*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
Section 2
*ஞானப் பிரஸூனங்கள்*
*7.உண்மையான அஹிம்ஸை*
ஒரு நாள் மாலை ஸ்ரீமத் ஆசார்யாரிடம் நான் இருக்கும் ஸமயம் சாந்தி நிலவும் மௌன நிலையில் வெகுநேரம் ஆழ்ந்து இருந்து விட்டார்கள். பிற்பாடு அந்நிலை கலைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள்.
மஹா: உங்கள் பிரதேசத்தில் சி என்ற கிராமத்தில் சில நாட்களுக்கு முன், அக்கிரஹாரத்தில் இறந்து கிடக்கும் பசுக்களின் உடல்களை பஞ்சமர்கள் எடுத்துச் செல்ல மறுத்துவிட்டபடியால், பிராஹ்மணர்களே அவைகளை கைவண்டியில் ஏற்றி நதிக்கரைக்குச் சென்று, அங்கு அவைகளை தங்கள் கையாலேயே புதைத்தார்களாமே? அது வாஸ்தவம் தானா ?
இந்த ஸமாசாரம் எப்படி ஸ்ரீமத் ஆசார்யாரின் காதிற்கு எட்டியது என்று மிகவும் ஆச்சரியத்துடன் நான் (கிருஷ்ணஸ்வாமி) "ஆமாம்" என்றேன்.
மஹா: வெகு நாளாக நடந்துவந்த வழக்கத்தை அப்பஞ்சமர்கள் இவ்விதம் புறக்கணித்ததைப்பற்றி அங்குள்ள பிராஹ்மணர்களுக்கு வருத்தமும் கோபமும் அதிகமாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்.
கி: மிக்க வருத்தம்தான்.
மஹா: அவர்களைப் பார்க்கும்போது அவர்களிடம் "நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை. இந்த ஸம்பவத்தை நன்மையாகவே கருதுங்கள்" என்று எனக்காகச் சொல்வீரா?
கி: சொல்கிறேன். ஆனால் எப்படி நன்மையோ?
மஹா: தற்காலத்து தாய்மார்களிடம் தம் குழந்தைகளுக்குக்கூட போதிய பால் இருப்பதில்லை. ஆதலால், குழந்தைகள் பசுவின் பாலால்தான் வளர்கின்றன. மேலும், சிறுவர், கிழவர் முதலிய எல்லோருக்கும் ஆஹாரத்தில் முக்கிய அம்சமாக பால் இருந்து வருகிறது. பகவானை பூஜை செய்வதற்கு வேண்டிய பாலையும் பசுவே கொடுக்கிறது. பசுவைப் பற்றி சாஸ்திரங்கள் மிகவும் பரிசுத்தமானதும் பூஜிக்கத்தக்கதுமான பிராணி என்று சொல்கின்றன. உண்மையாகவே, பசு நமக்கெல்லாம் தாய்போலவே ஆகும். இத்தகைய பசுவிற்கு கடைசியில் நம் கையாலேயே ஸம்ஸ்காரம் செய்யும் பாக்கியம் கிடைத்தால், நாம் செய்நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டாமா? இது ஒரு பெரிய புண்ணிய கர்மாவேயாகும். அதை நாம் ஸந்தோஷத்துடன் செய்ய வேண்டுமல்லவா?
கி: இதுவரை அனுஷ்டானத்திலிருந்துவந்த ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டவர்களுக்கு, அதைவிட்டு வேறொரு புதிய வழக்கத்தை ஆரம்பிக்க மனம் இடம் கொடுப்பது சிரமம் இல்லையா?
மஹா: சிரமமாக இருக்கலாம். ஆனாலும் அவ்விதம் செய்வதால் நிச்சயமாய் விசேஷமாக ஒரு லாபம் கிடைக்கும் என்று தெரியும்போது, அப்படிச் செய்து பார்ப்பதுதானே சிலாக்கியம்? மேலும், பஞ்சமர்கள் பசுவின் உடலை எடுத்துச் செல்லும்போது, அதன் மாம்ஸத்தை யெல்லாம் அவர்கள் சாப்பிடுவார்கள் என்று பிராஹ்மணர்களுக்கு நன்றாய் தெரியுமல்லவா?
கி: ஆம், நன்றாய் தெரியும்.
மஹா: பிராஹ்மணர்கள் பஞ்சமர்களைக் கூப்பிட்டு "பசுவின் உடலை எடுத்துச் செல்லுங்கள்'' என்று சொல்வது "பசுவின் மாம்ஸத்தைச் சாப்பிடுங்கள்'' என்று சொல்வதற்கு ஸமானமேயாகும். பசுவின் மாம்ஸ பக்ஷணத்தினால் ஏற்படக்கூடிய பாபத்தில் இவ்விதம் சொல்லும் பிராஹ்மணர்களுக்கும் பங்கு இருந்தே தீரும். அதற்கு இடம் கொடுக்காமல் இவர்களே அந்த சரீரத்தை புதைத்துவிடும் பக்ஷத்தில், பிறர் பசு மாம்ஸ பக்ஷணம் செய்வதற்கு இவர்கள் அனுமதிக்க அவகாசமில்லாமல் ஏற்படுமல்லவா? இதுவே ஒரு பெரிய அனுகூலமல்லவா? அந்த கிராம ஜனங்களை ஸந்திக்க நேர்ந்தால், இவ்விரண்டு விதமான நன்மைகளையும் எடுத்துச் சொல்லி, இப்பொழுது ஏற்பட்ட மாறுதல் இறுதியில் அவர்களுக்கு நன்மையையே பயக்கும் என்ற காரணத்தினால் அதைக்குறித்து வருத்தப்பட வேண்டியதில்லை என்று சொல்லவும்.
No comments:
Post a Comment