Thursday, May 25, 2017

Kumbeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
        *(தலத் தொடர்.44)*
🙏🏾 *சிவ தல அருமைகள் பெருமைகள்.* 🙏🏾
(நேரில் சென்று சந்தித்ததைப் போல.....)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
          🙏🏾 *குடமூக்கு.* 🙏🏾
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:*
கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.

*இறைவி:* மங்களாம்பிகை.

*தல மரம்:* வன்னி மரம்.

*தீர்த்தம்:*மகாமக தீர்த்தம்.

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள நூற்றி இருபத்தெட்டு தலங்களுள் இத்தலம் இருபத்தாறாவது தலமாகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:* தஞ்சை- மாயவரம் இடையில் உள்ள பெரிய தலம்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நேரடிப் பேருந்துகள் வசதிகள் இத்தலத்திற்கு இருக்கிறது.

திருச்சி- சென்னை பிரதான வழியில் (மெயின் லயனின்) உள்ள இருப்புப் பாதை நிலையம்.


*பெயர்க்காரணம்:*
பேரூழிக் காலத்தில்  பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதக் கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்றாயிற்று.

இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோவில் பெருத்தது கும்பகோணம் எனும் முதுமொழிக்கேற்ப பல சைவ, வைணவ இரு சமய கோவில்களைக் கொண்ட தலமிது.

*கோவில் அமைப்பு:*
இக்கோவில் நாலேகால் ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பளவுடன் கூடியது இத்தலக் கோயில்.

ஊரின் மேற்கே கிழக்குப் பார்த்த வண்ணம் ஒன்பது நிலைகளைக் கொண்டிருக்கின்றது இராஜகோபுரம்.

கண்களுகுக் காணக்கிடைத்த இராஜ கோபுரத்தை *சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொள்கிறோம்.

கோவில் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது.

பிரகாரத்திலேயே சூரிய புஷ்கரணி தீர்த்தத்தை எடுத்து தலைமீது இறைத்து அவனை என்னி மலர்ந்து உவக்கிறோம்.

இதற்கடுத்தாக மேற்புரத்தில் உள்ள மண்டபத்தில் சட்டைநாதர் இருக்க அவரைக்கண்டு மிக பவ்யத்துடன் வணங்கி நகர்கிறோம்.

சட்டைநாதரையடுத்து முதற் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஆதிவிநாயகர், முருகர், கஜலட்சுமி முதலானவர்கள் சந்நிதிகளைக் கண்டு நிதானமாக நடந்து தொடர்ச்சியாக வணங்கி நகர்கிறோம்.

வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய நிலையில் இறைவன் இத்தலத்தில் எழுந்தருளி வந்த கிராத வேடத்தில் வந்த பெருமான் விளங்கிக் காட்சியளிக்கிறார். 

எவ்வளவு நேரம் நின்றாலும் அவன் அருட்காட்சியைக் கண்டு நகர மனமிருக்காது. பின்னால் வருபவரின் தரிசனம் தடையாகக்கூடாது என்றென்னி தூக்கிய கைகளை இறக்காது வணங்கி நகர்கிறோம்.

அடுத்ததாகக் காணும் முற்றொளி விநாயகரையும், அவன் தம்பி தண்டபாணியையும் தொழுது வாயிலைக் கடக்கிறோம்.

நேரே கவசப்படுத்தப்பட்டுள்ள கொடிமரத்தையும் முன் மண்டபத்தையும், மங்கள விலாச மண்டபம், அலங்கார மண்டபம், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள்  என அனைத்தையும் வணங்கியும், அதன் அழகை ரசித்தும் வியந்து நகர்கிறோம்.

அடுத்ததாக நாம் காண்பது இடப்பாலமைந்த சம்பந்தரின் *திருவெழுக் கூற்றிருக்கை* தேர் வடிவுடன் வண்ணச் சலவைக் கற்களில் பதிக்கப் பட்டுள்ளது.

இதன் வலப்பக்கம் நவக்கிரகங்கள் இருக்கிறார்கள்.

பின் வல்லப விநாயகர் காட்சி தர அவரை வணங்கி உள் புகுகிறோம்.

உற்சவ மூர்த்தங்கள், வீரபத்திரர், சப்தகன்னியர், காமதேனு, பவலிங்கம்,சர்வலிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தட்சிணா மூர்த்தி எல்லாரையும் கண்குளிரக் கண்டு உளமுருகி வேண்டி வணங்கிக் கொள்கிறோம்.

அடுத்தாக காட்சி தருகிறார் வலஞ்சுழியார்  விநாயகர், இவருக்குண்டான பணிவான வணக்கம் நம்மிடமிருந்து அவரிடம் செலுத்திக் கொள்கிறோம்.

தொடர்ந்து, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களையும் வணங்கி விட்டு , அடுத்திருக்கும் உமையவளாம் அம்பாளையும் கண்குளிர வணங்கி வலமாக வலம் வந்து கொண்டோம்.

பைரவர் மூன்று திருவடிகளுடன் காட்சி தருகிறார். 

ஜ்வரஹரேஸ்வரர், சாஸ்தா, கோவிந்த தீட்சிதர் தம்பதி, சந்திர, சூரியர்கள் முதலான சந்நிதிகளையும் தொழுது படியேறி நகரும் போது,........

ஆடவல்லானின் ஆடற் நிலையும் அவன் பாதகமலங்களைக் கண்டும் அந்த நடராஜசபையிலே சில நிமிடங்கள் நின்று நாத்தழுதழக்க வணக்கம் பொங்கிப் பெருக, கண்விழியோரம் அவன் ஈரமாக்கிட பக்தியால் நெக்குருகி நகர்ந்தோம்.

வாயிலைக் கடந்தால், நேராக மூலவரைத் தரிசிக்கும் நிலையில் அருட்காட்சி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இவரின் லிங்கத் திருமேனி பருத்து, -சற்று சாய்ந்த பாணமாகவும், திருமேனி (ப்ருத்வி) மணலினாலான லிங்கமானதால், இத்திருமேனிக்கு தங்கத்தினால் கவசம் சாத்தப்பட்டு, புனுகு சார்த்திய வழிபாட்டை கண்டு வணங்கிக் கொண்டோம்.

பாணத்திலான உச்சிப்பகுதி, கும்பத்தின் வாயினைப் போன்று திருமேனி அமைந்து அருள் பாலிக்கிறது.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*3-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 5-ல்ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இரண்டு பதிகங்கள்.

*தல வரலாறு:*
இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. 

இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் *"அமுதசரோருகம்"* என்றும் அழைக்கப்படுகிறது.

மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் *(கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் *"கன்னியர் தீர்த்தம் "* என்னும் பெயரையும் பெற்றது.

 

*தலவரலாற்றின் படி*
*1.*அமுதகும்பம் வைத்திருந்த இடம் - *கும்பேசம்,*
*2.* அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - *சோமேசம்,*
*3.*அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - *நாகேசம்,*
*4.*அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - *அபிமுகேசம்,*
*5.*பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - *பாணபுரேசம்* (பாணாதுறை), 
*6.*கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - *கௌதமீசம்* என வழங்கப்படுகின்றன.

*தேவாரப் பாடியவர்கள்:* 
*சம்பந்தர்* - அரவிரி கோடனீட லணிகாவிரி.
*அப்பர்*- பூவ ணத்தவன் புண்ணியன்.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர்.

இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் பதினாறு  சந்நிதிகளையுடையதாய், நடுவில் ஒன்பது கிணறுகளைக் கொண்டும் விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது.

மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதியாகும்.
ஏமரிஷி பூசித்த பதியும் இதுவாகும்.

மகாமகத் தீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியாகேசம், கங்காதரேசம், பிரமேசம், முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன.

இந்நகரிலுள்ள பதினான்கு தீர்த்தங்களில் தடாகங்கள் - ஏழும், கிணறுகள் - மூன்றும், காவிரித்துறைகள் - நான்கும் ஆகும்.

மகாமகக் குளத் திருப்பணியும் அதைச்சுற்றிப் பதினாறு சிவாலய விமானங்களையும் அமைத்த மகான், அச்சுதப்ப நாயக்க மன்னனின் அமைச்சரான கோவிந்த தீக்ஷிதர் ஆவார். 

இவர் தன் துலாபாரத் தங்கத்தைக் கொண்டே இத்திருப்பணிகளையெல்லாம் செய்திருக்கிறார். கும்பேசுவர் கோயிலில் இவருடைய வடிவம் உள்ளது. 

இது மட்டுமல்லாது இம்மகான் தர்ம நூல்களில் சொல்லப்பட்ட எல்லா மகாதானங்களையும் செய்திருக்கிறார். 

அநேகமாக சோழர்களுக்குப்பின் ஆலயத் திருப்பணிகளை எல்லாம் திருத்தியமைத்தவர் இந்த மகான் ஆவார்.

இத்தலத்தில் பல கோயில்கள் இருப்பினும் பிரதானமானது கும்பேசுவரர் கோயிலேயாகும்.

மண்டபத்தில் இடப்பால் திருஞானசம்பந்தரின் *'திருவெழுக்கூற்றிருக்கை'* தேர்வடிவில் வண்ணச் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் சந்நிதியையடுத்து, அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக - கிராதகோலத்தில் இறைவன் காட்சி தருகின்றார்.

கும்பேசுவரர் - சிவலிங்கத் திருமேனி; மணல் (பிருதிவி) லிங்கமாதலின் தங்கக் கவசம் சார்த்தப்பட்டுள்ளது. பாணத்தில் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது.

*திருக்குடந்தைப் புராணம்:* தலபுராணம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.

*மகாமகக் குளம்:*
இத்தீர்த்தத்க்கரையைச் சுற்றிலும்பிரம்ம தீர்த்தேசம்,முகுந்தேசம், தனேசம், ரிஷபேசம், பாணேசம், போனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியாகேசம், கங்காதரேசம், பிரம்மேசம், முக்த தீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் இருக்கின்றன. 

*திருவிழாக்கள்:*
மாசிமகத்தன்று மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
பங்குனி மாதத்தில் மகாமகக் குளத்தில் தெப்பத்திருவிழா.
சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.

இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ தொலைவிலுள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருள்வர்.
வைகாசியில் திருக்கல்யாணம்.
ஆனியில் திருமஞ்சனம்.
ஆடியில் பதினெட்டாம் பெருக்கு.
ஆடிப்பூரம்.
பங்குனித் திருவிழா முதலியன சிறப்புடன் நடக்கின்றன.
மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேற்றம்.
எட்டாம் நாளில் வெண்ணைத்தாழி நிகழ்ச்சி.
ஒன்பதாம் நாளில் தேரோட்டம்.
பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கும்.
பன்னிரண்டுகளுக்கு ஒருமுறை மாமகத் திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் சார்பில் நடத்தப் பெறுகிறது.
தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழா இதுவாகும்.

*பூஜை:*
சிவாகம முறையில் ஆறு கால பூஜை.

காலை 6.00 மணி முதல் பகல் 13.30 மணி வரை,

மாலை 4.00 மணி முதல்.இரவு 9.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, கும்பேஸ்வரர் திருக்கோயில்,
கும்பகோணம் அஞ்சல்,- வட்டம்,
தஞ்சை மாவட்டம்-- 612 001

*தொடர்புக்கு:*
நிர்வாக அதிகாரி.
0435--2420276

           திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்......குடந்தைக்கீழ் கோட்டம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


            திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment