Monday, May 8, 2017

Miracle - periyavaa

பெரியவா சரணம் !!

!!மனசுக்குள்ளே அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ…அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான்!!

பல வருஷங்களுக்கு முன்…ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி ஸ்ரீ மடத்தில் மஹா ஸ்வாமிகளைத் தரிசிக்க ஏகக் கூட்டம். தனது அறையை விட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்று பார்த்து விட்டுச் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக வந்து நமஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக் கொண்டு நகர்ந்தனர். பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப் பேந்த விழித்தபடி எந்த விதச் சலனமும் இன்றி நின்றிருந்தான்.

பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக் கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மஹா ஸ்வாமிகள், "ஏண்டாப்பா, நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கர நாராயணன் தானே ? ஏன் இப்பிடி கண் கலங்கிண்டு நிக்கறே ? என்ன சிரமம் ஒனக்கு ?" என்று ஆதரவுடன் விசாரித்தார்.

பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்து விட்டது அவருக்கு. கேவிக் கேவி அழுது கொண்டே, "ஆமா பெரியவா. இப்போ எனக்குத் தாங்க முடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு. என்ன பண்ணறதுன்னே தெரியலே…நீங்க தான் என் தெய்வம். எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே !" என்று மீண்டும் பெரியவா பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, "சங்கரா…ஒண்ணும் தாபப்படாதே ! சித்த நீ அப்படி ஒக்காந்துக்கோ…இவ்வாள்லாம் பேசிட்டுப் போன அப்புறம் ஒன்ன கூப்பிடறேன் !" என்று எதிரில் கை காண்பித்தார்.

"உத்தரவு பெரியவா…அப்படியே பண்ணறேன் !" என்று கூறி விட்டுச் சற்று தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரை மணி நேரம் கழித்து பக்தர்கள் ஆச்சார்யாளைத் தரிசித்து விட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணி விடை செய்கிற இரு இளைஞர்களைத் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கர நாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோடு ஆடிட்டரைப் பார்த்து, "சங்கரா…ப்ராக்டீசெல்லாம் நன்னா நடந்துண்டிருக்கோலியோ? நீ தான் 'லீடிங்' ஆடிட்டர் ஆச்சே …ப்ராக்டீசுக்குக் கேப்பானேன் ?

அது சரி. ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லே தானே இருக்கார் ? சௌக்கியமா இருக்காரோலியோ ?" என்று கேட்டார். உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ப்ராக்டீசெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா. அப்பாவும், அம்மாவும் பம்பாயிலே இருக்கிற என் தம்பி கிட்டே போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத் தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே…நீங்க தான் நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும்" என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டி அணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.

சிறுவன் சம்பத்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம் ஆடிட்டர் சங்கர நாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்து கொண்டது அந்த நடமாடும் தெய்வம்.

"அழப்படாது சங்கரா..எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்படாது! அது சரி…இந்தப் புள்ளையாண்டான் யாரு ? ஒம் புத்ரனா ?" எனக் கேட்டார் ஸ்வாமிகள்.

"ஆமாம் பெரியவா. இவன் என் பையன் தான். பேரு சந்திரமௌலி. இவனுக்குத் தான் பெரியவா திடீர்னு.." என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க நின்றார் சங்கர நாராயணன்.

உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, "சங்கரா ! இவனுக்கு திடீர்னு என்னாச்சு ? சந்திரமௌலி ஸ்கூல்லே படிச்சுண்டிருக்கானோலியோ…பதட்டப்படாம விவரமா சொல்லேன் !" என்று ஆறுதலாகச் சொன்னார்.

சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, "பெரியவா…பையன் சந்திரமௌலி மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்லே ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னெண்டு வயசாறது. படிப்புலே கெட்டிக்காரன். க்ளாஸ்லே இவன் தான் பர்ஸ்ட். இருவது நாளக்கு முன்னாலே ஒரு நாள் காத்தாலேர்ந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, 'பேச முடியலே' னு ஜாடை காட்றான். அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே. சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம் போல் சாப்பிடறான்….நன்னா தூங்கறான். அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா. ஆனா பேச்சு தான் வரல்லே…நா என்ன பண்ணுவேன்..நீங்க தான் கிருபை பண்ணி, இவனைப் பேச வைக்கணும் !" என்று கண்களில் நீர் வழியப் பிராத்தித்தார்.

ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், "பையனை அழைச்சுண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா ? சந்திரமௌலீக்கு ஸ்வாமி கிட்டே பக்தி உண்டோல்லீயோ ?"

"நிறைய உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம், ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தாலே குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத் தான் ஸ்கூலுக்குக் கிளம்புவான். ஆத்லே (வீட்டில்) பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு பெரியவா. எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற – சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுலே ஒத்திண்டே இருப்பான். "சீதையையும் ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்' னு அடிக்கடி சொல்லிண்டுருப்பான். வாரத்துலே ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்படி ஆயிடுத்தே பெரியவா.." சங்கர நாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. மீண்டும் கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

அவரை சமாதானப் படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டார். "மயிலாப்பூர்லே நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழைச்சுண்டு போற வழக்கமுண்டோ ?"

"உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சுண்டு போவேன். இவனுக்கு பேச்சு நின்னு போன அன்னிக்கு மொத நாள் சாயங்காலம் கூட நான் தான் இவனை ரசிக ரஞ்சனி சபாவுலே நடந்த இராமாயண உபன்யாசத்துக்கு அழைச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையா கேட்டான். மறு நாள் இப்படி ஆயிடுத்து !"

சிரித்துக் கொண்டே, "ராமாயணம் கேட்டதினாலே தான் இப்படி ஆயிடுத்துன்னு சொல்ல வர்றியா ?" என்று கேட்டார் ஆச்சார்யாள்.

"ராம ராம ! அப்படி இல்லே பெரியவா ! அதுக்கு அடுத்த நாள்லேங்கறத்துக்காகச் சொல்ல வந்தேன் !" என கன்னத்தில் போட்டுக் கொண்டார் ஆடிட்டர்.

"அது சரி. உபன்யாசம் பண்ணினது யாரோ ?" என வினவினார் பெரியவா.

"ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா !"

"பேஷ்…பேஷ்…சோமதேவ சர்மாவோட புத்ரன். நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா…அது போகட்டும் சங்கரா. பையனை யாராவது டாக்டர் கிட்டே காமிச்சியோ ?"

"காமிச்சேன் பெரியவா !"

"எந்த டாக்டர் ?"

"டாக்டர் சஞ்சீவி !"

"அவர் என்ன சொல்லறார் ?" – பெரியவா.

"டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்டு, 'குரல்வளைலே ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்' னு சொன்னார் பெரியவா. "

"நிச்சயமா சரி ஆயிடும்னு சொல்லலியா ?"

"அப்படி உறுதியா சொல்லலே பெரியவா..எப்படியாவது நீங்க தான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணனும். நீங்க தான் காப்பாத்தணும் !"

சற்று நேர மௌனத்துக்கு பிறகு பேசினார் ஆச்சார்யாள். " நீ ஒரு காரியம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலியை அழைச்சுண்டு போய் இந்த ஊர்லே இருக்கிற கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணிப் பிரார்த்தனை பண்ணிண்டு வா. ராத்திரி மடத்துலேயே பலகாரம் பண்ணிட்டு தங்கிடு. கார்த்தாலே ஸ்நானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதையெல்லாம் முடிச்சுண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு !"

ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கர நாராயணனுக்கு ! பெரியவாளை நமஸ்கரித்து விட்டு இருவரும் ஆலய தரிசனத்துக்குப் புறப்பட்டனர்.

அடுத்த நாள் காலை பத்து மணி. முன்னதாகவே வந்து அமர்ந்திருந்து அந்த நடமாடும் தெய்வம். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர்.

ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கர நாராயணன். சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்து விட்டுப் பேசினார்: "சங்கரா…ஒரு கார்யம் பண்ணு. சந்திரமௌலீயையும் அழைச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்லே அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்புறமா நீ என்ன பண்ணறே…அதே ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா வேற எங்கேயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு…அப்படி எங்கேயாவது கோவில்லேயோ, சபாவிலோ சொல்லறார்னா…நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர காண்டத்தில் இருந்து ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலியை கூட அழைச்சுண்டு போய் 'ஸ்ரவணம்' (கேட்டல்) பண்ணி வை ! ஸ்ரீ சீதாராமப் பட்டாபிஷேகப் பூர்த்தி அன்னிக்கு என்ன பண்ணறே…நல்ல மலை வாழைப்பழமா பார்த்து வாங்கிண்டு போய் 'பௌராணிகர்' (உபன்யாசகர்) கைல கொடுத்து, ரெண்டு பேருமா அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ.

மனசுக்குள்ளே அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ…அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே…போயிட்டு வா' என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தது அந்தப் பரப்பிரம்மம்.

சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயணப் பிரவசனம் நடைபெறுகிறதா' என்று தினமும் நாளிதழ்களில் 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியைப் பார்த்து வந்தார் ஆடிட்டர்.

அன்றைய பேப்பரில், 'மயிலை ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா கோயிலில் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் 'நவாஹ' மாக (9 நாட்கள்) நடைபெறும்' என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருந்தது.

அன்று சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஷிர்டி சாய் பாபா கோவிலுக்குப் போனார் சங்கர நாராயணன். உருக்கமான உபன்யாசம். மெய் மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்களில் இருந்து நீர் பெருகியது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார் சங்கர நாராயணன்.

அன்று ஸ்ரீமத் இராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை ஷிர்டி சாய் பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தி ஆகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா. ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து எழுந்தனர். சங்கர நாராயணனும். சந்திரமௌலீயும் அவரை நமஸ்கரித்து எழுந்தனர். தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய வாழைப் பழ சீப்பை சந்திரமௌலீயிடம் கொடுத்து, ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு கூறினார். அவன் அப்படியே செய்தான்.

சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீ ராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, "கொழந்தே…நீ க்ஷேமமா இருப்பே. இந்த இரண்டு பழத்தையும் நீயே சாப்பிடு!" என்று கூறி ஆசீர்வதித்தார். கோயிலை விட்டு, வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.

அடுத்த நாள் காலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குளியல் அறையில் பல் துலக்கி விட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, "அம்மா, காபி ரெடியா?" என்று உரக்கக் குரல் கொடுத்தான். பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவன் அப்பாவும், சமையல் அறையில் இருந்த அம்மாவும் தூக்கி வாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர். அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.

"காபி ரெடியானு நீயாடா குரல் கொடுத்தே சந்திரமௌலி !" என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள் அம்மா. சங்கர நாராயணன், அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார். சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.

அன்று மாலை 5.30 மணி. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் மஹா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார் ஆடிட்டர் சங்கர நாராயணன்.

சந்திரமௌலீயுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி: "சந்திரமௌலி…இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ ? பேஷ்…பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை !"

உடனே அந்த சந்திரமௌலி, "ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…காமகோடி சங்கர…" என்று உரக்க கோஷமிட்டான். அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு அந்தப் பரப்பிரம்மம் பேசியது: "சங்கரா…இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்டி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. அவனுக்கு இயற்கையாகவே சீதாதேவி கிட்டேயும், ஸ்ரீ ராமனிடமும் அளவு கடந்த பிரியமும், பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அதை இவனாலே தாங்கிக்க முடியாது ! மொதல்லே உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜெயராம சர்மா, சீதா பிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போற 'கட்ட' த்த சொல்லி இருக்கணும். நான் சொல்லறது சரி தானே (சரி தானா) சங்கரா…?"

பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, "அதேதான் பெரியவா..அதேதான் ! அன்னிக்கு அந்தக் கட்டத்தைத் தான் ரொம்ப உருக்கமாகச் சொன்னார் !" என ஆமோதித்தார்.

ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதையை ஒரு ராட்சஷன் தூக்கிண்டு போறான்கறதைக் கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூர பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லை. இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன ? அதே பௌராணிகர் வாயாலேயே 'அம்மா சீதைக்கு ஒரு சிரமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு' ங்கறத இவன் காதாலே கேட்டுட்டா மனசையும் வாக்கையும் அமுத்திண்டு இருக்கிற அந்த பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து. அதனாலே தான் அப்படிப் பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையாலே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. சந்திரமௌலி…நீ பரம க்ஷேமமா இருப்பே !"

அந்த நடமாடும் தெய்வத்தின் பேச்சைக் கேட்ட அனைவரும் மலைத்து நின்றனர்.

நன்றி– எஸ். ரமணி.

________________________________
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ

காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்