Tuesday, June 6, 2017

contentment - Positive story

courtesy:Sri.GS.Dattatreyan

"பெருமாளே! நீ மட்டும் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரே ஒரு வைர மோதிரத்திற்கு வழிகாட்டு, என்று உன்னிடம் எத்தனை முறைவேண்டிக் கொண்டிருக்கிறேன்.

அதற்காக எத்தனை மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாயே?" என்றார் ஒருவர்.

மிகத் தீவிரமாக, மொட்டை போட்ட கையோடு, திருப்பதி ஏழுமலையானிடம் அவர் அவ்வாறு வேண்டிக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்தவர், ஏனய்யா? மோதிரம் தரவில்லை என்று இத்துனை குறைப்பட்டுக் கொள்கிறாயே…

மோதிரம் போட்டுக்கொள்ள விரல் தந்திருக்கிறானே!. . அதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் இல்லையா?" என்று கேட்டார்.

மனித மனதின் இயல்பே ஒரு பொருளின் மீது தீவிரமாக ஆசைப்படுவதும்,அதற்காக உங்களைத் தொடர்ந்து போராட வைப்பதும்,பின் அது கிடைத்தவுடன் முழுமையாக அனுபவிக்க விடாமல் அதற்கு அடுத்தது என்ன? என்பதைப்பற்றி ஏங்க வைப்பதும் ஆகும்.

இதைப்பற்றி ரமணமகரிஷி மிக அழகாய்ச் சொல்கிறார்…

ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவே இருந்தாலும், மலையாகக் காட்டும். கிடைத்தபின், மலையாகவே இருந்தாலும், கடுகாய்க் காட்டும் மடமனம்," என்கிறார்.

எத்தனை உண்மையான கூற்று இது .

ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஒருநாள் வாங்கியும் விடுகிறீர்கள். வாங்கியவுடன் அதை முழுமையாக அனுபவிப்பதில் ஆர்வம் காட்டாமல், அடுத்தது எப்படிக் கார் வாங்கலாம் என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பீர்கள்.

அதேபோன்று காரை வாங்கிவிட்டால், அதைவிடச் சிறந்த காரைப்பற்றிய கனவு காணத் தொடங்கிவிடுகிறீர்கள்.

இவ்வாறு அடுத்ததைப் பற்றிய கனவிலேயே மனம் இருப்பதால், ஒரு பொருளை அடைவதற்கு முன், அதன் மீது ஆசைப்படுவதில் காட்டுகின்ற ஆர்வம், அடைந்தபின் அதை அனுபவிப்பதில் காட்டுவதில்லை.

எனவேதான், மீண்டும் மீண்டும் 'திருப்தியின்மை' எனும் சூழலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகத்தையே வென்ற மாவீரன் நெப்போலியன், தாம் இறக்கும் தறுவாயில் சொன்னாராம், நான் இறந்தபின் என் கைகள் இரண்டையும்

சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வையுங்கள்," என்று.

ஏனெனில், மக்கள் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும், உலகையே வென்ற வீரன் நெப்போலியன், கடைசியாக வெறுங்கையோடுதான் சென்றான் என்பதை," என்று சொன்னாராம்.

உண்மையில், உலகம் இறைசக்திக்குச் சொந்தமானது.

நாம் அனைவரும் தற்காலிகமாக அதை அனுபவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள்தான்.

இதை உணராமல், உலகத்தில் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அல்லது உலகையே கொடுத்தாலும், உங்கள் மனத்தை உங்களால் திருப்திபடுத்த முடியாது என்பது நிதர்சனம்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துகொண்டிருக்கும் பக்தர் ஒருவர் தம்முடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

நான் இந்தியாவில் இருந்து கிளம்பும்போது, அமெரிக்கா சென்றவுடன் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்? அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும்? என்ற ஒரு பெரிய லட்சியக் கணக்கு வைத்திருந்தேன். அதன்படி கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன்.

உழைத்ததின் பலனாக நான் சாதிக்க நினைத்த விஷயங்களான கார், வீடு, பங்களா, குடும்பம் என எல்லாமே எனக்குக் கிடைத்தது. அதுவும் 8 வருடங்களுக்குள்ளாகவே கிடைத்தது.

ஆழமாக யோசித்தபின்தான் தெரிந்தது, நான் என்னவெல்லாம் சாதிக்க நினைத்தேனோ அனைத்தையும் ஒன்று விடாமல் சாதித்து முடித்துவிட்டேன்.

ஆனால், எதற்காக இதைச் சாதிக்க வேண்டும் என்று நினத்தேனோ, அது எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை," என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னார்.

இவையெல்லாம் இருந்தால், சந்தோஷமாக வாழலாம்? என நினைத்திருந்த விஷயங்கள் எதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.

இதைத்தான் Depression of Success என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான மேலை நாட்டினர் சந்திக்கிற பிரச்சினை, வெற்றிக்கு பின்னரும் தொடர்கின்ற 'மன அழுத்தம்' எனும் பிரச்சினைதான்.

இதிலிருந்து நாம் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், வெளி உலகப் பொருட்களை அடைந்து அனுபவிப்பதற்காக இப்பிறவியை வீணடித்தோமானால், கடைசியில் வெறுமை மட்டும்தான் மிஞ்சும்.

அதனால், இன்று முதல் நமக்குக் கிடைத்திருக்கும் சிறுசிறு விஷயங்களிலும் அனுபவிக்கும் தன்மையை உயர்த்தி, திருப்தி அடைந்தோமானால், ஆனந்தம் நிரந்தரமாக மனதிற்குள் மெல்லமெல்ல அடி எடுத்து வைக்கும்.

இதை அனுபவமாக உணர்ந்து ஆனந்தமாக இருப்பீர்கள்.நிஜமான செல்வத்தை குவித்திடுவீர்கள்."