Thursday, April 2, 2015

Purity of food - Periyavaa

courtesy:N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan

ஆசாரமும் ஆஹாரமும்

வடதேச வழக்கின் உயர்வு

நாம் நம்மைவிட அநாசாரக்காரர்கள் என்று நினைக்கும் வடக்கத்திக்காரர்கள்தான் அநேக விஷயங்களில் நம்மைவிட நல்ல சாஸ்திர வழக்குகளை அநுஸரிப்பவர்களாயிருக்கிறார்கள். 'ஸ்வதந்திரம்' வந்த பிற்பாடு அங்கேயும் ரொம்ப க்ஷீண தசை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் ஸமீப காலம் வரையில் நான் தெரிந்து கொண்டதில் அவர்களிடம் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆஹார விஷயம் அதில் ஒன்று. இத்தனை புளி, மிளகாய், பெருங்காயம் என்று நாம் வைத்துக் கொண்டிருப்பது போல அங்கேயில்லை. இதெல்லாம் ராஜஸத்தில் சேர்ப்பதுதான்.
இதில் பெங்காலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். "மத்ஸய்ப் பிராம்மணாள்" உள்ள ஊராச்சே என்றால் அது [மத்ஸ்யம் உண்ணும் பழக்கம்] முன்னேயே சொன்னாற்போல் ஒரு நிர்ப்பந்தத்தில் ஏற்பட்டது.
நாங்கள் பெங்கால் போயிருந்தபோது அவர்கள் ஆஹார வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது பெரிய முகாமாக மடத்து ஜனங்கள் போயிருந்தோம். அவர்களும் சளைக்காமல் நாநூறு ஐநூறு பேர் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய சாமான்கள் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். ஆனால் அதில் புளி இல்லை. புளி இல்லாமல் நமக்கு ஏது சாப்பாடு? குழம்பு, ரஸம் எதுவானாலும் அதுதானே முக்யம்? அவர்களுக்கோ கோதுமையும், டாலுக்குப் பருப்பும் இருந்தால் போதும், பெங்காலின் அரிசிச் சாதம் சாப்பிடுபவர்கள் தானென்றாலும் ரஸம், குழம்பு போட்டுக் கொள்ளாதவர்கள். அதனால் அவர்களுக்குப் புளியே தேவையில்லை.
நாங்கள் புளி வேண்டுமென்று கேட்டோம். உடனே எங்கேயோ நாலைந்து மைல் போய் அங்கேயிருந்த புளிய மரத்திலிருந்து கொஞ்சம் பச்சைக் காயைப் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த ஸ்வல்பப் புளியங்காய் இங்கே மடத்திலே வைக்கிற அண்டா சாம்பாருக்கு ஸமுத்திரத்தில் பெருங்காயம் கரைக்கிற மாதிரிதான் ஆகியிருக்கும்.
"இத்தனூண்டை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது? இன்னும் ரொம்ப வேணுமே!" என்றோம்.
உடனே அவர்கள் பரிஹாஸமாக, "க்யா ஆப் இம்லீ காதே ஹை, யா சாவல் காதே ஹை?" (நீங்கள் புளியைச் சாப்பிடுகிறீர்களா, அல்லது அரிசி சாப்பிடுகிறீர்களா?) என்று கேட்டார்கள்!
பெங்கால் மாதிரி மத்ஸ்ய ஸம்பந்தங்கூட இல்லாமல் ராஜஸ்தானம், குஜராத், ஸெளராஷ்ட்ர, கட்ச் மத்யப் பிரதேஷ் ஆகிய ராஜ்யங்களில் எல்லா ஜாதியாரிலுமே மரக்கறி உணவுக்காரர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.
டேராடன் மாதிரி இடங்களில் பிராம்மண கூலிக்காரன் முதுகிலே பெட்டி கட்டிக்கொண்டு அதில் வெள்ளைக்கார துரையை உட்கார்த்தி வைத்துக்கொண்டு போவான். ஆனால் வழியில் வாயிலே பச்சைத்தண்ணி விடமாட்டானாம். போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டு, ஸ்நானம் பண்ணித் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துத்தான் சாப்பிடுவான்.
தர்வான், வேலைக்காரி முதலியவர்கள்கூட யஜமான் வீட்டில் நாயாக உழைத்தாலும், அந்த வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுவது கிடையாது என்பதே வடதேசத்து வழக்கம் ஜாதியில் உசத்தி, தாழ்த்தி சொல்லிக் கொண்டு "தாழ்ந்தவன் வீட்டில் உசந்தவன் சாப்பிட்டாலென்ன?" என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் குழப்பிப் பல பட்டடை பண்ணுவதுதான் சீர்திருத்தம் என்று இங்கே நாம் நினைக்கிறோமென்றால், அங்கே தாழ்ந்த நிலையில் உள்ள வேலைக்காரன்கூட உயரந்த நிலையிலுள்ள முதலாளி வீட்டில் சாப்பிடுவதில்லை என்றிருக்கிறான்! இப்படி ஜாதிக்காக இல்லாமல் 'ஸ்வயம்பாகம்' என்ற நியமத்துக்காக என்று வைத்துக் கொள்ளும்போது, சண்டையும் இல்லாமலிருக்கிறது.
வடக்கே ஸம்பந்திகள் வீட்டில்கூட ஜன்மத்திலேயே ஒரு நாளாகக் கல்யாண தினத்தன்று மட்டுந்தான் சாப்பிடுவார்கள்.
அவனவனும் தன்னை pure -ஆக வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம். இதிலே ஒரு அங்கம்தான் பிறத்தியாரால் அந்த purity -க்கு கெடுதல் வந்துவிடப் போகிறதே என்று ஜாக்கிரதையாக, அவர்களுடைய 'ரேடியேஷன்' ஆஹாரத்தில் ஏற்படாமல், தன் சாப்பாட்டைத் தானே பண்ணிக் கொள்வது. சாப்பாட்டு விஷயத்திலே ஜாதி முதலான அம்சங்களுக்கு இடமேயில்லை. இந்த ஸமத்வத்துக்காக யார் சமைத்தாலும் எல்லாரும் சாப்பிட்டாக வேண்டுமென்று பண்ணி ஜனங்களின் personal purity -ஐ பாதிக்க வேண்டாம். "ஜாதி கூடாது" என்று ஆரம்பத்திலிருந்து இப்படி ஸம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாங்கூட ஜாதியைக் கொண்டு வந்து அதில் அபேத வாதத்தை நிலை நாட்டுவதே எல்லாவற்றையும்விட முக்யம் என்பதாக விஷயம் தெரிந்துகொள்ளாமல் செய்து வருகிறார்கள்.
ஒருத்தர் சமைத்து இன்னொருத்தர் சாப்பிடுவது என்கிறபோது சாஸ்திரத்தைப் பார்த்தால் ஒரு விதமாயிருக்கிறது; சீர்திருத்தக்காரர்கள் சொல்வது இன்னொரு விதமாயிருக்கிறது. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று தப்பாக நினைத்துக்கொண்டு, "நீ சாப்பிடலாம், நீ சாப்பிடக்கூடாது" என்று வித்யாஸம் பார்த்தால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. "இதிலே மேலும் இல்லை; கீழும் இல்லை அவரவர் காரியம் ஒழுங்காக நடப்பதற்காக அந்தந்தக் காரியத்துக்கு அநுகூலமாக நியமங்களை வித்யாஸம் செய்திருக்கிறது. வித்யாஸத்தை எடுத்தால் எல்லாம் கலந்து குழம்பிப் போய்விடும்" என்று நினைக்கிறவர்களுக்கோ 'ஸமத்வம்' என்று சொல்லப்படுகிறதைப் பின்பற்றினால் கஷ்டமாயிருக்கிறது. அதாவது எவர் பண்ணிப் போட்டாலும் எல்லாரும் சாப்பிடலாம் என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. சாப்பிடக் கூடாது என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. கஷ்டம் என்கிறது சண்டையாக ஆகிறது.
காயத்துக்குத்தான் ஜாதியே தவிர சண்டைக்கா வைத்திருக்கிறது? அதுவும் சாப்பாட்டிலே சண்டை என்றால் வேதனையாயிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே ஸொல்யூஷன் ஸ்வயம்பாகம்தான் என்று தெரிகிறது. மேல் ஜாதியா, கீழ் ஜாதியா என்ற கேள்விக்கே இடமில்லாமல், "The question does not arise" என்கிறாற்போல், இந்த விஷயங்கள் எழும்புவதற்கே இடமே தராமல், அந்தந்த ஜாதிக்காரனே சமைத்தாலும் சாப்பிடுவதில்லை, அம்மாவோ, அகமுடையாளோ பண்ணினால்கூடத் தொடுவதில்லை, அவனவனும் தன் கையால்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வைத்து விடுகிற நியமமே ஸொஸ்யூஷன்.
எவன் தொட்டுச் சாப்பிடலாம், எவன் பார்த்துச் சாப்பிடலாம், எவனோடு சாப்பிடலாம் என்கிற கேள்விகள் இருக்கிறவரையில் சாஸ்திரம் ஒன்றாகவும் சீர்திருத்தம் இன்னொன்றாகவும் இருந்துகொண்டு சண்டைதான் வரும். அதனால் எவனுமே தொடாமல் அவனவனே சமைத்துக் கொண்டு, எவனுமே பார்க்காமல், எவனோடும் சேர்ந்து உட்காராமல் தனித்தனியாகப் போஜனம் பண்ணி விடுவது உத்தமம். ' காகம் கரைந்துண்ணக் கண்டீர் ' என்கிறாற்போல் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்றிருந்தால் பழங்கள், பானங்களைச் சேர்ந்து சாப்பிடலாம். மற்றவர்கள் சமைத்துக் கொள்ள உணவுப் பண்டங்களாகக் கொடுப்பதே விருந்துபசாரந்தான்; அப்படிப் பண்ணலாம்.
இதுவரை தக்ஷிணத்தில் நம்மைவிடக் கடும் குலாசாரமுள்ளவர்களின் கையில், அல்லது பெர்ஸனலாக நம்மைவிட சுத்தமானவர்களின் கையிலிருந்து வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து வந்திருக்கிறது. வடக்கேயோ இதுவும் கூடாது. கிஸான் [குடியானவன்] ஆனாலும் பணடிட் ஆனாலும் அவனவனே சமைத்துக்கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலேயும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது. நம்மைவிட சுத்தர்கள் கையில் சாப்பிடலாம் என்பதனாலேயே நாம் அவ்வளவு சுத்தியாவதற்கு பிரயத்தனப்படாமலே இருந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் இடம் கொடுத்துப் போகிறது. ஸ்வயம்பாகம் என்று வைத்து, நம்முடைய அசுத்தி நாமே பண்ணிக் கொள்கிற சாப்பாட்டினால் நமக்குள் மேலே மேலே போய்க்கொண்டேயிருக்கிறபோது தான், இப்படி நம்மைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்து நம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் பிரயத்னம் செய்வோம். "சாப்பாடு பண்ணிப் போடுகிறவனின் சுத்தம் சாப்பிடுகிறவனுக்குள் போகிறது; நாம் சுத்தனாக வேண்டும்; அதே ஸமயத்திலே நம் சாப்பாட்டை நாமே பண்ணிக்கொள்ள வேண்டும்" என்றால் அப்போது நாம் சுத்தமாக ஆவதற்கு முயற்சி பண்ணத்தானே செய்வோம்?
ஸ்வாமி பிரஸாதம், குருப் பிரஸாதம் தவிர ஸ்வயம்பாகம்தான் என்று ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்.
இதனால் ஒரு டிஸிப்ளினும் உண்டாகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவோ, அரட்டை, சீட்டு, ஸினிமா என்று போகவோ விடாமல் சமையல் வேலை என்று ஒன்று ஒருத்தனைக் கட்டிப் போடுகிறதல்லவா? இதில் தானே பண்ணிக் கொள்வதால் நிறைய தினுசு வேண்டாம் என்று நாக்கு டிஸிப்ளினும் வருகிறது. சமைத்ததில் ஸத்வ ரஸம் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து அப்போது நாமஜபம் செய்கிற டிஸிப்ளின் வேறு. தானே பொங்கிப் போட்டுக் கொள்வது என்கிற, அல்பமாகத் தோன்றுகிற தர்மாசாரத்துக்கு இத்தனை நல்ல பலன்கள்!
"எப்படிக் கற்றுக் கொள்வது?" என்று புருஷர்களாய் பிறந்தவர்கள் பிரமிக்க வேண்டியதில்லை. "இப்படித்தான் இருக்கணும்" என்ற எண்ணம் வந்துவிட்டால், ஈஸியாக கற்றுக் கொண்டு விடலாம். பொம்மனாட்டிக் குழந்தைகள் சூட்டிகையாயிருந்தால், அரைத்துக் கரைத்து இத்தனை தினுஸோடும் சமைப்பதற்குப் பன்னிரண்டு வயஸுக்குள் கற்றுக் கொண்டு விடவில்லையா? 'வெரைய்டி' இல்லாமல் ஸிம்பிளாக ஒரு சப்பாத்தி அல்லது ஒரு பொங்கல், ஒரு தயிர் என்று ஆஹாரத்தை ஆக்கிக் கொண்டு விட்டால், நாலே நாளில் கற்றுக்கொண்டு விடலாம். என் அபிப்ராயம், பதினைந்தே நிமிஷத்தில் தயாரிக்கக்கூடியதாக ஏதாவது ஒரு ஸிம்பிள் ஆஹாரத்தைப் புருஷர்கள் அத்தனை பேரும் தெரிந்து கொண்டு தாங்களே அதைப் பண்ணிப் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டுமென்பது.