Thursday, May 18, 2017

Adoishankara charitram Part8 - Periyavaa

Courtesy: http://valmikiramayanam.in/?p=2481

ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா

நேற்றைய கதையில் ஆதிசங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணிணது, காலபைரவாஷ்டகம் பண்ணிணது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.

ஒரு தரப்பு இருக்கு, அதாவது ஆதிசங்கரர்  ஞான மார்கத்தை விளக்க வந்தவர், இந்த பாஷ்யங்கள் மட்டும் தான் அவர் பண்ணிணது, இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் அப்பறம் யாரோ பண்ணிணா,  அதை ஆதி சங்கரர்  மேல ஏத்தி சொல்றா. அவர் ஆதிசங்கரர் கர்மாவை எல்லாம் நிரஸனம் பண்ணி, பக்தி மார்கத்துனால எல்லாம், பகவான் கிடைக்க மாட்டார், ஞானத்துனால தான் கிடைப்பார் அப்படிங்கிறதைத் தான் அவர் establish பண்ணிணார், அப்படிங்கிற ஒரு thought இருக்கு.

இதுக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் னு யோசிச்சேன், நாம ஆதி சங்கரரை தர்சனம் பண்ணல. நாம தர்சனம் பண்ணிணது மஹாபெரியவா, மஹாபெரியவா என்ன பண்ணினா அப்படின்னு பார்த்தா,

இந்த ஆதி சங்கரர் சரித்திரம் சொல்லும்போது, பெரியவாளை நிறைய பேசணும்னும் நினைச்சிண்டு இருந்தேன், கொஞ்சமா தான் பேசியிருக்கேன்னு ஒரு குறை. அதனால இன்னைக்கு  மஹாபெரியவளை பற்றியே பேசுவோம்ன்னு  தீர்மானம் பண்ணி இருக்கேன். அப்பறம் திரும்ப மண்டனமிஸ்ரர் கதைக்கெல்லாம் வரலாம்.

மஹாபெரியவா என்ன பண்ணிணான்னு பார்த்தா, நூறு வருஷங்களுக்கு கர்மா, பக்தி, ஞானம் மூணும் பேசினா. ஞானத்துக்கு பாஷ்யம் பாடம் எடுத்து இருப்பா. சந்யாசிகள். மடத்துல இருந்த சன்யாசிகளுக்கு, பண்டிதர்களுக்கு வாக்யார்த்த சதஸ் எல்லாம் எடுத்து இருப்பா. ஆனா நமக்கு தெரிஞ்ச மஹாபெரியவா, காஞ்சி பீடாதீஸ்வரளா இருந்து சந்திரமௌலீஸ்வரர் பூஜை மணிக்கணக்கா பண்ணுவா. இது பெரியவாளை பற்றி தெரிஞ்சவா எல்லாருக்கும், பார்த்தவா எல்லாருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான் ஞாபகம் வரும். அந்த பூஜையை அவருடைய புனித கடமையாக அதை நிறைவேற்றினார். மஹாபிரதோஷத்து போது எல்லாம், அவ்வளவு elaborate ஆக பூஜை பண்ணுவா, பௌர்ணமியின் போது நவாவரண பூஜை பண்ணுவா. வ்யாஸ பூஜை கேட்கவே வேண்டாம், சாயங்காலம் மூணு மணிஆயிடும் பூர்த்தி ஆகறத்துக்கு. காஞ்சி காமாக்ஷி கோவில்ல ஆதிசங்கரர் சன்னதியில போய் ஆதிசங்கரருக்கு பூஜை, காமாக்ஷிக்கு பூஜை, காஞ்சிபுரத்துல பெரியவா இருந்த காலத்துல எல்லாம் ஒவ்வொரு நாளும் காமாக்ஷி தர்சனம் பண்ணியிருக்கா. அவாளோட திக்விஜயம் தவிர காஞ்சிபுரத்துல வந்து  இருந்த காலத்துல எல்லாம் நித்யம் காமாக்ஷி தரிசனம் பண்ணி இருக்கா.

சமூக சேவைன்னு பார்த்தா, கர்ம பக்தி ஞானம் எல்லாம் பண்ணினானு சொல்ல வரேன் . சமூகத்துக்கு முதலில் வேத சம்ரக்ஷணம். 'வேதோ அகில தரம மூலம்' அப்படீன்னு சொல்லி, வேத சம்ரக்ஷணம் பண்ணனும். அப்படீன்னு இதுக்கு ஒடனே பணக்காரா கிட்ட போய் நிக்கல, நீங்க பிராமணாள் எல்லாம் வேதம் படிக்க வேண்டியவா , விட்டுட்டேள், ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கோன்னு சொல்லி, ஒரு வேத சம்ரக்ஷண நிதி trust ஒண்ணு ஆரம்பிச்சு, குழந்தைளை கொடுங்கோ, நாலு பிள்ளைகள் இருந்தா ஒரு பிள்ளையை வேதத்துக்கு கொடுங்கோ, அப்படீன்னு கேட்டு, இன்னிக்கு வேத சப்தம் பூமில இருக்குன்னா பெரியவாதான் காரணம், அப்படி வேதத்தை காப்பாத்தி கொடுத்தா.

ஆகமங்கள் எல்லாம் திரும்பவும் சரி பண்ணி, எல்லா கோவில்கள்லேயும் கும்பாபிஷேகம் பண்ணி, புதுசா சில கோவில்கள் தான் கட்டினா, ஆதிசங்கருக்கா சில கோவில்கள் காட்டினா, சதாராவுல நடராஜா கோவில் ஒண்ணு கட்டினா. டெல்லியிலே மலை மந்திர். இங்க ராமேஸ்வரத்துல ஆதிசங்கரருக்காக ஒரு மண்டபம் கட்டினா, காலடியில ஒரு ஸ்தூபி கட்டினா புதுபெரியவாளை கொண்டு, இப்படி புது கோவில்கள் கொஞ்சம்தான், இருக்கற கோவில்கள்ல எல்லாம் ஒரு விளக்காவது ஏத்தணும் அப்படீன்னு சொன்னா. அந்த குருக்களா இருக்கறவாளுக்கு எல்லாம், திரும்பவும் அந்த ஆகம படிப்பெல்லாம் சொல்லி கொடுத்து, அதுக்கெல்லாம் college வெச்சு, பரீக்ஷை வெச்சு அப்படி சமூகத்துக்கு திரும்பவும் வேதவிளக்கை ஏத்திக் குடுத்து, பக்தியை திரும்பவும் தூண்டி, ஜனங்கள் எல்லாம் ஆஸ்திக வழில இருக்கறதுக்கு பண்ணினா.

அது தவிர பரோபகாரம், பேசின போதேல்லாம், "நம்மால முடிஞ்ச  பரோபகாரம் பண்ணனும். பரோபகாரம் பண்ணும் போது ஏச்சு பேச்சு வரத்தான் செய்யும், நம்ம அதை கவனிக்க படாது, முதல்ல donation வாங்கறதுக்கு நாம பணக்காராள் கிட்ட போய் நிக்கப்படாது, ஏழைகள் கிட்ட முதல்ல வாங்கிக்கோங்கோ, அவா முடிஞ்சா கொடுப்பா, சந்தோஷமா கொடுப்பா, அப்பறம் பாக்கி வேணும்ங்கிறதுகுக்கு பணக்காராள் கிட்ட போகலாம். ஹனுமார் மாதிரி humbleஅ இருந்துக்கோங்கோ, பரோபகாரம் பண்றவா" இப்படியெல்லாம் சொல்லி encourage பண்ணி, நிறைய பரோபகாரம் பண்ண வெச்சுருக்கா.

அதுவும் ஜீவாத்மா கைங்கர்யம் என்கிற அனாதை பிரேத சம்ஸ்காரம்ம்பா. அதுக்கு அஸ்வமேத யாகம் பண்ணிண பலன் அதுக்குன்னு பெரியவா சொல்லி, ஜீவாத்மா கைங்கர்யம்பா பண்ணி இருக்கா. பெரியவா இருந்த 100 yearsல ஒரு காலத்துல பஞ்சம் எல்லாம் வந்து இருக்கு, அனாதை பிரேதம்  எல்லாம் சம்ஸ்காரம் இல்லாம போன காலங்கள் இருந்து இருக்கு, யுத்த காலங்கள் எல்லாம் இருந்து இருக்கு. அதெல்லாம் தாண்டி பெரியவா வந்து அந்தந்த காலத்துல வழி காண்பிச்சு இருக்கா.

பாரத தேசம் சுதந்திரம் வாங்கின போது, பெரியவா கொடுத்த அந்த செய்தியை படிச்சா ஆச்சர்யமா இருக்கும். எவ்வளோ பெரிய மனஸோட பேசினது "எவ்வளோ த்யாகத்துனால நமக்கு சுதந்திரம் கிடைச்சி இருக்கு, இனிமே இந்த தேசம், சுபிக்ஷமா இருக்கணும், எல்லாரும் நன்னா இருக்கணும் னு நாம பிரார்த்தனை பண்ணிப்போம். மேலும், நாம எப்படி தேசத்துக்கான சுதந்திரத்துக்காக பாடு பட்டோமோ, நம்ம மனசுல காம க்ரோதங்கள்ல இருந்தும் நாம விடுபடணும், ஆத்ம சுதந்திரம் தான் அடுத்த லக்ஷியம், அது தான் நம்முடைய பெரிய goal. அதுக்கும் முயற்சி பண்ணனும்" அப்படீன்னு அழகான ஒரு செய்தி கொடுத்து இருக்கா. அப்படி சமூகத்துல கூட இருந்து, அந்த பசு வதையை தடுக்கணும், அப்படி நம்ம தேசத்துக்கு க்ஷேமமான கார்யங்கள் எல்லாம் பார்த்து, பார்த்து பண்ணினா. அதுக்கு constitutionல ஒரு correction கொடுத்தா, அதனால தான், நம்ம மதத்துல இவ்வளவு freedom இருக்கு. நம்ம மதத்துல வந்து பலவிதமான பிரிவுகள் இருக்கு, மற்ற மதங்கள் போல organized sector கிடையாது. அதனால இதை எப்படி wordings போட்டா நம்முடைய எல்லா விதமான பழக்க வழக்கங்கள் கோவில்ல இருக்கறது எல்லாம் காப்பாற்றபடும், அப்படின்னு தெரிஞ்சு, அதுக்கு ஒரு வக்கீல்கள் எல்லாம் கொண்டு, represent பண்ணி, constitutionல change கொண்டு வந்தா. இப்படி முழுக்க சமூகத்து மேல அக்கறையா, சமூக சேவை, பரோபகாரம், கர்மா மார்க்கம்னு சொல்லலாம்.

இதை எல்லாம் பெரியவா வந்து, எவ்வளோ தூரம் அக்கறை எடுத்து, கொஞ்சம் கூட சுயநலம் இல்லாமல், politician எல்லாம் சுயநலதுக்காக பண்றா, அந்த மாதிரி இல்லாமல், கொஞ்சம் கூட சுயநலமே இல்லாமல் தேசத்துக்காக, உலகத்துல இருக்க எல்லாருக்காகவும், பண்ணினா.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே

அப்படின்னு திருமூலர் திருமந்திரம், அந்த மாதிரி பசுவுக்கு ஒரு வாய் புல்லு குடுக்கணும், அகத்திகீரை குடுங்கோ, ஏறும்புப் புத்துல அரிசி போடுங்கோ, சிவபெருமானுக்கு வில்வத்தால அர்ச்சனை பண்ணுங்கோ, தினம் ஒரு பிடி அரிசி எடுத்து வைச்சு, பிடியரிசி திட்டம், அப்படின்னு ஆரம்பிச்சு அன்னதானம். பெரியவா பண்ணிண அன்னதானத்துக்கு கணக்கே கிடையாது, கோடிக்கணக்க்கான பேருக்கு சாப்பாடு போட்டிருப்பார்ன்னு சொல்லணும், போன இடத்துல எல்லாம் ஆயிரக் கணக்கான பேருக்கு சாப்பாடு, அப்படி அந்த சமூக சேவையை வந்து பெரியவா எல்லார் மனசுலேயும் அதோட விதையை விதிச்சு, "ஒருத்தருக்கொருத்தர் குடுக்கணும், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணனும்" ங்கற அந்த மனப்பாண்மையை கொண்டு வந்தார், இந்த Englishகாரன் ஆட்சிக்கு அப்புறம் நமக்கு ரொம்ப ஏழ்மைல வாடினதுனால, இந்த குணங்களெல்லாம் ரொம்ப அடிப்பட்டு போய் இருந்தது, அதெல்லாம் பெரியவா வந்து திரும்பவும் மனசெல்லாம் ஒரு துலக்கி, திரும்பியும் நம்பளுடைய பெருமையை நமக்கு ஞாபகபடுத்தி, நம்முடைய கலாச்சாரதோட பெருமையை ஞாபகப்படுத்தி, பெரிய உபகாரம் பண்ணினார்.

அடுத்தது என்ன பண்ணினார், பெரியவான்னு பார்த்தால், பக்திதான். ஞானத்துக்கு பெரியவா பண்ணினது, ஞானியா உட்கார்ந்திருந்தார். அதை நாம பார்த்து, இப்படியும் ஒரு நிலைமை இருக்குன்னு நம்ம தெரிஞ்சுண்டோம்.

ஆனா காரியமா பெரியவா பண்ணினது பார்த்தால், காசியாத்திரை, ரெண்டுவாட்டி எப்படி காசியாத்திரை பண்ணணுமோ, அந்த மாதிரி முறைப்படி, ராமேஸ்வரத்துக்கு முதல்ல போயிட்டு, அங்க இருந்து, ராமலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி, மணலை எடுத்துண்டு, கங்கைல போய் கரைச்சுட்டு, விஸ்வநாதர பார்த்து, அங்கேர்ந்து திரும்பவும் ராமேஸ்வரத்துக்கு வந்து ராமநாத சுவாமிக்கு கங்கா ஜலத்தால் அபிஷேகம் பண்ணி,, அப்புறம் மடத்துக்கு வந்து கங்காபூஜை பண்ணி, இப்படி இருவதியஞ்சு வருஷம் எடுத்துண்டா, இந்த காசியாத்திரை முடிக்கறதுக்கு. அப்படி காசிக்கு ரெண்டுவாட்டி, அங்க மதன்மோஹன் மாளவியா ரொம்ப பிரமாதமா வரவேற்பு குடுத்தார், அப்படி காசியாத்திரை, விஸ்வநாதஸ்வாமி தரிசனங்கறது ஒவ்வொரு ஹிந்துவும் பண்ணனும் எங்கறதனால அதை பண்ணி காமிச்சார்.

எத்தனை கோவில்ல கும்பாபிஷேகம், புனருத்தாரணம், அப்படி. அப்புறம்பெரியவா ஆதிசங்கரரே தமிழ்தான் பேசியிருப்பார்ன்னு சொல்றார், இங்கே இருந்து, தமிழ்நாட்டுலேர்ந்து போனாவர் தான் அவா அப்பா அம்மா. மலையாளம்ங்கற பாஷையே அப்போ வந்திருக்காது, அப்புறம் கலந்து கலந்துதான் மலையாளம் உருவாகியிருக்கும், சமஸ்க்ருதமும் தமிழும் கலந்து, அதனால ஆதிசங்கரர் தாய்மொழி தமிழ்தான்ங்கறார் பெரியவா. அப்படி தமிழ்ல பெரியவாளுக்கு ரொம்ப பற்று, தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்யபிரபந்தம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி, சின்ன குழந்தைகள் மனசுலையே அந்த பக்தியை ஊட்டிவிட்டார்.

அதோடு சங்கர ஸ்தோத்திரங்கள், நமக்கு பெரியவாள பத்தி, எப்படி இவ்வளவு தெரியறதுன்னா தெய்வத்தின் குரல்னால தான் , தெய்வத்தின் குரலிலேயோ இல்லை பெரியவாளோட ப்ரவச்சனங்கள் இப்போ மஹாபெரியவா வாக்கு நிறைய நமக்கு கேட்க முடியறது. அதுலலெல்லாம் கேட்டா என்ன தெரியறதுன்னா, ஒரு 10 hours பெரியவா குரல் எடுத்து கேட்டா, அதுல 9 hours பெரியவா வந்து, ஸ்தோத்ரங்களை எடுத்து, அதுக்கு அழகா அர்த்தம் சொல்றார். சிவானந்தலஹரியோ, சௌந்தர்யலஹரியோ, அந்த மாதிரி உன்மத்த பஞ்சாஷத்தோ, மூகபஞ்சஸதியோ, அதுலேர்ந்து ஸ்தோத்ரங்கள எடுத்து, அதுக்கு வார்த்தை வார்த்தையா அர்த்தம் சொல்லி, அதை எப்படி ரசிக்கணும், அதுக்குள்ள எங்க அத்வைதம் இருக்கு, இப்படி ஒரு மணி நேரம் அழகா சொல்லி முடிக்கிறார்.

இப்போ நான், பெரியவாளுக்கு பிடிச்சதா, அவர் அடிக்கடி quote பண்ற சில ஸ்லோகங்கள் எல்லாம் சொல்றேன்,

சிவானந்தலஹரில,

सन्ध्यारम्भ-विजृम्भितं श्रुति-शिर-स्थानान्तर्-आधिश्ठितं

स-प्रेम भ्रमराभिरामम्-असकृत् सद्-वासना-शोभितम् |

भोगीन्द्राभरणं समस्त-सुमनः-पूज्यं गुणाविश्कृतं

सेवे श्री-गिरि-मल्लिकार्जुन-महा-लिन्गं शिवालिन्गितम् ||

ஸந்த்4யாரம்ப4விஜ்ரு2ம்பி4தம் ஸ்1ருதி-ஸி1ர ஸ்தா2னாந்தராதி4ஷ்டி2தம்
ஸப்ரேம ப்4ரமராபி4ராமமஸக்ரு2த் ஸத்3வாஸனா ஸோ1பி4தம் |
போ4கீ3ந்த்3ராப4ரணம் ஸமஸ்த ஸுமன:பூஜ்யம் கு3ணாவிஷ்க்ரு2தம்
ஸேவே ஸ்ரீகி3ரி மல்லிகார்ஜுன மஹா-லிங்க3ம் ஸி1வாலிங்கி3தம் ||

அப்படின்னு மல்லிகைக்கும் பரமேஸ்வரனுக்கும் connect பண்ணி ஒரு ஸ்லோகம் இது, இங்கே மல்லிகார்ஜுன ஸ்வாமிங்கறது ஸ்ரீசைல க்ஷேத்ரத்துல இருக்கற ஸ்வாமி, அம்பாள் பேரு ப்ரமராம்பிகா, அதெல்லமும் இந்த ஸ்லோகத்துல வர்றது, சந்த்யா காலத்துல மலர்கிறது மல்லிகை, ஆடறது பரமேஸ்வரன், ஸ்ருதி-சிர ஸ்தானாந்தராதிஷ்டிதம் காதுலேயும் தலைலேயும் பூ வைச்சிக்கறா, ஸ்ருதி-சிர: ன்னா உபநிஷத், உபநிஷத்ல இருக்கறது, பரமேஸ்வரனுடைய விஷயம் தான்.

ஸப்ரேம ப்ரமராபிராமம் ப்ரமரமம்னா வண்டு, மல்லிகைல வண்டு இருக்கு, பரமேஸ்வரன் பக்கத்துல ப்ரமராம்பிகா இருக்கா, ஸத் வாஸனா ஸோபிதம், நல்ல வாசனை மல்லிகைல இருக்கு, பரமேஸ்வரன் கிட்ட எல்லா குணங்களும் இருக்கு, போகீந்த்ராபரணம், மல்லிகை செடிக்கு, பாம்பு வரும்பா, பரமேஸ்வரனை பாம்பெல்லாம் சுத்திண்டு இருக்கு, ஸமஸ்த ஸுமன:பூஜ்யம் மத்தபூவெல்லாம் மல்லிகைய வந்து கொண்டாடறது ராஜா மாதிரி, ஸுமன: ன்னா தேவர்கள் னும் அர்த்தம், எல்லா தெய்வங்களுமே ஈஸ்வரனை வணங்கரா, குணாவிஷ்க்ருதம் அது மாதிரி, இரண்டுலேயும் விசேஷ குணங்களெல்லாம் இருக்கு, ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹா-லிங்கம் ஸிவாலிங்கிதம் இதை எடுத்து பேசியிருக்கார்.

அப்புறம்

ऐश्वर्यमिन्दुमौलेरैकत्म्यप्रकृति काञ्चिमध्यगतम् ।

ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् ॥

ஐஸ்ர்யமின்துமௌலேரைகத்ம்யப்ரக்ருதி காஞ்சிமத்யகதம் |
ஐன்தவகிஷோரசேகரமைதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம் ||

நிகமங்கள், வேதங்கள், இதம் பரம், இதுதான் தெய்வம் என்று காண்பிக்கக்கூடிய எந்த வஸ்துவோ, அது பரமேஸ்வரனுடைய பெரிய பாக்கியமாக, ஐஸ்வர்யமாக காஞ்சிபுரத்ல விளங்கிண்டு இருக்கு, இப்படினு, மூகபஞ்சசதி ஸ்லோகம்.

शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः ।

विपिनं भवनममित्रं मित्रं लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥

சிவ சிவ பச்யன்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: |
விபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம்

அப்படின்னு ஒரு ஸ்லோகம், "என்ன ஆச்சர்யம், காமக்ஷியினுடைய கடாக்ஷத்தை பெற்ற புருஷர்கள், காட்டையும், மாளிகையையும் ஒண்ணா பார்க்கறா, மித்ரனையும், சத்ருவையும் ஒண்ணா பார்க்கறா, ஒரு யுவதியுடைய உதடையும், ஓட்டாஞ்சில்லியும் ஒண்ணா பார்க்கறா, அப்படிங்கற ஸ்லோகத்தை எடுத்துண்டு, அம்பாளுடைய கடாக்ஷம் கிடைச்சிடுதுன்னா, ஒருத்தனுக்கு இப்படி காட்டுல கிடக்குறோமே அப்படிங்கற பயம் இருக்காது, இவன் friend அவன் enemy அப்படின்னு சொல்லி, கோவம் இருக்காது, ஒரு யுவதியுடைய உதடு ஓட்டாஞ்சில்லியா தெரியறது அப்படின்னா, காமம் அற்று போயிடுத்து, காமம் கோபம், பயம் எல்லாம் அற்று போயிடுத்து, அம்பாளுடைய சரணத்தை த்யானம் பண்ணன்னா , குழந்தையா இருக்கலாம், காமமெல்லாம் மறந்து போயிடும் அப்படின்னு சொல்றார், நாம நிறைஞ்சு இருக்கலாம், அப்படின்னு சொல்றார். இந்த மாதிரி ஒரு ஸ்லோகம்.

मार्गा-वर्तित पादुका पशु-पतेर्-अङ्गस्य कूर्चायते

गण्डूशाम्बु-निशेचनं पुर-रिपोर्-दिव्याभिशेकायते

किन्चिद्-भक्शित-मांस-शेश-कबलं नव्योपहारायते

भक्तिः किं न करोति-अहो वन-चरो भक्तावतम्सायते

மார்கா3வர்தித பாது3கா பஸு1பதேரங்க3ஸ்ய கூர்சாயதே
3ண்டூ3ஷாம்பு3 நிஷேசனம் புர-ரிபோர்தி3வ்யாபி4ஷேகாயதே
கிஞ்சித்34க்ஷித மாம்ஸ-ஸே1ஷ-கப3லம் நவ்யோபஹாராயதே
4க்தி: கிம் ந கரோத்யஹோ வன-சரோ ப4க்தாவதம்ஸாயதே

அப்படின்னு ஒரு ஸ்லோகம், இது வந்து சிவானந்தலஹரி ஸ்லோகம், இதுல வந்து, வனசர: வேடனான கண்ணப்பனுடைய பக்தி எப்படி இருக்கு, அவன் நடந்து போன பாதுகைய வந்து கூர்ச்சம் மாதிரி, தலைல வெச்சுக்கறார் பரமேஸ்வரன், அவன் வாயிலேர்ந்து துப்பற ஜலத்தை வந்து, ரொம்ப திவ்யமான அபிஷேகமா ஏத்துக்கறார், அவன் கொஞ்சம் கடிச்சு பார்த்து குடுக்கற மாமிசத்தை வந்து, நைவேத்தியமா நினைச்சுக்கறார். பக்தி என்ன தான் பண்ணாது, அஹோ வன-சர: பக்தாவதம்ஸாயதே , பக்தர்களுக்கெல்லாம் மேலான பக்தனாயிட்டான், அப்படின்னு சொல்றார்.

இப்படி பெரியவாளுடைய lectures கேட்டால், நிறைய ஸ்லோகங்களை எடுத்து சொல்லுவா. இந்த திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி, லக்ஷக்கணக்கான புஸ்தங்கள் போட்டு, போட்டி எல்லாம் வெச்சு, குழந்தைகளை படிக்க வெச்சிருக்கார். மார்கழி மாசம், தினமும் அறுபதையும் பாராயணம் பண்ணனும்ன்னு சொல்லிருக்கார். தினமும்,

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ,

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!  

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ,

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

அப்படின்னு சொல்லி, தினம் காத்தாலை எழுந்தவுடனே, இதை சொல்லணும், அப்படின்னு சொல்லிருக்கார். ராத்திரி படுத்துக்கும் போது, திருவெம்பாவை லேர்ந்து,

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

அப்படிங்கற இந்த பாசுரத்தை சொல்லிட்டு, தூங்கணும் அப்படின்னு சொல்லியிருக்கார்.

இன்னொன்னு, யாரவது, நல்லவாளா இருந்து, கொஞ்சம் அடக்கத்தோட, hoenestஆ நல்ல மனசோட இருக்கறவா வந்தா, அவாளோட backgroundஅ பார்க்காமல் அவாள வந்து நல்வழி படுத்தியிருக்கார். இந்த கண்ணதாசன் ன்னு ஒரு பாட்டு எழுதறவர், அவருக்கு குடி, அந்த மாதிரி கேட்ட பழக்கங்கள் இருக்கு, மூணு நாலு மனைவிகளெல்லாம் இருந்தா, ஆனா அதுனால அவருக்கு உடம்பெல்லாம் வந்து பெரியவா கிட்ட வந்து சரணாகதி பண்ணபோது, பெரியவா அவரை வந்து, "நீ இங்க வரத்துக்கு கூச்சமே படாதே, பக்த பராதீதன் அப்படின்னு பகவானை சொல்றாளோல்லியோ, பதித பாவனன் விழுந்தவாள தூக்கிவிடறவன் ன்னு தானே பேரு, அதனால, அதுக்கு தானே நாங்க இருக்கோம், நீ உன்னை பற்றி, குறைவா நினைச்சுண்டு இங்கே வராம இருக்காதே, நீ வா" அப்படின்னு பெரியவா அவரை encourage பண்ணி, அவர் அப்படி வந்ததுனாலதான், அர்த்தமுள்ள இந்துமதம் ன்னு தலைப்புல ஒரு முப்பது புஸ்தகங்கள், நாஸ்திகரா இருந்தவர், ஆஸ்திகரா மாறி, முப்பது புஸ்தகங்கள் எழுதி, அதானால ஜனங்களெல்லாம் திருந்தினா.

அதே மாதிரி நடிகர் சிவாஜி கணேசன் ஒரு வாட்டி வந்து பார்த்திருக்கார், அவர் வந்து பார்த்துட்டு, அவர் நடிச்ச அடுத்த படத்துல, திருநாவுக்கரசரா நடிக்கறதுக்கு, மஹாபெரியவாளோட அங்க அசைவுகளை வெச்சுண்டு, திருநாவுக்கரசர் மாதிரி நடிச்சிருக்கார். அப்படி, M.G. ராமச்சந்திரன், பெரியவாளை வந்து பார்த்துட்டு, அப்புறம் ரொம்ப அம்பாள் பக்தராகி மூகாம்பிகை கோவிலை எல்லாம் எடுத்து கட்டறார். யார் வந்தாலும், பெரியவாள வந்து பார்த்தால், அந்த சந்நிதி விசேஷம், அவாளுக்கு மனசு மாறிவிடுகிறது. நினைச்சு பார்க்கணும், எவ்வளவெல்லாம் பெரியவா face பண்ணிருக்கா, காபாலிகன் கிட்ட சங்கரர் கழுத்தை குடுத்த மாதிரி காரியங்களெல்லாம் பெரியவா பண்ணிருக்கார். it was not a easy route, அவருக்கு  bed of rosesஏ கிடையாது, எவ்வளவு நாஸ்திகவாதம்! எவ்வளவு, புத்தர் மாதிரி, ஒரு பெரிய கவர்ச்சிகரமான ஒரு character காந்தி, அவருடைய மோகத்லே இருந்தா எல்லாரும், அதுலேர்ந்து, சனாதன தர்மத்தை எப்படி நாம புரிஞ்சுக்கனும், இது வந்து எல்லாரும் all inclusive இது, ஒரேடியா அஹிம்சைன்னு பேச முடியாது, அப்படிங்கரதெல்லாம் பெரியவா வந்து புரிய வைச்சு, எவ்வளவு, இன்னிக்கு நம்ப எல்லாரும் வந்து பெரியவாள கொண்டாடரறோம்ன்னா, அப்படி நூறு வருஷம் அவா பண்ணின கார்யங்கள்.

அதே நேரத்துல பணத்துல honesty, பணமே சேராம பார்த்துண்டார் மடத்துக்கு, பணம் வந்தா கலி வந்துரும் அப்படின்னு சொல்லி, உடனே உடனே செலவு பண்ணிடுவார், நித்யம் ராத்திரி, சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியில எவ்வளவு வரவு எவ்வளவு செலவு அப்படின்னு கணக்கு ஒப்பிப்பார். இந்த உலகத்ல இருந்து, ஆதிசங்கரர், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் எல்லாம் பேசிருப்பாரா , அதுல அவர் ஈடுபட்டிருப்பாரா, இந்த மாதிரி ஸ்தோத்ரங்களெல்லாம் எழுதிருப்பாரான்னு நாம நினைக்கவே வேண்டாம். இப்படி தான் எழுதியிருப்பார்.

நம்ம பெரியவா ஆதிசங்கரர், பஜகோவிந்தத்துல என்ன சொன்னாரோ அதை பண்ணி காண்பிக்க வந்தவர். உலகத்தில் வந்து பற்று வைக்காமல், பகவானோட பஜனத்தை பண்ணு, கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் அப்படின்னு சொல்லி இருக்கார். பெரியவா ஸ்வாமிகளை வெச்சிண்டு, கீதா பாராயணம் பண்ண சொல்லி கேக்கறது, பாகவதம் படிக்க சொல்லி கேக்கறது, நித்யம் பெரியவாளே மூணு வேளை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்றது, அப்படி பண்ணினா.

அப்புறம் பெரியவா வந்து, யாரெல்லாம் பத்தி பாராட்டி பேசிருக்கார்ன்னு பார்த்தா சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணர் கிட்ட paul Brunton ஐ அனுப்பிச்சார், ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பத்தி பெரியவா ரெண்டு மூணு வாட்டி குறிப்பிட்டு ரொம்ப உயர்வா பேசிருக்கார். நம்ப கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், சிவன் ஸார், பாடகச்சேரி ஸ்வாமிகள்ன்னு ஒருத்தர், இப்படி, பக்தர்களை பத்திதான் பேசினா. அப்புறம், போதேந்த்ராள், அய்யாவாள், சத்குரு ஸ்வாமிகள், அப்படி பெரியவா யாரெல்லாம் கொண்டாடினார், அப்படின்னு பார்த்தால், பக்தர்கள் தான். பக்தி மூலமா ஞானம் அடைஞ்சவா, அப்படி பக்தி மார்க்கம் தான் வழி, அப்படின்னு, நிச்சயமா ஆதி சங்கரர் சொல்லிருப்பார் அப்படின்னு, நம்ப முன்னாடி வாழ்ந்த பெரியாவா, அதை உறுதிபடுத்தறார்.

ஞானிகளா இருந்தாலும், அவா உலகத்துக்கு வழிகாட்டற ஒரு roleல ஜகத்குருவா இருக்கும்போது, பக்தியை தான் வழியா காண்பிப்பா. அது மூலமாத்தான் எல்லாரும் உயர முடியும். இந்த உலகத்துல ரொம்ப attachedஆ இருக்கறவா, காரியங்கள்தான் பண்ணமுடியும், ஒரு நிமிஷம் உட்கார்ந்து எனக்கு ஸ்லோகம் கூட சொல்லறதுக்கு ஓடலை அப்படின்னா, நீ வந்து பரோபகாரம் பண்ணு, இன்னும் சித்தசுத்தி வரட்டும். இல்லை, உட்கார்ந்து உன்னால ஸ்வாமிய த்யானம் பண்ண முடியறதா, இதுல கூட உலகத்துக்கு பின்னமான ருசி இருக்கும்னு தெரிஞ்சுண்டு, அங்கங்க போனால், எல்லாம் ஒரே பரம்பொருள் தான், வைஷ்ணவாள்ட்ட போனாலும் சரி, சைவர்கள்ட்ட போனாலும் சரி, முருக பக்தர்கள்ட்ட போனாலும் சரி, உனக்கு உன் தெய்வம் பெரிசு, மத்ததை பழிச்சு பேசாதே, அப்படின்னு அதையும் சொல்லிக்குடுத்து, ஷண்மத ஸ்தாபானாச்சாரியாள் ன்னு எப்படி ஆச்சார்யாள் இருந்தாளோ, அதே மாதிரி பெரியவா இருந்து நமக்கு காமிச்சு குடுத்திருக்கார். அதனால நாம பெரியவாளையும் நினைக்கணும். நிச்சயமா ஆதிசங்கரர் த்யானம் பண்ணும்போது, பெரியவாளையும் த்யானம் பண்ணனும். இவா காமிச்ச வழில நம்ம போனாலே ஆதி சங்கரர் நமக்கு ஆசிர்வாதம் பண்ணுவார்.

இன்னிக்கு இதோட பூர்த்திபண்ணிக்கறேன்.

சங்கரர் வழியில் மகாபெரியவா (21 min audio in tamil. same as the script above)

ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம


No comments:

Post a Comment