Thursday, May 11, 2017

Thiruvedikudi temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   (33)
🍁 சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர். 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
     🍁 திருவேதிக்குடி. 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்:வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்.

இறைவி: மங்கையர்க்கரசி.

தலமரம்: வில்வ மரம்.

தீர்த்தம்: வேத தீர்த்தம்.

சோழ நாட்டின் 128 தலங்களுள் பதினான்காவதாகப் போற்றப்பெறுகிறது இத்தலம்.

இருப்பிடம்: 
தஞ்சாவூர்- திருவையாறு பாதையில் திருக்கண்டியூருக்கு கிழக்கில் 4.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சப்தஸ்தான தலங்களுள் இத்தலம் நான்காவதாகக் கருதப்படுகிறது.

பெயர்க் காரணம்:
வேதி-பிரம்மன் பூசித்த தலமாதலின் வேதிக்குடி என்றும், வேதம் வழிபட்டதாகவும், விழுதிகுடி மருவி வேதிகுடி என்றாயிற்று.

தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர் 3-ல் ஒரே ஒரு பதிகமும்,
அப்பர் 4-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

கோவில் அமைப்பு:
இக்கோயில் வெட்டாற்றின் வடகரையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பளவுடன் அமையப் பெற்றுள்ளன.

மூன்று நிலைகளுடன் கிழக்குப் பார்த்த வண்ணம் இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரத் தரிசனம் செய்து வணங்கிக் கொள்ளுங்கள்.

இக்கோயிலுக்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளன.

பிரதான வாயிலினுள் நாம் உள் புக, அவ்வாயிலின் சற்று தள்ளி நந்தி இருக்கிறது.

பிரகாரத்தில் மூலவரின் பின்னால் சுப்பிரமணியர் சந்நிதி இருக்கிறது.

இதனருகாக, பெருமாள், மகாலட்சுமி சந்நிதிகள் இருக்கின்றன.

வடக்குச் சுற்றில் வலம் வரும்போது, நூற்றியெட்டு லிங்கங்கள் இருக்கின்றன.

வில்வமரத்தினடியில் சிவலிங்கம் இருக்கின்றது.

வடகிழக்கு மூலையில், ஐந்து கலசங்களுடன் அமைந்த நடராஜசபை ஆடியபாதத்தோடு காட்சி தருகிறார்.

கிழக்குச் சுற்றாக சுற்றி வரும்போது திரும்பி பார்த்தோமானால், லிங்கங்களும், சூரியனும் உள்ளனர்.

மூலவர் சிவலிங்கத் திருமேனியானவராக இருந்து அருள்மழை பொழிகிறார்.

இறைவன் வாழை மடுவில் உற்பத்தி ஆனதால், வாழைமடுநாதர் என அழைக்கப்படுகிறார்.

கோஷ்ட தட்சிணாமூர்த்தியாக கல்லாலத்தின் கீழ் ஞான சொரூபமாக தரிசனந் தந்து அருளுகிறார்.

மேற்குக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.

வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவும், துர்க்கையும், மற்றும் சண்டேஸ்வரர் தனி மண்டபத்தில் காட்சி கொடுத்தருள்கிறார்.

தெற்கு திசை நோக்கிய வண்ணம் இருக்கும் அம்பாள் சந்நிதியில், அபய வரத ஹஸ்தங்கள் தாங்கிய சதுர்புஜத்துடன் அருளாட்சி செய்கிறாள் அம்பாள். (நான்கு திருக்கரங்களுடன்) 

தலத்தின் இக்கோயிலில் வசந்த மண்டபம் இருக்கிறது.

நந்தி, மார்க்கண்டேயன், குபேரன், பிரம்மன், சூரியன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.

சுவாமி வட்ட வடிவ ஆவுடையாராகவும், மேலே ருத்ராட்ச விமானத்துடன் காட்சி அளிக்கிறார்.

உள் பிரகாரத்தில் செவிசாய்த்த விநாயகர் உள்ளார்.

முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் நாற்புற திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் இருக்கின்றன. 

வடதிசையில் சிவனுடன் எப்போதுமிருக்கும் மணோன்மணி அம்பிகையின் சிலை இருக்கிறது.

அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் சிலையில், வழக்கமாக சிவனுக்கு இடப்புறமாகத்தான் அம்பாள் இருப்பாள். 

மாறாக இங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிலையில் இறைவனுக்கு வலப்புறமாக இருந்து காட்சி தருகிறாள்.

இத்தகையான காட்சியை காணும்போது, அபூர்வமாகவும் சிறப்பாகவும் நமக்குத் தெரிகிறது.

தலசிறப்பு:
பங்குனி மாதம் 13, 14, 15-ஆம் தேதிகளில் சூரியன்  பூசை செய்கிறான், ஆமாம்...சூரியன் தன் ஒளிக்கதிர்களை இறைவன் மீது பொழிகிறான்.

சூரியன் வழிபட்டதால், சூரியனின் பகைவர்களான ராகு, கேது தரும் துன்பங்களை நீக்குகிறார்.

இராகு, கேது ப்ரிதி தலமாகவும் இத்தலம் விளங்குகின்றன.

தல அருமை:
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் அபகரித்து எடுத்துச் சென்று கடலுக்கடியில் கொண்டு வந்து ஒளித்து வைத்தான்.

அவ்வேதத்தை பெருமாள் மீட்டெடுத்து வரும்படியான சூழல் நடந்தது.

வேதங்கள் அசுரனிடம் இருந்ததால் தோஷம் உண்டானது. 

தோஷம் கழிய, வேதங்களே சிவனை வழிபட்டன. 

வேதங்களின் வழிபாட்டினால், சிவன் அவ்வேதங்களை புனிதப்படுத்தினார்.

பின், வேதங்கள் சிவனிடம் வேண்டுதல் ஒன்று வைக்க, அவ்வேண்டுதலான வேதபுரீஸ்வரராக சிவன் எழுந்தருள வேண்டுமென்பதே!"

அப்படியே சிவன் வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார்.

தலத்திற்கும் திருவேதிக்குடி என்று பெயர் ஏற்பட்டது.

பிரம்மா தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு, இங்கு வந்து சிவனை வேண்டி வழிபட்டு விமோசனம் பெற்றுக் கொண்டார்.

பிரம்மாவிற்கு வேதி என்றொரு பெயரும் உண்டு. 

இதனாலும் சிவனுக்கும், தலத்திற்கும் இப்பெயர்கள் ஏற்பட்டதென சொல்வர்.

இதற்கேற்ப தல விநாயகருக்கு வேத விநாயகர் என்ற பெயரும் இருக்கின்றன.

வேதத்தின் பொருளாக சிவன் விளங்குகிறார் என்றால், வேதச் சொற்களாக அம்பாள் விளங்குகின்றாள்.

தல பெருமை:
வாழ்வில் தொடர்ந்து திருமணத் தடையேற்பட்டவர்கள், இத்தலம் வந்து திருமணம் செய்து கொண்டால் திருமணத்தடை ஏற்படாது என்றும், மேலும் மங்களகரமான தாம்பத்யம் வந்தடையச் செய்யும் பாக்கியமாக அமைகிறது.

திருமணம் ஆகியும் தொடர்ந்து வாழ்வில் நிம்மதியைக் காணாது தவிப்பவர்கள், தமபதியர்களுக்குள் மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை இனிக்கும். அரவனைப்பு அதிகப்படும்.

 ஆகவேதான் இத்தலத்தை திருமணப் பிரார்த்தனைத் தலம் என்கின்றனர்.

வாளை எனும் மீன்கள் நிறைந்த தடாகத்தின் கரையில் ஈசன் அமைந்ததால், இவருக்கு வாழைமடுநாதர்  என்ற பெயரும் உண்டானது.

நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரும் இருந்து வந்தது.

இறைவனைப் பற்றிப் பாடும் சம்பந்தர், இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் 7-ஆம் பாடலை பாடியுள்ளது சிறப்பானதாகும்.

கல்வெட்டுக்கள்: 
திருவேதிக்குடி மகாதேவர் மற்றும் பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் என குறிக்கப்பட்டிருக்கின்றது. 

திருவேதிகுடி கோவிலுக்கு திருமெழுக்கிடுவார் நான்கு பேரும் (கோவிலை துடைத்து மெழுகி தூய்மை செய்பவர்கள்.)
கானம் ஊதுவார் நான்கு பேரும் (கோவில் இசைக் கருவியை இசைப்பவர்கள்.) பள்ளிதாமம் பறித்துக் கொடுப்பவர் இரண்டு பேரும் (நந்தவன மலர்களை பறித்துக் கொடுப்பவர்கள்.) இருந்ததாக கல்வெட்டில்  சொல்லப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்:
சித்திரை மாதத்தில் சப்த ஸ்தான விழா.
ஐப்பசியில் அன்னாபிஷோக விழா சிறப்பாக நடைபெறுகிறது.

பூஜை:
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 9.30  மணி முதல் பகல் 12.30 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு
8.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருவேதிகுடி,
கண்டியூர் அஞ்சல்,
திருவையாறு வட்டம்,
தஞ்சை மாவட்டம்- 613 202

தொடர்புக்கு:
வெங்கடேஸ்வரன் (எ) மோகன்.
04362-262334
93451 04187
98429 78302


         திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment