Tuesday, May 19, 2015

Before sleeping -Periyavaa

Courtesy:Sri.Poova Raghavan Iyengar

பரமாச்சாரியார், காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி நிறைய அடியவர்கள் குழுமியிருந்தார்கள். பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அவரின் தெய்வீகப் பொலிவு நிறைந்த திருமுகத்தை மீண்டும் மீண்டும் தரிசிப்பதில் எல்லாருக்கும் ஓர் ஆனந்தம். 

சிலர் அவரிடம் வாய்விட்டுத் தங்கள் குறைகளைச் சொன்னார்கள். சிலர் மனத்தாலேயே அவரிடம் முறையிட்டார்கள். வேறு சிலர் உங்களையே தரிசித்தபின் எங்களுக்கேது குறை என்பது போல் நிம்மதியாய் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது ஓர் அடியவர் பரமாச்சாரியாரிடம் உரிமையோடு கேட்டார்.
பரமாச்சாரியார் தன் பக்தர்களின் வினாக்களுக்கெல்லாம் மிகுந்த பொறுப்போடு பதில் சொல்கிறவர் தானே! 
தம்முடைய இந்த வினாவுக்கும் கட்டாயம் பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்போடு கேட்டார்:
""சுவாமி! வெளிநாட்டைச் சேர்ந்தவரான பால்பிரண்டனுக்கு, அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்றுவெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! 

அது பரமாச்சாரியாரின் நிஜமான தோற்றம்தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறாராமே! அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?''
இந்தக் கேள்விக்குப் பரமாச்சாரியார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.
தற்புகழ்ச்சியை முழுவதுமாகத் துறந்து விட்டவரும், தன் ஆற்றல்களை ஒருபோதும் பிரகடனப் படுத்திக் கொள்ளாதவருமான பரமாச்சாரியார், அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார். 

அந்த பதிலைக் கேட்டு, அவரைப் போன்ற மகானால் அல்லவோ, அத்தகைய பதிலைச் சொல்ல முடியும் என்று எல்லோரும் வியப்படைந்து, அவரை இருகரம் கூப்பி வணங்கினார்கள்.
அந்த பதில் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டாமா..........!
கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை அலங்கரித்தவர். 

சிட்டி, சிவபாதசுந்தரம், வல்லிக்கண்ணன், க.நா.சு. போன்ற இலக்கிய ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. ரவீந்திரநாத் தாகூருக்கு அவரிடம் மதிப்புண்டு. 

தற்கால இலக்கியத்தின் ஒளிவீசும் நட்சத்திரங்களில் ஒருவரான அவர் தேச பக்தி, தெய்வ பக்தி இரண்டிலும் தோய்ந்தவர். காஞ்சிப் பரமாச்சாரியாரிடம் அவருக்கு விசேஷ மரியாதை இருந்தது

பால்பிரண்டன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்.
 தத்துவ ஞானி. பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்த யாத்ரீகர். 

1898 அக்டோபர் 21இல் பிறந்து, 1981 ஜூலை 27இல் மறைந்தவர். 
இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவர் தம் நாட்களை இந்தியாவில் தான் கழித்தார். மைசூரு மகாராஜா ஸ்ரீகிருஷ்ண ராஜா அவரைத் தம் விருந்தினராகத் தங்கவைத்துக் கொண்டார். 
பால் பிரண்டன் தமது "தி க்வெஸ்ட் ஆப் தி ஓவர்செல்ப்' என்ற நூலை மகாராஜாவுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
 1940 இல் மகாராஜா இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு நெகிழ்ந்தவர் அவர்.
பிரண்டனுக்கு மிக உயர்ந்த ஆன்மிக நாட்டம் இருந்தது. அவரது ஆன்மிக நாட்டம் மதங்கடந்து எல்லா மதச் சான்றோர்களையும் போற் றுவது. முக்கியமாக இந்து மதத் துறவியரின் ஆன்மிக வெள்ளத்தில் அவர் திளைத்து வந்தார்.
பல இந்துத் துறவிகளைச் சந்திக்கும் எண்ணத்தில் அவர் சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்தார். முற்றும் துறந்த துறவியர் பலரைச் சந்தித்து அவர்களின் மகிமை உணர்ந்து அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். 

இந்து மதத்தின் சனாதன தர்மம் எத்தகைய அபூர்வமான ஆன்மிக நெறி என்பதை அறிந்து, நம் மதத்தின்பால் அளவற்ற மதிப்பும் ஈடுபாடும் கொண்டார்.
காஞ்சிப் பரமாச்சாரியாரைப் பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் அவரை எவ்விதமேனும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனத்தில் தோற்றுவித்தன. 

பதவியையோ, புகழையோ பரமாச்சாரியார் மதிப்பதில்லை. ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டை அவர் பார்ப்பதில்லை. 

பணத்தின் மேல் அவருக்கு ஒரு சிறிதும் நாட்டமில்லை என்றெல்லாம் அவரைப்பற்றி அறிய அறிய, அவரைச் சந்திக்கும் வேட்கை பிரண்டன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

ஆனால் எவ்விதம் சந்திப்பது? யாராவது அறிமுகப்படுத்த வேண்டுமே? வெளிதேசத்தவரை மடாதிபதியான அவர் சந்திப்பாரா?

முன்னரே தமக்கு நன்கு தெரிந்தவரும் எழுத்தாளரும், நல்ல ஆங்கிலப் புலமை உடையவருமான கே.எஸ். வெங்கடரமணியை இதன் பொருட்டு அணுகினார்.

 பால்பிரண்டனின் ஆன்மிக தாகத்தை உணர்ந்திருந்த வெங்கடரமணி, அவரைப் பரமாச்சாரியாரிடம் அழைத்துச் செல்ல மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.
1931, ஜனவரியில் ஒருநாள். ஆம்...
பால்பிரண்டன் பரமாச்சாரியாரைச் சந்திக்கும் அந்த நாள் வந்தது.
பரமாச்சாரியார் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காலம். 
பால்பிரண்டனுடன் சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்றார் கே.எஸ். வெங்கடரமணி. பரமாச்சாரியாரிடம் பால்பிரண்டனது ஆன்மிக வேட்கையை எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்.
பரமாச்சாரியார் அந்த வெளிதேச மனிதரைக் கனிவோடு பார்த்தார். 
உலகளாவிய ஆன்மிகத்திற்கு எல்லையே கிடையாது என்கிறபோது, தேச வேறுபாடு எங்கே வந்தது? மத வேறுபாட்டைக் கூட சுவாமிகள் பொருட்படுத்தியதில்லையே? 

அவரவரும் அவரவர்மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு நிம்மதி காண வேண்டும் என்பதல்லவா பரமாச்சாரியாரின் உபதேசம்! காஞ்சி மடத்தின் அருகேயுள்ள மசூதியிலிருந்து மாலை நேரம் தொழுகை ஒலி கேட்கும்போது, 

அது இறைவனைத் தனக்கு நினைவுபடுத்துவதாகவும் எனவே அந்த ஒலியைத் தடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்!
பரமாச்சாரியாரின் அருட்பார்வை, அப்படியே பால்பிரண்டனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அந்தத் தெய்வீக மனிதரின் சந்நிதியில் பெரும் சாந்தியை உணர்ந்தது அவர் உள்ளம்.
 இவரையே தம் குருவாக வரித்தால் என்ன! இவரிடமிருந்து ஏதும் உபதேசம் பெற்றால் என்ன!
பால்பிரண்டன் எதையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டியது அவசியமா? எதையாவது நினைத்தாலே போதுமே! தன் முன் உள்ள மனிதர்களின் மனதைப் புத்தகம் படிப்பதுபோல் படித்துவிடும் ஆற்றல் உண்டே பரமாச்சாரியாருக்கு! 
பால்பிரண்டனை அன்போடு பார்த்த பரமாச்சாரியாரின் அதரங்களிலிருந்து அருள்மொழிகள் புறப்பட்டன
.
""அன்பனே! உனக்கு ஒரு குரு வேண்டும்! அவ்வளவு தானே! நீ உபதேசம் பெற விரும்பு கிறாய் அல்லவா! நான் இங்கே ஒரு மடத்தைச் சார்ந்திருக்கிறேன். இந்த மடத்தின் மடாதிபதியாய் இருக்கிறேன். இந்த மடத்திற்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு. 

அவற்றை நான் மீற முடியாது. உனக்கு உபதேசம் செய்யக் கூடிய ஆன்மிகவாதி திருவண்ணாமலையில் உள்ளார். ரமண மகரிஷி என்பது அவரது நாமம். 
நீ வெளிதேசம் திரும்புவதற்கு முன் கட்டாயம் அவரைச் சென்று சந்திப்பாய். உன் வாழ்க்கை மேலும் சிறப்படையும்''.
வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்தார் பரமாச்சாரியார். பால்பிரண்டனின் விழிகள் பக்திக் கண்ணீரால் பனித்தன.
சென்னை திரும்பினார் பால்பிரண்டன். அவரது நெஞ்சில் பரமாச்சாரியாரின் திருமுகமே நிறைந்திருந்தது. தாம் தங்கிய உணவகத்தில் தம் அறையில் இரவு படுத்து உறங்கினார். 

அவருக்கு ரமணரைத் தரிசிக்க நேரமில்லை. மறுநாளே விமானத்தில் சுவிட்சர்லாந்து புறப்பட வேண்டியிருந்தது. இன்னொரு முறைதான் அவரைப் பார்க்க வேண்டும்.
அவர் ஆழ்ந்து உறங்கியபோது திடீரென யாரோ அவரைத் தட்டி அழைத்ததுபோல் இருந்தது. திகைப்போடு கண்திறந்து பார்த்தார். 

அவர் தங்கியிருந்த அறைக்கதவு உள்ளே தாழ் போட்டுப் பூட்டித்தான் இருந்தது. ஆனால், அறைக்கு உள்ளே கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் பரமாச்சாரியார். எப்படி அறைக்குள் வந்தார் அவர்?
அவரைச் சுற்றிப் புனிதமான பொன்னொளி பரவியிருந்தது. மீண்டும் அதே கனிவான அருள் பார்வை...இது நிஜமா பொய்த்தோற்றமா! பால் பிரண்டன் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். 

நிஜம் தான். எள்ளளவும் பொய்யில்லை. அவர் தன்னைத் தானே கிள்ளிக் கொள்வதைப் பார்த்துப் பரமாச்சாரியார் முகத்தில் மெல்லிய குறும்பு கலந்தபுன்முறுவல். 
பரமாச்சாரியார் கனிவோடு தேனினும் இனிய மதுரக் குரலில் சொல்லலானார்:
""அன்பனே! ரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே. பயணத்தைத் தள்ளிப் போடு. ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம். அந்தச் சந்திப்பு உன் வாழ்வின் திசையை மாற்றும்!'' சொல்லிவிட்டுப் பரமாச்சாரியார் காற்றில் கலந்து மறைந்துபோனார்! 

இது கனவல்ல, நூறு சதவீத நிஜம் என்றுணர்ந்த பிரண்டனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. பிறகு, பிரண்டன் ரமணரைச் சென்று பார்த்தார் என்பது அவரது வரலாறு. 

இந்த சம்பவத்தைத் தான் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பால்பிரண்டன்.
பரமாச்சாரியாரைக் கேள்வி கேட்ட அன்பர் இந்த சம்பவத்தைப் பற்றித்தான் கேட்டார்:
""சுவாமி! பால் பிரண்டனுக்கு நள்ளிரவில் காற்றுவெளியில் காட்சி கொடுத்தீர்களாமே! இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா!
கேள்வி கேட்டவரையே, பரிவோடு சற்றுநேரம் பார்த்த பரமாச்சாரியார் பிறகு ஒரு முறுவலுடன் சொன்னார்

""அதனால் தான் நான் எப்போதும் சொல்கிறேன். தூங்குவதற்கு முன் நல்ல நினைவுகளையே நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும்!''

சொல்லி விட்டுப் பரமாச்சாரியார் எழுந்து மடத்திற்குள் போய்விட்டார்.
அந்த பதில் மூலம் எல்லார் மனதிற்குள்ளும் போய்விட்டார். 

புகழைத் துறந்த அவரது பதிலைக் கேட்ட சிலர், கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள். தான் செய்த அற்புதத்தைக் கூடத் தானே ஒப்புக்கொள்ள மறுத்தவர்போல், புறந்தள்ளும் அவரது முற்றும் துறந்த துறவுநிலை கண்டு கேள்வி கேட்டவரின் கன்னங்களில் பக்திக் கண்ணீர் வழியத் தொடங்கியது

No comments:

Post a Comment