"இருக்கிற காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே."
பரணீதரன் {மெரீனா] சொன்ன ஒரு நிகழ்ச்சி " நாத்தனார் கலகம் "
1988-ல் காஞ்சியை அடுத்த ஓரிக்கையில் தங்கியிருந்த
ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு சென்றிருந்தேன்.கூட்டமே இல்லை
கைங்கர்யம் பண்ணும் நாலைந்து இளைஞர்கள் மட்டுமே அருகில்
இருந்தனர். நமஸ்காரம் செய்தேன்.
அருகில் வரும்படி அழைத்து உட்காரச் சொன்னார்.
இப்ப என்ன நாடகம் போட்டுண்டிருக்கே?" என்று பெரியவா
கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன்.
அதுவரை என் நாடகங்களைப் பற்றி சுவாமிகள் நேரடியாக
என்னிடம் விசாரித்ததில்லையாதலால், சற்றும் எதிபாராத
வகையில் திடீரென்று பெரியவா அப்படிக் கேட்டத்துதான்
எனது ஒரு கணநேரத் திகைப்புக்குக் காரணம்.
"நாத்தனார் கலகம்" என்றேன் நான்.
"என்ன கதை? அதில என்ன சொல்லியிருக்கே?"
இக்கட்டான நிலைமை."கதையை விரிவாகச் சொல்வதா-
சுருக்கமாகக் கூறுவதா? எப்படித் தொடங்குவது,எங்கே
தொடங்குவது?எதைச் சொல்வது,எதை விடுவது?இதற்கு
முன் பெரியாவாவிடம் கதை சொல்லிப் பழக்கமில்லையே!'
இவ்வாறு சிந்தித்தப்படியே, கதையை விட்டுவிட்டு நாடகத்தின்
மையக் கருத்தைக் கூறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
"இப்பெல்லாம் பிள்ளைகள் அப்பா அம்மாவைச் சரியா கவனிச்சுக்க
மாட்டேங்கறா,நிறைய சம்பாதிக்கறா.அப்பாவோட பணமும்
வேண்டியிருக்கு. ஆனா அன்பா இருக்கமாட்டேங்கிறா.பெத்தவா
வீட்டை விட்டுவிட்டு, விருத்தாச்ரமங்களைத் தேடிண்டு
போகவேண்டியிருக்கு,'இதை வெச்சுண்டு கதை
எழுதியிருக்கேன்!' என்று கூறினேன்.
"வாஸ்தவம்தான். என்கிட்டேகூட அப்பப்போ சிலபேர் வந்து
"பையன் வெளிநாட்டிலே, உத்தியோகம் பார்க்கறான்.ஆயிரம்
ஆயிரமா சம்பாதிக்கிறான். நாங்க இங்கே தனியா திண்டாடறோம்;
சாப்பாட்டுக்கே வழியில்லை,மடத்துக்கு வந்து கைங்கரியம்
பண்ணிண்டு இங்கேயே இருந்திடறோம்"னு சொல்றா.
பாவமாயிருக்கு" என்று கூறிவிட்டு, இதுக்கு நாடகத்திலே
என்ன ஸொல்யூஷன் சொல்லியிருக்கே?" என்று பெரியவா கேட்டார்.
"நான் பரிகாரம் ஒண்ணும் சொல்லலே, பொதுவா இந்தக் காலத்துப்
பசங்களோட மனோபாவம் எப்படியிருக்குன்னு காண்பிச்சிருக்கேன்.
இந்த நாடகத்தில் பணத்தாசை பிடிச்ச பொண்ணு ஒருத்தி,தம்பிகளை
அப்பாவுக்கு எதிராத் தூண்டிவிட்டு கலகம் பண்றா"என்று கதையை
இரண்டு வரிகளில் கூறினேன். அப்போது நாடகத்தில் இறுதிப்
பகுதியில் வலியுறுத்தியுள்ள கருத்தையும் பெரியவாளிடம்
சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
"அப்பாக்களும் எல்லாப் பணத்தையும் தூக்கி பையன்கள்கிட்டே
குடுத்துட்டு கடைசிக் காலத்துல திண்டாடாமே, சம்பாதிச்ச
பணத்துல தங்களுக்குன்னு கொஞ்சம் சேர்த்து வைச்சுக்கணம்னு
சொல்லியிருக்கேன். எல்லாத்துக்கும் பசங்க கையையே
எதிர் பார்க்காம, அவாளுக்கு தொந்தரவா இல்லாம,குடும்பப்
பொறுப்புகளெல்லாம் முடிச்சப்புறம் பந்த பாசங்கள்லேருந்தும்,
இதர வசதிகள்லேருந் தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வாழ
கத்துக்கணும். முன்காலத்துலே வானப்ரஸ்தம்னு இருந்ததே
அது மாதிரி!"
"இவாளையும் காட்டுலே போய் வாசம் பண்ணச் சொல்றயா?"
இப்போது காடு எங்கே இருக்கு?
அதான் இருக்கிற காடெல்லாத்தையும்
அழிச்சிண்டிருக்காளே" என்று கூறி பெரியவாளுக்கு உரிய
சிரிப்பொன்றைச் சிரித்தார். தாறுமாறான சமூகப் போக்குகளைக்
கண்டு மனம் வெதும்பி,ஆற்றாமையால் விமரிசனம் செய்யும்போது
பெரியவா சிரிக்கும் சிரிப்பு ஆயிரம் செய்திகளைக் கூறும்.
'நான் காட்டுக்குப் போகச் சொல்லலே. வீட்டுலேயே,
எல்லாத்திலேருந்தும் மனத்தாலே ஒதுங்கிவாழப் பழகிண்டா
நல்லதுன்னுதான் எழுதியிருக்கேன்.
"சரி சரி " என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பெரியவா.
திரும்பி வரும்போது, பெரியவா கூறிய கருத்து என் மனத்தில்
எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. "அதான்,இருக்கிற
காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே."
மனிதன் தன் சுயநலத்துக்காக அசுரனாகி மாறி, தன்னைப் பெற்று
வளர்க்கும் இயற்கை அன்னையையே கொடுமைப்படுத்தி
சின்னாபின்னமாக்கிய பாவத்துக்கான துன்பத்தையல்லவா
தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.! சுற்றுப்புறச்
சூழலின் தூய்மை கெடுவதற்கும் அதன் தொடர்பான பிற
இன்னல்களுக்கும்,இருக்கும் தாவரச் செல்வங்களை அழித்து
வருவதுதான் காரணம் என்று தற்போது உலகெங்கும்
எதிரொலிக்கும் கூக்குரலை அன்றே,அந்த ஒரு வரியில்
பெரியவா வெளிப்படுத்தியதன் தாக்கம் என்னை வெகுவாகப்
பாதித்தது.அந்த 'வசனம்' நாடகத்தில் இடம் பெற்றேயாக
வேண்டும் என்று தீர்மானித்தேன்.
அதுவரை 'நாத்தனார் கலகம்' இரண்டு மூன்று முறைதான்
மேடையேறியிருந்தது. இந்த 'வசனம்' பொருத்தமான இடத்தில்
சேர்க்கப்படுவதற்காக இறுதிக் காட்சியை சற்று மாற்றியமைத்து,
மீண்டும் ஒத்திகை பார்த்து, அடுத்த நிகழ்ச்சியின்போது
பெரியவர்களின் கருத்து ஒலிக்கும்படி செய்தேன்
அன்று நாடகத்தில் சங்கரராமன் என்ற பாத்திரம் "அதான் இருக்கிற
காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே" என்று கூறியதும்
கொட்டகையில் பலத்த கைதட்டல் கேட்டது.அத்தனை பேர்
உள்ளங்களிலும் பெரியவாவின் 'வசனம்' எதிரொலித்ததைக்
கேட்க முடிந்தது.அன்று மட்டுமல்ல அதன்பின் எங்கெல்லாம்
இந்த நாடகம் நடைபெற்றதோ,அங்கெல்லாம் இந்த ;வசனத்'துக்குப்
பார்வையாளரின் கரவொலி வானை முட்டியது.
என்னைப் பொறுத்தவரையில்,"நாத்தனார் கலகத்தில்" இந்த
"மெஸேஜே" மணிமகுடச் சிகரமாகத் திகழ்கிறது
No comments:
Post a Comment