,தேனை சார்ந்து விட்டது.

இவள் கோயில் வாயிலில், கோடி பஞ்சாட்சர கோவில் உள்ளது.

திருமுறை பாராயணம் சிறக்க இதை வணங்க வேண்டும். அரிய முயற்சியுடன் செய்திருக்கிறார்கள்.

(1964- ஆம் ஆண்டு பக்தர்கள் ஒன்று கூடி ஒரு வித்தியாசமான முயற்சி எடுத்தனர்.)

ஒருவர் ஒரு லட்சம் வீதம் நூறு பேர் சேர்ந்து சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எழுதினார்கள்.

மொத்தம் ஒரு கோடி பஞ்சாட்சர மந்திரம் தேறியது.

எழுதியவற்றை வீணாக்காமல் புத்தகமாக செய்து, நூறு புத்தகங்களையும் ஒரு பெட்டகத்தில் அடுக்கி கோவிலில் வைத்து விட்டனர்.

இதுவே கோடி பஞ்சாட்சரக் கோவிலாகும்.

மிக அருமையான இந்த பெட்டகத்தை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

*காயாகாரோணம்:*
வாயு மகர புராணத்தில் காயாகாரோணம் என்பது மந்வந்தரத்தில் பெரிதான வைவஸ்வத மந்வந்தரத்தில் 28-வது யுகத்தில் திருமால் வாசுதேவனாக அவதரித்தார்.

அதே காலத்தில் சிவன், மேரு பருவதத்தில் ஒரு குகையில் காயாரோணம் என்ற சித்த ஷேத்திரத்தில் லகுலியென்ற பெயருடன் அவதரித்தார். 

உலகத்தை உய்விக்கும் பொருட்டு, அவ்விடத்து மயானத்தில் சவமாய் கிடந்த ஒரு சரீரத்தில் தாம் யோக பலத்தால் நுழைந்து குசீகன், கார்க்யன், மித்ரகன்,ருஷ்டன், என்ற நால்வருக்கும் மகேசுவர யோகத்தை போதித்து அவர்களுடன் உருத்திர லோகத்தை அடைந்தார் என்பது புராணச் செய்தியாகும்.

*பூஜை:*
சிவாகம முறையில் ஐந்து கால பூஜை.

காலை 6.00 மணி முதல் பகல் 12. 00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, சோமேசர் திருக்கோயில்,
கும்பகோணம் அஞ்சல்,- வட்டம்,
தஞ்சை மாவட்டம்.612 001

*தொடர்புக்கு:*
நிர்வாக அதிகாரி.
0435--2430349

     திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்.......திருநாகேஸ்வரம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*