Saturday, March 29, 2025

Meaning of nara in vishnu sahasranamam

நராய நமஹ.....!!!

சென்னையைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் பல நாடுகளுக்குச் சென்று தமது வியாபாரத்தை நன்கு விரிவு செய்துவிட்டு வெற்றியுடன் தாயகம் திரும்பினார். ஆனால் அவருக்குத் தொடர்ச்சியான அலுவல்கள் சலிப்பைத் தந்தன. தனக்குச் சில நாட்கள் ஓய்வு தேவை என்று கருதினார். அதனால் தனக்கென்று சொந்தமாக சிம்லாவில் இருந்த பங்களாவில் ஓய்வெடுப்பதற்காகப் புறப்பட்டார்.
சிம்லாவில் உள்ள பங்களாவுக்கு ஒரு காவலாளியை அந்தத் தொழிலதிபர் நியமித்திருந்தார். அந்தக் காவலாளி, தொழிலதிபரின் முகத்தை இதுவரை பார்த்ததில்லை என்றாலும், மாதா மாதம் இவர் அனுப்பி வைக்கும் ஊதியத்தை மட்டும் தவறாமல் பெற்று வந்தார். அதுமட்டுமின்றி, சிம்லாவைச் சுற்றிப் பார்க்க வருவோர்க்கு பங்களாவை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வந்தார் அந்தக் காவலாளி.
இந்நிலையில், தொழிலதிபர் அந்த பங்களாவுக்கு வந்தார். வேறொரு குடும்பம் வாடகைக்குத் தங்கி இருப்பதைக் கண்டார். காவலாளியை அழைத்து, "எனக்குச் சொந்தமான இந்த பங்களாவில் நீ எப்படி வேறொருவரைத் தங்க வைத்தாய்?" என்று கேட்டார். ஆனால் அந்தக் காவலாளியோ அவர் முதலாளி என்பதையே ஏற்க மறுத்து விட்டார்.

பங்களா தன்னுடையது என்பதற்கு ஆதாரமாகப் பல பத்திரங்களை அந்தத் தொழிலதிபர் காட்ட, அவை எல்லாம் போலிப் பத்திரங்கள் என்று காவலாளி கூறிவிட்டார். தானே அந்தத் தொழிலதிபர் என்பதற்குச் சாட்சியாகத் தனது நண்பர்களை அழைத்து வந்து காவலாளியிடம் சொல்லச் சொன்னார் தொழிலதிபர். ஆனால் அவர்களை எல்லாம் பொய் சாட்சி என்று சொல்லி நிராகரித்து விட்டார் காவலாளி.
இறுதியாக அந்தத் தொழிலதிபர் காவலாளியிடம், "இந்த பங்களா என்னுடையது அல்ல! நான் சிம்லாவைச் சுற்றிப் பார்க்க வந்த சாதாரண பயணி என்றே வைத்துக் கொள்! நான் வாடகைக்குத் தங்க இவ்வீட்டில் ஓர் அறையாவது தர இயலுமா?" என்று கேட்டார். அவரிடமிருந்து வாடகைத் தொகையைப் பெற்றுக் கொண்ட காவலாளி, அவருக்குச் சொந்தமான பங்களாவில் உள்ள ஒரு அறையை அவருக்கே வழங்கினார்.
ஆனால் சாதாரண மனிதரைப் போல வீட்டுக்குள் நுழைந்த அந்தத் தொழிலதிபர், மெல்ல மெல்லத் தனது நடவடிக்கைகளால் தானே அவ்வீட்டின் முதலாளி என்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.

இது திரைப்படத்தில் நாம் பார்த்த கதை ஆயிற்றே! இதற்கும் அனந்தனின் ஆயிரம் நாமங்களுக்கும் என்ன தொடர்பு?
இக்கதையில் வரும் தொழிலதிபர் தான் இறைவன். சிம்லாவில் உள்ள பங்களா தான் நம் உடல். வீட்டின் காவலாளி தான் ஜீவாத்மாவாகிய நாம். இறைவன் என்னும் தொழிலதிபர் ஒன்பது வாயில்கள் கொண்ட வீடாகிய இவ்வுடலுக்கு ஜீவாத்மாவைக் காவலாளியாக நியமித்துள்ளார். இந்த உடலும் ஜீவாத்மாவும் இறைவனின் சொத்துக்கள்.

ஆனால் அந்தக் காவலாளி எப்படி முதலாளியையும் மறந்து விட்டு, அவர் மாதந்தோறும் வழங்கும் ஊதியத்தையும் மறந்து விட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கப் பார்த்தாரோ, அதுபோலவே ஜீவாத்மாவும், தான் இறைவனுக்குத் தொண்டன் என்பதையும் மறந்துவிட்டு, இறைவன் தனக்குச் செய்த நன்மைகளையும் மறந்து விட்டு, இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காக ஏற்பட்ட இவ்வுடலைக் கொண்டு மற்ற அற்ப செயல்களைச் செய்கிறார்.

முதலாளி நேரில் வந்த போதும், அவரை முதலாளி என்று காவலாளி ஏற்காதது போல், இறைவனே நேரில் வந்து, "நான் தான் உனக்குத் தலைவன், நீ எனக்குத் தொண்டன்!" என்று சொன்னாலும் ஜீவாத்மா அதை ஏற்பதாகத் தெரியவில்லை. முதலாளி காட்டிய பத்திரங்களைப் போலி பத்திரங்கள் என்று காவலாளி சொன்னது போல், நாம் இறைவனுக்குத் தொண்டர்கள் என்பதற்குச் சான்றாக இறைவன் காட்டும் வேதம் என்னும் பத்திரத்தைப் போலி என்று சொல்லி ஜீவாத்மா நிராகரிக்கிறார். அந்தத் தொழிலதிபருக்காக அவரது நண்பர்கள் சாட்சி சொன்னது போல், முனிவர்களும் அடியார்களும் இறைவனின் சார்பில் வந்து ஜீவாத்மாவுக்கு எடுத்துச் சொன்னாலும், அவர்களையும் போலி சாட்சி என்று சொல்லி ஜீவாத்மா நிராகரிக்கிறார்.

இறுதியில், அந்தத் தொழிலதிபர் எப்படித் தன்னைச் சாதாரண மனிதனாகக் காட்டிக் கொண்டு வாடகைக்குக் குடியிருப்பதாகச் சொல்லி அவ்வீட்டுக்குள் நுழைந்தாரோ, அதுபோல் இறைவனும் அவருக்குச் சொந்தமான நம் உள்ளத்தில், வாடகைக்குக் குடியிருக்க இடம் கேட்டு நம் உள்ளத்துக்குள் நுழைகிறார்.

நுழைந்தபின் தானே தொழிலதிபர் என்று அவர் மெல்ல மெல்ல நிரூபித்தாற்போல், இறைவனும் தானே நமக்கு எஜமானன் என்பதை மெல்ல மெல்ல உணர்த்தி, நாம் அவருடைய சொத்து என்பதை நமக்குப் புரியவைக்கிறார். அவ்வாறு தன்னை இறைவனின் சொத்து என்று உணர்ந்த ஜீவாத்மாவுக்கு இறுதியில் முக்தியையும் அளிக்கிறார்.

'நர:' என்பது உலகிலுள்ள அறிவுள்ள, அறிவற்ற அனைத்துப் பொருட்களையும் குறிக்கும். அறிவுள்ள பொருட்கள், அறிவற்ற பொருட்கள் அனைத்தையும் தனது சொத்தாகக் கொண்டு விளங்குவதால் திருமால் 'நர:' என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 247-வது திருநாமம். (பெரிய நிறுவனங்களுக்கு அதிபராக இருப்பவரை, அந்த நிறுவனத்தின் பெயரையே அடைமொழியாக இட்டு அழைப்பது போல், நரங்களுக்கு எல்லாம் அதிபதியான திருமாலை 'நர:' என்றே வியாசர் கூறுகிறார்)நராய நம என்று தினமும் சொல்லி வரும் அனைவருக்கும் உயர்ந்த அழியாத
ஞானத்தைத் திருமால் தந்தருள்வார்.

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே. வெங்கடேஷ்

No comments:

Post a Comment