Courtesy: Dr. Smt. Saroja Ramanujam
ராசக்ரீடை உட்பொருள்
கோபியர் கண்ணனை சூழ்ந்து நிற்கின்றனர். அவன் அவர்களுக்கு எப்படிக் காட்சி அளித்தான் என்றால் தேயாத சந்திரன் போலவும் கரும்புவில்லை விடுத்து குழலை ஏந்திய மன்மதன் போலவும் தோன்றினானாம்.
ராசக்ரீடையை வர்ணிக்கும் முன் தேசிகர் அதன் உள்ளார்ந்த பொருளை விளக்கி அது வெறும் தேகம் சம்பந்தப்பட்டது அல்ல என்று உணரச்செய்கிறார்.
அதாவது கோபியர் உண்மையில் தேவநங்கையர் என்றும் கண்ணன் இடைய வேஷம் பூண்ட பகவானே என்றும் கூறி எல்லாம் ஒரு நாடகம் என்று தெரிவிக்கிறார்.
கண்ணன் கோபியரிடம் கொண்ட மையலினால் அவர்களுடன் களிக்கவில்லை. ஏனென்றால் அவன் எல்லோருள்ளும் உறையும் ஆத்மாவே ஆவான். இந்த லீலையானது யோகியர் மட்டுமே அறியக் கூடியது என்கிறார். கோபியர் லோக தர்மத்தைக் கைவிட்டு பெரியோர்களை மதிக்காமல் கண்ணனை வந்தடைந்தது என்பது குற்றமல்ல. ஏனென்றால் சாமான்ய தர்மத்திற்கும் விசேஷ தர்மத்திற்கும் வேறுபாடு உண்டு. பகவானை அடையும் நோக்கம் விசேஷ தர்மம். அதற்காக உலக வாழ்க்கை த்ரமத்தை விடலாம் என்கிறது சாஸ்திரம். பின்னர் கண்ணன் கீதையில் சொல்லப் போகும் உலகப் பற்று ஒழித்தற்கு இது உதாரணம்.
பீஷ்மர் யுதிஷ்டிரரிடம் கூறியது ,
ஏஷ மே ஸர்வதர்மாணாம்தர்மோ அதிகதமோ மத:
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சேத் நர: ஸதா .
தாமரைக்கண்ணனாகிய நாராயணனை துதிப்பதும் பூஜிப்பதும்தான் என் எண்ணப்படி எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மம் என்று ஐந்தாவது கேள்வியான எது உயர்ந்த தர்மம் என்றதற்கு பதில் கூறுகிறார்.
கலியுகத்திலும் மீரா, ஆண்டாள் இதற்கு உதாரணம். முனிவர்களும் அடையமுடியாத பகவானின் அருகாமை கோபியருக்குக் கிடைத்தது அவனுடைய சௌலப்யம் சௌசீல்யம் வாத்சல்யம் இவையே காரணம். இது பராபக்தி ,பரபக்தி அல்ல.
பாகவதத்தில் சுகர் கூறினார்.
பகவான் ஆத்மாராமராக , அதாவது ஆனந்தமே வடிவானராகிலும், எத்த்னை கோபியர் இருந்தனரோ அத்தனை வடிவு கொண்டு அவ்ர்களுடன் தன் ப்ரதிபிம்பத்துடன் விளையாடும் குழந்தையைப் போல் விளையாடினார்.
இதைக் கேட்டும் உண்மை விளங்காதவனாக பரீக்ஷித் சுகரை நோக்கிக் கூறினான்.
"தர்மத்தின் மரியாதைகளை நிரூபிப்பதற்காக அவதாரம் எடுத்தவர் எவ்வாறு பிறர் மனைவிகளைத் தீண்டும் அதர்மத்தை செய்தார்.?"
இங்கு பரீக்ஷித் ஒரு விஷயத்தை மறந்து விட்டான்.அது என்னவென்றால் கண்ணனுக்கு பத்து வயது என்பதை.
சுகர் கூறிய பதில்.
"கோபிகளுக்கும் அவர்களுடைய கணவர்களுக்கும் உடல் படைத்த எல்லோருக்கும் உள்ளே எவர் உறைகிறாரோ அந்த சாக்ஷியாகிய பகவானே லீலை புரிய இங்கு இந்த உடலுடன் தோன்றி இருக்கிறார். (கோபிகளுக்கும் அவர்கள் கணவன்மார்களுக்கும் ஆத்மாவாக உள்ளவன் எப்படி பரபுருஷன் ஆவான். அவன் பரமபுருஷன் அல்லவாஎன்பது இதன் பொருள்)
அவருடைய மாயையால் மோஹமடைந்த கோகுல வாசிகள் தங்கள் மனைவிமார் தங்களுடன் இருப்பதாகவே கருதினர்.
கோபஸ்த்ரீகளுடன் ஸ்ரீ க்ருஷ்ணன் புரிந்த இந்த லீலையை எவன் ஸ்ரத்தையுடன் கேட்கிறானோஅல்லது வர்ணிக்கிறானோ அவன் விரைவில் பகவானிடம் சிறந்த பக்தியை அடைந்து ஹ்ருதயத்தில் உள்ள காமத்தை ஒழித்து விடுவான் எனக்கூறினார் சுகர்.
தத் க்ரது ந்யாயம் என்பது உபநிடதங்களில் சொல்லப்பட்டது.அதாவது ஒன்றை தீவிரமாக நினைந்தால் நாம் அப்படியே ஆகிவிடுவோம் என்பது.ஆனால் பக்வானின் விஷ்யத்தில் இதற்கு எதிர்மறையான விளைவு.
அவன் உரலில் கட்டுண்டதை நினைத்தால் நம் பிறவித்தளை விடுபடுகிறது.வெண்ணைதிருடியதை நினைத்தால் மனதில் உள்ள கள்ள எண்ணங்கள் போய் விடுகின்றன.ராஸ்க்ரீடையை நினைத்தால் காம ஜயம் ஏற்படுகிறது.
கோபியர் எங்கும் கிருஷ்ணனையே காண்கிறார்கள் அதனால் அவர்களுடைய கணவர், புத்திரன் மற்றவர்களிடம் அன்பு பெருகிற்றே தவிர குறையவில்லை. இதைப் போல பரிபக்குவமான பக்தனுக்கு உலகமே ப்ருந்தாவனம்.எல்லாமே ராசக்ரீடை.
கோபியர் கண்ணன் தங்கள் அருகாமையை விரும்புகிறான் என்று ஒரு நொடி கர்வம் அடைந்த போது அவன் மறைகிறான். தேசிகர் அவன் அருகில்தான் இருந்தான், மறையவில்லை ஆனால் அவர்கள் கண்களில் இருந்து மறைந்தான் என்கிறார். பகவான் எப்போதும் நம் அருகில்தான் இருக்கிறான் ஆனால் நான் என்னும் அகந்தையால் அவனை நாம் அறிவதில்லை.
கண்ணைக் காணாமல் வருந்திய கோபியர் அவனுடைய குணங்கள் லீலைகள் இவற்றைப் பற்றி பாடினர். இதுவே பாகவதத்தில் கோபிகாகீதம் என்று காணப்படுகிறது. தேசிகர் இதை இரண்டு ஸ்லோகங்களில் மட்டுமே கூறுகிறார். அவர்களுடைய கீதம் காடு முழுவதும் எதிரொலித்ததாம். உபநிஷத்தின் வாசத்தைக் கொண்ட அந்த கீதம் ஞானிகளுக்கும் சாந்தியை அளிப்பதாக ஆயிற்று என்கிறார்.
ரசோ வை ஸ: என்கிறது உபநிஷத். அதாவது பரமானந்த ரஸம் என்பது அவனே அதனால் ரஸானுபவத்தில் ஊறிய கோபியரின் கீதம் உபநிஷத்திற்கு சமமாக ஆயிற்று.
பகவான் அவர்கள் முன் தோன்றினான் . பக்தியை முற்றச் செய்வதற்கு மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு பின்னர் தோன்றுகிறான் என்கிறார் தேசிகர். அவன் எவ்வாறு தோன்றினான் என்பது பாகவதத்தில், 'தாஸாம் ஆவிரபூத் செளரி: என்ற ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
அதை ஒட்டியே தேசிகர் கண்ணன் மலர்ந்த தாமரை போல் சிரித்தமுகத்துடன், பீதாம்பரம் அணிந்து மன்மதனையும் மயக்கும் வடிவில் காட்சி அளித்தான் என்கிறார். யோகி: அலக்ஷ்ய:, யோகிகளாலும் காணமுடியாதவன் கோபியருக்கு ப்ரணயாபராதீ , குற்றம் செய்த அன்பன் எனத் தோன்றினான்.
பிறகு ராசக்ரீடை ஆரம்பமாகிறது. தேசிகர் இதை இரண்டு ஸ்லோகங்களில் கண்ணன் பல வடிவம் எடுத்து அவர்கள் எல்லோருடனும் கை கோர்த்து ஆடினான் என்று சுருக்கமாக வர்ணிக்கிறார்.
லீலாசுகர் எட்டு ஸ்லோகங்களில் ராச்க்ரீடையை வர்ணிக்கிறார் . முதல் ஸ்லோகம்,
அங்கனாம் அங்கனாம்,அந்தரே மாதவோ
மாதவம் மாதவம்அந்தரே அங்கனா
இத்தம் ஆகல்பிதே மண்டலேமத்யக:
ஸஞ்சகெள வேணுனா தேவகீ நந்தன:
இரண்டு கோபியரிடையே ஒரு கண்ணன், இரண்டு கண்ணனிடையே ஒரு கோபி , இப்படி உள்ள வட்டத்தின் மத்தியில் கண்ணன் நின்று குழல் ஊதினான்.
தேசிகர் கூறுகிறார் ,
பதாஸ்ரிதானாம் ப்ரமசாந்திஹேது: ப்ரியாஸஹஸ்ரம் ப்ரமயாம்ஸ்சகார
தன் பாதம் சரண் அடைந்தோரின் மாயையை(ப்ரமா) நீக்கும் பகவான் கோபியரை சுழலச்(ப்ரமா) செய்தான்.
கோபியர் சுழன்று ஆடியது பகவான் தன் மாயையால் ஜீவர்களை ரங்கராட்டினத்தில் போன்று சுழல வைப்பதற்கு உதாரணமாக விளங்கிற்று.
' ப்ராமாயன் சர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா,' (கீதை)
அவர்கள் சுழன்று சுழன்று ஆடியதைப் பார்ப்போருக்கு ஒரு சக்கரம் இடைவெளியே தெரியாதவாறு சுழல்வதைப் போல இருந்தது. அதைக்கண்டு தேவலோகத்தில் இருந்து பூமாரி பொழிய தேவ துந்துபிகள் முழங்கின. அப்சர நங்கையரும் ஆடினர்.
இவ்வாறு வெகு நேரம் ஆடியபின் கண்ணன் தரையில் உட்கார கோபியர் அவனுக்கு இலைகள் மலர்களுடன் கூடிய கிளைகளால் விசிறினர். அப்போது கண்ணன் மயிலகள் சூழ்ந்த மலைபோல விளங்கினான் என்று கூறுகிறார் தேசிகர்.
பின்னர் கண்ணன் கோபியருடன் ஆடிய களைப்புத் தீர யமுனையில் இறங்கினான். இதை தேசிகர் அழகாக வர்ணிக்கிறார்.
கண்ணன் முகம் நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரனை ஒத்து இருந்தது. அந்த பிரகாசம் இருளைப போக்குவதாகவும் அவன் கரிய கண்கள் அறியாமை என்னும் இருளைப் போக்குவதாகவும் இருந்தது.அவனுடைய முகம் என்னும் நிலவு பூத்ததும் கோபியரின் மனத்தில் அன்பெனும் அலைகள் ஆர்ப்பரித்தன. நதியில் உள்ள தாமரைகள் அவன முகமாகிய சந்திர்நைக்கண்டு கூம்பின.
கண்ணனும் கோபியரும் ஒருவருக்கொருவர் நீரைப்பீச்சி விளையாடினர். கண்ணன் நீரைத்தெளிக்கையில் கோபியரின் கண்களாகிய தாமரைகள் கண்ணன் முகமென்ற நிலவு உதிக்கையில் மூடின. யமுனையின் கருநிற நீர் அவர்கள் மேனியில் இருந்த சந்தனத்தின் நிறமும் குங்குமத்தின் நிறமும் கங்கையும் சோனா நதியும் வந்து கலந்தது போல் இருந்தது. (கங்கையின் வெண்மை சோனானதியின் சிகப்பு நிறம்)
கண்ணனின் சேர்க்கையால் யமுனையும் தன் வாழ்வின் பயனை அடைந்து போலத் தோன்றிற்று. அவ்வளவு பெரும் நதியில் இறங்கியதால் நீர்ப் பரப்பு உயர, தாமரை மலர்கள் அவர்களின் அழகைக் கண்டு வெட்கியதைப் போல நீருள் அமிழ்ந்தன
.தன் மேல் நீர் தெளிக்கப்பட்டபோது கண்ணன் தன் கண்களை மூடிப் பின் திறந்தது இரவும் பகலும் மாறி மாறி வருவது போல் இருந்தது. பகல் என்பது பகவான் கண்களைத் திறப்பது, அதாவது சிருஷ்டி. இரவு என்பத அவன் கண்களை மூடி யோகநித்ரையில் ஆழ்ந்து இருக்கையில் உலகம் அவனுள் ஐக்கியம் ஆவது
.
ஒரு கோபி கண்ணனின் பின் சென்று மற்றவர்கள் அவன் மேல் நீரைப் பீச்ச வசதியாக அவனை கெட்டியாகப பிடித்துக் கொண்டாள். இதை தேசிகர் கோபால விம்சதியில் அப்படியே எதிர் மறையாகக் கூறுகிறார் . அதாவது கண்ணன் ஒரு கோபியின் பின் சென்று அவளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான என்று.
இவர்களின் ஜல்க்ரீடைக்குப் பின் யமுனையே மனித உருவில் வந்து அவனைப் பூஜிக்க அப்சரச்த்ரீகள் அவனை அலங்காரம் செய்தனராம். எவன் நம்மை சம்சாரமாகிய கடலில் இருந்து காப்பர்ருகிரானோ அவன் நீரிலிருந்து வெளிவந்தான் என்கிறார் தேசிகர்.பின்னர் எல்லோரும் கோகுலம் திரும்பினர். கண்ணன் காளை வடிவில் வந்த அரிஷ்டாசுரனைக் கொன்றதைக் கூறுவதுடன் கண்ணனின் ப்ருந்தாவன லீலை முடிவுறுகிறது.
யாத்வாப்யுதயம் பகுதி 1 முடிவுற்றது.
No comments:
Post a Comment