Tuesday, May 19, 2015

Paanaka narasimhar

http://murpriya.blogspot.in/2014/12/blog-post_8.html

அதிகாலை. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய வேளை. மணி நான்கு. பிரிய மனமில்லாமல் மட்டபல்லி நாதன் இருக்கும் திசை நோக்கி வணங்கிய பின் வேதாத்ரி நோக்கிப் பயணம் தொடங்கியது. வேதாத்ரி மற்றும் மங்களகிரி தல விசேஷத்தை முக்கூர் லஷ்மி நரசிம்மாசாரியாரின் விளக்கம் மூலம் அறிதல் தெளிவு.

"வேதாத்ரியிலே உள்ள எம்பெருமானுக்கு யோகானந்தன் என்று பெயர். கிருஷ்ணா நதி தீரத்திலே பெரிய சாளக்கிராம மூர்த்தியாக அவன் காட்சியளிக்கிறான். உள்ளுக்குள்ளே அழகாக அமர்ந்திருக்கிறான். அவனது இடையிலே ஒரு கத்தி வைத்திருக்கிறான். இந்த யோகானந்த நரசிம்ஹனை ஸேவிக்கப் போனால் அந்தக் கத்தியை எடுத்துக் கையிலே கொடுப்பார்கள். அதை வாங்கிப் பார்க்கலாம். பகவானே பெரிய வைத்தியன் என்கிறது வேதம். முதல் வைத்தியன் அவன். மருந்தாகவும் இருக்கிறான்; மருத்துவனாகவும் அவனே இருக்கிறான். இங்கே கத்தி வைத்துக் கொண்டிருக்கிற எம்பெருமான் பெரிய `சர்ஜன்`; `ஆபரேஷன்` பண்ணுவதிலே திறமை மிக்கவன்."
"ஆரோக்கியத்தைக் கொடுக்கும்படியான எம்பெருமான் அங்கே வேதாத்ரியிலே எழுந்தருளி யிருக்கிறான். இப்போதும் எத்தனையோ பேர் அங்கே வேண்டிக்கொண்டு பிரதஷிணம் பண்ணிக் கொண்டிருக் கிறார்கள். வேதாத்ரியிலே நூறாவது யக்ஞம் நடந்தது. "ஆரண மலைவாழ் ஆளரியே—உனை காரணம் என நான் இனி அறிந்தேன்" என்ற பாடலானது, அங்கே வேதாத்ரியிலே இருந்தபோதுதான் அடியேன் வாக்கில் வந்தது. ஆரணமலை என்று வேதாத்ரிக்கு ஒரு பெயர்."

கிருஷ்ணா நதியில்
வேதாத்ரி கோயிலில் இருந்து, பல படிகள் இறங்கிப் போனால் கிருஷ்ணா நதி நீர் சிலுசிலு என்று காலைத் தழுவிச் செல்கிறது. இளஞ்சூரியக் கதிர்கள் நதி நீரில் பட்டு வைரமாய் ஜொலிக்கின்றன. அங்கே ஒரு பெரிய பாறை மீது திருமண் இட்டுடிருக்கிறார்கள். அதுவும் நரசிம்மனே என்று கூறும் பக்தர்கள் புனிதம் கருதி அதனை நோக்கி நீரில் நீந்திச் செல்வதில்லை.
இங்கு நீரில் நரசிம்மன், சமதளத்தில் நரசிம்மன், குன்றின் மீது நரசிம்மன் என்று எங்கெங்கு நோக்கினும் நரசிம்மர்கள். கிருஷ்ணாவின் ஈரப்பதத்தைச் சுமந்து வந்த காற்றை அனுபவித்தபடி, மங்களகிரி பயணம். மலை மீது உள்ள கோயிலின் அருகேயே காரில் செல்ல முடிகிறது. அங்கிருந்து பார்த்தால் விஜயவாடா நகரம் முழுமையாகத் தெரிகிறது. துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்து ஐந்து திரிகள் இருப்பதாகவும், ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த மங்களகிரி நரசிம்மனைக் குறித்து முக்கூர் சுவாமிகள் வாக்கில் அனுபவிக்கலாம்:
"மங்களகிரி நரசிம்ஹன்தான் முதன்முதலில் யக்ஞம் பண்ணும்படி அடியேனை ஆக்ஞாபித்தான். அந்த ஆக்ஞைப்படி ஆஸ்திக சமாஜத்தில் முதல் யக்ஞம் நடந்தது. மங்களகிரி ஷேத்திரத்து எம்பெருமானும் கிருத யுகத்திலேயிருந்து இருக்கும்படியான எம்பெருமான் அவனுக்குப் பாலையே அந்த யுகத்தில் நைவேத்யம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திரேதா யுகத்தில் இஷூசாரம் (கரும்புச் சாறு). துவாபர யுகத்திலே தேன். இந்த யுகத்திலே கற்கண்டுப்பானகமும் வெல்லப்பானகமும் நிவேதனம்.





அந்த எம்பெருமான் இருக்கிறானே, அவன் பாதியைச் சாப்பிடுவான்; பாதியை நமக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்படியொரு சக்தி. மலை மேலே ஜலம் கிடையாது. கீழேயிருந்துதான் காவடியிலே எடுத்துக் கொண்டு போக வேண்டும். அங்கே மேலே, பானகம் தயார் பண்ணக்கூடிய பெரிய கல் இருக்கிறது அந்தக் கல்லில் வைத்து வெல்லத்தை உடைப்பார்கள்.
அதை எடுத்து ஒரு கங்காளத்திலே கரைத்து, வழிய வழிய பகவானுக்கு நிவேதனம் பண்ணுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்…
ஒரு சங்கிலே பானகத்தை எடுத்து, வைகானச ஆகம ரீதியாய், புருஷசூக்தத்தைச் சொல்லி, அந்த நரசிம்ஹனின் `அலைத்த பேழ் வாயிலே' சேர்க்கிறார் பட்டர்… அப்படிச் சேர்க்கிற பானகம் உள்ளே போய்க் கொண்டேயிருக்கும். கங்காளத்தில் பாதி ஆனவுடனேயே கலகலவென்று சப்தம் வரும். நரசிம்ஹன் பாதி பானகத்தை ஸ்வீகரிப்பான். அதன் பிறகு உள்ளே செல்லாமல் வெளியிலே வரும். அப்படி வருவதை சேஷமாக சங்கத்திலே எடுத்து, நம்மிடம் பிரசாதமாகக் கொடுத்துவிடுவார்கள்.
சின்னஞ்சிறு குடத்திலே நைவேத்யம் கரைத்து வைத்தாலும் பாதி; பெரிய கங்காளத்திலே நிவேதனம் பண்ணினாலும் பாதிதான் ஸ்வீகரிப்பான் எம்பெருமான்.
"அர்தம் தாஸ்யாமி! பாதி கொடுக்கிறேன்; பாதி நான் எடுத்துக் கொள்கிறேன்" என்கிறான் பரமாத்மா. இன்றளவும் பானக சகதியாக இருக்கும்படியான அந்த இடத்திலே ஒரு ஈ எறும்பு கூட வராது. ஆகையினாலே பகவானுக்குப் பண்ண வேண்டிய பானகத்தில் ஒரு ஈ - எறும்பு இருக்காது. ஆனால், நிவேதனம் பண்ணி எடுத்து வந்த பிற்பாடு அதிலே ஈ – எறும்பு மொய்க்கும்! சாமானிய ஜந்துக்களெல்லாம் கூட " இது நிவேதனம் பண்ணிய பதார்த்தம்; இது நிவேதனம் பண்ணாதது" என்று ஈடுபடுகிற ஒரு ஷேத்திரம் இந்த மங்களகிரி."
" அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்பட மங்களகிரி நரசிம்ஹனை தியானம் பண்ணவேண்டும். அடுத்து, பிராணமய கோசத்தில் சுத்தி ஏற்பட வேதாத்ரி நரசிம்ஹனை தியானம் பண்ண வேண்டும். மனோமய கோசத்தில் சுத்தி முக்கூர் ஏற்பட மட்டபல்லி லஷ்மி நரசிம்ஹனை தியானம் பண்ண வேண்டும். விஞ்ஞான மயகோசத்தில் சுத்தி உண்டாக வாடபல்லி லஷ்மி நரசிம்மனைத் தியானம் பண்ண வேண்டும். ஆனந்த மயகோசத்தில் சுத்தி பெற கேதவரம் லஷ்மி நரசிம்ஹனைத் தியானம் பண்ண வேண்டும்.
இந்த ஐந்து ஷேத்திரங்களிலும் நரசிம்ஹனைத் தியானம் பண்ண, இந்த ஐந்து நிலைகளிலும் சுத்தி ஏற்படும்; தெளிந்த ஞானம் பிறக்கும். பகவானை அனுபவிக்கும்படியான நிலையை நாம் அடைவோம்" என்று முக்கூர் லஷ்மி நரசிம்மாசாரியார் உபன்யாசத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட குறையொன்றுமில்லை என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவேதனம் செய்யப்பட்ட பானகத்தை விநியோகிக்கும் இடத்தில் ஈ, எறும்புகளுடன் பக்தர்கள் கூட்டமும் மொய்த்தது. எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் பிரசாதத்தை அவன் அருளைப் போலவே அள்ளி அள்ளித் தருகிறார்கள்.
பஞ்ச நரசிம்ம சேஷத்திரப் பயணம் அருள் மிகுந்த இனிப்புப் பிரசாதத்துடன் நிறைவு பெற்றது.
(நிறைவுற்றது)

Source:  The Hindu (tamil)




MANGALAGIRI PANAGA NARASIMHAR

MANGALAGIRI LAKSHMI NARASIMHAR

No comments:

Post a Comment