உத்தவகீதையின் சாரம்.....!!!
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் மூலம் கேட்டல், (சிரவணம்) கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் (மனனம்), கேட்டதை மனதில் அசைபோடுதல், அடைந்த ஞானத்தில் நிலை பெறுதல், முதலிய சாதனங்கள் வழியாக ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மவிசாரம் செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமேயான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
இது போன்ற அனாத்மா பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், சப்தம் முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் மூன்று குணங்களின் சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்).
ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அடைந்தவன், உலகாயத சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை. சுகம் வரும் போது அவன் மகிழ்வதில்லை. துயரம் வரும் போது வருந்துவதில்லை. ஆத்மானந்தத்தில் மூழ்கியிருப்பவனுக்கு, உலக விசயங்களினால் உண்டாகும் சுக-துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை.
தொடரும்...
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி லட்சுமி சரண் அவர்கள்.
No comments:
Post a Comment