ஈடற்ற பக்தி -- நங்கநல்லூர் J K SIVAN
பாரத தேசத்தில் உதித்த எண்ணற்ற பக்தர்களில் சிவபக்தர்கள் பலர். அதிலும் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று பக்தர்களை, நாயன்மார்கள் எள்று பெயரிட்டு பாடல்களாக சேக்கிழார் பெருமான் அளித்திருக்கிறார். அதில் கண்ணப்பர் கதை ரொம்ப பிரபலம். எல்லோரும் அறிந்த கதை என்றாலும் இன்று அதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
பக்தர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்ல. அப்படி அவசியமும் இல்லை. யார் மனதில் பக்தி மிகுந்து இருக்கிறதோ அவர் இறைவனோடு ஒட்டி உறவாடுபவர். ஆழ்வார்கள் நாயன்மார்களில் அநேகர் பிராமணர்கள் இல்லை. பல குலங்களில் பிறந்து தெய்வீக தன்மை பெற்று நம்மால் வழிபடப்படும் மஹான்கள். உன்னதர்கள் அவர்கள், நமது புராணங்களில் பக்ஷிகள், விலங்குகள் கூட பக்தியால் மேம்பட்டு வழிபடப் படுவன. ஜடாயு, ஹனுமான், ஜாம்பவான், கருடன், நந்தி, மயில், யானை,சிம்மம், கஜேந்திரன்,ஆதிசேஷன் எல்லாமே மனிதர்கள் இல்லையே,
பொதப்பி என்ற ஆந்திர தேசத்தில் ஒரு ஊர். வேடுவர்கள் குடும்பங்கள் வாழ்ந்த இடம். அவர்களுக்கு நாகன் என்ற வேடன் தலைவன். அவன் மனைவி தத்தை. இருவருமே முருக பக்தர்கள். முருகனின் வள்ளியே வேடுவ குலத்தவள் தானே. முருகன் அருளால் நாகன் மனைவி தத்தை ஒரு ஆண் குழந்தையைப் பெற்று திடகாத்திரமான அந்த குண்டு பையனுக்கு 'திண்ணன்'' என்று பெயர். பதினாறு வயது வாலிபன் ஆகி அப்பா நாகனுக்கு பதிலாக வேடுவர் குல தலைவனானான். நண்பர்களோடு காட்டுக்குச் சென்று வேட்டையாடுவது வழக்கம்.
ஒருநாள் , வேட்டை நாய்கள் சகிதம் ஆயுதங்களோடு புறப்பட்ட திண்ணன் காட்டை வளைத்து அட்டகாகசமாக உள்ளே புகுந்து மிருகங்க ளை துரத்தினான். கரடி, புலி, மான் என பலவற்றை உயிரோடும் பிணமாகவும் பிடித்தான். அவன் கண்ணில் அப்போது ஒரு கொழுத்த காட்டுப் பன்றி தென்பட்டது. திண்ணன் அதைத் துரத்த அவனை அந்த மாய பன்றி எங்கெங்கோ இழுத்துக் கொண்டு ஓடியது. நாணன், காடன் இருவரும் களைத்துப் போய் மரநிழலில் அமர்ந்தார்கள். திண்ணன் களைப்பை பொருட்படுத்தாமல் மலையில் ஓடினான். பன்றி பிடிபட்டது. கொன்றான். அதை சுட்டு உண்ண தயாராயினர். ''தண்ணீர் வேண்டுமே குடிக்க. ரொம்ப தாகமாக இருக்கிறதே'' என்றான் திண்ணன்.
நாணன் மலை அருகே நின்ற ஒரு உயரமான தேக்குமரத்தை காட்டினான். ''திண்ணா , அந்த மரம் பக்கத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அதில் நல்ல குடிநீர் கிடைக்கும். பன்றியைத் தூக்கிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.
எதிரே திருக்காளத்தி மலை திண்ணன் கண்ணில் பட்டது..
''நண்பர்களே அதோ பார்த்தீர்களா ஒரு மலை. அதன் மீது ஏதோ ஒரு கோவில் தெரிகிறதே வாருங்கள் அங்கே செல்வோம்.'' என்றான் திண்ணன்
''திண்ணா,அங்கே குடுமி நாதர் என்று சிவலிங்கம் இருக்கிறது. அழகான சின்ன கோவில். வா போகலாம். கும்பிடலாம்'' என்றான் நாணன். மலையை நெருங்கி மேலே செல்வதில் ஏனோ ஒரு உற்சாகம், மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி திண்ணனுக்கு ஏற்பட்டது. ஏன்? அது தான் தெய்வ சங்கல்பம்.
பொன்முகலி ஆறு வந்தது. ''காடா, நீ இங்கே தீ மூட்டு பன்றியை சுடு. அதற்குள் நான் மலை மேல் நாணனோடு சென்று குடுமி தேவரை பார்த்து கும்பிட்டு விட்டு வருகிறேன்'' என்றான் திண்ணன்.
அப்போது உச்சி காலம். தேவர்கள் வந்து காளத்தீஸ்வரனை வழிபடும் நேரம். அவர்கள் துந்துபி போன்ற தேவ வாத்தியங் கள் முழக்கிய சப்தம் திண்ணன் காதில் மட்டும் ஒலித்தது. ஒரு வேலை திண்ணன் முற்பிறப்பில் அர்ஜுனன் என்று காளஹஸ்தி புராணம் சொல்கிறது.
''நாணா , அது என்ன சப்தம்?' என கேட்டான் திண்ணன்.'
நாணன் காதில் சப்தம் எதுவும் விழவில்லை. ''ஏதோ காட்டில் மரங்கள், மிருகங்கள்எழுப்பும் ஓசையை நீ கேட்டிருப்பாய் திண்ணா''
திண்ணன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குதூகலம். திண்ணன் மலையேறினான். மலையில் ஒரு கோவில். அதனுள் தீபம் எரிகிறது. பெரிய சிவலிங்கம். காற்றில் தீபம் அசைகிறது. கருவறைக்கு கதவே இல்லை. காற்றின் அசைவில் மணி டாண் டாண் என ஒலித்தது திண்ணன் செவிக்கு இன்பமாக '' வா திண்ணா , உனக்காக தான் காத்திருக்கிறேன்'' என்று சொல்வது போல் மனதில் அடிநாதமாக கேட்டது. தாயைக் கண்ட சேய் போல வேகமாக ஓடி அப்படியே குடுமித்தேவரை ஆலிங்கனம் செய்தான் திண்ணன்.
குடுமித் தேவர் தலையில், சிவலிங்கத்தில் பச்சிலை பூக்கள் தெரிந்தது. ''அடடா நான் இதுவெல்லாம் கொண்டுவர வேண்டும்'' என்று அறியவில்லையே?
நாணன் சொன்னான். ''திண்ணா நான் உன் தந்தையோடு ஒரு முறை முன்பு இங்கே வந்திருக்கிறேன். அப்போது ஒரு பார்ப்பனர் இங்கே வந்து இந்த சிவலிங்கத்துக்கு தண்ணீர் நிறைய தலையில் கொட்டினார். பிறகு இலைகளை போட்டார், பூக்களை பறித்து வந்து மேலே போட்டார். அது இந்த சாமிக்கு பிடிக்கும் போல் இருக்கிறது. இவரைக் கும்பிட வேண்டுமென் றால் நாமும் நாமும் அதெல்லாம் செய்யவேண்டுமடா?'''என்றான்
விட்டகுறை தொட்டகுறையோ? அன்று முதல் திண்ணன் கால்கள் தானாக அடிக்கடி காளத்தி மலைமேல் அவனை இழுத்து சென்றன. வாயில் நீர்சுமந்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வான். தலையில் நிறைய புத்தம் புது மலர்களை சுமந்து வருவான். இலைகளால் அவனுக்குத் தெரிந்த அர்ச்சனை செய்வான். சிவனுக்கு பசிக்குமே என்று தான் வழக்கமாக உண்ணும் பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை சிவனுக்கு மனமுவந்து படைப்பான்.
இதுவரை குடுமி நாதனை தரிசிக்க திண்ணன் வரும் நேரமும் வழக்கமாக பூஜை பண்ணும் சிவாச்சாரியார் வரும் நேரமும் வெவ்வேறாக இருந்தது. தனித்தனியாக தான் குடுமி நாதருக்கு அவரவர் வழியில் வழிபாடு நடந்தது.
முதல் முதலாக திண்ணன் இவ்வாறு காளத்திநாதரை தனது வழியில் பூஜித்து ''மாமிச நைவேத்தியம்'' அளித்த அன்று மாலை காளத்தி நாதரை அர்ச்சித்து பூஜை செய்யும் சிவகோசரியார் எனும் சிவாச்சாரியார் பூஜா திரவியங்களுடன் வந்தார். சாஸ்த்ர பிரகாரம் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆகவே அன்று மாலை வந்த சிவாச்சாரியார்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது
வயதான காலத்திலும் சிவாச்சாரியார் கொம்பு ஊன்றிக் கொண்டு வந்து மூச்சிரைக்க மலை ஏறி தான் கொண்டுவந்த நைவேத்திய பொருள்கள், அபிஷேக சாமான்கள், துவைத்து உலர்த்திய வஸ்திரம், எல்லாம் தலையில் மூட்டையாக சுமந்து காளத்தி நாதனை அடைவார்.
இன்று அவர் மனம் கொதித்தது. ''யாரோ ஒரு மஹா பாவி இப்படி காளத்தீஸ்வரன் முன்பு இறைச்சி, எலும்பு எல்லாம் கொண்டு வந்து போட்டு இந்த பகவான் சந்நிதியை புனிதமற்றதாக செயகிறானே, ஏன் எதற்காக? என்ன கோவம் இந்த சிவன் மேல்? இதையெல்லாம் நீ எப்படி சகித்துக்கொண்டு இருக்கிறாய் சிவனே? என்று வருந்தினார் . மூன்று
கால பூசை வில்வத்தோடு பூசை செய்யவேண்டியவன் இந்த ரத்த வாடை நெடி அடிக்கும் மாமிசங்களை அப்புறப்படுத்தும் துர்பாக்கியம் எனக்கு இந்த வயதில் ஏன்? ஏதோ நான் எப்போதோ செய்த பாவத்திற்கு தண்டனையா பரமசிவா? என்னாலேயே தாங்கமுடியவில்லையே, நீ எப்படி இதை பொறுத்துக் கொண்டி ருக்கிறாய்? இங்கே வேடுவர்கள் நடமாட்டம் அதிகம். அவர்களில் யாரோ ஒரு துஷ்டன் தான் இதைச் செய்திருக்கிறான். அவனுக்கு தக்க தண்டனை கொடு ஈஸ்வரா .''
திண்ணனுக்கோ சிவன் மேல் ஒவ்வொரு கணமும் அன்பும் பாசமும் பக்தியாக பரிமளித்தது. ''இந்த காட்டில் தனித்து மலைமேல் இருக்கிறானே இந்த பரமசிவன் இவனுக்கு நானும் குளித்து விட்டு சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா?. ஒரு கையில் வில் அம்புகள், இன்னொரு கையில் நன்றாக நெருப்பில் வாட்டி சமைத்த பன்றி மாமிசம். அதை அங்கங்கு கொஞ்சம் கடித்து சுவைத்து நன்றாக வெந்து இனிக்கும் பாகத்தை சிவனுக்கு என் மனமுவந்து ஆகாரமாக கொடுப்பேன். அவனைக் குளிப்பாட்ட நீர் எப்படி எதில் கொண்டுவருவேன்? ஆஹா,அதற்கு தான் வாய் இருக்கிறதே. நிறைய அதில் நீர் நிரப்பிக் கொண்டு வருகிறேன்.'' வாயில் இருக்கும் நீரை காளத்திநாதன் மேல் உமிழ்ந்து தான் கொண்டுவந்த பச்சிலைகளை பூக்களை சிவலிங்கத்தின் மேல் போட்டு, உணவாக தான் கொண்டுவந்த இறைச்சியை சிவ லிங்கத்தின் முன் இலை மேல் வைத்து உபசரிப்பான். பேசுவான். பிறகு செல்வான். இப்படி தான் அவன் பூஜை நடந்து கொண்டிருந்தது.
திண்ணன் பாபியல்ல. துஷ்ட வேடன் அல்ல. உண்மையான அன்பும் பக்தியும் கொண்டவன். அவனுக்கு தெரிந்த வகையில் மனமுவந்து சிவனுக்கு தனது வழிப்பாட்டை செய்தவன். சிவாச்சார்யாருக்கு திண்ணனின் தூய பக்தியை தெரிவிக்க வேண்டாமா? அலகிலா விளையாட்டுடையவர் பரமேஸ்வரன் ஒரு திட்டம் வகுத்தார். .
''சிவாச்சாரியாரே, உமது வருத்தம் அர்த்தமற்றது. எனக்கு இப்படி விசேஷமாக பூஜை செய்பவன் இந்த காட்டை சேர்ந்த வேடர் குல தலைவன் நாகன் மகன் திண்ணன். இப்போதைய வேடர் தலைவன். நாளை சாயங்காலம் இங்கே அவன் வரும்போது அவன் கண்ணில் படாமல் ஒளிந்திருந்து என்ன நடக்கிறது என பாருங்கள். புரியும்'' என்று அவர் கனவில் காளத்தீஸ்வரர் உரைத்தார். சிவாச்சாரியார் திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது?. ஈஸ்வரன் கட்டளைப்படி செய்கிறேன் '' என்று மறுநாள் சீக்கிரமே போய் மலைமேல் காளத்தி நாதன் கோவில் அருகே ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு கவனித்தார். நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது. என்ன நடக்கப்போகிறது? பகவானே!
அன்று காலையிலிருந்தே திண்ணனுக்கு ஏதோ நெஞ்சில் இனம் புரியாத ஒரு சஞ்சலம் உருத்தியது. சிவனுக்கு இன்று நல்ல உணவாகவே அளிப்போம் என்று சில புதிய மிருகங்களை கொன்று நெருப்பில் வாட்டி காட்டுத்தேன் நிறைய அதன் மேல் ஊற்றி, சிறிது சுவை பார்த்து. ''நன்றாக இருக்கிறது. இது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஒரு இலையில் சுற்றி எடுத்துக் கொண்டான். வாய் நிறைய நீர் வழக்கம்போல் நிரப்பிக்கொண்டு மலையேறினான். இதுவரை ஐந்து பகல், ஐந்து இரவு சிவனோடு தொடர்ந்த பாசமாக இப்படி அபிஷேகம் அர்ச்சனை நைவேத்யம் நீடித்தது.
காளத்தீஸ்வரர் முன் நின்ற திண்ணன் வாயினில் இருந்து நீர் உமிழ்ந்து சிவனை அபிஷேகித்தான். இலைகள் மலர்களை லிங்கத்தின் மேல் போட்டான். அப்போது தான் ஒரு அதிர்ச்சி. ஐயோ என்ன இது என் சிவனின் இடது ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பீறிட்டது 'தெய்வமே, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் ஒரு கண்ணில் ரத்தம் வடிகிறது? அவசரமாக தனது இடையில் உடுத்திய துணியை கிழித்து துடைத்தும் மேலும் மேலும் கண்ணிலிருந்து ஆறாக ரத்தம் பெருகியது. திண்ணனுக்கு தலை சுற்றியது. கை நடுங்கியது. கொண்டுவந்த இறைச்சி சிதறியது. துடித்தான்.
''என்ன செய்வேன்? துடைக்க துடைக்க ரத்தம் பெருகியதே தவிர நிற்கவில்லை. தனக்கு தெரிந்த பச்சிலை மருத்துவம் செய்தான். ரத்தப்பெருக்கு நிற்கவில்லையே.
திடீரென்று திண்ணனுக்கு ஒரு யோசனை. சிவனுக்கு இனி கண் குணமாகாது. எனக்கு தான் ரெண்டு கண் இருக்கிறதே. ஒன்றை கொடுத்தால் என்ன? மறுகணமே துளியும் தயங்காமல் கூரான அம்பினால் தனது இடது கண்ணை அகழ்ந்து ரத்தம் பெருகும் சிவனின் கண்ணில் மேல் வைத்து அப்பினான். அப்பப்பா சிவனின் கண்ணில் பெருகிய ரத்தம் நின்று விட்டது. திண்ணனின் கண் அங்கே சரியாக பொருந்தியது.
மிகவும் சந்தோஷம் திண்ணனுக்கு. ஆனால் அவன் அது நீடிக்கவில்லை. சிவனின் மறு கண்ணில் இப்போது ரத்தம் பீரிடத் துவங்கியது. ''அடாடா இது என்ன கஷ்டம்? சிவனே உனது துன்பத்தைப் போக்கினேன் என்றல்லவா சந்தோஷப் பட்டேன். இப்போது உன் இடக்கண்ணில் அதே துன்பம் நேரிட்டதே. பரவாயில்லை எனக்கு தான் வைத்தியம் தெரியுமே. என் னுடைய ரெண்டாவது கண்ணும் உனக்கு தான். அது சரி, எனக்கு இப்போது இருப்பதோ ஒரே ஒரு கண். அதையும் எடுத்து விட்டால் எப்படி உன்னை பார்ப்பேன்? அதை எடுத்து விட்டால் எப்படி குருடனாக சரியாக உனது இடது கண்ணில் அதை பொருத்துவேன். அட இது ஒரு பெரிய பிரச்னையா? உன் இடது கண் இருக்கும் இடம் தெரியவேண்டும் அவ்வளவு தானே. என் கால் எதற்கு இருக்கிறது?. இதற்கு உபயோகப்படட்டுமே. தனது ஒரு காலை சிவன் இடக்கண் மேல் அடையாளம் தெரிய வைத்துக்கொண்டு அம்பால் தனது இரண்டாவது கண்ணையும் அகழ ஆரம்பித்தான் திண்ணன்.
''திண்ணா நிறுத்து உன் செயலை ''
சிவனின் கட்டளை திண்ணன் காதில் கேட்டது. அதை லக்ஷியம் பண்ணவில்லை திண்ணன். அம்பால் தனது கண்ணை அகழ்வதில் கவனம்.
''நிறுத்தடா திண்ணா ''.... மூன்று முறை சிவன் கட்டளை அவனை கண்ணைத் தோண்டாமல் தடுத்து நிறுத்தியது. காளத்தீஸ்வரர் திண்ணன் முன் ப்ரத்யக்ஷமானார். சிவன் அருளால் திண்ணன் இழந்த கண்ணைப் பெற்றான்.
திண்ணன் மஹேஸ்வரனுக்கு தன் கண்களைக் கொடுக்க துணிந்ததால் உலகுக்கு இனி என்றும் அவன் கண்ணப்பன். அறுபத்து நாயன்மாரில் ஒருவராக சிவன் ஆலயங்கள் அனைத்திலும் பக்தர்களால் கண்ணப்ப நாயனார் வணங்கப் படுகிறார். இது சிவாச்சாரியார் கண் முன் நடந்த அதிசயம்.
ஆதிசங்கரர் சிவானந்தலஹரி யில் 63 வது சுலோகத்தில் பகவான் மேல் பக்தன் கொள்ளும் பக்தி பற்றுக்கு உதாரணமாக கண்ணப்ப நாயனார் பற்றி கூறுகிறார்.
मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते, गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३॥
Marga varthitha paduka pasupathe rangasya koorchayuthe, Gandoo shampoo nishechanam pura ripo divyabhishekaa yathe, Kinchid bhakshitha maams sesha kabalam navyopaharayathe, Bhakthi kim karoth yaho vana charo bhaktha vatam sayathe.
வழி மறித்து கொள்ளையடிக்கும் சண்டாளர்கள் கூட பசுபதீஸ்வரனின் சிரத்தை அலங்கரிக்கும் கூர்ச்சம், வில்வ தளமாகிறார்கள். அவர்கள் வாயால் உமிழும் எச்சில் ஜலம் கூட பரமேஸ்வரா உனக்கு கங்காபிஷேக தீர்த்தமாகிறது. த்ரிபுராந்தகா, உனக்கு அவர்கள் அளிக்கும் மாமிச துண்டு கூட நைவேத்தியமாகிறது. மனதில் நீ மட்டுமே குடி கொண்ட வேடநும் கூட உன் பக்தர்களில் ராஜாவாக முதன்மை ஸ்தானம் பெறுவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். பக்திக்கு நீ அளிக்கும் பரிசு எல்லையற்றதல்லவா?
சென்னையிலிருந்து ரெண்டு மூன்று மணிநேரத்தில் காளஹஸ்தி சென்றுவிடலாம். காளத்தீஸ்வரன் ஆலயம், பஞ்சபூதங்களின் ஆலயத்தில் வாயு க்ஷேத்திரம். விளக்கில் தீபம் ஆடிக்கொண்டே இருப்பதை காணலாம். மலைமேல் கண்ணப்பர் ஆலயம் இருக்கிறது. பொன்முகலி ஆறு பாதி நாள் தண்ணீரில்லாமல் ஓடுகிறது.
No comments:
Post a Comment