Thursday, March 5, 2015

Holi story

courtesy:Dinamalar


தீமை அழிந்து நன்மை கிடைக்க!

இந்தியாவின் வட மாநிலங்களான கோல்கட்டா மற்றும் மும்பை போன்ற பகுதிகளில், மாசி மாத பவுர்ணமி அன்று, ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மூன்று நாட்களுக்கு முன்னதாகவே துவங்கிவிடும் இப்பண்டிகையில், வண்ண பொடிகளையும், வண்ணச் சாயங்கள் கலந்த நீரையும், ஒருவர் மீது ஒருவர் தூவி குதூகலமாக கொண்டாடுவர்.

இந்த ஹோலி பண்டிகையின் வரலாற்றை பார்ப்போமா...

அரக்கனான ஹிரண்யகசிபுவின் உறவுக்காரப் பெண் ஹோலிகா. குழந்தைகளைக் கொன்று தின்னும் அவள், மிகுந்த சக்தி படைத்தவள். நெருப்புக் கூட அவளை எரிக்க முடியாது.
தன் மகன் பிரகலாதனுடன் மன வேறுபாடு கொண்ட ஹிரண்யகசிபு, பல வழிகளிலும் பிரகலாதனை கொல்ல முயன்றான்; எதுவும் பலிக்கவில்லை.
இதனால், ஹோலிகாவை அழைத்து, 'நெருப்பால் கூட எரிக்க முடியாத மகா சக்தி படைத்தவளே... என் மகன் பிரகலாதனை கொல்லும் பொறுப்பை உன்னிடம் அளிக்கிறேன்; இவனை கொன்று விட்டு வா...' என்று கூறி, பிரகலாதனை அவளிடம் ஒப்படைத்தான்.

பிரகலாதனைக் கையில் தூக்கிய ஹோலிகா, 'மன்னா... இன்னும் சிறிது நேரத்தில் பார். இந்தப் பொடிப் பயல் அப்படியே சாம்பலாகப் போகிறான்...' என்று ஆணவத்தோடு பேசி, கொழுந்து விட்டு எரியும் பெரும் தீயில், பிரகலாதனோடு அப்படியே குதித்தாள். நெருப்பால் தன்னை எரிக்க முடியாது என்ற தைரியம் அவளுக்கு.
ஆனால், பிரகலாதனோடு தீயில் குதித்த ஹோலிகா, அடுத்த வினாடியே எரிந்து போனாள்.

பிரகலாதனோ, சிறு காயம் கூட இல்லாமல், தீயில் இருந்து வெளியில் வந்தான்.

தீயசக்தியான ஹோலிகா அழிந்து, நல்ல சக்தியான பிரகலாதன் வாழ்வு பெற்ற அந்த நன்னாளே ஹோலி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

அதாவது, நல்லனவற்றுக்கு என்றும் அழிவு கிடையாது; தீயனவற்றுக்கு என்றும் வாழ்வு கிடையாது என்பதை விளக்குவதே ஹோலி பண்டிகை. தீமை அழிந்து நன்மைகள் கிடைப்பதால், உள்ளம் துள்ளுகிறதல்லவா? அதையே, ஹோலி பண்டிகையின் போது செய்யப்படும் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன. நம்மிடம் உள்ள தீமைகளை நீக்கி, நன்மைகளை அருளுமாறு இறைவனிடம் வேண்டுவோம்!


No comments:

Post a Comment