Sunday, April 16, 2017

Pooranatvam - Periyavaa

பெரியவா சரணம் !!

"" இதுதான் என்னை சந்திக்கும் கடைசி சந்திப்பு. நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்." 

 அவருக்கு வயது ஐம்பத்தைந்து ஆனது. வழக்கம் போல மஹாபெரியவரை தரிசிக்க வந்தார். சிறு வயது முதல் பெரியவாளையே தாயாக தந்தையாக உறவாக அண்டிக் கொண்டவரின் உள் மனதில் ஒரு ஆசை ஒளிந்து கொண்டிருந்தது. அந்த ஆசை பெரியவாளுக்குத் தெரியும் என்றாலும் அதை அவர் வாயின் மூலம் வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டதால், உரையாடலை பெரியவாளேத் துவக்கினார். பெரியவா அவரிடம் "என்னப்பா பூரணத்துவம் இல்லையே ?" என்றார். அவர் வார்த்தையின் உள் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. 

                                 தன் முடிவு நெருங்கி விட்டது என்று. அவர் கலங்கவில்லை. "நைனாஜி,  என் பூரணமே நீங்கதான். என் சொந்தம் உரிமை எல்லாம் நீங்க மட்டும் தான் நைனாஜி. எனக்கு வேற எதுவும் சொந்தமில்லை, எதன் மீதும் உரிமையுமில்லை. என் அனைத்து மற்றும் ஒரே உறவும் நீங்க தான் நைனாஜி, நீங்க மட்டும் தான். நீங்க தானே என் நைனா. இல்லையா? " என்றார் ஏக்கத்துடன் ஆணித்தரமாக. அந்த 55 வயதுக்காரர் பெரியவாளின் பார்வையில் என்றுமே 8 வயது சிறுவன் தான். ஏனெனில் சிறு வயது பக்தி பாசம் இன்று வரை அவரிடத்தில் மாறவில்லை. "சரிப்பா நான்தான் உன் நைனா" என்றார் பிள்ளையின் பரிதவிப்பு புரிந்து. அனைத்தையும் தன் நைனாவிடம் ஒப்புவிப்பவர் தன் ஆசையை வெளிப்படுத்த இதுவே தருணம் என அறிந்து வாயைத் திறந்து விட்டார். 

 " நைனாஜி எனக்கு ஒரு ஆசை. நான் பிறந்தது தமிழ் நாட்டுல. பல வருடங்கள் இங்க கழிந்தன. ஆனால் என் உயிர் இந்த மாநிலத்துல பிரியக் கூடாது. வெளி மாநிலத்துல பிரியணும். என் உயிர் பிரிந்த பின் என் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படக் கூடாது. தீக்கும் இரையாகக் கூடாது. அந்தரத்தில் எறியப்பட்டு பறவைகளுக்கு இரையாக வேண்டும்  நைனாஜி " என்றார். "இதுதான் என்னை சந்திக்கும் கடைசி சந்திப்பு. நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்." என ஆசியுடன் அனுப்பினார். 

 தன் முடிவு நெருங்கி விட்டது தெரிந்து அவர் அஞ்சவில்லை. என் இறுதி ஆசையையும் என் நைனாஜியிடம் சொல்லி விட்டேன். இனி எனக்கு என ஒன்றும் இல்லை. என் உடல் பொருள் ஆவி அவருக்கு சொந்தம் என  இலகுவானார். பெரியவாளிடம் சரண் அடைந்தவர்களின் மனதில் பயம் இருக்காது. எப்பொழுது மனம் பஞ்சு போல் இருக்கும். நாட்கள் நகர்ந்தன. பம்பாயில் வசிக்கும் தன் தங்கையைக் காண பம்பாய் சென்றார். தங்கைக்கோ அண்ணன் மீது அளவிட முடியா பாசம். தங்கை அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. அண்ணனோடு நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தாள். 

 தன் தங்கையிடம் விடை பெற்றுக் கொண்டு பம்பாயில் வசிக்கும் தன் மிக நெருங்கிய நண்பரைக் காண சென்றார். இந்த நண்பர் அவரின் பணி பயிற்சியின் போது அறிமுகமானவர். அவருடன் பழக பழக தன் நண்பர் பெரியவாளின் மீது வைத்திருந்த பக்தியும் பாசமும் பம்பாய் நண்பருக்கு வியப்பைத் தந்தது. பம்பாய் நண்பரும், தன் நண்பரின் மூலம் மஹாபெரியவாளின் அதிசயம் மகிமைகளைக் கேட்டு பெரியவா மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார். நண்பருடன் அவரும் மஹாபெரியவாளை பல முறை தரிசித்து, குருவின் நல்லுரைகளை தன் வாழ்வில் செயல் படுத்தியும் வந்துள்ளார். 

பம்பாய் நண்பரின் இல்லம் சென்று அவர் வாயில் கதவைத் தட்டும் பொழுது, பக்தரின் உயிர் ஊசலாடியது. கதவைத் திறந்த பம்பாய் நண்பர், தன் உயிர் நண்பரைக் கண்டு மிகுந்த சந்தோஷத்துடன் அணைத்தார். அவர் மீதே பக்தர் சரிந்து விழுந்தார். நண்பரின் நிலைக் கண்டு துடி துடித்தார். தன் காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை விரைந்தார். மடியில் படுத்திருந்த நண்பரின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.   பக்தரின் முகம் ப்ரகாசித்தது. கண்களில் ஒளி மின்னியது. உதடுகளில் புன்னகை வழிந்தது.  நைனாஜி என்று வாய் முணுமுணுக்க அவரின் கடைசி மூச்சும் நின்றது.

எதிர்பாராத இச் சம்பவத்தால்  நண்பர் நிலை குலைந்தார். இறுதி மூச்சு தன் மடியில் முடிந்த அதிர்ச்சி விலகவில்லை. ஆனாலும் அடுத்த செயலில் இறங்க வேண்டிய நிர்பந்தம். அவரின் குடும்பம் பற்றி தெரிந்தாலும் முகவரி எதுவும் தெரியாது. தொலைபேசி அதிகம் உபயோகத்தில் இல்லாத காலம். அவர் வேலை  செய்த அலுவலகத்திக்கு தெரியப் படுத்தினார். அவர்களிடம் அவர் குடும்பத்திற்கு தெரியப் படுத்தக் கேட்டுக் கொண்டார்.

 இறந்த உடலை பல மணி நேரம் பாதுகாத்து வைக்க முடியாத நிலை. உடலை அப்புறப்படுத்த வேன்டிய நிர்பந்தம் இறுதி சடங்கை எப்படி செய்வது என குழம்பினார். நண்பரோ பார்ஸிக்காரர். அவருக்கு இவரின் மத வழக்கம் தெரியாது.  கால நேரம் ஓடிக் கொண்டிருக்க அக்கம் பக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால் தன் மத வழக்ப் படியே இறுதி சடங்கை செய்வது என முடிவு செய்தார். ஆனாலும் மனதில் சிறு தயக்கம். செய்வது சரிதானா என மனம் கேள்வி எழுப்பியது. அவருக்கு தன் நண்பர் மொழிந்த நைனாஜி என்ற கடைசி வார்த்தையே மனதில் ரீங்காரமிட்டிக் கொண்டிருந்தது. 

 தன் குரு, நண்பரின் நைனாஜியிடமே ப்ரார்த்தனை செய்தார். "குருவே, தங்களை மட்டுமே தன் உறவாக நினைத்த என் நண்பனின் இறுதிச் சடங்கை செய்யும் நிர்பந்தத்தில் இருக்கிறேன். என் முடிவு சரிதானா எனத் தெரியவில்லை. என் பாரத்தை உங்களிடம் இறக்குகிறேன். என் முடிவுக்கு உங்களின் பூரண ஆசியும் அனுக்ரஹமும் வேண்டும். இந்த காரியத்தை செய்து முடிக்க சக்தி கொடுங்கள்" என உள்ளம் உருகிப் பிரார்தித்தார். மனம் லகுவானது. இறுதி ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்தார்.

இச் சம்பவம் கேள்விப்பட்டு அவருக்குத் துணை நிற்க அவர் அனைத்து அக்கம் பக்க உறவினர்களும் கூடிவிட்டனர். அவரின் உடல்  Malabar hills ல் உள்ள Hanging gardensக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அவர் தங்கை கடைசி நிமிடத்தில் வந்து சேர்ந்தார். சுற்றிலும் பார்ஸி மக்கள் சூழ்ந்திருக்க தன் அண்ணன் தானா என்ற சந்தேகம் வந்தது. துணியை விலக்கியவர் கதறி ஓலமிட்டார். நண்பர் அவரைத் தேற்றினார். உடல் கிடத்தப் பட்டிருந்தது. உடலுடன் கயிறு இணைக்கப்பட்டு மலைப் பகுதியில் தூக்கி எறியப் பட சடங்குகள் செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. இறுதி பிரார்த்தனை எல்லாம் முடிந்தது. 

 இந்த நேரத்தில் ஒரு வயதான முதியவர் வெண் உடையில் தலைக்கு முக்காடு இட்டு நண்பர் அருகில் வந்து நின்றார். நண்பரிடம், "யார் பெத்தப் பிள்ளப்பா?" என்று கேட்டார். நண்பர், "உங்க பிள்ளை  தான் ஜி" என்றார். நண்பருள் ஒரு இயக்கம் அந்த வார்த்தைகளை சொல்ல வைத்தது. இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தவர் போல் அந்தப் பெரியவர் "சரிப்பா, என் பிள்ளை தானே" என்று முன் வந்து நின்றார். மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக கூட்டமே பெரியவரைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றது. அனைத்தும் முடிக்கப்பட்டு, உடலை தூக்கி எறியப் பட வேண்டிய நேரம். பெரியவரின் உத்தரவுக்காக காத்திருந்தனர். பெரியவரும், தூக்கி எறியும் படி இரு கைகளையும் உயர்த்தினார். தூக்கி எறியப்பட்ட அந்த சில நொடிகளில் எங்கிருந்தோ வந்த 50 ராட்சச கழுகுகள் உடலை கவ்விக் கொண்டன. கூட்டம் கலைந்தது. பக்தரின் பூரணத்துவம் பரிபூரணரின் கருணையால் பூரணம் அடைந்தது.

 தூக்கி எறிய கைகளை உயர்த்திய அந்தப் பொழுதில் அந்த முதியவரின் கைகளில் இருந்து ஒரு மின்னல் ஒளி கிளம்பிப் ப்ரகாசிப்பதையும் அந்த நொடிப் பொழுதில் அவர் தோற்றம் மறைந்து மஹாபெரியவாளின் தோற்றத்தையும்  நண்பர் கண்டார். கண்கள் குத்திட்டு நிற்க சில நிமிடங்கள் உறைந்து போய் நின்றார். நினைவு கொண்டவர் அந்தப் பெரியவரைத் தேட, அந்த வெண் உடைப் பெரியவர் வெள்ளைக் கூட்டத்துடன் கூட்டமாக கலந்து மறைந்து போனார். அந்தப் பெரியவர் எப்படி வந்தார்? எங்கு தேடியும் மீண்டும் பார்க்கவில்லையே என பல குழப்ப சிந்தனைகளுடன் அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். 

                              மஹாபெரியவாளின் நினைவுகள் அவர் தந்த காட்சியாகவே அலைமோதியது. சலனப் பட்டுக் கொண்டிருந்த மனதுக்கு நிம்மதி அளித்து, சக்தியும் ஆசியும் கொடுத்த குருவுக்கு நன்றி செலுத்தினார். நண்பனின் இறுதி யாத்திரைக்கு அவன் நைனாஜியே வந்து விடை கொடுத்ததை நினைத்து உள்ளம் பூரித்தார். சோகக் கண்ணீரோடு ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. வந்தவர்கள் இவரின் நிலை கண்டு அணுகி வினவ, தான் கண்டதை விளக்கினார். குருவே ப்ரசன்னமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தன் நண்பன் எத்தனை பெரும் பாக்கியசாலி என எண்ணினார். இறுதி சடங்கை செய்து முடிக்க  மஹாபெரியவாளே அவரை இயக்கி,  காட்சியும் அளித்த ப்ராப்தம் பெற்ற இந்த நண்பரும் பாக்கியசாலியே என்பதை அடக்கத்துடன் மறந்து!

 இறந்து போன அந்த பக்தரின் பக்தி அளவிட முடியாதது. சிறு வயதில் அவர் கொண்ட பக்தி அவர் வளர்ந்து மறையும் தருவாய் வரையில் மாறவில்லை. அந்த பக்தி தூய பக்தி. அந்த பக்தியில் மாயையின் கறை இல்லை; களங்கமில்லை. சலனமில்லை; மாற்றமில்லை; தொய்வில்லை; எளிமையிலும் எளிமையான பக்தி; உண்மையான பக்தி; உன்னதமான பக்தி; பாசமான பக்தி; உரிமையுள்ள பக்தி; ஆனாலும் அந்த உரிமையில் ஆணவமில்லை ; அகங்காரம் இல்லை; அதிகாரமும் இல்லை ; சுய நலமில்லை; தாழ்மையிலும் தாழ்மை மட்டுமே இருந்தது. 

 பக்தரின் விருப்பப்படியே அவர் உயிரை வெளி   மாநிலத்தில் பிரிய வைத்தார் குரு நாதர். அவர் விரும்பியபடியே உடலைத் தூக்கி எறிய தன்னுடைய பக்தரும் பார்ஸி நண்பரும் ஆனவரின் இல்லத்தில் அவரின் இறுதி மூச்சில் கொண்டு  சேர்த்தார். அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிய குரு நாதர் அவர் கேளாமல் ஒன்றையும் செய்தார், அதுதான் அந்த இறுதி யாத்திரையில் அவர் பங்கெடுத்தது. ஏனெனில் அந்த பக்தரின் உள்ளம் சொல் செயல் அனைத்தும் ஒன்றாகவே இருந்தது. 

தன் உறவு நைனாஜி மட்டும் தான் என வாழ்ந்தவர், பிறப்பால் வந்த உறவைத் தவிர வேறு எந்த புது உறவையும் தன் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அந்த உன்னத உறவை பக்தியால் போற்றி வந்தவருக்கு , அந்த உறவின் தன்மையை ஏற்று இறுதியிலும் பங்கெடுத்தார் குரு நாதர். எத்தனை மக்கள் உறவின் தன்மையை புரிந்து கொள்ளுகிறார்கள்? அதன் பொறுப்பை உணர்ந்து நடக்கிறார்கள்? தாய் தந்தையை தவிக்க விடும் பிள்ளைகளையும்; பிள்ளைகள் பால் பொறுப்பின்றி சுய நலத்துடன் வாழும் தாய் தந்தையரையும்; கணவனை மதிக்காத மனைவியையும் ; மனைவியை அடிமைப் படுத்தும் கணவனையும் இந்த உலகில் தினம் தினம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இவர்கள் வாயளவில் மட்டும் தான் உறவு இருக்கிறது, உள்ளத்திலோ செயலிலோ அல்ல. 

 சொல் செயல் மனம் அனைத்தும் கடந்து, பாசம் பந்தம் உறவு என அனைத்தையும் துறந்து பரம் பொருளை மட்டுமே உறவாகக் கொண்ட மஹான் பாசத்திற்கு கட்டுப்பட்டாரா என்றால் இல்லை. தன்னை ஒரே உறவாக  எண்ணிய பக்தரின் உறவின் தன்மையை புரிந்து அதை ஏற்றுக் கொண்டார். பாசத்திற்கு கட்டுப் பட்டவர் அல்ல குரு நாதர். தூய பக்திக்கு கட்டுப்பட்டவர். அந்த பக்தர் சொல் செயல் உள்ளம்ஆகிய அனைத்தும் ஒருமித்து பாசத்தை பக்தியாக வெளிப்படுத்தினார்.                               மக்களும் மஹாபெரியவாளை பிதா என்றும் தாய் என்றும் ஜகத் குரு என்றும் நடமாடும் தெய்வம் என்றும் அழைத்து போற்றுகின்றனர். ஆனால் அவரின் குருத் தன்மையையும், தெய்வத் தன்மையையும் முழுமையாக உணர்ந்து தான் இருக்கிறார்களா? நம் மஹாபெரியவாளின் அற்புதங்களையும் அதிசயங்களையும் படித்தும் அனுபவித்தும் மகிழ்ந்த மக்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் அவரை தெய்வமாகவும் குருவாகவும் உள்ளப்பூர்வமாக வழி படும் மக்கள் எத்தனை பேர்? இதுவா உண்மையான பக்தி?

 மனதில் இருந்த ஆசையை வெளியிட்டு முடித்து, நைனாஜியே என் உடல் பொருள் ஆவி அனைத்துக்கும் சொந்தக்காரரும் உரிமைக்காரரும் என சரணாகதி அடைந்தாரோ, அந்த பக்தரின் உடல் பொருள் ஆவிக்கு தானே பொறுப்பு  எடுத்துக் கொண்டார் என்பதுதானே உண்மை? 

 மஹாபெரியவாளைத் தரிசித்த எத்தனையோ மக்கள் தங்கள் இறுதி முடிவு பற்றிய விருப்பத்தையும் வெளியிட்டுள்ளனர்.  அவர்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்துள்ளார்  குரு நாதர்.  என்றாலும் இந்த நிகழ்வு ஒரு அற்புதமான நிகழ்வு. 
குரு ஆத்மாவைக் கரை ஏற்றுவார். உடலையுமா?.

மகத்துவ மாமுனியே துதியோடு
உம்மை கும்பிட்டு பணிகிறோம்
எட்டிலா பலமாய் நாங்கள்
வேண்டிய யாவும் செய்கிறீர்
எத்தனை பாக்கியவான்கள் நாங்களையா
மாமுனியே நமஸ்காரம்!
இப்படியும் நடக்குமா? நடந்ததே!

__________________________________
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ

காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்