Wednesday, June 17, 2015

Manickavasagar charitram

Courtesy:Sri.GS.Dattatreyan

சிவபெருமான் ஆசிபெற்ற மாணிக்கவாசகர்

மதுரையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாதவூர் என்ற திருத்தலம். இங்கு வாதபுரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் வாழ்ந்த சிவ பக்தரான சம்புபாதா சிருதருக்கும், அவரது மனைவி சிவஞான வதிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அவர்கள் திருவாதவூரர் என்று பெயர் சூட்டி, பக்தி மார்க்கத்தில் வளர்த்து வந்தனர்.

திருவாதவூரருக்கு வயது ஏற, ஏற கலை ஞானங்களும் வளர்ந்தன. 16 வயதில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப்பெற்றார். அவரது திறனைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

அந்த காலத்தில் அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தான். திருவாதவூரரின் அறிவுத்திறனைக் கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன், அவரைத் தனது அவைக்கு அழைத்து பேசினான். அப்போது திருவாதவூரரின் அறிவு நலனைக் கண்டு வியந்து, 'தென்னவன் பிரம ராயன்' என்ற பட்டத்தை வழங்கினான். மேலும் தனது அரசவையின் முதன்மை அமைச்சராக திருவாதவூரரை அமர்த்திக் கொண்டான். வாதவூரரும், அரிமர்த்தன பாண்டியனுக்குக் கண்ணும், கவசமுமாக விளங்கி வந்தார்.

வாதவூரர் தமக்குக் கிடைத்த அமைச்சுரிமைத் தகுதியால் உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சி அடையவில்லை. உலக வாழ்வும் வாழ்வில் காணும் பெரும் போகமும் நிலையற்றவை என்றறிந்தமையால், அப்பதவியில் அவருக்கு உவர்ப்புத் தோன்றியது.

இந்த நிலையில் தனது அரச படைக்கு குதிரைகள் வாங்க அரிமர்த்தன பாண்டியன் எண்ணினான். அதற்காக திருவாதவூரரிடம், 'நம்முடைய கருவூலத்திலிருந்து வேண்டிய பொருட்களை எடுத்துச் சென்று, நல்ல குதிரைகளை வாங்கி வாருங்கள்' என்று கட்டளையிட்டான்.

வாதவூரரும் அக்கட்டளையை ஏற்று, பொன் பொருட்களை எடுத்துக் கொண்டு, படையினர் சிலர் சூழ்ந்து வர மதுரையை விட்டு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மதுரை சொக்கநாதரை வழிபட்டார். பல மைல் தூரம் கடந்து திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தை அடைந்தார். அவ்வூரை நெருங்க, நெருங்க திருவாதவூரருக்கு, மனதில் சுமை ஏதோ குறைந்து வருவது போல் தோன்றியது. 'இத்தலமே இறைவன் என்னை ஆட்கொள்ளும் இடம் போலும்' என்று அவர் உணர்ந்தார்.

அப்போது எங்கிருந்தோ, சிவநாம முழக்கம் கேட்டது. அந்த திசை நோக்கிச் சென்றார். ஓரிடத்தில் குருந்த மரத்தடியில் சீடர்கள் சிலருக்கு, குரு ஒருவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார். சிவபெருமானே தனது திருவிளையாடலுக்காக குருவாக எழுந்தருளியிருந்தார். சிவகணங்களே அவரது சீடர்களாக அங்கு வீற்றிருந்தார்கள்.

குருவின் அருகில் சென்ற திருவாதவூரர், அப்படியே அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்தார். 'ஐயனே! எளியோனை ஆட்கொண்டருள வேண்டும்' என்று வேண்டினார். வாதவூரரின் பரிதாப நிலையைக் கண்ட குருநாதர், அவரை ஆட்கொண்டு உபதேசம் செய்தருளினார்.

திருவாதவூரர் தனது குருவை சொல் மாலைகளால் புகழாரம் சூட்டினார். இதையடுத்து அவருக்கு, குருவானவர் 'மாணிக்கவாசகன்' என்ற பெயரை அளித்தார்.

இதையடுத்து மாணிக்கவாசகர், தான் குதிரை வாங்குவதற்காக கொண்டு வந்திருந்த பொன்னை எல்லாம், குருநாதருக்கு சமர்ப்பித்தார். ஆனால் குருவோ, இதனை ஆன்மிகப் பணிகளுக்கு செலவிடுமாறு தெரிவித்ததால், பல காலம் அங்கேயே தங்கியிருந்து திருப்பணிகளைச் செய்தார். கொண்டு வந்த பொன் அனைத்தும் கரைந்து போனது. இதனைக் கண்ட படைவீரர்கள், 'அமைச்சரே! நாம் குதிரை வாங்கிக்கொண்டு மதுரை செல்ல வேண்டும்' என்று நினைவூட்டினர். ஆனால் எதுவும் கேளாதவராய் இறை வழிபாட்டில் மூழ்கி இருந்தார் மாணிக்கவாசகர்.

படைவீரர்கள் அனைவரும் மதுரை மாநகருக்கு விரைந்து சென்று நடந்த அனைத்தையும் மன்னனுக்கு தெரிவித்தனர். கடும் கோபம் கொண்டான் அரிமர்த்தன பாண்டியன். உடனடியாக திருவாதவூரரை அழைத்து வரும்படி ஓலை எழுதி படைவீரர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் நேராக திருவாதவூரரிடம் வந்து அதனைக் கொடுத்தனர்.

ஓலையைக் கண்டதும் தான் சுய நினைவு வந்ததுபோல் அதிர்ந்து போனார் மாணிக்கவாசகர். குருநாதரிடம் சென்று முறையிட்டார். குருவோ, 'ஆவணி மூலம் அன்று குதிரைகள் வரும்' என்று மன்னனிடம் அறிவிக்கும்படி கூறினார். மாணிக்கவாசகரும் மதுரைக்கு புறப்பட்டுச் சென்று, குருநாதர் கூறியது போலவே மன்னனிடம் சொன்னார். மகிழ்ச்சி அடைந்த மன்னன் திருவாதவூரரை நல்லமுறையில் கவனித்தான்.

ஆவணி மூல நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதற்கான அறிகுறியே தென் படவில்லை. படைவீரர்களில் சிலரும், திருவாதவூரர் கூறியது பொய். அவர் கொண்டு சென்ற பொன்னை எல்லாம் கோவில் திருப்பணிக்கு செலவிட்டு விட்டார் என்று மன்னனிடம் எடுத்துரைத்தனர். அது உண்மைதானா என்று கண்டறிந்து வரும்படி, தன் தலைமை படைவீரனுக்கு மன்னன் உத்தரவிட்டான். அவனும் விசாரித்து வந்து உண்மைதான் என்பதை தெளிவுபடுத்தினான்.

இதனால் மேலும் சினம் கொண்ட அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன் புறுத்தினான். பெரும் துயரம் அடைந்த மாணிக்கவாசகர், இறைவனிடம் வேண்டினார். தன் பக்தனின் நிலையை உணர்ந்த இறைவன், நரிகளை எல்லாம் குதிரைகளாக மாற்றிக் கொண்டு தேவர்களை, குதிரை வீரர்களாக்கி மதுரை நோக்கி வந்தார்.

மன்னனிடம் அந்த குதிரைகளைக் கொடுத்தார். மகிழ்ச்சி அடைந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் இருந்து விடுவித்து, அவரிடம் மன்னிப்பும் கோரினான்.

ஆனால் அன்று இரவு குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி, அரசவையில் மீதமிருந்த குதிரைகளை எல்லாம் குடித்து குதறிவிட்டு தப்பி ஓடிவிட்டன. இதை யறிந்த மன்னன் கோபம் அடைந்தான். அவன் மாணிக்கவாசகரை, சுடுமணலில் கொண்டு போய் நிறுத்த ஆணையிட்டார். படைவீரர்களும் அவ்வாறே செய்தனர்.

பக்தனின் துன்பத்தை அறிந்த இறைவன், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். வெள்ளம் கரைபுரண்டு ஓடி மதுரையை சூழ்ந்துகொண்டது. மக்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது என்று உணர்ந்த அரிமர்த்தன பாண்டியன், அவரிடம் சென்று, மதுரை மாநகரை வெள்ளத்தின் அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டினார். வாதவூரரும் இறைவனை தொழுதார். அதனால் வெள்ளத்தின் சீற்றம் தணிந்ததே தவிர, வெள்ளம் முற்றிலும் குறையவில்லை.

அதனைக் கண்ட பாண்டியன் ஆற்றின் கரையைப் பலப்படுத்த வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று உத்தரவிட்டான். அதன்படி அனைத்து வீடுகளில் இருந்து ஒருவர் சென்று ஆற்றின் கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும் மூதாட்டி, தனக்கு அளித்த ஆற்றின் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும் ஆண்டவனிடம் அன்பு செலுத்தி வந்த வந்தியின் துன்பத்தைத் தவிர்க்க இறைவன் அவளிடம் கூலி ஆள் போலத் தோன்றினார். அதற்கு கூலியாக அவளிடம் இருந்து பிட்டை வாங்கி சாப்பிட்டார். பின் பணிக்கு சென்றார். ஆனால் பணியை சரியாக செய்யாமல், ஒரு ஓரமாக படுத்து தூங்குவதும், ஆடிப்பாடி கூத்தடிப்பதுமாக பொழுதை கழித்தார் இறைவன்.

ஆற்றின் கரை அடைபட்டதா என காண வந்த மன்னன், ஒரு கரை மட்டும் அடைபடாமல் இருப்பதை கண்டு ஆத்திரம் கொண்டான். அது யாருடைய பங்கு என்று விசாரித்ததில், வந்திக்காக வேலை செய்ய வந்த ஆள், சரியாக வேலை செய்யவில்லை என்று மன்னனிடம் கூறப்பட்டது. தான் வைத்திருந்த பிரம்பால், கூலியாள் வேடத்தில் இருந்த இறைவனை அடித்தான் அரிமர்த்தன பாண்டியன். அப்போது அந்த அடி, மன்னன், அமைச்சர்கள், படைவீரர்கள், உலக உயிர்கள் அனைத்தின் மீது விழுந்தது. கூலியாளாக வந்த இறைவன், ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டினார். வெள்ளம் அப்படியே நின்றுவிட்டது. அவர் அங்கிருந்து மறைந்தார்.

மாணிக்கவாசகருக்காக, இறைவனே நேரில் வந்தது கண்டு மன்னனும், மக்களும் ஆச்சரியம் கொண்டனர். மாணிக்கவாசகரை மனமுவந்து வணங்கி நின்றனர். இறைவனின் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்த மாணிக்கவாசகர், அமைச்சர் பதவியை துறந்து, தவம் வேடம் தாங்கி திருப்பெருந்துறை தலத்திற்கு சென்றடைந்தார்.

திருவாசகம் எழுதிய இறைவன்

மாணிக்கவாசகர் தனது இறுதி காலத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு முறை அவரைப் பார்க்க அந்தணர் உருவில் வந்தார் சிவபெருமான். மாணிக்கவாசகரிடம், இதுவரை அவர் பாடிய பாடல்களை தனக்கு சொல்லி அருளும்படி வேண்டினார். மாணிக்கவாசகரும் அந்தணரை அருகில் இருத்தி, தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்தார்.

பின்னர் திருக்கோவை என்ற நூல் பாடலையும் பாடச் சொல்லிக் கேட்டு, அதனையும் தன் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதைக் கண்ட மாணிக்கவாசகர், வந்தது சிவபெருமானே என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்க இறைவனை துதித்தார்.

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன், அந்த நூல்களை உலகறியச் செய்வதற்காக, நூலின் முடிவில், 'திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து' என கையொப்பம் இட்டு தில்லைச் சிற்றம்பலத்தில் வாசல் படியில் வைத்தருளினார்.