Thursday, November 24, 2016

Perur temple part1

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                  *( 01 )*
🌜 *கோவை திருப்பேரூர் தொடர்.*🌛 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*இறைவன்; அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி.*

*இறைவி; அருள்மிகு பச்சைநாயகி அம்மன்.*

*தலவிருட்சம்; பன்னீர் மரம்.*

*தீர்த்தம்; சிருங்கக் கிணறு.*

வைப்புத் தைலம், திருப்புகழ் பாடல் பெற்றது, பேரூர் புராணம் ( கச்சியப்ப முனிவர் இயற்றியது, பச்சைநாயகி அம்மன் பிள்ளைத் தமிழ், போற்றிக் கலி வெண்பா, நடராசர் திருக்கூத்து போன்றவை.

திருவாதிரைப் பெருவிழா,பங்குனி உத்தரப் பெருவிழா, (பிரம்மோற்சவம்), தமிழ்ப் புத்தாண்டு, ஆடிப் பதினெட்டு, ஆடி அமாவாசை, தை அமாவாசை, தைபூசம், இறைவன் இறைவி நாற்று நடவு உற்சவம்  முதலிய முக்கியத் திருவிழாக்களாகும்.

வார, இருவார உற்சவங்களாக, சுக்ரவாரம், பிரதோஷங்களாகும்.

மாத உற்சவங்களாக, ஏகாதசி, சஷ்டி, விசாகம், கிருத்திகை ஆகியவை நடக்கும்.

காமதேனு முக்தி அடைந்த தலம்.

சுந்தரமூர்த்தி நாயனார் இக்கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி, இத்திருப்பேரூர் வந்து பாடியதை பெரிய புராணத்தாலும் பிற சரித ஆதாரங்களாலும் அறியப்பட்டிருப்போம்.

திருப்பேரூர் திருக்கோயிலில் தூண்களில் பலவித கலைநுனி வேலைப்பாடுகளமைந்ததைப் பார்த்து நாம் வியந்து போவோம். இங்கு அகழ்வாராய்ச்சி நடந்த போது, ரோமானிய நாணயங்கள் கிடைக்கப் பெற்றன. இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர்.  பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பல்லவர், சேரர், சோழர் ஆதிக்கமும், கொங்கு பாண்டியர் ஆட்சியும், விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கமென தென்னாட்டில் முக்கியத்துவ அரசர்கள் கொடி நாட்டிய இடம் இத் திருப்பேரூர்.

*"ஆரூரார் பேரூரார்"*  எனவும், *"பேரூர் பிரமபுரம் பேராவூரும்"* எனவும் அப்பர் சுவாமிகள் தனது ஷேத்திரக் கோவையில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். ஆக சுமார் கி.பி. 650-க்கு முன்னரே திருப்பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருப்பதென்று தெரியவரும். *( பேரூர் பற்றிய தனி தேவாரம் மறைந்து போய் விட்டதாக கருத்துண்டு)*

இத்தலத்தைப் பற்றி கச்சியப்ப முனிவர் விரிவாக விவரித்துள்ளார்.

திருப்பேரூர் சரிதப் படலத்தில் உண்மை நிலையான *பள்ளுப்படலம்* அழகிய திருச்சிற்றம்பல படலம் போன்ற விசேஷத் திருவிழா சாட்சி.

முதலாவதாக இக்கோயிலின் திருப்பணியின் பொருட்டுப் பிரித்துப் பார்க்கும்போது, சிலவை அடையாளங்களால் இதற்கு முன் பூர்வத்தில், இந்த இடத்தில் ஒரு செங்கற் கட்டடமாக இருந்ததென்றும், அதனையே பின்னிட்டு இப்போது நாம் காணும் கருங்கற் கட்டடமாக கட்டினாரென்று ஊகிக்க முடியும்.

சுமதி என்ற பிராமணனும், அங்கிரன் எனும் வேடனும் கொலை, களவு, வியபிசாரம் முதலிய கொடும் பாவங்களை செய்து திரிந்தனர்.

இவா்கள் இறுதியில் திருப்பேரூர் எல்லையில் மாண்டுவிட நேர்ந்தது. இவர்களின் உடல்கள் தம்முட்பட்ட எல்லாவற்றையும் தூயதானாக்கும் *திருநீற்று மேட்*-டிலும் கிடந்து, காஞ்சிமா நதியில் உடல்கள் உருளப்பட்டு தோய்ந்தமையாலும், நற்கதி பெற்றனர்.

உடலையும் உயிரையும் தூயவனவாக்கும் தன்மை பேரூர் தலத்துக்கும், இதனருகே பாயும் காஞ்சிமா நதி தீர்த்தத்துக்கும் உண்டு. *(இப்போது இந்தக் காஞ்சிமா நதியில் நீரோட்டங்களை ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைத் துகள்கள் பாலிதீன் கழிவுகளால் மாசுபட்டு அழிந்தொழிந்து இருக்கிறது. பலத்த மழை பெய்து மழை வெள்ளம் பெருகி வந்தால்தான் இக் காஞ்சிநதியின் நதிவழி கண்களுக்குப் புலப்படும். )*  மேலும் இங்கே எழுந்தருளியிருக்கும் பட்டி நாயகராகிய மூர்த்திக்கும் உண்டு.

பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் இவ்விறைவனை வழிபட்டு உய்தி பெற்றார்கள் என்பதற்கு இப்பேரூர் புராண படலங்களில் உண்மைகளும், உள்ளுறைவைகளும் ஐயமில என தெரியும்.

பற்பல தேவர்கள் முனிவர் அரசர் போன்றோர்கள் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டது புராணச் சரிதத் சான்றில் உள்ளன.

இத்தலத்தின் மூர்த்தியாகிய பட்டிநாதர்--பட்டீசர் என்ற பெயர், பசுவாகிய காமதேனுவினால் பட்டியிட்டுப் பூசிக்கப்பெற்ற  வரலாறு தெரிகிறது.

குழகன் குளப்புச் சுவடுற்ற படலத்திற் கூறிய அடையாளங்களாகிய கன்றுக்குட்டியின் கால்குளம்புகள் சுவடுகள் மூன்றும் சுவாமி திருமேனியில் இன்றும் உளன.

தானேதோன்றி ( சுயம்பு) முளைத்து கிளைத்தெழுந்த இவ்விறைவனின் திருமேனியில், ஐந்துதலை நாகப்படம், பாம்புப் பூணூல், திருமுடியில் சுற்றப்பட்டிருக்கும் சடைக்கற்றை, இச்சடைக்கற்றையை கரைபோல இருக்கப் பெற்றதாகிய கங்கைக்கு ஏற்ற நீர் நிலை, பிரம விட்டணுக்கள் அன்னமும் பன்றியுமாகத் தேடிய அடையாளங்கள் போன்ற மெய்யாடங்களாகியவைகளை மக்கள் வழிபட்டு தரிசனத்தில் கண்டு களித்திருக்கிறார்கள்.

இந்த காஞ்சிமா நதியில் சோழன்துறை என்னும் துறையும் ஒன்றுண்டு. இவ்விடத்தில் காயஸ்து மரபினர்களாகிய லாலாக்கள் மண்டபம் இருந்தன. காலேசுவர சுவாமி உற்சவத்தில் தீர்த்தோத்சவமும் வசந்த காட்சியும் மற்ற விசேஷ காலங்களில் தீர்த்தமும் இந்தச் சோழன்துறையில்தான் நடைபெற்றன.

முன்பு, குட்டநோய், பிரமஹத்தி தோஷம், முயலக நோய், சித்தபிரமை கண்டோர், பைத்தியம் முதலான பெரிய நோய்களை இக்காஞ்சிமா நதியில் நீராடி, பிரம தீர்த்தத்தில் குளித்து, திருமேற்றிடம் வந்து அவ்விடத்து விபூதியினை பூசி நோயொழியப் பெற்றிருக்கிறார்கள். இதற்கான உண்மைச் சான்றுகளான இத்தலப் படலத்தில் காணலாம். *( இத்தொடரில் பின்பு, ஒவ்வொரு படலமாக விரிவாக வரும்.)*

இந்த பேரூர் தல வழிபாட்டியிலே உயிர்கள் இவ்வுலகில் நன்மணம் நன்மக்கள்,  செல்வம் முதலிய விருப்பங்களையெல்லாம் கைவரப் பெற்றார்கள் என்றும், மறுமையிலே தேவபோகங்களை அடைந்து அனுபவிப்பர் என்றும், இறுதி நேரத்தில் அழிவில்லாத நிலைத்த இன்பமாகிய *முத்தியையும்* பெற்று இறைவன் திருவடிக்கீழ்  நீங்காது இருப்பா் என்றும், இப்புராணப் படலத்தில் பயனையடைந்தோர் சாட்சியானதை நாமும் இத்தொடர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*எலும்பு கல்லாகுதல்.*
தன்னை வந்தடைந்தோர்க்கு அழியா நிலைமையைத் தருவேன் என்பதற்கு இப்பேரூர்தல காஞ்சிமா நதியில் இடப்பட்ட மானிட எலும்புகள், நாளடைவில் கல்லாக மாறுபட்டுப் போகும். இந்நிலை பெறுதலை இன்றளவும் நாம் காணமுடியும்.  எப்படியென்றால்?... கோவை வாசிகள், பக்கத்து தேச மலையாள வாசிகள் போன்றோர்கள் தங்களது இல்லத்தில் இறப்பவர்களது அஸ்தியிலுள்ள எலும்புகளை, அவர்களது உற்றார்கள் இக்காஞ்சிமா நதியிலேயிட்டு சடங்கு செய்யும் வழக்கம் இன்றும் நடப்பன.

*இறவாப்பனை.*
பிறப்பும் இறப்புமான உபாதிகள் இத்தலத்தையடைந்தோர்க்கு
நீக்கம் பெறும் என்பதற்குச் சான்றாக உள்ளது. நம் நல்வினையினால் அதைக் காணும் பேறை நமக்கு கிடைத்தற்கரியது. இப் பனை இறவாத் தன்மை பெற்றுள்ளது.

*பிறவாப் புளி.*
இப்பிறவாப் புளி என்பது புளியமர விருட்சம்தான். இப்பிறவாப் புளியமரம் பட்டீசர் பெருமானின் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் தென் கிழக்கு நோக்கி விளைந்தோங்கி நிற்கிறது. இதற்கு பாதுகாப்பாக சிமின்ட் மேடை அமைத்து இருக்கின்றனர். இதன் கனியான புளியம்பழத்தினின்று வித்துக்களான விதைகள் அனேகமாய் முளைப்பதில்லை. அப்படி முளைக்கண் வந்தாலும் அதோடு கருகித் தலை சாயும். இது இன்றளவும் கண்கூடு. இப்பிறவா புளிய மர விருஷத்தை இப்புவியிலே கண்ணார காணும் பெரும் பேற்றை பட்டீசர் எல்லோருக்கும் அருளியிருக்கிறார்.

              திருச்சிற்றம்பலம்.

*திருப்பேரூர் தொடர் அதிசயங்கள் அருட்கடாஷங்கள் நாளையும் வ(ள)ரும்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment