Wednesday, July 1, 2015

Swamimalai Thirupugazh

Courtesy:Smt.Uma Balasubramanian

காகம் உற அருள் மாயன் மருகன்

உமா பாலசுப்பிரமணியன்

அருளாதொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆரிங்கு
பொருளாய் என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக் கூத்தா
மருளார் மனத்தோடு உனைப் பிரிந்து வருந்துவேனை வா என்று உன்
தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ

(மாணிக்கவாசகர்- திருவாசகம்) 


பிரபுடதேவ மாராஜன் காலத்தில்,  தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலையில் திருமுருகன் திருவருளால் அவதரித்த அருணகிரிநாதர், பிணியினாலும்  பலவகையாலும் , வாழ்க்கையை  வெறுத்து , தன் உயிரை  மாய்த்துக் கொள்ள, திருவண்ணாமலை வல்லாள கோபுரத்தின்  மீது ஏறி, கீழேவிழ , முருகனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். இச் செயல் மாணிக்கவாசகர் திருவாசகப் பாடலை நினைவுபடுத்துகிறது.. தன் அன்பன் வருந்தி உயிர் விடாது அவனைத் தாங்கி,  "சும்மா இரு சொல்லற " என அவர் காதில்  ஓதி, பின் மறைந்து, அருணகிரியாரும் நிஷ்டையில்  ஆழ்ந்து போக, பின் முருகன் தோன்றி, "முத்து " என அடியெடுத்துக் கொடுக்க,  "முத்தைத்தரு " பாடல் திருப்புகழுக்கு  முதலாய் விளங்கியது.

பாத பங்கயம் முற்றிட உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
      பாடும் அன்பது செய்ப்பதியில்    தந்தவன் நீயே ------  (கோல குங்கும),

 
என்பதனை மறவாது,  பல தலங்கள் சென்று பாடிய திருப்புகழ் பாடல்கள் எண்ணிக்கையில் பதினாறாயிரம் ஆகும். அவ்வாறு அவர் பாடிய திருப்புகழ்  பாடல்களைப் பற்றி அநேகமாக யாவரும், அறிந்திருப்பர். அங்ஙனம்  திருவேரகம் எனும்  சுவாமிமலைத் தலத்தில் பாடிய   பாடல்  ஒன்றினில் கம்பராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை ஒரே வரியில் அழகாக விளக்கியிருக்கிறார் அருணகிரியார். மேலும் 
 
காலனது நா அரவ வாயிலிடு தேரையென
             காயமருவு ஆவி விழ         அணுகாமுன்
காதலுடன் ஓதும் அடியார்களுடன் ஆடி ஒரு
             கால் முருகவேள் எனவும்     அருள்வாயே ------ (நீலமுகில்)

 
என்று காலனாகிய கூற்றுவன் வாயில் நாம்  அகப்படாமல் இருப்பதற்கு முன் நாம் என்ன செய்தல் வேண்டும்  என்று பாடிய அருணகிரிநாதர், "பாதி மதி"  என்னும் சுவாமிமலைப் பாடலில் எரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்கி வெம் கூற்றன் விடும் கயிற்றால் சுருக்கிட்டு இழுக்காமல் இருக்க முருகனது பாத திருவடியை வழிபட அருளுமாறு  வேண்டுகிறார். எப்பொழுதுமே உறவு முறைகளை விட்டுக் கொடுக்காத அருணகிரிநாதர் சிவனைப் பற்றியும் வள்ளியம்மை பற்றியும், மாமன் பற்றியும் நினைவு கூர்ந்து முருக வேளின் பெருமையைப்பகர்ந்து கொள்கிறார்.  .
 
இப்பொழுது அப்படிப்பட்ட உகந்த பாடலைப் பொருளுடன் காணலாம்.
 
பாதி     மதிநதி    போது  மணிசடை
     நாத       ரருளிய                         குமரேசா
பாகு   கனிமொழி   மாது   குறமகள்
     பாதம்     வருடிய                        மணவாளா
காது   மொருவிழி   காக முற அருள்
     மாய    னரிதிரு                           மருகோனே
கால  னெனையணு  காம    லுனதிரு
    காலில்   வழிபட                                       அருள்வாயே
ஆதி  யயனொடு    தேவர்   சுரருல
    காளும்   வகையுறு                       சிறைமீளா
ஆடு   மயிலினி  லேறி   யமரர்கள்
    சூழ      வரவரு                             மிளையோனே
சூத   மிகவளர்   சோலை  மருவுசு
    வாமி  மலைதனி                          லுறைவோனே
சூர   னுடலற        வாறி    சுவறிட
    வேலை   விடவல                         பெருமாளே

 
பாதிமதி, நதி = பிறைச்சந்திரனையும்.
கங்கைநதியையும்.
போதும் = மலர்களையும். 
அணிசடைநாதர்= அணிந்துள்ளசடையைஉடைய நாதனாகிய சிவ பெருமான்.
அருளிய குமரேசா= அருளிய குமரனே!.
பாகு கனி =சர்க்கரை வெல்லப்பாகு,பழத்தையும் போன்ற
மொழி= மொழிகளை உடைய 
மாது குறமகள்= குறப் பெண்ணாகிய வள்ளியின் 
பாதம்வருடியமணவாளா= பாதங்களைப்பிடித்து  வருடும் கணவனே.
காதும்= பிரிவுசெய்யப்பட்ட.
ஒருவிழி= ஒருவிழியை.
காகம்உறஅருள்= (காகாசுரன்என்னும்)காகம்பெறும்படிஅருளிய.
மாயன்= திருமால் ( ஸ்ரீஇராமன்). 
அரி திரு மருகோனே= அரி, இலக்குமி இவர்களுடைய மருகனே
காலன் எனை அணுகாமல்=  யமன் என்னை அணுகாதபடி 
உனதுஇருகாலில்= உனது இரண்டு திருவடிகளில். 
வழி பட அருள்வாயே= வழி படும் அறிவைத் தந்து அருள்வாயாக.
ஆதி அயனொடு= ஆதிப் பிரமனோடு.
தேவர் சுரர் உலகு= தேவர், தேவலோகத்தை 
ஆளும் வகை உறு=ஆளும் வகையில் 
சிறை மீளா= (அவர்களைச்) சிறையினின்றும் மீட்டு.
ஆடும் மயினில் ஏறி= ஆடுகின்ற மயில் மீது ஏறி
அமரர்கள் சூழ= தேவர்கள் சூழ்ந்து வர 
வரும் இளையோனே= வந்த இளையவனே!
சூதம் மிக வளர்= மா மரங்கள் அதிகமாகவளர்ந்துள்ள 
சோலை மருவு= சோலைகள் பொருந்தியுள்ள 
சுவாமி மலை தனில் உறைவோனே= திருவேரகத்தில் வீற்றிருப்பவனே.
சூரன் உடல் அற= சூரனுடைய உடல் துணி பட.
வாரி= கடல்.
சுவறிட= வற்றிப் போக
வேலை விட வல்லபெருமாளே= வேலாயுதத்தைச்செலுத்தியவல்லமை பொருந்திய பெருமாளே!
எமன் என்னை   அணுகாத வகைக்கு  உன்னுடைய  இரண்டு  திருவடிகளில் வழிபடும்   பேற்றை   அருள்வாயாக!
 இப்பொழுது  விரிவான விளக்க உரையையும் தத்துவத்தையும் பார்ப்போம்.

முருகன் ஒரு தச்சன்

எங்ஙனம் ஸ்ரீ ராமபிரான் ஒருவரைச் சங்காரம் செய்ய வேண்டுமெனில், ஒரு முறையே கணை தொடுப்பது போல, முருகவேளும் ஒருவரை அழிக்க ஒரு முறைதான் வேலாயுதத்தை உபயோகிப்பார். சூரபத்மன் பலப்பல உருவங்களை எடுத்து எம்பெருமானுடன் போர் புரிந்து தோற்று, இறுதியில் அந்தகாரத்தின் சொரூபமாய் நின்றான். தக்க தருணம் பார்த்து முருகப் பெருமான், ஒப்பற்ற ஒளிவீசும் வேலாயுதத்தைஅதன் மீது செலுத்த, அது சென்று தன் ஆற்றல் மிகுந்த ஒளியினால் அந்த மாய இருளை ஒழித்து,  சூர பதுமன் ஒளிந்து கொண்டிருந்த சமுத்திரத்தை வற்றச் செய்து, பின் சூரன் எடுத்த மாமர உருவத்தையும் அழித்தது. பின் அவன் இயல்பான உடலுடன் தோன்றிய பொழுது அவன் உடலையும் பிளந்து இரு கூறுகளாக்கி,  மீண்டும் எம்பெருமானது கரத்தில் வந்து அமர்ந்தது. இவ்வகையான செயலால் முருகனை தச்சன் என்றே கூறலாம். இதை அருணகிரிநாதரும் ஒரு பாடலில் தெரிவிக்கிறார்.

செம்மான் மகளைத் திருடும் திருடன் 
At that moment, Murugan invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the elderly ascetic for protection. 
மாயையில் சிக்கித் தம்மையறிந்து, ஆனால் அடைய வழி தெரியாமல் அலையும் ஜீவனுக்குத் தம்மை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தால், செவ்வேள், தமது பெருமைக்கும் தகாத இழிவான செயல்களையும் செய்யத் தயாராக இருக்கும் உண்மையை, உலகத்தாருக்கு விளக்கும் பொருட்டே எம்பெருமான் தமது மாமன் மகளான சுந்தரவல்லியை தேவ லோகத்திலேயே மணக்காது, அவளை இரக்கமில்லாதவர்களும் இழி தொழிலைச் செய்பவர்களும், மேலும் கொடியவர்களுமான வேடர் குலத்தில் வள்ளியாகப் பிறக்கச்செய்தார், பின் ஜட மாயையினால் அவள் முற்பிறப்பை மறக்கச் செய்து, அவ் வேடர் நெறியிலேயே நின்று ஒழுகி, முருகனை அடையும் மார்க்கத்தை நாடாது வீணே நாட்களைக் கழித்து வருகையில், தம்மை அடைய வேண்டும் என்ற இச்சையை மட்டும் அவள் மனதில் விளைவித்தார். தாம் பற்பல உருவங்களைத் தாங்கி அவள் முன் நின்று, தன் தகுதியையும் பாராது, அவள் பாதங்களில் வீழ்ந்து தனக்கு மனைவியாகும்படி இறைஞ்சியும், அவள் இசையாமல் இருந்தாள். ஞானசொரூபியான தனக்கு மூத்தவரும், புத்தி சொரூபியானவருமான வினாயகக் கடவுளை வள்ளிக்கு முன்னே மத யானையாகத் தோற்றுவித்தார்.

"அத்துயரது கொடு சுப்பிரமணிபடும் அப்புனம் அதனிடை இபமாகி, அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள்" புரிவித்தார் முருனது தமையனான கணபதி.

உலக வாழ்க்கை அனித்தமானது, உலக பசு பாச தொந்தம் அதுவான உறவுகிளை, தாயர், தந்தை, மனை, பாலர் போன்றவர்களாலும் நம்மைக் கூற்றுவன் வாயினின்றும் தப்புவிக்க முடியாது, அவரவர் விதிப்படி மாயையால் அழிந்து போகக்கூடிய தன்மையது, என்ற தத்துவங்களையும் கருத்துக்களையும் வள்ளியின் புத்தியில் புகட்டி, பின் வேறு வழியின்றி மனப்பூர்வமாகத் தம்மைச் சரணடையச் செய்து, அவளுக்குத் தன் சுய உருவத்தைக் காட்டினார், அவளுடைய பழைய வரலாற்றையும் எடுத்துரைத்து, பின் அவளுக்கு ஞானத்தையும் புகட்டினார். வள்ளி தன் குறக் குலத்தை விடமுடியாத காரணத்தால் செம்மான் மகளைத் திருடும் திருடனாகி, அவளைத் திருடிச் சென்று, கிடைத்தற்கரிய பெரு வாழ்வு அளித்தார் எம்பெருமான்.

இது வள்ளியின் புண்ணியமா? அல்லது முருகனின் பேராற்றலா? என்று எண்ணத் தோன்றுகிறது. வள்ளி நாயகியின் பால், மால் மருகன் காட்டிய அன்பு, அவளை மட்டும் குறித்ததன்று, முருகப் பெருமானின் இரு மலர் சரணங்களை அடைய விரும்பும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இது பொருந்தும் என்பதே கந்த புராணத்தின் சாரமாகும் கந்த புராணத்தில் கூறுவது போல், ஜீவர்களாகிய நாமும் இவ்வுண்மையை உணர்ந்து குகனின் பாத தாமரையை வணங்கி. அவன் அருளைப் பெறுதலே நன்மை பயக்கும் நெறியாகும்.

காகத்திடம் மாயன் காட்டிய கருணை

இப்பொழுது காகத்திற்கு இராமபிரான் எங்ஙனம் அருள் புரிந்தார் என்பதை விளக்கமாக அறிவோம். இராமாயணத்தில் வனவாச தொடக்கத்தில், சித்திர கூட பர்வதத்தில், தனிமையான ஓர் இடத்தில்,ஸ்ரீ ராமபிரான் சீதையின் மடி மீது தலையை வைத்துப் படுத்துறங்கினார்.அப்பொழுது ஒரு அரக்கன் (காகாசுரன்) காக்கை வடிவம் கொண்டு, சீதாப் பிராட்டியை தன் அலகினால் கொத்தத் தொடங்கினான். தனது நாயகனுக்கு ஒரு தீங்கும் ஏற்படக் கூடாது என்று எண்ணிய சீதாப்பிராட்டியார் அந்தச் செயலால் ஏற்பட்ட வலியையும் பொறுத்துக் கொண்டாள். ஆனால் குருதி பெருக ஆரம்பித்து அது ஸ்ரீ இராமபிரானின் நெற்றியின் மீது விழுந்தது. அதனால் உறக்கம் கலைந்து, கண்விழித்துப் பார்த்த இராமபிரான், சீதாதேவியின் துயர் கண்டு, தேவியைத் துன்புறுத்திக் கொண்ட காகத்தின் மீது கடுங்கோபம் கொண்டு, அருகிலிருந்த புல் ஒன்றை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தைக் கூறி, அப்புல்லைக் காகத்தின் மீது எறிந்தார்.

இராம பாணம் தன் மீது பாய்வதைக் கண்டு அஞ்சிய காக்கை, அங்குமிங்கும் ஓடி தேவர்களிடம் சென்று தன்னைக் காக்கும்படி வேண்ட, அவர்கள் தங்கள் இயலாமையை வெளியிட்டு, "ஸ்ரீ இராமபிரானைச் சரண்புகுதல்தான் நல்லது" என்று அறிவுரை கூறினர். அதன்படி, ஸ்ரீ ராமபிரானின் பாதங்களில் வீழ்ந்து தன்னை மன்னிக்குமாறு வேண்ட, உலக மாதாவான சீதாப் பிராட்டியும் காகத்தினால் ஏற்பட்ட தன் துன்பத்தை மறந்து காக்கைக்கு அருளுமாறு ஸ்ரீராமனிடம் வேண்டினள். அதன்படி அவர் அதன் கண்களில் ஒன்றையும், காதுகளில் ஒன்றையும் மட்டும் பறித்து விட்டு, பின் உயிர் கொடுத்தருளினார். ஆதலால்தான் காக்கைகளுக்கு ஒரு கண்ணும், ஒரு காதுமே உபயோகத்தில் உள்ளன என்பது விளங்கும்.

அஞ்ஞான இருளைப் போக்கும் வேல்
Velஉலகத்திலுள்ள அஞ்ஞான இருளைப் போக்கவே அவதரித்த முருகப் பெருமானின் கையில் ஏந்திய வேலாயுதத்தின் மகிமை இப்பாடலில் குறிப்பாய்க் கூறப்பட்டிருக்கிறது. அகங்காரமே குடி கொண்டிருந்த சூரபதுமன் பல உருவங்களை எடுத்து முருகனுடன் போர் புரிய முடியாது போனதால் அஞ் ஞானத்தின் உருவமான அந்தகாரச் சொரூபத்தைக் கொள்ள, எம்பெருமான் ஆயிரம் உதயசூரியனின் ஒளி வீசும் வேலாயுத்தை அவன் மீது வீச, அது அந்த அந்தகாரத்தை நீக்கி, அவன் எடுத்துக் கொண்ட மாமர உருவத்தைப் பிளந்து, பின் அவன் தன் சுய உருவோடு வந்தபோது அதையும் இரு கூறுகளாக்கி, மீண்டும் எம்பெருமானிடமே திரும்பி வந்து சேர்ந்ததை நோக்கினால், ஓர் அஞ்ஞானத்தை அழிக்க முருகவேள் ஒருமுறையேயன்றி, பலமுறை பிரயோகிப்பதில்லை என்னும் உண்மையும் விளங்கும்.

அறக் கருணையும், மறக்கருணையும் என்ன என்பது புரிந்திட்டு, அதனை அருளும் முருகனின் பொருள் பொதிந்த திருப்புகழ் பாடல்களைப் பாடி, நமை காலன் அணுகாதவாறு முருகனின் திருவடிகளை வாழ்த்தி வழிபட்டு, துயரங்களை அகற்றுவோம்! வாழ்க முருகன் திருநாமம்! வளர்க அவன் புகழ்!