Wednesday, April 5, 2017

Aachara at Puri Jagannath temple

ஜகந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள்.
ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் அவள் தெய்வ பக்தியையும், அவளுக்கு வந்துற்ற மனத்துயர்களையும் கேட்டுச் சில ஆறுதல் வார்த்தைகளையும் சொல்லித் தேற்ற விரும்பினர். அவர்கள் வீட்டை விசாரித்துக்கொண்டு அவளது இருப்பிடம் சென்றனர். கருமாபாய் தன துயரங்களை மறந்து அவர்களை உபசரித்து வணங்கினாள்.
அம்மா… உங்கள் துயரம் சாதாரணமானதன்று. எங்களுக்கு புரிகிறது. இருப்பினும் இந்த அறிய மானிட பிறவியை கடந்த காலங்களை எண்ணி வீணாக்கலாகாது. நீங்கள் வருந்துவதை விடுத்து பஜனையிலும் பாத சேவையிலும் ஈடுபடுவீராக. அதனால் நீங்கள் மட்டுமல்ல உங்களை சுற்றிலுமுள்ள அனைவரும் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல் இறைவனின் அருளை பெறுவார்கள்" என்றனர்.
"நீங்கள் கூறுவது புரிகிறது சுவாமி. இருப்பினும் என் மனம் அமைதியற்ற நிலையில் இருக்கிறதே" என்றார் கருமா பாய்.
உடனே அந்த அடியார்கள் அவளுக்கு நாரயண மந்திரத்தை உபதேசித்து, ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரகம் ஒன்றை அளித்து, "உனக்கென்று ஒரு மகன் இருந்தால் நீ அவனை எவ்வாறு பார்த்துக்கொள்வாயோ அதே போல இந்த கிருஷ்ணரை பாரத்துக்கொள்…!" என்று கூறி அவளுக்கு ஆசி கூறிவிட்டு புறப்பட்டனர்.
பேருவகை அடைந்த கருமா பாய், அந்த விக்ரகத்தையே தன் குழந்தை என எண்ணி, சீராட்டி வளர்த்து வந்தாள்.
காலையில் எழுந்தவுடன் குழந்தைக்கு பசி தாங்காது என்று அவளுக்கு தோன்றும். ஸ்நானம் செய்ய சென்றால் நேரமாகிவிடும் என்று, ஸ்நானம் செய்யாமலேயே சமையல் செய்து வைப்பாள். பின்னர் விறகடுப்பில் சுட வைத்த வெதுவெதுப்பான நீரில் வாசனைத் திரவியங்களைச் போட்டு பின் அந்த பொம்மைக் கண்ணனை சிறு கைக் குழந்தையை நீராட்டுவது போல காலில் படுக்கவைத்துகொண்டு குளிப்பாட்டுவாள். பிறகு பொம்மைக்கு தலை துவட்டி புதிய ஆடைகளை அணிவித்து மயிற் பீலியும் பொட்டும் வைத்து அலங்கரிப்பாள்.
பிறகு, ஆகாரத்தையும் கொடுத்து தொட்டிலில் போட்டு தாலாட்டி உறங்கச் செய்த பின்பே தனது பிற பணிகளை கவனிக்கச் செல்வாள்.
தனது வாயை திறந்து அண்டசராசரங்களை யசோதைக்கு காட்டிய இறைவனும் அவள் பொருட்டு குழந்தையாகவே அவ்வில்லத்தில் இருந்தான்.
ஒரு நாள் காசிக்கு யாத்திரை செல்லும் சில பாகவதர்கள் இவள் வீட்டுக்கு அதிதியாக வந்தனர். கருமா பாய் காலை எழுந்து குளிக்காமல் சமையல் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதை பார்த்தவர்கள், "அம்மா… தாங்கள் ஜகந்நாதனின் தீவிர பக்தை என்பதை கேள்விப்பட்டே இங்கே அமுது செய்ய வந்தோம். ஆனால், தாங்களோ நீராடாமல் சமையல் செய்வதாக தெரிகிறது. அனைத்தும் அறிந்த தாங்களே இவ்வாறு செய்யலாமா?" என்றனர்.
"என்ன செய்யட்டும் சுவாமி… என் குழந்தைக்கு பசி பொறுக்காது. என் கைகளால் அன்றி அவன் வேறு யார் கைகளாலும் உண்ண மாட்டான். எனவே அவனுக்கு முதலில் சோறூட்டி தூங்க வைத்து பின்னரே என் பணிகளை கவனிக்கிறேன்… மன்னிக்கவும்."
"என்ன உன் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அதற்க்கான சுவடே தெரியவில்லையே?" என்று பாகவதர்கள் வியப்புடன் கேட்க, கருமா பாய் உடனே தூளியிலிருந்த கண்ணனின் விக்ரகத்தை எடுத்து அவார்களிடம் காட்டினாள்.
"இதோ என் குழந்தை!"
பாகவதர்கள் அது கண்டு சிரித்தார்கள். "இந்த பொம்மை உனக்கு குழந்தையா? இது சாப்பிடுமா? இதற்காக நீ நீராடாமல் சமைக்கிறாயா??" என்று நகைத்தனர்.
உடனே கருமாபாய் உள்ளே சென்று அன்று தான் செய்திருந்த சர்க்கரை பொங்கலைக் கொணர்ந்து எதிரில் வைத்து, "கண்ணே கொஞ்சம் சாப்பிடடா!" என்று வேண்ட, விக்கிரகம் குழந்தையாகி அந்தப் பொங்கலைத் தன் சிறு கையினால் அழகாக எடுத்துண்டது.
பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவளது பக்தியை கண்டு மெய்சிலிர்த்தனர். "இறைவனது சௌலப்யத்தை இதிலே கண்டோம்" என்று மெய்மறந்து துதித்தனர்.
"அம்மா உன் பக்தியின் பெருமை புரிகிறது. இறைவனே வந்து சாப்பிடும்போது நீ இன்னும் ஆச்சாரத்துடன் சமைப்பது தான் முறை. எனவே இனி நீராடிவிட்டு சமை" என்று கூறிவிட்டு புறப்பட்டனர்.
அடுத்த நாள் முதல் கருமா பாய் வழக்கமாக தான் எழும் நேரத்தைவிட சற்று சீக்கிரமே எழுந்து வீடு முழுவதும் மெழுகிப் பெருக்கிக் கோலமிட்டுப் பின் நீராடி சமையல் செய்யத் தொடங்கினாள்.

அங்கே பூரி ஜகந்நாதர் கோவிலின் தலைமை அர்ச்சகர் கனவில் பக்தவத்சலன் தோன்றினான். "இதுவரை நாம் நம் பக்தி கருமா பாய் வீட்டில் எந்த வித குறையுமின்றி வளர்ந்து வந்தோம். ஆனால், அவளோ யாரோ சில பாகவதர்கள் பேச்சை கேட்டு, நீராடிவிட்டு சமைக்கிறாள். அது வரை எனக்கு பசி பொறுக்கவில்லை. எனக்கு அடியவர்கள் என் மீது வைக்கும் அன்பும் பக்தியும் தான் பிரதானமேயன்றி ஆச்சார அனுஷ்டானங்கள் அல்ல. இதை அவளிடம் கூறு" என்று கூறிவிட்டு மறைந்தார்.
அர்ச்சகர் மறு நாள் கோவில் பூர்ண கும்பத்துடன் சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகளுடன் கருமா பாயின் இல்லத்துக்கு விரைந்தார். கருமாபாய் எழுந்து வீட்டை கூட்டிப் பெருக்கி முடித்து, தரையை துடைத்துக் கொண்டிருந்தாள்.
அர்ச்சகர் அவரை பணிந்து கருமா பாயிடம் நடந்த அனைத்தையும் கூறி, இறைவன் திருவுள்ளம் என்ன என்பது பற்றி கூறினார்.
அர்ச்சகர் சொன்ன செய்தியைக் கேட்டதும், "அடடா! என் அறியாமையால் குழந்தையைப் பசியினால் வாடும்படி செய்துவிட்டேனே… கண்ணா என்னை மன்னிப்பாயா?" என்று ஏங்கி கதறி முன்போலவே விடியற்காலையே உணவு வகைகளைத் தயாரிக்கலானாள்.
"திரிகரண சுத்தியோடு செய்யப்படும் பக்திதான் பிரதானம். ஆசார அனுஷ்டானங்கள் அதற்கு உபகரணங்களே" என்பதை அவள் மூலம் விளக்கியருளினார் பகவான்.
இன்றும் கூட பூரியில் ஜகந்நாதரின் ஆலயத்தில் ஆச்சார அனுஷ்டானங்கள் குறைவு. அதிகம் ஆசாரமற்றவர்களைக் பற்றி இங்கே குறிக்கும் பொழுது, "அங்கே சர்வம் ஜகந்நாதம்" என்ற பழமொழியும் ஏற்பட்டது.