Thursday, May 18, 2017

Sivakozhundeeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                      *(39)*
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *திருச்சத்திமுற்றம்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* சிவக்கொழுந்தீசர். 

*இறைவி:* பெரியநாயகி.

*தலமரம்:* வில்வமரம்.

*தீர்த்தம்:* சூலத் தீர்த்தம்.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில்.அமையப் பெற்றுள்ள 128 தலங்களுள் 22 வது தலமாக இத்தலம் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
கும்பகோணத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள தலம்.

ஆவூர் வழித்தடத்தில் உள்ளது.

*பெயர்க்காரணம்:*
இறைவனை உமை வழிபட்டு தழுவி முத்தமிட்டதால் சத்தி முத்தம் என வழங்கப்படுகிறது.

மூலவர் பக்கத்திலே இறைவி இருக்கிறார்.

சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தை தரிசிக்கலாம்.

*கோவில் அமைப்பு:*
இக்கோவில் 2.75 ஏக்கருக்கும் அதிகப்படியான நிலப்பரப்புடன் இத்தலம் அமைந்துள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் காண்கிறோம். கோபுரத் தரிசனம் செய்து கொள்கிறோம்.

இக்கோயிலுக்கு இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.

சூலத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

கோவில் பெரியதானது.

வாயிலில் வல்லப கணபதியை முதலாவதாகக் காண முதல்வரை வணங்கிக் கொள்கிறோம்.

வெளிப் பிரகாரமும் மிக விசாலமான முறையில் இருக்கிறது.

இரண்டாவது கோபுத்தினருகே செல்கையில் கோபுர வாயிலருகே இங்கேயும் முதல்வனும் முருகனும் சந்நிதிகள் இருக்க மணங்குளிர தரிசித்து வேண்டி நகர்கிறோம்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கிப் பார்த்த வண்ணமிருக்கிறது. வணங்கி ஆனந்தித்தோம்.

அடுத்தாக யாகசாலை, மடப்பள்ளி, நந்தி பலிபீடம் ஆகியவற்றைக் கடந்தால் வாத்திய மண்டபம் உள்ளன.

புதிதாக வடிக்கப்பட்ட அம்மை திருவுருக்கு ஒரு சந்நிதியும், தேய்ந்த. பழைய திருமேனிக்கான இருக்கும் மற்றொரு சந்நிதியுமாக அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள்.

உள்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, நிதிநிரை கணபதி, லிங்கோத்பவர், மற்றும் ஆறுமுகர் சந்நிதிகளும் இருக்கின்றன.

அடுத்தாற்போல, அகத்தியர் நிறுவி வழிபட்ட திரிலிங்கங்கள், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், ஆகியோரும் அருள்பாலிக்க, துர்க்கை இங்கே சங்கு சக்கரம் தாங்கி, அபய முத்திரையுடன் மகிஷாசுரன் தலைமேல் நின்ற வண்ணம் அருள்பாலிக்கிறாள்.

மூலவர் பெரிய பாணமாக காட்சி தருகிறார். அங்கிருக்கும் தீச்சுடர்கள் பாணத்தில் பிரதிபலித்தன. நாத்தழுதழுக்க விம்மி பக்தியினை வெளிப்பாடு கொள்கிறோம்.

சுவாமி தரிசித்து வெளியேறி வர அடுத்ததாக சுவாமி சந்நிதிக்கு இடப்புறமாக சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் காண அவருக்குண்டான பக்தியின் சாரத்தை அவர் முன் காட்டி வணங்கித் திரும்புகிறோம்.

இத்தலத்திற்கு சிறப்பான செய்தி....அம்மையின் தழுவக் குழைந்த திருக்கோலம்தான்.

கவசம் சாத்தி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.அம்பாள் ஒற்றைக் காலில் தவக்கோலத்துடன் பின்புறத்தில் காட்சி தருகின்றன.

முன்புறம் ஒற்றைக் காலை தரையில் ஊன்றியவாறும்,மற்றொரு காலை ஆவுடையார் மீது மடக்கியவாறும், தன் இரண்டு கரங்களால் சிவக்கொழுந்தை தழுவி ஆனந்தித்திக்கும் அற்புதமான அருள்கோலமிது.

*தல வரலாறு:*
 காஞ்சீபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார்.

அம்பிகையும் இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். 

இறைவன் அம்பிகையை சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார்.

இதுதான் சுவாமியை அம்பிகையை ஆரத் தழுவியதற்குக் காரணம்.

இறைவனும் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார்.

சக்தி இறைவனை தழுவக் குழைந்ததால் இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது.

வேதாகமங்களின் அரும் பொருளை தனக்கு உபதேசிக்கும்படி உமையம்மை இறைவனிடம் கோரிக்கை வைத்தாள்.

மேற்கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த அன்னையின் பக்திக்குக் கட்டுப்பட்டு அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய் காட்சி கொடுத்தார். 

தீப்பிழம்பாய் எழுந்து நிற்பது ஈசனே என்றுணர்ந்த அம்பிகை மகிழ்ந்து அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இறைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலித்தார்.

அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்றும் ஆகி இருக்கிறது. 

மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவு வாயிலின் வலதுபுறம் அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதியும்  உள்ளது. 

இத்தலத்தை வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும் என நம்பிக்கை உண்டு.

சுவாமியின் திருமேனியில், தீச்சுடர்கள் தெரியும். தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரியும்.

சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார்.

கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார்.

நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்கவே அருள்சுடர்கள் பரவித் தெரிகின்றன. 

*திருப்புகழ் தலம்:*
இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றுள்ளார்.

முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது

செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். 

முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.

அப்பர் இத்தலத்தில் தங்கி ஆலயத் திருப்பணி செய்துகொண்டு இறைவனை வணங்கித் தொழுது வந்தார்.

ஒருநாள் திருநாவுக்கரசர் இறைவனை விழுந்து வணங்கி இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவர் பாடிய பதிகம்:

*தேவாரம் பாடியவர்கள்:*
*அப்பர்* 4-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

*கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன் பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாயுன் அன்பர்சிந்தை சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி அத்தா அடியேன் அடைக்கலங் கண்டாய் அமரர்கள்தஞ் சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன் றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய் வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன் செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற் தெருவிற் புகுந்தேன் திகைத்தடி யேனைத் திகைப்பொழிவி உருவிற் றிகழும் உமையாள் கணவா விடிற்கெடுவேன் திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மையுன் தாளென்றன் நெஞ்சத் தெழுதிவை ஈங்கிகழில் அம்மை அடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார் செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*
 
*விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற் சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும் மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ் சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய் திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன் எக்காதல் எப்பயன் உன்றிற மல்லால் எனக்குளதே மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னுந் திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

*பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள் இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.*

இறைவன்,  அப்பரைப் பார்த்து  "திருநல்லூருக்கு வா!" என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்பர் இங்கு வர அப்பருக்கு  அருள் புரிந்த தலம் திருச்சத்திமுற்றம்.

*தல அருமை:*
சக்தி முற்றத்தில் வாழ்ந்து வரும் அத்தனை தம்பதியரும் இணைபிரியாதே வாழ்வர். இது இத்தலத்தின் மகிமை.

பக்தியே முக்திக்கு வித்து என்பதை உலகோர்க்கு உணர்த்திடவே உமையவள் இறைவனிடம் வேதாகமங்களின் அரும் பொருளை தனக்கு உபதேசிக்கும்படி கோரினாள்.

காவிரிக் கரையில் சக்தி முற்றத்தில் உறுதியோடு கடுந்தவம் மேற்கொண்டாள். அதற்கு இறைவன் காட்சி தரவில்லை.

தனது பக்தி நிலையானது என உறுதி செய்யும் நோக்கில், ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். 

தவத்திற்கு இறங்கிய இறைவன் சோதி வடிவில் தீப்பிழம்பாய் காட்சியருளினார்.

அந்தச் சோதிப் பிழம்பை அம்மை அணைத்து தழுவிக் குழைந்தாள். இறைவனும் மகிழ்ந்து வரங்களைத் தந்தார்.

*தலப்பெருமை கதை:*
பாண்டி நாட்டுத் தலைநகரமான கூடல் நகரத்தின் வீதிகளில் நகர் சோதனை செய்து வந்தான் பாண்டியன்.

காவலர் புடை சூழ, கம்பளி போர்வை சாத்தியவாறு வெளி வீதியில் சென்றான்.

தேர்நிலை அருகே வரும்போது, ஒருவர் மனையாளை பிரிந்து மதுரையில் வாடும் ஒரு தமிழ் புலவனின் ஏக்கம் ஒரு பாடலாக வருகிறது.

பனங் கிழங்கு பிளந்தது போல, அலகுகளையும், செங்கால்களையும் உடைய நாரையே உன் மனைவியோடு நீ குமரிக் கடலில் நீராடிவிட்டு, வடதிசையில் சோழ மண்டலம் செல்வாயாக!

அங்கிருக்கும் சத்தி முற்றத்தில் எனது துணைவி, பல்லி சொல்லும் நேரம் நான் திரும்பி வருவேன் என்று உருகி நிற்கிறாள்.

அவளிடம் போய் கூறுங்கள் உன் கணவன் மாறன்வழுதி, நான்மாடக்கூடலில் தவிக்கிறான். கடுங்குளிர் தாங்காது, வாடையில் மெலிந்து, ஆடையின்றி, போர்வையின்றி கைகளால் உடலை அணைத்தவாறு படுத்திருக்கிறான் என்ற செய்தியை அவளிடம் கூறுங்கள்.

ஏனெனில் நீங்கள் இணைபிரியா தம்பதியர்.பிரிந்திருக்கும் எங்கள் வேதனையை புரிந்து கொள்வீர்கள்.

என்னை மதுரை வீதியிலே கண்டதாக செய்தி கூறுங்கள் என்று கவிதை வடிவில் புலம்புகிறான்.

அதைக் கேட்ட பாண்டிய மன்னன் மனமுருகி நின்றான்.

நெடுநாளாக நாரையின் மூக்கிற்கு உவமை காணாது திகைத்து நின்ற பாண்டிய மன்னன், சக்தி முற்றப் புலவனின் பாடலின் உவமையைக் கண்டு அகமகிழ்ந்தான்.

உடனே தான் போர்த்தியிருந்த கம்பளி, சால்வையை புலவனுக்கு போர்த்தியதோடு, மறுநாள் காலை அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து கெளரவித்து அவனது துணைவியிடம் அனுப்பி வைத்தான்.

மாறனவழுதி தம்பதியர் மட்டுமல்ல, சத்தி முற்றத்தில் வாழ்ந்து வரும் அத்தனை தம்பதியரும் இணைபிரியாதவர்கள் ஆவார்கள்.

*தலசிறப்பு:*
சக்தி தழுவிய ஈசனை திருமணம் ஆகாதவர்கள் திங்கட்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்வாழ்வு அமையும். 

கருத்து வேறுபாடு காரணமாய் பிரிந்து வாழக்கூடிய தம்பதியர்கள் இங்கு வந்து வணங்கினால் மீண்டும் அன்பு கூடி சேர்ந்து வாழ்வர்.

அப்பர் திருவடி தீட்சைக்காக வேண்டிய போது நல்லூருக்கு வருமாறு ஈசன் அழைத்த தலம்.

*திருவிழாக்கள்:*
சித்திரையில் பிரமோற்சவம்.

ஆனி மாதம் முதல் நாள் முத்துப் பந்தல் வைபவம்.

புரட்டாசியில் ரத உற்சவம்.

தை மாதத்தில் ரத சப்தமி விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,
மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்,
திருச்சத்தி முற்றம், 
பட்டீஸ்வரம் அஞ்சல் -612 703
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்.

தங்கப்பா சிவாச்சாரியார்.
94435 64221
முத்துக் கிருஷ்ணன்.கணக்கர்.
04374-- 267237
94436 78575

       .        திருச்சிற்றம்பலம்.

*நாளைய..தலம்.....சக்கரைப்பள்ளி*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*