Sunday, June 14, 2015

Thaayumanavar

Courtesy:Sri.GS.Dattatreyan

சுகப்பிரசவம் நிகழ்ந்திட...தாயுமானவர்!

உலக உயிர்களுக்கு தந்தையாகிய சிவபெருமான், ஒரு பெண் சுகப்பிரசவம் பெற்றிடத் தாயாகவே மாறினார். இந்த அதிசயம் திருச்சியில் நிகழ்ந்தது. திருச்சி மலைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சிவனின் திருநாமம் "தாயுமானவர்!'

அந்தத் தாயுமானவர் அருளால் பிறந்த குழந்தைக்கு, நாகை மாவட்டம், திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தைச் சேர்ந்த கேடிலியப்ப பிள்ளை - கெஜவல்லி அம்மையார் தம்பதியர், தாயுமானவர் என்ற பெயரே வைத்தனர்.

இளமையிலேயே புத்தி கூர்மைமிக்க தாயுமானவர் ஆன்மிக நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

தத்துவ நுட்பம் செறிந்த "பராபரக்கண்ணி' என்ற அற்புதப் பாடல்களைப் பாடினார்.

தாயுமானவரின் திருப்பாடல் திரட்டு 1452 பாடல்களைக் கொண்டது. மொத்தம் 771 கண்ணிகள் "தத்துவ பேழை' என்றே கூறலாம்.

உலகில் எந்த உயிரும் துன்பம் பெறக்கூடாது; எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற நோக்குடைய தாயுமானவர், "

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே'' எனப்பாடினார்.

"அன்பே சிவம்! அன்பே இறைவன்! என்ற நோக்கோடுதான் தாயுமானவர் பராபரக் கண்ணியைப் படைத்தார். இறைவனை "அன்பர்' என்றே குறிப்பிடுவார் தாயுமானவர்.

"அன்பர் பணி செய்ய என்னை

ஆளாக்கி விட்டு விட்டாய்

இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!''

என்பார் தாயுமானவர். "அன்பர்' என்ற சொல்லுக்கு இறைவன் மீது அன்பு வைத்த தொண்டர் என்ற பொருளும் உண்டு.

இறையடியார்களுக்குச் செய்யும் தொண்டு, இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்பார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். இதனை, "கிளைத் தபால் நிலையத்தில் போகும் கடிதம், தலைமைத் தபால் நிலையத்திற்கு வந்து சேர்தல் போல, இறைவனுக்குச் செய்யும் தொண்டு இறைவனையே சென்று அடையும்' என்றார்.

அன்பின் விரிவான விளக்கமே அருள். அருளாளர்கள் மொழி மந்திரம் போன்றது. அருள் ததும்பும் மிகச் சிறந்த அருளாளர் என்பதைக் கோடிட்டுக் காட்டும்.

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் ஆலயம் மற்றும் மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளது.

இந்த கோயில்கள், மகேந்திரவர்மப் பல்லவன் காலத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது.

இங்கு சுகப்பிரசவம் நிகழ்ந்திட, வாழைத்தார்களைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் இருக்கிறது. அப்பர், ஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.

மேலும் பிள்ளையார்பட்டி போலவே 10 நாள்கள் பிள்ளையார் சதுர்த்தி விழா மாணிக்க விநாயகர் ஆலயத்திலும் நிகழ்கிறது.

தாயுமானவரின் அருள்கனிந்த பாடல்கள் சமுதாய மேம்பாட்டுக்கு உறுதுணையான "தத்துவப் பேழை' என்றே சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment