Wednesday, March 1, 2017

12 Shivalayas in Kanyakumari

சிவாலய ஓட்டம் என்றால் என்ன ?
மகாசிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டத்தின் சுவையான பின்னணி இதுதான்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகின்றது.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் குமரியில் பக்தர்கள் பன்னிரண்டு சிவ ஆலயங்களுக்கு நடந்து சென்று வருவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா பகுதியை ஒட்டியிருக்கும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது திருமலை அருள்மிகு மகாதேவர் கோவில். சிவராத்திரி நாளில் பக்தர்கள் தங்கள் ஓட்டத்தை இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்குவார்கள்.

திருமலையில் ஆரம்பித்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலான்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்னிகோடு, திரு நட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களிக்கு பக்தர்கள் நடந்து செல்வார்கள். இது சுமார் 90 கிலோமீட்டர் தூரம் கொண்ட பக்தி பயணம் ஆகும்.

இதில் பங்குகொள்ளும் பக்தர்கள் மூன்று நாள் கடுமையான விரதங்கள் மேற்கொண்டு சிவராத்திரி அன்று ஓட்டத்தை ஆரம்பிப்பார்கள். காலில் செருப்பு அணிய மாட்டார்கள். ஒவ்வொரு கோவில் குளத்திலும் குளித்து ஈர துணியுடன் ஆலயம் சென்று தரிசனம் செய்து பின் அடுத்த ஆலயம் நோக்கி பயணம் செய்வார்கள். 

சிவாலய ஓட்டத்தின் வரலாறு

இந்த சிவாலய ஓட்டத்திற்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் அதிகமாக நம்பப்படுவது சுண்டோதரன் எனும் அரக்கனின் கதை தான். முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த  சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து அந்த லிங்கத்தை மூன்று முறை சுற்றி விட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒரு முறை சிவ பெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, "என்ன வரம் வேண்டும்" என்று கேட்க, அரக்கன் "தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் " என்று வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார்.

வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், "நான் இதனை சோத்தித்து பார்க்க தேவலோகம் வரை போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்" என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்.

ஓடும்போதுதான் சிவபெருமானுக்கு அரக்கனின் சிவபக்தி குறித்து நினைவு வர தன் கழுத்தில் இருந்து ஒரு ருத்ராட்சையை எடுத்து கீழே போட்டார். அதில் ஒரு லிங்கம் உருவானது. லிங்கத்தை கண்டதும் மூடனான அரக்கன் அருகில் உள்ள குளத்தில் குளித்து லிங்கத்தை வழிபாடு செய்து பின் துரத்தினான். சிவபெருமானும் அரக்கன் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒரு ருத்திராட்சையை போட்டு வந்தார்.

ஓடும் போது சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு கோவிந்தா.... கோபாலா.... என அழைத்தபடி ஓடினாராம். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும் பொது கோவிந்தா... கோபாலா என்று கூவிய படி செல்வார்கள். சிவராத்திரி அன்று சிவ ஆலயத்தில் நட்டகும் விசேஷத்தில் கோவிந்த கோபாலா என பக்தர்கள் முழங்குவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும்.
 
பன்னிரெண்டாவது ஆலயமான நாட்டலாம் வரும்போது விஷ்ணு பெண் அவதாரமான மோகினியாக தோன்றி அரக்கனை மயக்கி அவனுடன் ஆடுகிறார். விஷ்ணு ஆடுவதை போன்றே அரக்கனும் ஆட, விஷ்ணு தனது சுண்டு விரலை தன்னை நோக்கி காட்ட, அரக்கனும் அவ்வாறே செய்ய அரக்கன் சாம்பல் ஆகி விடுகிறான். அதனால் தான் பன்னிரெண்டாவது ஆலயத்தில் மட்டும் விஷ்ணு சன்னதியும் இருக்கும். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள்.

அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஆடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு இளைப்பாற விசிறி விடுவது வழக்கம்.
 
பக்தர்கள், நடையாக நடப்பது மட்டுமல்லாது வாகனங்களிலும் இந்த பன்னிரண்டு கோவில்களுக்கு இந்த சிவராத்திரி நாளில் சென்று வருவார்கள். குமரி மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment