அறுபத்து மூவர் - #நங்கநல்லூர்_J_K_SIVAN
திருமூல நாயனார்
தமிழ் யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் நிச்சயம் என்னைப்போல திருமூல நாயனார் விசிறிகளாக இருப்பார்கள். திருமூலர் 18 சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவராக கோவில்களில் சிலை கொண்டவர். நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் அவரை புகழ்கிறார். நிச்சயம் 5000 வருஷங்களுக்கு முந்தியவர். அவரது 3000 பாடல்களும் திருமந்திரம் என்று புகழ் பெற்றவை. வருஷத்துக்கு ஒன்று என்று 3000 வருஷங்கள் வாழ்ந்தவர் என்கிறார்கள். திருமூலர் திருமந்திரம் பன்னிரு திரு முறைகளில் 10வது திருமுறை. இவ்வளவு பெருமைகள் யாருக்கு இருக்கிறது?
திருமூலருக்குத் தெரியாததே ஒன்றுமில்லை. வைத்தியம், யோகம், ஞானம், சிவபக்தி, ஆன்ம தத்வம், உலக வாழ்க்கை, எல்லாம் நாலு வரிகளில் ரொம்ப எளிமையாக சொல்பவர்.எனக்கு ரொம்ப பிடித்த எளிய தமிழ் புலவர்.
ஒரு கதை சொல்கிறேன்.
கைலாசத்தில் நந்தியம்பெருமானின் சீடர்களில் ஒருவர் பரமேஸ்வர பக்தர் சிவயோகி. அஷ்ட சித்திகள் கைவரப் பெற்ற பரம ஞானி. அகஸ்தியரின் நண்பர் என்பதால் அவரோடு பொதிகை மலையில் சிலகாலம் தங்குவதற்கு கைலாசத்திலிருந்து கிளம்பி தெற்கே நடந்தார் . வழியில் கேதார்நாத், நேபாளத்தில் பசுபதிநாத் ஆலயம், காசி, விந்தியமலை,காளஹஸ்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவதிகை, பெரும்பற்றப் புலியூர்,சிதம்பரம் போன்ற பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து சிவனை வணங்கினார்.
காவேரி நதியைப் பார்த்து விட்டு, அதில் ஸ்னானம் செய்து தென்கரையில் பார்வதி தேவி கன்றுக் குட்டியாக சிவனை வழிபட்ட திருவாவடு துறை சென்றார். அங்கே சிவதரிசனம் செய்து விட்டு அங்கிருந்து செல்லும் வழியில் சாத்தனூர் என்று ஒரு கிராமம்.அதில் ஒரு சோலை. அங்கே ஏன் நிறைய பசுக்கள் கதறி அழுகிறது?பாவம் அந்த பசுக்களை அன்போடு மேய்க்கும் மூலன் என்பவன் ஒரு கொடிய விஷப்பாம்பு தீண்டி அங்கே மரணமடைந்து கிடந்தான். அவன் உடம்பை சுற்றி சுற்றி வந்து நக்கியவாறு பசுக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன. சிவயோகியின் மனது இதைக் கண்டு இளகியது. ''அடேடே, இந்த மூலன் உயிர் பெற்றால் தான் பசுக்களின் துயரம் தீரும், நான் உதவினால் என்ன? கூடு விட்டு கூடு பாயும் சித்து அறிந்தவர் அந்த யோகி என்பதால் தனது உடலை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு மூலன் உடலில் அவர் ஆன்மா புகுந்தது.
மூலன் எழுந்து உட்கார்ந்தான். பசுக்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்து புல் மேய்ந்தன. சாயங்காலம் பசுக்களுடன் சாத்தனூருக்கு திரும்பினான். தனது வீட்டுக்கு திரும்பாமல் மூலன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அவனைத் தேடிக்கொண்டு அவன்மனைவி வந்தாள். அவளை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அதிர்ச்சியுற்ற அந்தப் பெண் ''மூலா, உனக்கு என்ன ஆயிற்று சொல் ?'' என்கிறாள்.
''அம்மா நான் உன் கணவன் அல்ல'' மூலன் ஊர்க்கோடியில் ஒரு மடத்தில் போய் உட்கார்ந்தான். ஊர் பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணின் வழக்கை கேட்டது. பஞ்சாயத்தார் மூலனோடு பேசிய பிறகு மூலன் உடலில் இருப்பவர் ஒரு முற்றும் துறந்த ப்ரம்ம ஞானி என்று அந்தப் பெண் உட்பட ஊரே அறிகிறது. ஊரும் உலகமும் இனி அவரை திருமூலர் என அறியும்.
திருமூலர் திருவாவடுதுறை சிவன் கோவிலில் மேற்கு பக்கம் மதில் சுவர் அருகே ஒரு அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகத்தில் ஈடுபட்டார். திருமந்திர மாலை உருவாகியது. சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நால்வகை நன்னெறிகளை விளக்கினார்.
''ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே' (அர்த்தம் அப்புறம் சொல்கிறேன்)
இப்படியாக திருமந்திரம் தோன்றியது. அப்புறம் வருஷத்துக்கு ஒன்று. 3000 திருமந்திர பாடல்கள் பாடிவிட்டு திருமூலர் கயிலை திரும்பினார்.
No comments:
Post a Comment