காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்தவர் சந்திரமவுலி கனபாடிகள். அவர் சொன்ன நிகழ்வைக் கேளுங்கள்.
1990, மாசி மகாசிவராத்திரி. இந்த நாளில் மகாபெரியவர் மானசீக பூஜை செய்வார். சிவராத்திரியன்று அவர் உறங்குவதில்லை. நான்கு கால பூஜை செய்வார். மூன்றாவது காலம் நள்ளிரவு 2 மணியிலிருந்து 3.30 வரை. இதை "லிங்கோத்பவ காலம்' என்பர். அந்த வேளையில், ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்யச் செல்வார். அன்று சங்கரமடம் அருகிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சந்நிதித் தெருவில் உள்ள ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். யாருக்காவது ஜுரம் வந்தால், அந்த சுவாமிக்கு மிளகுரசம் சாதம் நைவேத்யம் செய்து பிரார்த்தனை செய்வதுண்டு.
அப்போது, பெரியவருடன் சென்ற நான்,"" இன்று சிவராத்திரி என்பதால், ஜனங்களும் தங்களைத் தரிசிக்க அதிகமாக வருவார்கள். பகல் பூராவும் உபவாசம் வேறு (உண்ணாமல் இருப்பது) இருந்துள்ளீர்கள். அதனால், இந்த இரவில் வெளியே செல்ல உங்கள் உடல்நிலை இடம் கொடுக்காது. மேலும், தாங்களே பரமேஸ்வரனாக இருக்கும் போது, நீங்கள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்,'' என்றேன்.
பெரியவர் என்னிடம் பதிலேதும் சொல்லவில்லை. மவுனமாகக் கிளம்பி ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று விட்டார். அங்கு சிவாச்சாரியார் மட்டுமே இருந்தார். யாரோ இரண்டு சேவார்த்திகள் (பக்தர்கள்) சிவதரிசனம் செய்து விட்டு வெளியே
உட்கார்ந்திருந்தார்கள். பெரியவர் உள்ளே சென்று பரமேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு கொஞ்சநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். பிறகு மடத்துக்கு கிளம்பினார்.
நான்காம் கால பூஜையை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஸ்நானம் செய்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அந்த சமயம், ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்திருந்தார். அவர் அதை என்னிடம் கொடுத்து பெரியவரிடம் சமர்ப்பிக்கச் சொன்னார். நான் அதை அவரிடம் கொண்டு சென்ற போது ""என்ன பிரசாதம்?'' என்று பெரியவர் கேட்டார்.
"ஜுரஹரேஸ்வரர் பிரசாதம்' என்றேன்.
பிரசாதம் கொண்டு வந்தஅர்ச்சகரை அழைத்து,""சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?'' என்று கேட்டார்.
"பெரியவாள் அனுகிரஹத்தால் 3800 ரூபாய் வந்தது,'' என்றார் அர்ச்சகர்.
"இதுவரை எவ்வளவுகிடைத்தது?''
""200 ரூபாயைத் தாண்டியதில்லை,'' என்றார் அர்ச்சகர்.
உடனே என்னிடம், "நீ எனக்கு வயசாயிடுச்சு. கோயிலுக்குப் போக வேண்டாம் என்றாய். நான் போகவில்லையென்றால், ஜுரஹரேஸ்வரர் கோயில் இருப்பதே இங்கு வந்த பலருக்கு தெரிந்திருக்காது. என்னையே சுத்திண்டு இருப்பா! நான் போனதால் மற்றவர்களும் போனார்கள். குருக்களுக்கும் இவ்வளவுவருமானம் வந்தது! அவருக்கும் ஜுரஹரேஸ்வரர் படியளந்தார்,'' என்றார்.
"நான் சொன்னது தவறு,'' என்று சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்
No comments:
Post a Comment