Thursday, March 16, 2017

Kaaraikal ammaiyar - Nayanmar1

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பதியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
 *( 1 ) நாயன்மார் சரிதம்.*
🍁 *காரைக்கால் அம்மையார்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சோழ நாட்டின் கடற்கரையில், கடற் சங்குகளால் வளம் பெற்றுத் திகழ்வது *காரைக்கால் நகரம்.**

அந்நகரில் அறநெறி தவறாத வாய்மையிற் சிறந்த பெரும் வணிகர் குடிகள் நிறைந்திருந்தன. இந்நிறைகுடிகளில் தனதத்தனார் எனும் அவ்வணிகர் குலத்தலைவனாகி விளங்கி வந்தார்.

அவர் செய்த தவத்தின் பயனாக, திருமகளைப் போன்ற பேரழகுடைய பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு *புனிதவதி* எனும் பெயர் சூட்டினர்.

புனிதவதி வளர்ந்து பெரியவளானாள். இவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏழை எளியோர்களிடத்தில் அன்பு பாராட்டி வந்தாள்.

நற்குணங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்று லக்ஷ்மீகரத்துடன் விளங்கும் அவளை மணந்நு கொள்ளப் போகும் புண்ணியவான் யாரோ என ஊரார் அதிசயித்து அவளைப் போற்றிக் கொண்டாடினார்கள்.

நாகப்பட்டினம் எனும் ஊரிலே நிதிபதி என்றொரு வணிகன் இருந்தான். பெயருக்கேற்றாற் போல அவனும் அளவற்ற செல்வத்துக்கு அதிபதியாக இருந்தான். அவன் குமாரன் பரமதத்தனுக்குப் புனிதவதியைப் பெண் கேட்டு வந்தனர்.

நாகப்பட்டினத்திலிருந்து வந்திருந்தவர்களை தனதத்தன் வரவேற்று உபசரித்தான். நிதிபதியைப் பற்றி அவன் முன்னரே அறிந்திருந்தான். வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைத்து வந்தது. அந்தஸ்திலும் அவனுக்குக் குறைந்தவன் அல்லன். பரமதத்தனும் தந்தையோடு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தான். புனிதவதிக்கு இவன் எல்லா விதத்திலும் ஏற்ற கணவனே என முடிவுக்கு வந்தான் தனதத்தன்.

திருமணம் நிச்சமாயிற்று. தனதத்தன் தன் அந்தஸ்துக்கு ஏற்ப கோலாகாலமாக மணம் செய்வித்து வைத்தான். காரைக்கால் நகரமே இத்திருமணத்தில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டன.

அருமையாக வளர்த்த பெண்ணை விட்டுப் பிரிய தனதத்தனுக்கு மனம் இல்லை. அதற்காக மருமகனையும் வீட்டோடு வைத்துக்கொள்ளள ் விரும்பவில்லை. காரைக்காலிலேயே மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு மகளையும் மருமகனையும் இருக்கச் செய்து குடும்பம் நடத்த வழி செய்தான். தனது வியாபாரத்தின் ஒரு பகுதுயை பரமதத்தனிடம் ஒப்படைத்து அதைக் கவனித்து வரச் செய்தான்.

புனிதவதி கணவனுடன் ஒரமித்து இல்லறம் நடத்தி வந்தாள். அவளின் உள்ளப் பாங்கிற்கேற்ப பரமதத்தனும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு உள்ளவனாயிருந்தான். அடியார்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அமுது செய்விக்க தயங்கியதில்லை. 

இவ்வாறு புனிதவதியும் பரமதத்தனும் இனிது இல்லறம் நடத்தி  வரும் போது, ஒரு நாள் பரமதத்தனைக் காண அவனின் நன்பர்கள் பலர் கடைக்கு வந்தனர். இறைவனை வழிபட வெறுங்கையுடன் நாம எப்படி செல்ல மாட்டோமோ, அது போல ஆசாரியன், முதுமையாளர்கள், நண்பர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோரைப் பார்க்கச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லுதல் கூடாது.

அதுபோலதான், பரமதத்தனைப் பார்க்க வந்தவர்கள் இரு மாங்கனிகளை கொண்டு வந்து கொடுத்தனர். அம்மாங்கனியைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் தன் வேலைக்காரன் மூலம் மாங்கனிகளை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான்.

அன்றைய தினத்தில் பரமதத்தன் வீட்டிற்கு சாப்பிடச் செல்ல முடியவில்லை. கடையிலே வேலை அதிகமாக இருந்ததால், நான் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும், அடியார்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு முன்னதாகவே அமுது செய்வித்து விடுமாறு சொல்லியனுப்பி விட்டான் பரமதத்தன்.

அன்றைய தினம் சோதனை போல வந்திருந்த சிவனடியாா் மிகவும் பசியோடு இருந்ததால் அவரைக் காக்கச் செய்ய வேண்டாமெனக் கருதி, சிவனடியார்க்கு இலை போட்டு அமுது செய்தருள அழைத்தாள் புனிதவதி. கறியமுது ஆகவில்லை. அவற்றைச் செய்ய நேரத் தாமதமாகுமெனத் தோன்றியபடியால், கணவன் கடையிலிருந்து கொடுத்தனுப்பியிருந்த இரு மாங்கனிகளில் ஒன்றை அடியார்க்கு அளித்தாள்.  வந்திருந்த அடியார் உணவருந்தி மனங்களித்து வாழ்த்தி விட்டுச் சென்றார்.

உச்சி வேளையில் பரமதத்தன் உணவருந்த வீடு வந்து சேர்ந்தான். புனிதவதி கணவனுக்கு அறுசுவை உணவு பரிமாறி உள்ளே வைத்திருந்த மற்றொரு மாங்கனியையும் எடுத்து வந்து கணவனின் பரிகலத்தில்  சமர்ப்பித்தாள்.  அந்த மாங்கனியை மிகவும் சுவைத்து ருசித்துச் சாப்பிட்டான் பரமதத்தன்.

அப்பழம் மிகவும் மதுரமாக இருந்ததால், "இன்னொரு பழமும் இருக்குமே! அதையும் எடுத்து வந்து தா! என்றான். 

உடனே புனிதவதியார் மற்றொரு மாங்கனியையும் கொண்டு வருவது போல அங்கிருந்து நீங்கி உள்ளே வந்தாள்.

சுவரோரமாய் நின்று மனம் தளர்ந்தாள். இல்லாத அருங்கனிக்கு அவள் எங்கு போவாள்!, பாவம் புனிதவதியார் ஒரு கணம் மெய்மறந்து நின்று...... *உற்றவிடத்து உதவும் பெருமானே!* என்று சிவபெருமானைத் துதித்தார். 

உடனே இறைவன் திருவருளில் புனிதவதியாரின் கையில் அதிமதுர மாம்பழம் ஒன்று இருந்தது. அந்தக் கனியை புனிதவதியார் கொண்டு வந்து மகிழ்ச்சியோடு கணவனின் பரிகலத்தில் இட்டார். பரமதத்தன் அப்பழத்தை உண்டான். அப்பழத்தின் சுவை தேவ அமுதத்திலும் மேம்பட்டு இருந்ததைக் கண்டு அவன் திகைத்து, "இது நான் முன்பு  கொடுத்தனுப்பிய மாங்கனியன்று! தான் அனுப்பிய இரு கனிகளில் ஒன்றுக்கொன்று சுவையில் இத்தனை வித்தியாசமா? என்று நினைத்தவனாய் 'புனிதவதி!...." என அழைத்து.............. இரண்டாவதாய் படைத்த பழம் ஏது?"  மூவுலகிலும் கிடைப்பதற்கரியது. இதை நீ எங்கிருந்து பெற்றாய்?" என்று தன் மனைவியிடம் கேட்டான்.

கணவர் இப்படிக் கேட்டதும் கற்புக்கரசியாகிய புனிதவதியார் கலக்கமுற்றார். தலையை குனிந்தபடி நின்றிருந்தாள்.... அவள் என்ன பதில் சொல்வாள்!,  இறைவன் தனக்கு மனமுவந்து அளித்த பழம் என்று சொன்னால், அது கணவண் முன்னிலையில் அவரைவிடத் தான் உயர்ந்தவள் என்று பெருமைபடக் கூறிக்கொள்வதாக ஆகாதா?அப்படிச் செய்தால் கற்பு நெறியில் சிறந்த மனைவிக்குண்டான அழகில்லையே!

""நான் கேட்டது காதில் விழுந்ததா, இல்லையா? பேசாது நிற்கிறாயே!' என்று மறுபடியும் அழளைக் கேட்டான் பரமதத்தன்.

புனிதவதியின் கண்களில் நீர் தளும்பியது. நடுங்கும் கரங்களால் கணவரை நோக்கிக் கும்பிட்டவாறு நடந்ததை விவரித்தாள். நாத் தழுதழுக்க அவள் கூறிய சம்பவத்தைக் கேட்ட பரமதத்தனால் அதை நம்ப முடியவில்லை. 

இம்மாதிரி நடந்திருக்கும் என எனக்குத் தோன்றவில்லை புனிதவதி. உன் வார்த்தைப்படி இறைவன் உனக்கு கனி கொடுத்து அருளினார் என்று வைத்துக் கொள்வோம். இதேபோல இன்னொரு பழத்தை வரவழை பார்க்கலாம்" என்றான்.

புனிதவதி வெலவெலத்துப் போய்விட்டாள். அவள் வார்த்தையில் கணவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை! உள்ளே திரும்பிய அவளின் கண்கள் நீரைச் செரிந்தன.

"எம்பெருமானே இதென்ன சோதனை? மகிழ்ச்சி நிறைந்து நிம்மதியாகச் சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்விலே பெரும் சிக்கலைத் தோற்றுவிட்டாயே! 

இன்னொரு கனி வரவழைத்துப் படைக்காவிடில் என் வார்த்தை பொய்யாகி விடும். உன்னிடம் நான் கொண்டிருக்கும் பக்தியிலோ, உன் அடியார்களிடம் நான் காட்டி வரும் அன்பிலோ கொஞ்சமும் மாறுதலின்றி நான் நடந்து வருவது உண்மையானால் இந்தப் பெரும் சிக்கலிலிருந்து.மீள வழிகாட்டி அருள வேண்டும்" என்று நெஞ்சம் உருக வேண்டினாள்.

எம்பெருமான் திருவருளால் மாங்கனி ஒன்று அவள் கைகளில் தோன்றியது.

"சுவாமி.... எம்பெருமான் தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இன்னொரு பழம் அளித்துள்ளார்"... என்று பழத்தைக் கொண்டு வந்து கணவரிடம் நீட்டினாள்.

மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டான் பரமதத்தன். புனிதவதியின் கையிலிருந்த கனியை வாங்கிக் கொண்ட பரமதத்தன்...அடுத்த நொடியிலேயே அப் பழம் அவன் கைகளிலிருந்து மறைந்து போனது.

பரமதத்தன் வியப்பு கொண்டான். அந்த நிமிடத்திலிருந்து அவன் மனம் புனிதவதியை  மனைவியை என்னாது.....திருவருள் பெற்றத் தெய்வமாதா என்று என்னிக்கொண்டான். இவள் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவள். மனைவி என்ற எண்ணத்தை அழித்து அவளைத் தீண்டாமலிருக்க முடிவெடுத்தான். 

பரமதத்தன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடவும் விரும்பவில்லை. அந்த மாளிகையில் புனிதவதியின் கணவன் என்ற உரிமையில் நடமாட அவன் உள்ளம் அனுமதிக்கவில்லை. இவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்று விட முடிவெடுத்தான்.
திருவருள் தெய்வத்தன்மைக் கொண்ட இவளுடன் தாம் இல்லறமாக வாழ மனம் ஒப்பவில்லை பரமதத்தனுக்கு.

எனவே மனைவியைப் பிரிந்து வேறிடம் அகழ்ந்து போய் விட முடிவெடுத்தான். அவன் மனலிருப்பதைப் புனிதவதி அறிவாளேயானால் அவன் எவ்வளவு தூரம் வேதனைப்படுவாள்? அதனையும் அவள் நினைத்துப் பார்க்காமலில்லை. அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தான் விடுபட அவன் ஓர் உபாயம் செய்தான். கப்பல் நிறைய சரக்குகளை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்து திரும்புவதாகக் கூறி காரைக்காலை விட்டுப் பயனமானான்.

காரைக்காலை விட்டுப் புறப்பட்ட பரமதத்தன் பாண்டியநாட்டுத் துறைமுகம் ஒன்றை அடைந்தான். அவ்வூரிலேயே வியாபாரத்தைக் கவனித்தபடி தங்கிவிட முடிவு செய்தான்.

தன் குலத்தைச் சேர்ந்த ஒருத்தியை மணந்து கொண்டு அவ்வூரிலேயே தங்கி விட்டான். சில மாதங்களில் அத்தம்பதிகளுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப் பெண் குழந்தைக்குத் தன் முதல் மனைவியின் நினைவாக அவளைப் போற்றும் வகையில் புனிதவதி எனப் பெயர் வைத்தான்.

காரைக்காலிலே புனிதவதி..........., கப்பலில் சரக்குகளை ஏற்றிச் சென்ற கணவன் வருவான் என்று தினமும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள்.

பரமதத்தன் அவளைத் திரஸ்கரித்துச் செல்வது என்ற முடிவை எவரிடமும் சொல்லவில்லையாதலால் அவன் திரும்பி வராது இருந்து விடப் போகிறான் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 

வியாபாரத்துச் சென்ற இடத்தில் என்ன தடங்கலோ? அயல் நாடுகளுக்குச் சென்றிருப்பானோ?" என்றே அனைவரும் நினைத்தனர்.

வருடங்கள் பல உருண்டோடின. பாண்டிய நாட்டிற்குச் சென்ற வியாபாரிகள் சிலர் தனதத்தனிடம் வந்து அங்கே பரமதத்தனைக் கண்டதாக தெரிவித்தனர். 

மருமகன் இருக்குமிடத்தையும் அங்கே அவன் வியாபாரத்தில் நிலையாக ஊன்றிக் கொண்டிருப்பதையும் கேள்விப்பட்ட தனதத்தன், அப்போது கூட மருமகனின் மனமாற்றத்திற்கு வேறு அர்த்தமே கொண்டான். 

மாமனாரின் ஆதரவில் இருப்பது தன்னுடைய கெளரவத்துக்குப் பங்கானது என்று எண்ணியே மருமகன் தனியே சென்றிருக்கிறான் என்றே எண்ணினான்.

ஏன் புனிதவதியே தன் விஷயத்தில் கணவன் மனமாற்றம் அடைந்து விட்டான் என்று எண்ணவில்லையே! அன்றைய சம்பவத்திற்குப் பிறகு, அதாவது இறைவன் திரு அருளால் மாங்கனிப் பெற்றுக் கொடுத்த அன்றிலிருந்து அவன் அவளிடம் அதிகமாகக் கொஞ்சிப் பேசவில்லை. 

வியாபாரத்தில் அவன் கவனம் பெருமளவில் மூழ்கியிருக்கிறதென்றே அவள் நினைத்தாள். அதற்கேற்றாற்போல் சில நாட்களுகளில்.அவன் கப்பலில் சரக்கு ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டானே!

தனதத்தன் சீரும் செல்வமும் கொண்டு மகளுடன் பாண்டிய நாட்டுக்குப் புறப்பட்டான். அச்செய்தி அறிந்த பரமதத்தனுடைய பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

பரமதத்தன் இருக்கும் ஊரின் எல்லையை அடைந்ததும் ஓர் ஆள் மூலம் தனதத்தன் தாங்கள் வந்திருப்பது பற்றிச் செய்தி அனுப்பினான். 

அதைக் கேட்டதும் பரமதத்தன் சிறிது நேரம் உணர்விழந்து நின்று விட்டான். தன்னுடன் வாழ்க்கை நடத்தும் பொருட்டல்லவா புனிதவதி காரைக்காலிலிருந்து வந்திருக்கிறாள்! அவளை அவன் எவ்வாறு சந்திப்பான்?. அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் யோக்யதை கூட அவனுக்கு இல்லையே!.

ஊரை விட்டுப் புறப்பட்டுக் கண்காணாத தேசத்துக்குச் சென்று விட்டால் அவர்களுக்கிடையே உள்ளத் தொடர்பு தானே அறுபட்டுவிடும் என அவன் எதிர்பார்த்தான் அது நடக்கவில்லை. அவன் இருப்பிடம் அறிந்து அவளைத் தேடி புனிதவதி வந்து விட்டாளே!

இனியும் மூடி மறைப்பதில் பயனில்லை என்று தோன்றியது.அவனுக்கு வந்திருந்த ஆள் மூலம்தான் சிறிது நேரத்தில் அவர்களிடம் வருவதாகச் சொல்லி அனுப்பினான். நேராக வீடு சென்று தன் மனைவியையும் குமாரத்தியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

கணவன் வருகிறான் என்ற செய்தி அறிந்ததும் புனிதவதி அவள்தான் பணிந்து வணங்கி பயணித்து வந்த சிவிகையை விட்டு இறங்கி நின்றாள். தூரத்தே வரும் கணவனைக் கண்டதும் அவள் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது.  அந்த மகிழ்ச்சி மறுநொடியில் மறைந்து போனது. காரணம், கணவனோடு அருகருகே பெண்னையும் குழந்தையையும் கண்டுதான்.

யோசனையில் அவள் ஆழ்ந்திருக்கும் வேளையில் பரமதத்தன் அவளை நெருங்கி நமஸ்கரித்ததோடு, தன் மனைவியையும் மகளையும் நமஸ்கரிக்கச் செய்தான்.

திடுக்கிட்டு பின்னால் நகர்ந்தாள் புனிதவதி.

"சுவாமி, இதென்ற காரியம்?" என்று வாய் குழறக் கேட்டாள்.

"அம்மையே, தங்கள் பேரருளால் நாங்கள் செளக்கியமாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். இக்குழந்தைக்குத் தங்கள் திருநாமமே வைத்துள்ளோம்" என்றான் பரமதத்தன்.

தனதத்தனும் மற்றையோரும் திடுக்கிட்டனர்.

"பரமதத்தா, என்ன பேசுகிறாய்? புனிதவதியைத் தெரியவில்லையா? என்று கேட்டான்.

"இந்த உடம்பிலே உயிர் உள்ள வரையில் நான் மறக்க மாட்டேன். என் தெய்வமாக அல்லவா பூஜித்து வருகிறேன்" என்றான்.

அப்போதுதான் புனிதவதிக்குத் தன் கணவன் பிரிந்து சென்றதற்கான காரணம் புரிந்தது கண்களில் நீர் மல்க கணவனை நெருங்கி, "சுவாமி, தாங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் தங்கள் மனைவி என்பதை ஒருபோதும் மறந்ததில்லை" என்று வேண்டினாள். 

அம்மையே, தங்களிடம் தெய்வத்தன்மையைக் கண்ட பிறகு வேறு எந்த விதத்திலும் என் உள்ளம் தங்களைப் பற்றி நினைக்காது!" என்றான் பரமதத்தன்.

தனதத்தனுக்கு இவர்களின் பேச்சு புரியவில்லை. 'புனிதவதி......"என்ன இது மகளை கேட்டார்.

துக்கம் நெஞ்சை அடைக்க நடந்ததை விவரித்தாள் புனிதவதி. அவளைக் கணவன் ஏற்க மறுத்து விட்டதோடு அவளைத் தெய்வமாகப் பாவிக்கிறான். ஆனால் அவளோ பரமதத்தனுக்காகவே இத்தனை காலம் காத்திருந்தாள். 

வாசனை கமழும் கூந்தலுடன் நிற்கும் புனிதவதியாரோ தன் கணவன் சொன்ன மாற்றங் கேட்டதும், சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து, அதிலேயே சிந்தை ஒன்றி மிகவும் இது! இவருக்காவே நான் உடல் வனப்பைத் தாங்கியிருந்தேன். இனி அதற்கு ஆகா!, தசைப் பொதியைக் கழித்து, அங்கே உம் திருவடிகளைப் போற்றும் பூதகணங்ஙளைப் போல் எனக்கும் பேய்வடிவம் வந்தருள வேண்டும்!", என்று மெய் நெறியின் உணர்வு பொங்க இறைஞ்சினார். 

அம்பலவாணரின் திருவருளினால் அவ்வாறே ஆயிற்று. உடம்பில் பெண்மையின் அழகிற்கு இடமான ஊன் சதைவனப்பையெல்லாம் உதறியெறிந்துவிட்டு வெறும் எலும்பு உடம்பாக நின்றார். 

அந்த எலும்புக் கூட்டோடு விண்ணவரும் மண்ணவரும் வணங்கத்தக்க பேய் வடிவம் பெற்றார்.

 உடனே வானத்தில் இருந்து மலர்மாரி பொழிந்தது! 

எங்கும் தேவதும்பிகள்  முழங்கின.

உலகெலாம் பெரொலி நிறைந்து விம்மியது.

தேவர்களும் முனிவர்களும் ஆரவாரம் செய்தார்கள். 

சிவகணங்களெல்லாம் கூத்தாடின.

சுற்றத்தார்கள் அச்சமுற்று புனிதவதியாரை வணங்கிப் போய் விட்டார்கள்.

அப்பொழுது புனிதவதியார் தமக்குண்டான ஒருமை ஞானத்தினால் உமையொருபாங்கனைத் துதித்து, "உம்முடைய அழகான திருவடிகளைப் போற்றும் நல்ல சிவபூத கணங்களில் நானும் ஒன்றானேன்!"  என்று உள்ளுருகி *அற்புதத் திருவந்தாதியையும் இரட்டை மணிமாலையையும்* பாடியருளினார்.

அதன்பிறகு, காரைக்காலம்மையாருக்குப் பேருணர்வு மேன்மேலும் பொங்கியெழுந்தது.  "சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தைக் காண வேண்டும்" என்ற பேராவலுடன் திருவருள் வழியிலேயே அம்மையார் விரைந்து நடந்தார்.

அவர் விரும்பிப் பெற்ற  பேய்த் தோற்றத்தைக் கண்டவர்களெல்லாம் பயந்து அந்த இடத்தை விட்டே அகன்றோடலானார்கள். 

தான் கொண்ட பேய் வடிவத்தைப் பற்றி உள்ளவாறே பிறர் கூறுவதைக் கேட்ட அம்மையார், "என் அண்டர் நாயகரான இறைவர் என்னை அறிவாராகில் அதுவே எனக்குப் போதும்! உண்மை அறியாதவர்களான உலக மக்களுக்கு நான் எவ்வுருவமாய்க் காணப்பட்டாலும் அதனால் ஆவது என்ன, ஒன்றுமில்லை!" என்று கூறினார்.

கைலாசத்தை நோக்கிப் புறப்பட்ட காரைக்காலம்மையார் வடதிசையிலுள்ள தேசங்களையெல்லாம் மனே வேகத்தைவிட வேகமாகக் கடந்து சென்று திருக்கயிலை மலையை நெருங்கினார்.

அதன் பிறகு அவர் காலால் நடப்பதைத் தவிர்த்தார். தம் தலையாலே நடந்தார். அவ்வாறு தலையால் நடந்தபடியே வெள்ளிமலை மீதேறினார். 

அப்பொழுது சிவபெருமான் ஒரு பக்கமிருந்த இமயவல்லியான உமாதேவியார் அதிசயித்து, உள்ளத்தில் அன்பு பொங்கத் தம் சிவபிரானை நோக்கி, "எம்பெருமானே! இங்கு தலையால் நடந்து மலையேறும் என்புடலின் அன்புதான் என்னே!" என்றார்.

அதற்கு சிவபிரான்! உமையே! இங்கே வரும் இவள் நம்மைப் பேணிப் போற்றும் அம்மையாகும், காண்! இந்தப் பெருமை வாய்ந்த வடிவத்தையும் நம்மை வேண்டிப் பெற்றாள்" என்று கூறினார். 

பிறகு பேய் வடிவமான காரைக்காலம்மையார் தம்மை நெருங்கி வந்ததும், "அம்மையே!" என்றார் சிவபெருமான்.

அதுகேட்ட காரைக்காலம்மையார், "அப்பா!" என்று கூவி இறைவனின் தாமரைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரைச் சிவபெருமான் எதிர் நோக்கி, "இங்கு நம்மிடம் நீ வேண்டுவது என்ன?" என்று கேட்டார்.

அவரை அம்மையார் கும்பிட்டு, "இறைவரே! என்றென்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும்! உலகில் இனி நான் பிறவாமை வேண்டும். மீண்டும் எனக்கு பிறப்பு உண்டென்றாலும் உன்னை என்றும் நான் மறவாதிருக்க வேண்டும்! இன்னும் ஒன்றும் வேண்டும். தர்ம வடிவமே! நீர் ஆனந்த வடிவம் ஆடும்போது அடியேன் மகிழ்ந்து பாடிய வண்ணம், நின் திருவடியின் கீழ் இருக்க வேண்டும்,ஐயனே!" என விண்ணப்பித்தார்.

அவருக்கு சிவபெருமான் திருவருள் பாலித்து, "அம்மையே! தென்திசையில் பழையனூர் திருவாலங்காட்டில் நாம் நடன மாடுவோம்! அந்தப் பெரு நடனத்தை நீ கண்டு ஆனந்தப்பட்டு எப்போதும் நம்மைப் பாடிக் கொண்டு இருப்பாயாக!" என்றார்.

அப்பரிசு அருளப் பெற்ற அம்மையார் சிவபெருமானைப் பணிந்து விடை பெற்றுக் கொண்டு பேரன்போடு போய், திருவாலங்காடு என்னும் தலத்தை தம் தலையாலே நடந்து அன்றே வந்தடைந்தார். 

ஆலங்காட்டு ஆலயத்தினுள்ளே அவர் சென்று, அங்கு அண்டமுற நிமிர்ந்தாடும் ஆண்டவனின் நடனக்கோலத்தைக் கண்டு தொழுதார்.

*கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகள் வெண்பற் குழிவயிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கி அலறி உலகுக்கு நாட்டில் தாழ்சடை எட்டுத் திசைகள் வீசி அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.*
     என மூத்த திருப்பதிகம் பாடினார்.

சிவபெருமானின் ஆனந்தக் கூத்தை முன் வணங்கும் பெருங்காதல் எழுந்தோங்க அம்மையார் பெரிதும் வியப்பெய்தி  *"எட்டி இலவம்மீகை* என்ற பாடலடியெடுத்து *கொட்ட முழவம்* *கூளிபாடக் குழகன் ஆடுமே!* என்னும் முடிபினையுடைய திருப்பதிகத்தையும் பாடிப் பணிந்தார்.


            திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment