Sunday, August 9, 2015

Guru sishya exam - Periyavaa

Courtesy:Sri.GS.Dattatreyan

பரீக்ஷை செய்து படிப்படியாக உபதேசம்; மாணவனின் ஸ்வய சிந்தனைக்கு ஊக்கம்

குரு என்பவர் தாம் பாட்டுக்குக் கடமை என்று ஏதோ லெக்சர்கள் கொடுத்து 'போர்ஷன் எல்லாம் கவர் பண்ணியாச்சு' என்று நிம்மதியாகப் போய்விடாமல், மாணவனை சோதித்துச் சோதித்துச் சுத்தம் செய்து குணவானாக்கி அதன் பின்பே வித்யையைக் கற்றுக் கொடுத்து அவனை புத்திமானாக ஆக்கினார். குணமில்லாத புத்திசாலித்தனத்தைவிடப் பெரிய ஆபத்து எதுவுமில்லை.

எந்தப் பக்வ ஸ்திதியில் இருப்பவனுக்கு என்ன உபதேசம் தரவேண்டும், அவனை அடுத்த ஸ்டேஜுக்கு எப்படி உயர்த்தி இதற்கு மேலான தத்வங்களை உபதேசிக்க வேண்டும் என்றெல்லாம் நன்றாக யோசித்துத் தீர்மானம் பண்ணிக் கொண்டு படிப்படியாக அவனை டெவலப் பண்ணிக் கொண்டே போய் மேலும் மேலும் உயர்ந்த வித்யகைளைக் கற்பித்துக்கொண்டு போயிருக்கிறார்கள். ப்ருகு தம்முடைய பிதாவான வருணரிடமேதான் சிக்ஷை பெற்றார்1. ஆனாலும் முதலில் அவர் இருந்த அதிகப் பக்வமில்லாத நிலையில் பிதாவானவர் அன்னமய கோசமான இந்த உடம்பே ஸத்யம் என்ற பேஸிஸில் (அடிப்படையில்) தான் ஆரம்பித்தார். அப்புறம் அவரைத் தபஸ் பண்ண வைத்து, அவராகவே உடம்பின் அஸத்யத்வத்தை (மெய்யின் மெய்யின்மையை) உணரும்படியாகப் பண்ணி, அதன்பின் ப்ராணமய கோசம்தான் ஸத்யம் என்று நினைக்கும்படி உயர்த்திவிட்டார். இப்படியே மறுபடி மறுபடி தபஸ் பண்ணவைத்து, அதாவது மேலும் மேலும் ப்ருகுவைப் பக்வப்படுத்திக் கொண்டே போய், "ப்ராணனுமில்லை, மனஸ்தான் ஸத்யம்; மனஸும் இல்லை, விஞ்ஞானம்தான் (அறிவு என்று வைத்துக்கொள்ளலாம்) ஸத்யம்; இல்லை, இதெல்லாம் கடந்தும் இதற்கெல்லாம் அடிப்படையாய், தன்னியல்பான ஆனந்த ஸ்வரூபமாய் இருக்கும் ஆத்மாதான் ஸத்யம்" என்று கடைசியில் தெரியவைத்தார்.

இப்படியெல்லாம் ஒரு வித்யார்த்தியை (மாணவனை)ப் படிப்படியாகப் பக்குவப்படுத்தி அந்தந்த ஸ்டேஜுக்கு உரிய வித்யையைப் புகட்டுவதென்பது இன்ஸ்டிட்யூஷனில் எந்த அளவுக்கு ஸாத்யம்?

இதிலே இன்னொரு முக்யமான அம்சமும் இருக்கிறது. "குழந்தைகளை அவர்களே அநேக விஷயங்களைக் கார்யத்தில் செய்து பார்க்குமாறு விடவேண்டும். இதே மாதிரி, விஷயங்களை அவர்களே யோசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படியும் விடவேண்டும். எல்லாவற்றையும் புஸ்தகத்திலே போட்டு, வாத்தியார் அதைப் பார்த்து ஒப்பித்து அப்புறம் மாணவனும் பொட்டை நெட்ருப் போடும்படியாக விடப்படாது" என்று மான்டிஸோரி முதலானவர்கள் சொல்கிறார்கள். தம்முடைய யஜ்ஞாநுஷ்டானத்துக்கான சுற்றுக் கார்யங்களை ஆசாரியரானவர் சிஷ்யனிடம் விடும்போது அவனுக்குத் தானே ஒன்றைச் செய்து பார்த்து தெரிந்துகொள்ள இடமேற்படுகிறது. இதர ஜாதியாரின் குழந்தைகள் தங்களுடைய தொழிலையே முக்யமாக அப்பன், பாட்டன் செய்வதைப் பார்த்துத் தெரிந்துகொண்டு தாங்களும் அம்மாதிரிக் கார்யத்தில் செய்தே அவற்றில் அறிவைப் பெருக்கிக் கொள்ளும்படிதான் நம்முடைய சாஸ்த்ரீயக் கல்வி முறையில் இடம் அளித்திருக்கிறது. இவ்வாறு மாணவர்களை நேராகக் கார்யத்தில் விட்டு அதன் மூலம் "ப்ராக்டிகல் நாலெட்ஜ்" (நடைமுறை அறிவு) பெற வழி வகுத்திருப்பது போலவே அவர்களை ஸொந்தமாகச் சிந்திக்கவிட்டு உண்மைகளைப் பற்றிய அறிவைப் பெறவும் அக்காலக் கல்வி முறையில் இடம் கொடுத்ததற்கு ப்ருகு கதை சான்று. யோசித்து, யோசித்து ப்ருகுவே ப்ருகு கதை சான்று. யோசித்து, யோசித்து ப்ருகுவே ஸத்யத்தைப்பற்றி அறியும்படி அவருக்குப் பிதாவும் ஆசார்யருமாக இருந்த வருணன் ஊக்கம் தந்திருக்கிறார்.

இன்னும் அநேக கதைகளிலும், "குரு உபதேசம் செய்தார். அப்புறம் 'இதைப்பற்றி ஒரு வருஷம் தபஸ் பண்ணிவிட்டு (அதாவது ஆழச் சிந்தித்துவிட்டு) திரும்பி வந்து என்ன தெரிந்து கொண்டாயென்று சொல்லு' என்று சொன்னார் என்று வருகிறது.

இன்னொரு உபநிஷத் கதையில் வருகிறது 2: சரீரம்தான் ஸத்யம் என்பதற்கு மேலே போகமுடியாதவனாக அஸுரனான விரோசனன் இருக்கிறான். ஆனால் அவனையும்கூட இப்போது நம்மில் பெரும்பாலோர் இருக்கிறதுபோல எந்த விதத் தத்வ சிந்தனையுமில்லாமல், வெறும் அரட்டையிலும் சோம்பேறித்தனத்திலும் பொழுதைப் போக்கும் வ்ருதா ஆஸாமியாக இல்லாமல், எது ஸத்யம் என்று கொஞ்சமாவது ஆராய்ந்து, அது சரீரம்தான் என்று தப்பாகவாவது ஒரு கொள்கைக்கு வருவதற்கு குருவான ப்ரஜாபதி உதவி செய்திருக்கிறார். எதையுமே கழித்துக்கட்டிவிடாமல் சொஞ்சமாவது அபிவிருத்தி செய்து பார்க்கலாம் என்ற நோக்கத்திலேயே அக்கால குருமார்கள் சிஷ்யர்களை ஏற்றுக் கொண்டதற்கு இது proof.

சிஷ்யன் என்று வரும்போது ரொம்பவும் உதவாக்கரை கூட யோக்யதை ஸம்பாதித்துக் கொள்வதற்காக அந்நாளில் பரிச்ரமப்பட்டிருக்கிறானென்பதும் இங்கே தெரிகிறது – அஸுரன் விரோசனனும் கூட ப்ரஜாபதியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தத்வத்தை ஆராய்வதற்கான யோக்யதையை ஸம்பாதித்துக் கொள்வதற்காக முப்பத்திரண்டு வருஷம் ப்ரம்மசர்யம் அநுஷ்டித்தான் என்று உபநிஷத் சொல்கிறது.

தேவராஜன் இந்த்ரனும் தத்வம் தெரிந்துகொள்வதற்காக விரோசனனுடனேயே ப்ரஜாபதியிடம் போனவன்தான். ஆனால் விரோசனன் மாதிரி சரீரத்தோடு இவன் நின்றுவிடாமல், ப்ருகு கதையில் பார்த்தோமே, அப்படி சரீர ஸெளக்யத்தோடு நிறைவு பெற்றுவிட முடியாமல் மறுபடி ப்ரஜாபதியிடம் வருகிறான். இதற்கு மேற்பட்ட உண்மைக்கு அதன் அர்ஹனாவதற்காக (தகுதியுள்ளவனாவதற்காக) அவர் அவனை மறுபடி முப்பத்திரண்டு வருஷம் அவரோடேயே வஸித்து ப்ரம்மசர்யம் காக்கச் சொல்கிறார். மஹா பெரிய தேவ ராஜாவானாலும் ஸரி, இப்படி கடுமையாக விதிக்கு உட்படுத்தி, அதனாலேயே பெறக்கூடிய பரிசுத்தியை சிஷ்யன் பெறுமாறு பண்ணி அப்புறம்தான் உசந்த தத்வங்களை உபதேசிப்பார்கள். இந்த மாதிரி மொத்தம் நூற்றியரு வருஷம் இந்த்ரன் இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்த பிற்பாடுதான் ப்ரஜாபதி அவனுக்கு முடிவான ஆத்ம தத்வத்தை போதிக்கிறார்.

தகுதி பார்க்காமல் வித்யையைக் கொடுப்பதால்தான் ஸயன்டிஸ்ட்கள் ஆத்ம ஹானிக்கான நூதன நூதனக் கண்டுபிடிப்புகளைப் பண்ணுவது, டாக்டர்கள் மஹா பாபங்களுக்கு ஆதரவு தந்து ஊக்குவதான சிகித்ஸைகள் தருவது என்பதெல்லாம் ஸஹஜமாகி வருகின்றன. இதற்கான அநேக காரணங்களில் ஒன்று, ஸ்தாபன ரீதியில் பல மாணவர்களக்குக் கல்வி புகட்டும்போது, ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கவனம் (Individual attention) செலுத்த முடியாமலிருப்பதுமாகும்.

இப்படிக் கண்குத்திப் பாம்பாகக் கவனிப்பது எத்தனையோ ச்ரமம். இதில் எத்தனையோ பொறுப்பு. "இவன் யாருடா ஓயாமல் நம்மைப் பரீக்ஷை பண்ணி ஹிம்சித்துக் கொண்டிருக்கிறான்" என்று சிஷ்யனின் எரிச்சலை வேறு வாங்கிக்கொள்ளவேண்டும். எந்த விதமான ப்ரதிப்ரயோஜனத்தையும் கருதாமலே, 'வித்யை பரவ வேண்டும், பரவ வேண்டுமென்றாலும் (இப்போது எல்லாவற்றையும் எல்லாருக்கும் அவிழ்த்துக்கொட்டி மதிப்பைக் குறைப்பது போலவும் இல்லாமல்) தக்கவர்களுக்குத்தான் வித்யையைத் தரவேண்டும்; அதற்காக, நிர்தாக்ஷிண்யமாகத் தகுதியைச் சோதித்துப் பார்க்கவேண்டும்; அந்தத் தகுதி என்பது புத்தியைக் குறித்ததாக மட்டுமில்லாமல், மாணவனின் காரெக்டரை, குணத்தைக் குறித்ததாகவுமிருக்கவேண்டும்; முடிந்த மட்டும் தகுதியைப் படிப்படியாக அபிவ்ருத்தி பண்ண ப்ரயாஸைப் படவேண்டும்' என்று ஆதிகால குருமார்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்தக் கண்டிப்புக்கு மஹா பெரிய தேவராஜனும் உடன்பட்டான், ஏன், அஸுர ராஜன் விரோசனன்கூட உடன்பட்டான் என்பது அக்காலத்தில் மாணவர்களுக்கு வித்யையில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது. அதோடு நிற்கவில்லை. 'இவ்வளவு கண்டிப்புச் செய்ய இவர் யோக்யதாம்சமுள்ளவர்தான். இத்தனை யோக்யதாம்சமுள்ளவருக்கு நாம் கீழ்ப்படிந்து போவதில் நமக்கு ச்ரேயஸ்தானே தவிர குறைவு இல்லை' என்று சீடர்கள் நினைக்கும்படியான உத்தம புருஷர்களாக ஆசார்யர்கள் இருந்ததும் இதிலிருந்து தெரிகிறது. இதிலே இன்னொரு முக்யமான அம்சமும் இருக்கிறது. 'உத்தம புருஷர்' என்றால் அப்பழுக்கில்லாத சுத்த வாழ்க்கை, நேர்மை, தபஸ், வைராக்யம் ஆகியவை மட்டும் இருந்தால் போதுமா என்ன? இவை பிறத்தியாரிடம் மரியாதையையும் பக்தியையும் தான் தூண்டும், ஆனால் அவரோடேயே கூட இருந்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று மாணவன் விரும்பும்படியாக இவை மாத்திரம் அவனை அவரிடம் ஆகர்ஷித்துவிடுமா என்ன? தபஸ்வி, மஹாபுத்திமான், கடும் நேர்மையாளர் என்றால் தூர இருந்து நமஸ்காரம் பண்ணத் தோன்றுமே ஒழிய, கூட இருந்து வாஸம் பண்ணுகிற ஆசை ஏற்படாதே! இந்த விருப்பத்தை உண்டாக்குவதற்கு குருவானவர் மற்ற எல்லா யோக்யதாம்சங்களுக்கும் மேலாக அன்பு உள்ளத்தவராக, அருள் ஸ்வபாவமுள்ளவராக இருந்தாக வேண்டும். உத்தம புருஷ லக்ஷணங்களில் முதலாக வருவது இந்த அன்புதான், அருள்தான். அன்பேதான் திவ்ய சக்தியைப் பெற்றுப் பிறரை ரக்ஷிக்க வலிமை பெறுகிற போது அதை அருள் என்றும் அநுக்ரஹம் என்றும் சொல்கிறோம்.