Courtesy Smt Dr Saroja Ramanujam
கண்ணன் காட்டிலிருந்து திரும்பி வருகையில் மாலைகளாகத் தொடுக்கப் பட்ட மயில் தோகைகள் அணிந்து பச்சிலைகள் அடர்ந்து விளங்கும் ஒரு மரம்போல விளங்கினான். மாடுகள் அவன் நிழலை மரநிழலாக எண்ணியவோ என அவன் நிழலிலேயே இருந்தன.
அந்த மயில் தோகைகளின் ஒளியால் அவன் அநேக இரத்தினங்கள் ஒளிவீசும் மரகத மலையென தோன்றினான். அது பார்ப்பவர்களுக்கு மகேந்த்ரஜாலத்தை விளைவிப்பதாயிற்று. (மயில் தோகைகள் மாயம் செய்யும் மந்திரவாதிகள் கையில் காணப்படும் அல்லவா.)
யசோதை கண்ணன் தலையில் அணிந்துள்ள மயிற்றோகைகளைத் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தாளாம். இந்த ஸ்லோகத்தில் கண்ணனை இரு அடைமொழிகளால் குறிப்பிடுகிறார் தேசிகர். 1. முக்தாங்கனா மோகன வம்சிக:, பேதைப் பெண்களை குழலாலே மயங்கச்செய்கிறவன், 2. மநீஷிணாம் மாங்களிக:, அவனை நினைப்போருக்கு மங்களத்தை செய்கிறவன். அதாவது மாயையில் கட்டுண்டோருக்கு மயக்கத்தையும் அந்த மாயையை வென்றோர்க்கு நற்பயனையும் அளிப்பவன் என்ற பொருள்.
மேலும் அவன் மார்பில் தொங்கும் மயிற்றோகை மாலையானது அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீதேவியின் நிறத்தையே கருமையாக்கி விட்டதாம்.
கண்ணன் குழலூதி வரும்போது கோபியரின் கடைக்கண் பார்வைகள் கூறிய மொழிகளுக்கு குழலினால் மறு மொழி கூறுவது போன்று இருந்ததாம்.
கோபால விம்சதியில் தேசிகர் கூறுகிறார் , கோபியர் அவனுடைய குழல் நாதத்திற்கேற்ப தங்கள் வளைகளால் தாளமிட்டனர். அது குழல் அவற்றோடு சம்பாஷிப்பதைப் போல் இருந்தது என்கிறார்.
அதோடு மட்டும் இல்லாமல் உலகுக்கெல்லாம் ஆதாரமாய் ராகக்கடலான கண்ணன் உலகுக்கே பற்றை உண்டுபண்ணுபவன் போல விநோதமாக ஆடி வந்தான். அதை ஆபீரநாட்டியம்(ஆயராட்டம்) என்னும் தேசிகர் அது தும்புரு, நாரதர் போன்றவர்களாலும் கற்கப்படாதது என்கிறார்.
அதைக் கண்ட கோபியர் மனம் எவ்வாறு இருந்தது என்றால்,
யாரேனும் ஏதாகிலும் சொல்வாரோ என்ற எண்ணத்தால் உண்டான வெட்கம் என்ற மணல் திட்டில் ஏறி நின்றும் கண்ணனின் முகமாகிய சந்திரனால்அலைக்கப்பட்ட காதல் கடலில் இருந்து வெளியேற பிடிப்பு ஒன்றும் இல்லாமல் இருந்தனராம்.
இந்த இடத்தில் ஒரு ஸ்லோகம் பின்னர் ராசக்ரீடை (எட்டாம் அத்தியாயம்) பற்றி வரப்போகும் வர்ணனைக்கு ஒரு முகவுரை போல உள்ளது.
விமோஹனே வல்லவகேஹிநீநாம் ந பிரம்மச்சர்யம் பிபிதே ததீயம்
ஸம்பத்ச்யதே பாலக ஜீவனம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் ஸமக்ஷம் (4.64)
இதன் பொருள், கோபியருடன் விளையாடுவதால் அவனுடைய பிரமச்சர்யத்திற்கு ஒரு பங்கமும் இல்லை . பின்னர் இந்த பிரம்மசர்யத்தின் சக்தியால் மகான்கள் கண்டுகொண்டுள்ளபோதே பரீக்ஷித் என்ற குழந்தை உயிருள்ளதாக்கப்படப் போகிறது.
மகாபாரதத்தில் கிருஷ்ணன் 'யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத் ஸத்யம் ச மயி திஷ்டதி அவயக்தம் மமைச்வர்யம் தேன ஜீவது பாலக:' "என் பிரம்மச்சர்யம் சத்தியமானால், என்னிடம் சத்தியம் உள்ளதானால், என் பிரபாவம் உண்மையானால் இந்தக் குழந்தை உயிரூட்டப்படுமாக." என்று கூறுகிறார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அப்பைய தீக்ஷிதர் , ஸர்வாத்மனஸ்தஸ்ய ஸ்வ சரீராதிரிக்த சரீராபாவாத்.,' எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவான அவனைத் தவிர்த்து வேறு சரீரம் இல்லை, அதனால் பிரம்மச்சர்ய விரோதம் ஏற்படாது என்கிறார். இது பற்றிய விரிவான விளக்கம் ராசக்ரீடை அத்தியாயத்தில் காண்போம்.
.
No comments:
Post a Comment