Tuesday, February 14, 2017

Arivattaya nayanar

அரிவாட்டாய நாயனார்

பெயர்:அரிவாட்டாய நாயனார்
குலம்:வேளாளர் 
பூசை நாள்:தை திருவாதிரை
அவதாரத் தலம்:கணமங்கலம்
முக்தித் தலம்:கணமங்கலம்

"எஞ்சாதவாட்டாயன்அடியார்க்கும் அடியேன்" –திருத்தொண்டத் தொகை

சோழர்களதுகாவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர்சிவபெருமானுக்கு
ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.

இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம்யானைஉண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும்நாயனார்உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்துவாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன.அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு "இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும்" என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் திருவமுதுக்கே ஆக்கினார். தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் தீரவே அருந்ததி அனைய மனைவியார் தண்ணீரைவார்க்க அதனை அன்பாளர் அமுது செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர்.

ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும் பொழுது திருமேனி வாடியதனால் கால் தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்ந்தார். மட்கலம் மூடும் கையினால் காதல் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், "இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?" என வருந்தினார். "அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்" என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் "விடேல் விடேல்" என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று "அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்துஇங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி" என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி 'நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!" என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால்அரிவாட்டாய நாயனார்எனும் திருநாமத்தைப் பெற்றார்.

No comments:

Post a Comment