#விதியின்_சூட்சமம்...
விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா அல்லது அந்த நிகழ்வும் விதியின் விளையாட்டா?
ஒரு மிகப் பெரிய மலையின் அடிவாரத்தில் அழகிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் ஒரு பறவை மிகவும் இன்பமாக சுற்றித் திரிந்து உலா வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது மலை மீது ஆகாயத்தில், மேகங்களுக்கு இடையில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டு இருந்தனர். அவர்களைக் கண்ட அந்த அழகிய பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் தன் இறகுகளை மடித்து சற்றே அமர்ந்தது.
ஆகாயத்தில் முதலில் அக்னி தேவன் செல்வதையும் அவர் பின்னால் வாயு தேவன் மற்றும் அனைத்து தேவர்களும் செல்வதைக் கண்டு பறவை ஆச்சரியம் அடைந்தது.
அனைத்து தேவர்களுக்கும் பின்னால் தேவேந்திரன் செல்வதையும் பறவை கவனித்தது. பறவைக்கு தேவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.
"சரி, நம் வேலையை பார்ப்போம்" என்று எண்ணி பறவை அருகில் இருந்த மா மரங்களில் இருந்து விழுந்திருந்த மாம்பழங்களை கொத்திக் கொண்டு இருந்தது. வயிறார சில மாங்கனிகளை உண்ட பின்னர் சற்று இளைப்பாற எண்ணி ஒரு மரக்கிளையில் சாய்ந்தது.
அப்பொழுது அனைத்து தேவர்களும் ஆகாயத்தில் ஏதோ பேசிக் கொண்டு தேவலோகத்திற்கு திரும்பிச் செல்வதை உறங்கும் கண்களோடு பறவை கவனித்தது.
பறவை ஒரு நிமிடம் அதிர்ந்து போனது. அதன் அதிர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?.
அனைத்து தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்துகொண்டு நடந்து வரும் காட்சியை கண்டதனால்தான்.
பறவை சற்று அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய போகின்றோமா என்றெல்லாம் பறவை சிந்தித்தது. ஆனால் எமதர்மன் தன்னைக் காணவில்லை என்று பறவை நிதானம் அடைந்தது.
என்ன ஆச்சரியம்!
அடுத்த நொடியே எமதர்மன் தன் தலையை திருப்பி தொலைதூரத்தில் உள்ள கானகத்தில் உள்ள மரக்கிளையில் சாய்ந்து கொண்டிருந்த பறவையை பார்வையிட்டான். அந்த பார்வையே பறவையை நிலை குலையச் செய்தது.
எமதர்மர் சில வினாடிகள் பறவையை நோக்கி விட்டு தேவர்களை பின் தொடர்ந்து சென்று விட்டார்.
இந்த அச்சமூட்டும் சம்பவம் பறவைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை எமதர்மன் என்னைத் தேடி இந்த கானகத்திற்கு வந்து விட்டால் என்செய்வேன்? எங்கே போவேன்? இந்த அச்சத்திலிருந்து எப்படி நான் விடுதலை அடைவேன்?
சிறிது நேரம் சிந்தித்ததில் பறவைக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அது என்னவென்றால் தான் எமனின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் எம்பெருமான் மகா விஷ்ணுவை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.
கண்களை இறுக மூடிக் கொண்டு நாராயணனை அகக்கண்ணால் வழிபடத் தொடங்கியது.
கண்ணில் கண்ணீர் மல்க பரந்தாமனைத் துதி பாடியது பறவை.
பறவையின் இசை கேட்டு இன்பமுற்று நாராயணர் தன் கருட வாகனத்தில் ஏறி பறவையைக் காண கானகத்திற்கு வந்தார்.
"பறவையே! உனது கண்களை திறவாய்! உனது பக்தி மயமான துதியைக் கேட்டு யாம் அகம் மகிழ்ந்தோம்! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்று நாராயணர் புன்னகையுடன் வினவினார்.
பறவை மெதுவாக கண்களைத் திறந்து, "ஐயனே! வைகுண்ட வாசா! உனது வைகுண்டத்தில் எனக்கு ஒரு சிறு இடம் அளிப்பாயா? எம தர்மராஜன் என்னை தன் கண்களால் மிரட்டி விட்டுச் சென்றார். நீ அறியாதது ஒன்றுமில்லை. என்னை நீயே காப்பாற்ற வேண்டும்" என்று நெகிழ்ச்சியுடன் உரைத்தது.
நாராயணரும், "அப்படியே ஆகட்டும்" என்று பறவைக்கு அருள்மொழி மொழிந்தார்.
பறவை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. சில நொடிகளிலேயே நாராயணர் பறவையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.
வைகுண்டத்தை அடைந்த பறவை அளப்பரிய இன்பத்தைப் பெற்றது. நாராயணர் வைகுண்டத்தில் ஒரு குளத்திற்கு அருகில் உள்ள சிறிய பாறையை பறவைக்கு காண்பித்து, "பறவையே! நீ இந்த குளத்தை சுற்றியும், பாறைக்கு அருகிலும் எங்கு வேண்டுமெனிலும் சுற்றித் திரிந்து விளையாடிக் கொள்ளலாம். வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறி விட்டு தன் பத்தினியான இலக்குமியைக் காணச் சென்றார்.
பறவை ஆனந்தம் அடைந்து குளத்திற்கு அருகில் சிறிது நேரம் விளையாடியது. பின்னர் பாறைக்கு பின்னே உள்ள சின்னஞ்சிறு செடிகளில் உருண்டு பிரண்டு இன்புற்றது. ஆனால் சற்று நேரத்திலேயே குளமும் பாறையும் பறவைக்கு சலித்துப் போயின. பெருமாள் சொன்ன இடங்களை தாண்டியது.
பறவை சற்று தூரத்திற்கு பறந்து சென்றது. வைகுண்டத்தின் பரந்து விரிந்த இயற்கை அழகினை கண்டது. குளத்திற்கு சற்று தூரத்திலுள்ள ஒரு பெரிய மாமரத்தை கண்டது. அதன் மேல் பறவை சென்று அமர்ந்தது. சில மாங்கனிகளை உண்டது. சற்று நேரத்திலேயே எங்கிருந்தோ வந்த ஒரு வேடனது அம்பானது அந்தப் பறவையின் இதயத்தை துளைத்தது.
பறவை தன் கண்களில் நீர் மல்க மரத்திலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்பொழுது எமதர்மராஜன் பறவைக்கு அருகில் நடந்து வந்து அமர்ந்து கொண்டார். பறவை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் எமதர்மரிடம், "பிரபு! தாங்கள் என்னை கண்டு விட்டீர்கள் என்று அச்சம் அடைந்து எனது வசிப்பிடத்தை நீங்கி வைகுண்டம் அடைந்தேன். ஆனால் தாமோ இங்கு வந்து எனது உயிரை பறித்து விட்டீர்! விதியை மதியால் வெல்ல நினைத்து இறுதியில் தோல்வியையே சந்தித்தேன். என்னாளிலும் விதியை வெல்ல ஒருவராலும் முடியாது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன்" என்று உரைத்தது.
எமதர்மராஜன் பறவையின் கூற்றைக் கேட்டு மெல்ல சிரித்தார். "அன்பிற்குரிய பறவையே! நான் ஏன் உன்னை மலையிலிருந்து கவனித்தேன் என்று நீ அறிவாயா? நீ உயிர் விடும் தருவாயில் வைகுண்டத்தில் இருக்க வேண்டும் என்பதே உனது விதி! ஆனால் நீ இருந்ததோ இந்த வைகுண்டத்தில் இருந்து தொலை தூரத்திலுள்ள உனது வசிப்பிடத்தில். நீ ஒரு வேளை உனது வசிப்பிடத்தை நீங்கி இங்கே வந்து இருக்காவிடில் நான் உனது உயிரை பறித்து இருக்க இயலாது. என் பணியை நீயே எளிதாக்கி விட்டாய். மதியை செயல்படச் செய்வதும் செயல் இழக்கச் செய்வதும் விதியே ஆகும். ஆனால் ஒன்றை அறிந்து கொள்.
விதி என்றும் சதி செய்யாது. விதி நமக்கு இறுதியில் மிகப்பெரிய நன்மையைத் தரும். இன்று நீ மட்டும் வைகுண்டம் வரவில்லை எனில் இன்னும் பல ஆயிரம் பிறவிகள் எடுத்திருப்பாய். நீ வைகுண்டத்தில் உயிர் துறப்பதால் மறு பிறவி இன்றி இறைவனடி இணைந்தாய்.
எல்லாம் நன்மைக்கே.
விதி என்ன நிகழ்வை நிகழ்த்தினாலும் அதன் சூட்சமத்தைப் புரிந்து கொள்பவரே மதியில் சிறந்தவராவார்" என்று எமதர்மர் எடுத்து உரைத்தார்.
இந்த அற்புத உண்மையைக் கேட்டு பறவை ஆனந்தக் கண்ணீருடன் தன் இறுதி பிறவியிலிருந்து விடுதலை பெற்றது.
இது வெறும் கதை என விட்டு விடாமல் நிஜமான வாழ்க்கையை உணர்ந்தும் தெளிந்தும் வாழ்வோம்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
#வாழ்த்துகள்.
#வாழ்க_வளத்துடன்.
No comments:
Post a Comment