கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பது பழமொழி. இதே போல போஜ ராஜன் ஆண்ட நாட்டில் எல்லோரும் கவி பாடுவார்கள் என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு.
போஜ ராஜன், அவனது ஆஸ்தான கவிஞன் காளிதாசன் ஆகியோர் மீது அடுத்த நாட்டு ராஜாவுக்கு பொறாமை. எப்படியும் போஜ ராஜனை மட்டம் தட்ட வேண்டும் என்று சொல்லி ஒரு தூதனை போஜனின் நாட்டுக்கு அனுப்பினான். போஜனின் நாட்டுக்கு வந்த தூதன், ஒரு தொலை தூர கிராமத்தில் வாழும் நெசவாளியைக் கூட்டிக் கொண்டு போஜனின் அரண்மனைக்கு வந்தான்.
"மன்னர் மன்னா ! உன் நாட்டில் சடு குடு விளையாடும் சிறுவர் முதல் குடு குடு கிழவி வரை எல்லோரும் கவி பாடுவார்கள் என்கிறீர்களே. இதோ இந்த நெசவாளி பாடுவானா? என்று கேட்டான். போஜ ராஜன் முகத்தில் புன் சிரிப்பு நெளிந்தது. கண்ணால் கோடி காட்டினான். அந்த நெசவாளி மிகவும் அடக்கமாக சம்ஸ்கிருதத்தில் பதில் தந்தான்.
"காவ்யம் கரோமி ந ஹி சாருதரம் கரோமி
யத்னாத் கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே போஜராஜ கவயாமி வயாமி யாமி "
இதன் பொருள்: நான் கவி பாடுவேன், ஆனால் நன்றாக பாட மாட்டேன். கொஞ்சம் முயற்சி பண்ணினால் கொஞ்சம் நன்றாக ஆகிவிடும். போஜ ராஜனே ! உனது காலடியில் இருக்கும் ரத்தினப் பலகையோ மாற்று நாட்டு மன்னர்களின் மணி முடியிலிருந்து செய்யப்பட்டது. நான் கவிதை செய்கிறேன், நெசவும் செய்கிறேன். இதோ உன் அனுமதியுடன் வெளியே போகிறேன்.
கவிதை செய்கிறேன் (கவயாமி) நெசவு செய்கிறேன் (வயாமி), வீட்டுக்குப் போகிறேன் (யாமி). கடைசி மூன்று வினைச் சொற்களில் தனது திறமை முழுவதையும் காட்டிவிட்டு சொந்த ஊருக்குப் பஞ்சாய் பறந்துவிட்டான்.
அடுத்த நாட்டு தூதனின் முகத்தில் அசடு வழிந்தது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
அன்பர்களே! சம்ஸ்கிருதம் ஒரு அற்புதமான மொழி. பசிபிக் மகா சமுத்திரம் அளவுக்கு பரந்தது, ஆழமானது. வேதம்,உபநிஷத், கீதை, உலகின் முதல் செக்ஸ் புத்தகம் காமசூத்திரம், உலகின் முதல் இலக்கண புத்தகம் பாணிணீயம், உலகிலேயே பழமையான மத புத்தகம் ரிக் வேதம், உலகிலேயே மிகப் பெரிய கதைப் புத்தகமான கதா சரித் சாகரம், உலகிலேயே முதல் அகராதியான அமர கோஷம், உலகின் உன்னத நாடக ஆசிரியன்
காளிதாசனின் ஏழு நூல்கள், பல்லாயிரக் கணக்கான தனிப் பாடல்கள், உலகிலேயே மிக நீளமான நூலான மஹாபாரதம், ஏராளமான ரஹசியங்கள் அடங்கிய யோக, மருத்துவ, விஞ்ஞான நூல்கள்— இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதைக் கற்றுக் கசடற நின்றவர்கள் விரைவில் சூப்பர்மேன் ஆகிவிடுவார்கள் !!
No comments:
Post a Comment