*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*
அனுஷ்டான வ்யஸனத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். எவ்வளவுதான் ஆத்ம தத்துவத்தைப் பற்றியும் வேதாந்த சாஸ்திரத்தைப் பற்றியும் சொன்னாலும், மீண்டும் மீண்டும் கர்மாக்களைச் செய்து கொண்டேயிருப்பது. "அனுஷ்டான வ்யஸனம்" எனப்படும். கர்மாக்களைச் சரிவர செய்ய வேண்டும் என்றுதான் பகவத்பாதாளும் சொல்கிறார். ஆனால், எதுவரை கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்ற இடத்தில்தான் அவருக்கும் மீமாம்ஸக மதத்தை அனுசரிப்பவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மீமாம்ஸகர்களைப் பொருத்த வரையில் கர்மாக்களை வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டும். பகவத்பாதாளின் கண்ணோட்டத்தில் அவற்றை ஓரளவிற்குச் செய்ய வேண்டும். பிறகு,
த்ருடதரம் கர்மஸு ஸந்த்யஜ்யதாம்
என்றவாறு இருந்துவிடலாம். ஆனால், அனுஷ்டான வ்யஸனம் இருப்பவர்களுக்கு கர்மாக்களை வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும். இப்போது ஒரு கேள்வி கேட்கலாம். "கர்மாவைச் செய்வது தவறு என்கிறீர்களே! அப்படியென்றால் ஸந்தியாவந்தனம் செய்வதும் தவறு தானே! ஸந்தியாவந்தனம் செய்யக் கூடாது என்கிறீர்களா?" இவ்வாறு யாராவது கேட்டால், இக்கேள்விகளுக்குப் பதில் கூற நான் தயாராக இல்லை. ஏனென்றால், இத்தகைய கேள்விகளைச் சோம்பேறிகள்தான் கேட்பார்கள். ஆத்யாத்மிகமான இலட்சியத்தைச் சாதிக்க வேண்டிய மனிதன் சாதாரணப் பலன் தரும் சாதாரணமான அனுஷ்டானத்தைச் செய்வதிலேயே காலம் கழிப்பது சரியில்லை என்றுதான் நான் கூறுகிறேன். அனுஷ்டான வ்யஸனம் உள்ளவனுக்கு என்ன தொந்தரவு என்றால், அது அவனுக்கு மறு பிறவியைத் தர ஏதுவாகும். செய்த கர்மாவிற்கு பலன் வராமலிருக்க முடியாது. பலனை அனுபவிப்பதற்கு சரீரம் வந்துதானாக வேண்டும். ஆகவேதான் அனுஷ்டான வ்யஸனம் ஒரு பந்தகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment