Thursday, July 23, 2015

Piratti kataksham

courtesy:Smt.Indra Srinivasan

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 21

இலங்கையை விட்டுக் கிளம்பும் முன் ராமர், சீதைக்கு லங்காபுரியை சுற்றிக்காட்டுகிறார்.

""சீதா! இந்த இடத்தில் தான் கும்பகர்ணன் அழிந்தான், இங்கு தான் ராவணனைக் கொன்றேன், இங்கே தான், இந்திரஜித்தைலட்சுமணன் முடித்தான்...'' என்றவர், ""சரி...இந்த லங்கையை ஒருமுறை உன் கண்களால் பார்,'' என்றார்.

""அதைத்தானே இத்தனை நாளும் செய்து கொண்டிருந்தேன். இவ்வளவு காலமும் இங்கே தானே இருந்தேன்,'' என்றாள் பிராட்டி.

""நீ இங்கே இருந்ததும் உண்மை, பார்த்ததும் உண்மை. ஆனால், அது கோபப்பார்வை. இப்போது குளிரப் பார்.

ஏனெனில், நம் பிள்ளை விபீஷணன், இனி இந்த தேசத்தை ஆளப்போகிறான். உன் கடாட்சம் இருந்தால் தான், அவனால் சிறப்பாக ராஜ்யத்தை நடத்த முடியும்,'' என்றார்.

உடனே பிராட்டி, தனது மனதிலுள்ள மங்கள எண்ணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, லங்கையை குளிரக் கடாட்சித்தாள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

சுக்ரீவன் விஷயத்தில், பிராட்டி கடாட்சித்தது போலவே தெரியவில்லையே என்று சந்தேகப் படுவோர் உண்டு.

இந்த சந்தேகம் பிராட்டிக்கே வந்து விட்டதாம். அவள் அனுமானிடம், ""குரங்குகளுக்கும் மனுஷர்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது?'' என்று கேட்டாளாம்.

அதாவது, தனது அனுக்கிரகம் இல்லாமல், ராமபிரானின் அனுக்கிரகத்தை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது அவளது சந்தேகத்திற்கான காரணம்.

அனுமான் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

""தாயே! தங்கள் அனுக்கிரகம் இல்லாமல், நாங்கள் எப்படி பெருமானின் கடாட்சத்தை அடைய முடியும்.

தாங்கள், ராவணனால் ஆகாச மார்க்கமாக கடத்தப்பட்ட போது, உங்கள் ஆபரணங்களை மூடையாகக் கட்டி கீழே போட்டீர்கள் இல்லையா?

நாங்கள் ரிஷ்யசிருங்க மலையில் இருந்த போது, எங்கள் கையில் தானே அவை கிடைத்தன.

அந்த ஆபரணங்கள் வழியாக தங்கள் கடாட்சம் கிடைத்த பிறகு தானே, ராமபிரானின் அனுக்கிகரம் கிடைத்தது.

தங்கள் சம்பந்தமின்றி, அவர் அனுக்கிரகம் எங்களுக்கு எப்படி கிடைக்க முடியும்?'' என்று பதிலளித்தார்.

சீதாபிராட்டி கடத்தப்பட்டதில் இன்னொரு ஆனந்தமான விஷயம்.

எல்லாரும் ராமனைச் சரணடைந்தார்கள். ஒரு ராட்சதனையும் சரணாகதம் ஆக்கத்தான் ராமனே லங்கை வந்தார். அதற்காகத் தான் சீதாபிராட்டியும் லங்கை சென்றதே!

பிள்ளை லோகாச்சாரியார் என்ன சாதிக்கிறார் (சொல்கிறார்) தெரியுமா?

பிராட்டியின் சக்தி என்னவென்று தெரியாதவர்கள் தான், ராவண பலாத்காரத்தால் தான், சீதாபிராட்டி கடத்தப்பட்டாள் என நினைப்பார்கள்.

ஆனால், ராட்சதனையும் சரணாகதி அடையச்செய்ய, சீதாபிராட்டி உருவாக்கிக் கொண்ட சந்தர்ப்பமே அது,'' என்கிறார்.

பிராட்டியின் சக்தி அபரிமிதமானது. அவள் தான் ராவணனையும் கட்டி தூக்கிச்சென்றாளே தவிர, அவன் அவளைத் தூக்கிச் செல்லவில்லை.

அவள் ஏன் சிறைப்பட்டாள்? தான் உள்ளே போனால் தான் மற்றவர்களுடைய சிறையை அறுத்து விட முடியும் என்பதால் தான்!

அவள் சிறைப்பட்டால் தான், தேவஸ்திரீகளின் சிறையை வெட்டி விட முடியும்!

அது மட்டுமா! சம்சாரிகள் இந்த ராவணனால் படும் துன்பத்தில் இருந்து தீர்த்து விட முடியும். அதற்காகத்தான் சீதை வலியப் போனாள்.

ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். அவனைத் தூக்கிவிட, ஓரளவு ஆழத்துக்கு வேண்டுமானால் கயிறைக் கட்டி தூக்க முயற்சிக்கலாம்.

ஆழம் அதிகமென்றால், உள்ளே குதித்து தான், கிணற்றுக்குள் கிடப்பவனை மீட்டு வர முடியும். சீதாதேவி அதைத் தான் செய்தாள். அவளைப் பற்றினால் தான் பிறகு அவனைப் பற்ற முடியும்.

பெருமானின் குணங்கள் பல. அதை எண்ணி முடிக்க முடியாது. அவரது கல்யாண குணங்கள் பற்றி, நான் ஒன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அவரது குணங்கள் அவ்வளவு தான் என்றில்லை.

அவரது குணங்கள் பற்றி என் நாக்கிற்கு அந்தளவு தான் பேசும் சக்தி இருக்கிறது!

நம்மாழ்வார் பெருமானைப் பற்றி 1202 பாடல்கள் பாடினார். அதற்காக அவர் பாடிய அளவுக்கு தான் அவரது குணங்கள் என்றில்லை! அவருக்கு அந்தளவு தான் சக்திஇருக்கிறது.

பெருமாளை "பராபரன்' என்பார்கள். "பர' என்றால் "மேன்மைக்கெல்லாம் எல்லை'. "அபர' என்றால் "எளிமைக்கெல்லாம் எல்லை'.

அவரது குணங்களை மேன்மை, எளிமை என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிக்கலாம்.

ஆனால், இதில் "பரத்வம்' எனப்படும் மேன்மை குணம் தான் அவரிடம் அநேகமாக பிரகாசிக்கும்.

எளிமையை அவரது ஸ்வாதந்திரமும் (சுதந்திரம்) கோபமும் அநேகமாக மூடியிருக்கும். இதை "நெருப்பு கிளர்ந்தாற் போல்' என்பர்.

தணல் "தக தக' என எரியும். ஆனால், மேலே சாம்பல் மூடியிருக்கும். சாம்பலைத் தட்டினால் தான் தணலின் தகதகப்பு தெரியும்.

அதுபோல, பெருமாளிடம் நிறைய குணங்கள் உண்டு. பக்தனை ரட்சிக்க அபரிமிதமான குணங்கள் உண்டு. ஆனால், அது சாம்பல் மூடிய தணல் போல காணப்படும்.

தாய்மார்களிடம் கேட்டால் தெரியும். சின்னகோலைவைத்து சாம்பலைத் தட்டினால் தணலின் தகதகப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

(இப்போது இது மாதிரி தணல் விஷயங்கள், நம் ஸ்திரீகளுக்கு தெரியுமா தெரியாதா என்று கேட்டு விட வேண்டாம்).

பெரியவர்கள் தங்கள் நாளில் பார்த்ததை வைத்து தான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

பிராட்டி அந்த சாம்பலைத் தட்டுகிறாள். உடனே பெருமானின் கல்யாண குணங்கள் பொத்துக்கொண்டு வெளியே கிளம்புகின்றன. இதுவரையும் நீங்கள் பெருமானைச் சேவித்தீர்கள்.

பிராட்டியை சேவித்தபிறகு பெருமானிடம் போனால், இன்னும் அதிகமாக அவரது குணம் பிரகாசிக்கும். "மாமாயன் மாதவன் வைகுந்தன்' என்று பாடுகிறாள் ஆண்டாள்.

இதில் மாமாயனும் வைகுந்தனும் பெருமாள். நடுவில் இருக்கும் மாதவத்துவமே பிராட்டி.

அதனால் தான், இதை நடுவில் போட்டு எழுதினாள் ஆண்டாள். பிராட்டியின் சம்பந்தம் இருந்தால் தான் அவனே மாமாயன், வைகுந்தனாக முடியும்.

Indra Srinivasan's photo.


No comments:

Post a Comment