Thursday, February 19, 2015

Tiruporur tirupugazh

Courtesy: Sri.SSR

திருப்போரூர் திருப்புகழ்
 
இத்தலத்தில் வில் ஏந்திய முருகனை காணலாம்
               30 நாமங்கள் கொண்ட ஒரு அருமையான துதி
              
முருகன் மூன்று இடங்களில் போர் புரிந்தான். நிலத்தில் போர்புரிந்தது திருப்பரங்குன்றம். கடலில் புரிந்து திருச்செந்துர். விண்ணில் போர் புரிந்த இடம் திருப்போரூர். 'சகல வேதமுமெ தொழு சமாரபுரி' என்பார் அருணகிரி ஸ்வாமிகள் இத்தலத்தை.
 
 
               தனன தானன தானன தனன தானன தானன
               தனன தானன தானன                தனதான
 
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ 
   திமிர மேயரி சூரிய                            திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
   சிவசு தாவரி நாரணன்                     மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
   குணக லாநிதி நாரணி                       தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
   குறவ மாமக ளாசைகொள்                 மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
   பசுர பாடன பாளித                           பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
   பரவு பாணித பாவல                        பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
   சமய நாயக மாமயில்                           முதுவீர 
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
   சமர மாபுரி மேவிய                        பெருமாளே.
 
 
 
இருளான மனத்தையும் மிக்க அறியாமையையும் கொண்டவனாகிய  என் துன்பத்தையும்ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே,
மூலப் மெய்ப் பொருளே, 
வேத முதல்வனான சிவபெருமானின் புதல்வனே, நாராயணனுடைய மருகனே,
சாமள நிறங் கொண்டவளும்கலைச் செல்வியுமாகிய பார்வதியின் மகனே, குருமூர்த்தியே,
சரவணனே,
உருவத் திருமேனி கொண்ட ஈசனே,
குறவர் மகளான வள்ளி ஆசை கொண்டவனே,
 
வெட்சி மாலையை அணிபவனே,
சம்பந்தராக அவதரித்துவாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம் பாடி உலகுக்கு நீதியை உபதேசித்தவனே,
குறிஞ்சி வேந்தனே,
கோழிக் கொடியோனே,
வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே,
யோக மூர்த்தியே,
வாதப் போர் செய்து புறச் சமயங்களை நசித்தவனே,
எல்லா சமயங்களுக்கும் தலைவனே,
மயில் வீரனே,
வேதங்கள் யாவும் தொழும் பெருமாளே,
சமராபுரி என்னும் திருப்போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே,
உன்னைப் போற்றுகின்றேன்

  
பதம் பிரித்தல்
 
திமிரமாம் மனமா(ம்) மட மடமையேன் இடர் ஆணவம்
திமிரமே அரி சூரிய திரி லோக
 
திமிரமாம் = இருள் கொண்டதான மனமாம் = மனத்தையும் மட மடைமையேன் = மிக்க அறியாமையும் கொண்டவனான என்னுடைய
அல்லது
{திமிர மா மனம்  =  எனது மனத்தில் இருக்கும் பேரிருளையும்,  மடம் = மிக்கு இருந்தஅறியாமை இருளையும் மடமையேன்= அறிவிலியான அடியேற்கு சேரும்}
இடர் = வருத்தம் ஆணவம் = ஆணவம் (ஆகிய) திமிரமே = இருட்டை அரி = விலக்கும் சூரிய = சூரியனே திரி லோக = மூன்று உலகங்களுக்கும்.
 
 
தினகரா சிவ காரண ப(ன்)னக பூஷண ஆரண
சிவ சுதா அரி நாரணன் மருகோனே
 
தினகரா = (ஒளி தரும்) சூரியனே சிவ = சிவனே காரண = அனைத்துக்கும் மூலப் பொருளே பன்னக பூஷண = நாகத்தை ஆபரணமாக அணிந்த ஆரண சிவ = வேத முதல்வரான சிவபெருமானுக்கு சுதா = மகனே அரி நாரணன் = ஹரி எனப்படும் நாராயணனுடைய மருகோனே = மருகனே.
 
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி
குண கலா நிதி நாரணி தரு கோவே
 
குமரி = குமரி (என்றும் இளையவள்) சாமளை = சாமளை (கருமை கலந்த பச்சை) நிறம் பொருந்தியவள் மாது = மாது உமை = உமா தேவி அமலி = மலமற்றவள் (எந்த மாசும் இல்லாதவள்) யாமளை = பச்சை நிறத்தவள் பூரணி = நிறைந்தவள் குண நிதி = குணச் செல்வி கலா நிதி = கலைச் செல்வி நாரணி தரு கோவே = நாரணர் தங்கை (துர்க்கை) பெற்ற தலைவனே.
 
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர 
குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம்
 
குரு = ஞான குருவே குகனே = குகனே {இதய குகையில் விளங்குபவனே} குமரேசுர = குமரேசனே {குமர ஈசுர = 16 வயது என்றுமான பரம செல்வமே} சரவணா = சரவணனே {ஒளியும் ஈகையும் அறமும் மறமுமான அருமை சரவண நாமத்தோடு அவதரித்தவனே} சகளேசுர = உருவத் திருமேனி கொண்ட ஈசனே. குறவர் மா மகள் = வேடர்களுடைய சிறந்த மகளான வள்ளி ஆசைகொள் = (உன் மீது) ஆசை கொண்ட. மணியே = மணியே சம் = நன்றாக                                
 
பமர(ம்) பார ப்ரப அருண படல தாரக மா சுக
பசுர(ம்) பாடன பாளித பகளம் (பளகம்) ஈச
 
பமரம் = வண்டுகள் (மொய்க்கும்) பார = பாரமான ப்ரபா = ஒளி வீசுகின்ற {அல்லது பாரப்ரபா = மகிமை ஒளியை உடையவனே} அருண = சிவந்த படல = கூட்டமான (வெட்சி மாலைகளை) அணிந்தவனே தாரக = பிரணவப் பொருளே {விசாக நட்சத்திர ஜென்மனே} மா சுக = பெரிய சுகப் பொருளே பசுர = (சம்பந்தராக வந்து வாழ்க அந்தணர் என்னும்) திருப்பாசுரம் பாடன = பாடி(உலகுக்கு நீதியை) உபதேசித்தவனே பகளேச = மலைகளுக்கு வேந்தனே.
 
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில்   
பரவு(ம்) பாணித பாவல பர யோக
 
பசிதம் = திருநீற்றில். பாரண = திருப்தி உள்ளவனே வாரண துவச = கோழிக் கொடியோனே ஏடகமா = மேன்மை கொண்ட சிறந்த (வெற்றிலை வடிவமான)  அயில் வேலாயுதத்தை பரவ பாணித = கையில் ஏந்தியவனே பாவல = பாடல்களில் வல்ல புலவனே பர யோக = மேலான யோக மூர்த்தியே.
 
 
சம(ம்) பர மத சாதல சமயம் ஆறிரு தேவத
சமய நாயக மா மயில் முது வீர
 
சமம் = வாதப் போர் செய்யும் பர மத = புறச் சமயங்களான சமணம்பௌத்தம் ஆகியவற்றின் சாதல= நசிவுக்குக் காரணமாக இருந்தவனே ஆறிரு சமயம் = ஆறு அகச் சமயங்களுக்கும்ஆறு புறச் சமயங்களுக்கும் இரு தேவத = பெரிய தலைவனே சமய நாயக = சமயங்களுக்கு எல்லாம் தலைவனே மா மயில் முது வீர = அழகிய மயிலின் மேல் வரும் பேரறிவு வாய்ந்த வீரனே.
 
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு(ம்)
சமர மா புரி மேவிய பெருமாளே.
 
சகல லோகமும் = எல்லா உலகங்களும் மாசு அறு சகல வேதமும் = குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழு = தொழுகின்ற (பெருமாளே) சமர மா புரி = திருப் போரூர் என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

No comments:

Post a Comment