Sunday, February 22, 2015

Pugazh chola nayanar

Courtesy:Smt.Uma Balasubramaniam
புகழ்ச் சோழ நாயனார்
                                          உமா பாலசுப்ரமணியன்
               
 
               கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி
              நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
              மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
              உலகில் வளர் அணிக்குஎல்லாம் உள்ளு ஊறையூர் ஆம் உறையூர்.
      
 
       சோழநாட்டின் தலை நகரமான உறையூர் செல்வம் கொழிக்கும்   ஒரு திருநகரமாகும். அங்குள்ள கடை வீதிகளில் பல நாடுகளிலிருந்து தருவித்த பண்டங்கள் நிரம்பியிருக்கும் . யானைப் பந்திகளும் , குதிரைக் கொட்டடிகளும் பல ஆங்காங்கே இருந்தன. மேகத்தை  எட்டும் கோபுரங்களும் , கதிர் ஏறும் மலர்ச் சோலைகளும் தேர் ஏறும் மணி வீதிகளும் உடைய உறையூரின் புகழ் உலகம் எல்லாம் பரவி நின்றது. .
                அந்த நகரத்தில் சோழர்குலப் பெரு  மன்னராக   இருந்து அரசாண்டார் ' புகழ்ச் சோழர் ' என்பவர். அவர் தம் தோள் வலிமையினால் , பல பகைவர்களை அடக்கி அவர்களைத் திறையளிக்கப் பணித்து , மன்னர் மன்னராகச் செங்கோல் ஓச்சி வந்தார்.
       சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டவர்  அவர், ஆலயங்களிலெல்லாம் நன்றாகப் பூசை முதலியவைகள் நடை பெறுவதற்காக வேண்டியன அளித்துப் பாதுகாத்தார். சிவனடியார்கள் யாரையேனும் சந்தித்தால்  அவர்களுக்கு வேண்டியதை உடனே செய்து முடிப்பார்.  . புகழ்ச்சோழர் அடியவர்களுக்குத் தாம் கொடுப்பதை , குறியுடையோர் ஒருவரைப்போலப் பணிந்து நின்று அடியவர்களுக்குக் கொடுப்பார். தொண்டர்களிடம் அவருக்கு இருந்த பெரு மதிப்பும், அன்புமே அதற்குக் காரணமாகும் .
       அவர் கொங்கு நாட்டு அரசரும் ,மேற்குத் திசையில் உள்ள மற்ற நாட்டு அரசர்களும் தம்முடைய திறைகளைக் கொண்டு வந்து கொடுக்க வசதியாகக் கருவூர் என்னும் நகரத்துக்குச் சென்று தம் சுற்றத்தாருடன் தங்கினார். அத் திருத் தலத்திலுள்ள திருக்கோவிலுக்கு 'ஆனிலை ' என்று பெயர்.ஒரு முறை  அக்கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்னர் தம் திரு மாளிகைக்குச் சென்றார் .மேற் புறத்துள்ள அரசர்கள் ,   மன்னரைக் கண்டு  தம் திறைகளை அளித்துச் சென்றனர்.  
       அப்பொழுது புகழ்ச்சோழர்," இந்தப் பக்கத்திலுள்ள யாவரும் திறை கொண்டுவந்து கொடுத்து விட்டார்களா? யாரேனும் எஞ்சியிருந்தால் கூறுங்கள் " என்று தம் அமைச்சரிடம் சொன்னார்.
       அது கேட்ட அமைச்சர்கள் ,"ஒருவனையன்றி மற்றவர்கள் அளித்துவிட்டார்கள்" என்று பதிலுரைத்தனர்.
      
       " யார் அவன் ? " என்று சோழ மன்னன் கேட்டான்.
      
       "இங்கே அருகில் மலையரணத்துக்குள் இருக்கும் அதிகன் என்பவன் தான்  திறையை இன்னும் கொடுக்கவில்லை " என்றனர்.
 
               
 
 
                                'ஆங்கு அவன் யார் ?' என்று அருள 'அதிகன் அவன் அணித்தாக
              ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான்என உரைப்ப,
                                'ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோபடை எழுந்துஅ
              பாங்கு அரணம் துகள் ஆகப் பற்று அறுப்பீர்எனப் பகர்ந்தார்.
      
"" அப்படியா? அவன் எத்தகைய அரணத்தில் இருந்தால்தான் என்ன ?உங்களுக்கு அது எம்மாத்திரம் ? நீங்கள் படைகளுடன் சென்று அரணை அழித்து வாருங்கள் " என்று மன்னர் கட்டளையிட்டார்.
       அரசரின் ஆணைப்படியே பெரிய படை, அதிகனுடைய அரணை நோக்கிச் சென்றது.
அதிகமானுடைய படையும் , சோழர் படையும் ஒன்றை ஒன்று எதிர்த்து நின்றன. கடுமையான பெரும் போர் மூண்டது. சோழ மன்னனின் படைகளுக்கு முன்னால் அதிகமானுடைய படைகள் வலுவிழந்தன . போரில் அதிகனுடைய யானைகள் , குதிரைகள் யாவும் வெகுவாகக் குலைந்தன. போர் வீரர்கள் பலர் மாண்டனர். தன் படை சீர்குலைந்து போனதைக் கண்டு அதிகமான் கோட்டையை விட்டு எங்கோ ஓடிவிட்டான்.
       போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச் சென்ற உயர்ந்த பொருட்களையும் , அந்த அரணில் இருந்த பொன் முதலியவைகளையும்  படை வீரர்கள் கைப்பற்றி, கருவூருக்கு எடுத்துச் சென்றனர். பல படைத்தலைவர்களின் தலைகளையும் , வீரர்களின் தலைகளையும் பார்த்து சோழ மன்னர் கண்டு களிக்கட்டும் என்று எண்ணி , தலைகளைக்  குவியலாகக் கருவூர் கொண்டு சேர்த்தனர்.
       புகழ்ச்சோழர், அதிகன் அரண் விட்டு ஓடியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கொண்டு வந்த தலைக்  குவியலைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தலையைப் பார்த்து  அதிர்ந்து , " என்ன இது ? " என்று அச்சத்துடன் கேட்டார்.
       அவர் பார்த்த தலையில் ஒரு சிறிய சடை  தெரிந்தது. . அவர் நடுங்கி ,மனம் கலங்கிக் கை தொழுதார். அவர் மீண்டும் மீண்டும் பார்த்து,பின்  அதை அருகில்  கொண்டுவரச் செய்து , சடையைக் கண்டு கண்ணீர் சொரிந்தார்.
தன்னையே நொந்து கொண்டு ," நான் பெரிய படையைப் போக்கி உலகில் சைவ நெறியைப் பாதுகாத்து அரசாட்சி செய்யும் முறை மெத்த அழகாய் இருக்கிறது ! " என்று சொல்லிதன்னை இழித்துச் சொல்லி மீண்டும்  அயர்ந்தார். " இந்தத் தலையை உடையவர் ஒரு சிவன் அடியாராகத்தான் இருத்தல் வேண்டும் , இத்தகைய தலையைப் பார்த்தபின் நான் உலகை ஆள்வது தகுமா? பார் என்ன சொல்லும் ? என் ஆட்சியில் சிவனடியாரைக் கொலை செய்த பாவமன்றோ வந்து சேர்ந்துவிட்டது! " என்று புலம்பி அழுதார்.
 
", இனிமேல் அரசாட்சி செய்யும் தகுதியை நான் இழந்துவிட்டேன் . இனி இறைவனுடைய தொண்டு நெறியில் நின்று , ஒழுக்கம் தவறாது நாட்டைக் காக்க என் மகனுக்கு முடி சூட்டுங்கள்" என்று அமைச்சர்களை நோக்கிக் கூறினார்.
      
       இதை செவியுற்ற அமைச்சர்கள் கலங்கினர். . மேலே என்ன செய்வதென்று  தெரியாது விழித்தனர். சோழ மன்னரும் ," இனி நான் உலகில் உயிர் வாழ்வது முறையன்று , தீக்குளித்து என் உயிரை போக்கிக் கொள்வேன் அடியவர்களுக்குச் செய்யும் அபராதத்திற்கு இதுதான் சரியான தண்டனை " என்று கூறி தீ வளர்க்கச்  சொன்னார். திருநீற்றை உடல் முழுவதும் தரித்துக் கொண்டார் ,
             
 
 
              கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனகமணிக் கலத்து ஏந்திக்
              கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
              அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி,
              மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்.
 
சடையுள்ள தலையை ஒரு பொன் தட்டில் வைத்து , தம் தலையில் தாங்கிக் கொண்டு அந்தத் தீயை வலம் வந்தார் .கூடவே சிவ பஞ்சாட்சர  மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே அந்தத் தீப்பிழம்புக்குள் நுழைந்து விட்டார்.  
       தேவர்கள் பூமாரி சொரிந்தனர். அங்கிருந்தவர்கள் கண் மாரி பொழிந்தனர். சிவபெருமான் புகழ்ச் சோழரைத் தம்முடைய திருவடி நீழலில் இருக்கச் செய்து பேரின்பப் பெருவாழ்வை  அருளினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ! .
       இந்தப் புகழ்ச் சோழர்தான் , எறிபத்த நாயனார் , தம் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்திய போது ," இந்த அபராதத்துக்கு இது போதாதென்றால் என் தலையையும் கொய்தருள வேண்டும் " என்று கூறித் தம் வாளை உருவி நீட்டியவர் ஆவார்.
 
              முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
              பிரசம் கொள்நறும் தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
              பரசும் குற் றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
              நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்

No comments:

Post a Comment