Wednesday, October 17, 2012

மஹா வைத்யநாதம்-பெரியவாளோட மஹிமை!

Courtesy: Sri.Mayavaram Guru

ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் பண்ணிவந்த ஒரு பாரிஷதரின் குடும்பம் சென்னையில்
இருந்தது. அவரது மனைவி பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டவள். ஒருநாள்
காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்சனம் பண்ணிக்கொண்டிருந்தபோது அந்த அம்மாவுக்கு
திடீரென்று உடனே சென்னை போகவேண்டும் என்ற உந்துதல் உண்டானது. அதிகம்
யோசிக்காமல் உடனே கிளம்பி சென்னை வந்து வீட்டுக்கு போனதும்தான் அந்த
அதிர்ச்சியான தகவல் தெரிந்தது....அவளுடைய பெண் வயிற்று பேரன்
விளையாடிக்கொண்டிருக்கும்போது,மேல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து,
வடபழனியில் உள்ள ப்ரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பது!
ஆடிப்போனாள் பாவம். I C U வில் இருந்த பத்து வயஸ் பேரனை பார்க்கக்கூட
முடியாமல் ஹாஸ்பிடல் வராந்தாவில் குடும்பமே நடையாய் நடந்து கொண்டிருந்தது.
தலையில் நல்ல அடி என்பதால், நிலைமை கொஞ்சம் கவலைக்குரியதாகத்தான் இருந்தது.
ரத்தம் நிறைய போயிருந்ததால் பிழைப்பது ஸ்ரமம், அப்படிப்
பிழைத்தாலும்,நரம்புகள் பெருமளவில் பாதிக்கப் பட்டிருப்பதால்,கை கால்கள்
செயல்படுமா என்பது சந்தேஹம் என்றெல்லாம் அதிர்ச்சி குண்டுகளை அள்ளி
வீசினார்கள் டாக்டர்கள்!

பாட்டிக்கோ "இனிமே இந்த டாக்டர்களை நம்பறதைவிட, கண்கண்ட தெய்வம் பெரியவாளோட
பாதங்களை பிடிச்சிண்டு என் பேரனுக்கு உயிர் பிச்சை கேக்கறேன்" என்று
கூறிவிட்டு, ஓடினாள் மறுபடியும் காஞ்சிக்கு! அன்று அதிக கூட்டம் இல்லை. உள்ளே
நுழைந்து பெரியவாளை தர்சிக்கும் வரை அடக்கி வைத்திருந்த அழுகை, பீறிட்டுக்
கொண்டு வந்தது. பாரிஷதர்கள் "மாமி, அழாம என்ன விஷயம்னு பெரியவாட்ட
சொன்னாத்தானே தெரியும்! நிதானத்துக்கு வாங்கோ" என்று சமாதானப்படுத்தினர்.
பெரியவா அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவருக்கு சொல்லியா
தெரியவேண்டும்? காலஸம்ஹார மூர்த்தியாயிற்றே!

"சோதனை போறும் பெரியவா! எங்களால அதை தாங்க முடியாது...." என்று அந்த அம்மா
பெரியவாளிடம் கதற ஆரம்பித்ததும், பெரியவாளை அவளுடைய கதறல் சங்கடப்படுத்துமோ
என்று மெல்ல ஒரு பாரிஷதர் அவளிடம் செல்ல முயன்றதும், விரலால் சைகை பண்ணி "அவள்
பேசட்டும். தொந்தரவு பண்ணாதே" என்று சொன்னார். மாமி பாட்டுக்கு புலம்பிக்
கொண்டிருந்தாள். அதே சமயம் பெரியவா தன் மௌனத்தை கலைக்காமல், பக்கத்தில்
தட்டில் இருந்து ஒரு ஆப்பிளைக் கையில் வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியுமாக
சில மந்த்ரங்களை ஜபித்தபடி உருட்டிக் கொண்டிருந்தார். அப்புறம், அதை ஒரு
தட்டில் வைத்து, அந்தத் தட்டை தன் இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கையால்
குங்குமத்தை எடுத்து அந்த ஆப்பிள் பழத்துக்கு குங்குமார்ச்சனை பண்ணத்
தொடங்கினார். ஆப்பிள் பழம் காமாக்ஷியானதோ என்னவோ! நமக்கென்ன தெரியும்?
பாட்டியின் அழுகை குறைந்து ஒரு புது நம்பிக்கை பிறந்தது!

ஆப்பிளைக் கையில் எடுத்துக்கொண்டு சில வினாடிகள் அதை உருட்டினார். "இந்தா!
வாங்கிக்கோ! ஒண்ணும் பயப்... டாதே! பேரன் பொழைச்சு வந்து நன்னா ஓடி
ஆடுவான்.....இந்த விபூதி குங்குமத்தை அவனுக்கு இட்டுடு....." அவள் கைகளில்
பேரனின் உயிரை பிச்சையாகப் போட்டமாதிரி, ஆப்பிளையும் விபூதி குங்குமத்தையும்
குடுத்தார். பாட்டியின் அத்தனை துக்கமும் போன இடம் தெரியவில்லை! உடனேயே சென்னை
வந்தாள். I C U வில் யாரையுமே அனுமதிக்கவில்லை.குழந்தை நெற்றியில் எப்படியாவது
பெரியவா குடுத்த ப்ரசாதத்தை இட்டு விட வேண்டுமே! என்று அலைந்தாள். அவள் மனஸில்
இப்போது கலக்கமோ பயமோ இல்லை. "நிச்சயம் என் பேரன் நன்னா ஆயிடுவான் " என்ற
நம்பிக்கை அசைக்கமுடியாமல் நின்றது. அதேசமயம் டக்கென்று I C U கதவு
திறந்ததும், பேரனை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தார்கள்.
வழக்கம்போல் டாக்டர்களும், நர்ஸுகளும் "கூட்டம் போடாதீங்க! ரொம்ப சீரியஸ் !
வழி விடுங்க!" போன்ற பயமுறுத்தல்களோடு வெளியே வந்தனர். ஒரே பாய்ச்சலில் பேரன்
பக்கம் போனாள்.....தெய்வமே! எங்கே விபூதி குங்குமம் இடுவது? நெற்றியே
தெரியாதபடி பெரிய கட்டு இருந்தது. எங்கோ லேசாக தெரிந்த இடத்தில் பெரியவாளை
வேண்டியபடி ப்ரசாதத்தை இட்டுவிட்டாள்!

இத்தனை நேரம் எப்படி இடுவது என்று கவலைப்பட்ட பாட்டி, பேரனின் முகத்தில்
வெளியே தெரிந்த ஏதோ ஒரு சின்ன இடத்தில் பெரியவாளுடைய ப்ரசாதத்தை இட்டதும்,
அப்பாடி! என்று அத்தனை கவலைகளையும் உதறித் தள்ளிவிட்டு அமர்ந்தாள். "இனிமே
என்னோட பேரன் பொழைச்சுக்குவான்".......குழந்தையை ஸ்கேன் பண்ண கூட்டிக்கொண்டு
போய்விட்டார்கள். சற்றுநேரத்தில் டாக்டர் ரிப்போர்ட்டோடு வெளியே வந்ததும்,
அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டனர்....

"மெடிக்கல் மிராக்கிள்!" என்று "கண்டேன் சீதையை" மாதிரி சொல்லி, அத்தனை
பேருடைய வயிற்றிலும் பாலை வார்த்தார். இருக்காதா பின்னே? காலனை எட்டி உதைத்த
அம்ருதகடேசன் கையால் ப்ரஸாதம் வாங்கிக்கொண்ட குழந்தையை காலன் நெருங்குவானா?
டாக்டர் குழு தொடர்ந்தது......

"எப்டி சொல்றதுன்னே தெரியலே...முன்னாடி எடுத்த ஸ்கேன், இப்போ எடுத்த ஸ்கேன்
ரெண்டுக்கும் ஏகப்பட்ட வித்யாசம் இருக்கு.....ஆனா, nothing to worry
....சந்தோஷமா இருங்க. மொதல்ல எடுத்த ஸ்கேன்ல குழந்தையோட மூளை நரம்புகள்
எல்லாம் ஏகத்துக்கு damage ஆயிருந்தது. ஆனா, இப்போ எடுத்த ஸ்கேன்ல எல்லா
நரம்பும் ரொம்ப normal ஆ எப்டி இருக்கணுமோ, அப்டி இருக்கு. எங்க சர்வீஸ்ல
இப்படி ஒரு கேஸை நாங்க பாத்ததில்லை!"

பாட்டியால் தன் ஆனந்த பரவசத்தை, பெரியவாளுடைய மஹா காருண்யத்தை அதற்கு மேல்
அடக்கிக் கொள்ள முடியவில்லை.

"அப்டி சொல்லுங்கோ டாக்டர்! அதான் என்னோட பெரியவாளோட மஹிமை! அதான் இந்த ஸ்கேன்
ரிசல்டை ஒண்ணுமே இல்லாம பண்ணிடுத்து! மெடிகல் மிராகிள்ளாவுது!
மண்ணாங்கட்டியாவுது!" பெருமை கலந்த சந்தோஷத்தோடு சொன்னாள். காஞ்சிபுரம் சென்று
பெரியவா திருவடிகளில் நன்றியோடு விழுந்தாள்.

அடுத்த ஒரு வாரத்துக்குள் குழந்தைக்கு சில சின்ன சின்ன பிரச்சனைகள்
பாதித்தாலும், நல்ல முறையில் முழுசாக வீடு வந்து சேர்ந்தான்!

No comments:

Post a Comment