சிவ சொத்து குல நாசம் – நங்கநல்லூர் J K SIVAN
இது ஒரு சக்தி மிக்க பலம் வாய்ந்த சொல். இதைப் பற்றி அநேகர் விதம் விதமாக சம்பவங்களை சொல்லி கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். இன்றும் இது பொருந்துமா? கண்ணெதிரே பல அக்கிரமங்கள் நடக்கிறதே. அந்த சிவனுக்கு கண்ணில்லையா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். பதில் சொல்ல முடியவில்லை. சிவன் சக்தி இழந்து விட்டானா, அல்லது அவனுள் உறையும் சக்தியையே இழந்து விட்டானா? ஏன் கொள்ளையடித்தவர்கள், திருடியவர்கள் கோவிலையே இடித்தவர்கள், விற்றவர்கள், அதைக் கடையாக்கியவர்கள், வீடாக்கியவர்கள், உண்டியலை உடைத்து திருடுபவர்கள், சிலையை திருடியவர்கள், உடைத்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள்?? இந்த கேள்விக்கு ஒரே பதில் ஏற்கனவே முன்னோர்கள் சொன்னது தான். அரசன் அன்று கொல்வான் . தெய்வம் நின்று கொல்லும். ஒரு நிமிஷத்தில் கழுத்தை வெட்டி விட்டால் துன்பம் அதோடு போச்சு. நாம் நினைப்பது போல் தவறு செய்தவர்கள் ஆனந்தமாக இல்லை, தூண்டில் புழுவாக துடிக்கிறார்கள். ஆசை ஆத்திரம், அறிவின்மை அவர்களை ஆபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக துடிக்க வைத்து வாட்டும். கொஞ்சம் கொஞ்சமாக அடுப்பில் அப்பளத்தை வாட்டுவது போல், கொதிக்கும் எண்ணையில் வடை செந்நிறம் பெறும் வரை குதிப்பது போல், இட்டிலி ஆவியில் வெந்து போவதுபோல் தலை தலைமுறையாக வட்டியும் முதலுமாக பழி வாங்கப்படுவார்கள். சரித்திரம் பலபேரை இப்படி காட்டியிருக்கிறது. வெளியே தெரியவில்லை அவ்வளவு தான். அனுபவஸ்தர்கள் நிதர்சனமாக இது நடந்ததை, நடப்பதை கண்கூடாக பார்த்தவர்கள் கதை கதையாக சொல்வார்கள். சிவன் கோவில் சென்றால் அங்கே சில நிமிஷங்கள் உட்கார்ந்து விட்டு தான் வரவேண்டும். எழுந்திருக்கும்போது பின்புறம் துணியை தூசியில்லாமல் கூட தட்டிவிட்டுத் தான் புறப்படுவது வழக்கம். விபூதியைக் கூட அங்கேயே பூசிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வராதவர்கள் உண்டு. பயமே வேண்டாம். சிவன் பிரசாத விபூதியை தாராளமாக வீட்டுக்கு கொண்டுவரலாம். அனைவருக்கும் கொடுக்கலாம். அது ரக்ஷை. மந்திரமாவது நீறு. சர்வ வியாதி நிவாரணமாக எத்தனையோ பேர் வாழ்வில் வைத்யநாதன் , வைத்தீஸ்வரன் விபூதி இன்றும் பயனளிக்கிறது. நம்பாதவர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்களை நம்ப வைப்பது நமக்கு வேலையும் இல்லை. நம்ப வைக்கவேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள் ஊட்டி நம்பிக்கை மனதில் வளராது. தானாக அனுபவித்து உணர்ந்து நெஞ்சில் வளர்வது தான் தெய்வ நம்பிக்கை.
சிவன் பொது சொத்து. எல்லோருக்கும் உண்டானதை தனி ஒருவன் ஆக்கிரமிக்க முயல்வது ஆணவம். அக்கிரமம். அதிகாரத்தால், அதீத செல்வாக்கால், சமூக பலத்தால், சக்தியால் தவறிழைக்கலாம். அதற்கு நிச்சயம் பதில் மரியாதை உண்டு. கொஞ்சம் கூடவே கிடைக்கும். நமது முன்னோர்கள் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே என்ற ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தவர்கள். எவன் சொத்துக்கோ ஆசைப்படாத என்றபோது சிவன் சொத்துக்கு ஆசைப்படுபவ னை ஆதரித்தா பேசுவார்கள்…
எங்கோ படித்தேன்……."சுப்பிரமணிய பிள்ளை. நூறு வருஷங்களுக்கு முன் சொந்த ஊரில் இருந்து பிழைக்க நாஞ்சில் நாட்டு வீரநாராயண மங்கலத்துக்கு வந்தார். மாடு மேய்த்து, வடக்கு மலையில் இருந்து விறகு சுமந்து, புல் சுமந்து, சக்கடா வண்டி அடித்து, அறுவடையாகும் காலத்தில் அறுத்தடிப்புக் குழுவின் கூறுவடியாக இருந்து, பெண்ணும் கட்டி, ஊரின் ஈசான மூலையில் இரண்டே முக்கால் சென்டில் ஒரு குடிசை வீடு வாங்கி னார். அவர் பரம்பரை அங்கே வாழ்ந்தது. அறுவடைக் காலங்களில் கூறுவடியாக இருந்து, வயல் அறுத்தடித் துக் கொத்து அளக்கும்போது நெல் மிச்சம் வரும். அதைச் சேர்த்து, ஊரின் நடுவே முத்தாரம்மன் கோயில் கட்ட முயற்சித்தார். ஒருமுறை கோயில் முதலடிகளிடம் கணக்கு கேட்டபோது, அடிவயிற்றில் கத்திக் குத்து பட்டு சாகும் காலத்தில், ''கோயிலுக்கு முடிஞ்சதைச் செய் யுங்க… எந்தக் காலத்திலேயும் முதலடிப் பொறுப்பு ஒத்துக்கிடப் பிடாது. சிவன் சொத்து குல நாசம்'' என்று சொல்லி மறைந்தார்..
அவர் வாழ்ந்த வீடும் அவர் சொல்லிவிட்டுப்போன வார்த்தை "சிவ சொத்து குல நாசம் மட்டும் அவர் வம்சத்தின் நெஞ்சில் இருந்தது. அவர் வார்த்தை வீண் போகவில்லை. சிவ சொத்தை அபகரித்தவர்கள், ஒவ்வொருவருமே தத்தம் வாழ்வில் வெவ்வேறு துன்பத்தை அனுபவித்தவர்கள், வம்சமே அழிந்தவர்கள், அடுத்த தலைமுறை வினோத குறைகளோடு வாழ்ந்து தவித்து, சகல சொத்துக்களும் பறிபோய் ஓட்டாண்டி யாகி அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லாமல் போனவர்கள் இவ்வாறு தண்டனை பெற்றார்கள். நிறைய பேர் நிறைய சொல்வார்கள். உள்ளே போய் விவரம் சேர்க்க வேண்டியதில்லை. மனசாட்சி ஒன்றே போதும். அதுவே கொன்றுவிடும்.
"எல்லாம் சிவமயம் எனக்கு" என்று அனைத்திலும் சிவனைக் கண்டுணர்பவர்கள், எல்லாமே சிவன் சொத்து என்றே உணர்பவர்கள். எவர் பொருளுக்கும் ஆசைப்பட மாட்டார்கள். திருடிப் பொருள் சேர்க்க ஆசைப்பட மாட்டார்கள். உழைக்காமல் கிடைக்கும் எதுவொன்றையும் ஏற்க மாட்டார்கள்.
ஆதி காலத்தில், சித்தர்கள், காடுகளிலும் மலைக் குகையிலும் "தவம் " இருப்பார்கள்.நீர், உணவின்றி பல நாட்களாக மூச்சடக்கி வாழ்ந்த சித்தர்களுக்கு, காடுகளில் கிடைத்த மூலிகைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.அதில் ஒரு வகையான மூலிகை, இராஜ மூலிகை. இந்த மூலிகையை சிமிலியில் திணித்து ஆழமாக உறிஞ்சுவார்ககள். இது, அவர்களின் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி அமைதியும் ஆழ்ந்த தியானத்தையும் கொடுக்கும்.இந்த இராஜ மூலிகையே சிவன் சொத்து.
எந்த கோவில் சொத்து மட்டுமல்ல, மற்ற எவன் சொத்தையும் உடல் உழைப்பில்லாமல் தவறான முறையில் அடைந்தால் குலநாசம் தான்!
சிவனின் சொத்து அவன் அடியார்கள்.. அவன் அடியார்களுக்கு ஒரு பாவம் செய்தால் அவர்கள் மனம் வருந்தினால் , கெடுதல் செய்தவர்களில் குலத்தையே அது அழித்துவிடும் என்பது நம்பிக்கை.
சிவன் சொத்து என்பது உலகினை குறிக்கும் உலகினை செய்தவன் என்பதால் அதாவது நீர் நிலம் காற்று ஆகாயம் போன்றன அந்த உலகினுக்கு தீங்கு செய்தால் நமது குலமே நாசமாகும்..யாருடைய சொத்தை எடுத்தாலும் தண்டனைை நிச்சயம். சிவன் சொத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
சிவன் சொத்து என்றால் அது சிவன் கோயில் சொத்து மட்டுமல்ல. சிவம் என்றால் கடவுள். அன்பே கடவுள், அன்பே சிவம் சிவம் என்றால் தூய ஒளி. மெஞ்ஞானம், சிவஅறிவு பெற்றால்சிவத்துடன் ஒன்றிவிட்டால் அத்தோடு பிறப்பு (குலந் தழைத்தல்) நின்று விடும். பிறவித் துன்பமும் நீங்கும். இதைத் தான் "சிவன் சொத்து குல நாசம்"என்றும் சொல்கி றார்கள்.
1014 ஆம் ஆண்டு முகமது கஜினி இந்தியாவின்மீது படையெடுத்தார். 18 முறை மேல் இந்தியாவுக்குள் வந்து சோமநாதபெரம் சிவன் கோவில், ஆசிரமங்கள், பொது சொத்துக்கள் மற்றும் கிடைத்த எல்லாவற்றையும் ஆப்கானிஸ்தான் கொண்டு போனான். ஆப்கானிஸ் தான் நாட்டை நிறுவிய அகமது ஷா அப்தலி 1771 ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள தோற்கடித்தான், அவனும் பல செல்வங்களை கொண்டு போனான்.வரலாற்று ரீதியாக பார்க்கும்போது ஆப்கா னிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு, முக்கியமாக இந்துக்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள்.பாகிஸ்தான் ஒருகாலத்தில் பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்து வெள்ளையர்கள் நமக்கு சுதந்திரம் அளித்துவிட்டு வெளியேறும்போது பிரிக்கப்பட்டது. ஹிந்துக்களை அவர்கள் நம்பிக்கைகளை, அவர்கள் வழிபடும் ஆலயங்க ளை, விக்ரஹங்களை உடைத்து கொள்ளைய டித் தவர்கள் இன்று சுபிக்ஷமாக வாழ்கிறார்களா?? கண்கூடாக பார்க்கிறோமே.அன்பு பக்தி பாசம் நேசம் இது தான் நம்மை ஒன்றிணைக்கும். அதுவே நமக்கு பலம் தரும். அதுவே நம்மை ரட்சிக்கும். தெய்வம் மனித உருவத்தில் அப்போதைக்கப்போது நம்மை நல்வழிப் படுத்த வரும். இன்றும் சிலரை அப்படித்தானே பார்க்கிறோம்.
No comments:
Post a Comment