Sunday, July 7, 2024

Soorpanakha's revenge on Ravana -Spiritual story

#பதிபக்தியில்_சிறந்த_சூர்ப்பனகை:
      #சூர்ப்பனகையின்_வஞ்சம்:
         இராமாயணத்தில் கொடிய இராட்சதன் இராவணனின் தங்கையாக வரும் சூர்ப்பனகையை கொடிய அரக்கியாகவும், ஏற்கனவே திருமணமான இராமரின் மேல் ஆசைப்பட்டு சீதையை அழிக்க நினைத்து இலட்சுமணரால் மூக்கறுபட்டவளாகவுமே நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் அவள் தன் கணவனான வித்யுத்ஜிகவனின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள் என்பதும், இருவரும் மிக அன்பாக வாழ்ந்து வந்தனர்! என்பதும் இராவணன் தான் அவளது காதல் வாழ்வை அழிந்தான்! என்பதையும் நாம் அறிவோமா? 
            தனது பிரியமான தங்கையான சூர்ப்பனகையை, வித்யுத்ஜிகவனுக்கு மணம் செய்து கொடுத்த இராவணனனே தனது ஆணவத்திற்காகத் தங்கையின் கணவனையே சற்றும் ஈவு இரக்கமின்றி கொன்றான். தன் பெருமையை நிலைநாட்ட திக்விஜயம் செய்து தேவர்களையும், கந்தவர்களையும் வென்ற அரக்கன் இறுதியாகக் காலகேயர்களை எதிர்க்க நினைத்தான். #காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு பிரிவினர் . இவர்கள் பொன்னிறமான நிறத்தை உடையவர்கள். இராவணனனைப் போன்று பிரம்மாவிடம் அளவற்ற வரத்தைப் பெற்றவர்கள்; மனிதர்களைத் தவிர வேறு யாராலும் வெவ்ல முடியாது என வரம் பெற்றவர்கள்.
          இராவணனால், காலகேயர்களை வெல்ல இயலாது; அது அவனுக்கும் தெரியும். இருப்பினும் வீண் கர்வத்திற்காகக் காலகேயர்களை எதிர்த்தான். அப்பொழுது காலகேயர்கள் அங்கில்லாததால், அவர்கள் சார்பாகச் சேனாதிபதியானன #வித்யுத்ஜிகவன் இராவணனை எதிர்த்தான். போரை நிறுத்தி விட்டு திரும்பிச் செல்ல மனமின்றி வீணான அகம்பாவத்தால் இராவணன் இரக்கமின்றி தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான். 
         செய்தியறிந்து அரண்மனை அந்தபுரத்திலிருந்து ஓடோடி வந்து சூர்ப்பனகை கதறி துடித்து அழுது புரண்டாள். தங்கையின் வாழ்க்கையை அழித்த மனவுறுத்தலின்றி தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தான் ஈவுஇரக்கமற்ற கொடிய இராவணன். உன்னைக் கொன்றவனை நான் கொல்வேன். என்னால் நேரடியாக முடியாவிட்டாலும் தகுந்தவரைக் கொண்டு இராவணனை அழிப்பேன்! என மனதினில் சபதமேற்றாள் சூர்ப்பனகை. 
            பிறகு நடந்ததெல்லாம் சிறந்த மதியூகியான சூர்ப்பனகையின் சூழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி. மானிடரால் தான் இராவணனைக் கொல்ல முடியும் என உணர்ந்தாள்; தனக்கு நல்லது செய்வதுப் போல் நாடகமாடி தன்னைத் தேற்றி கர தூஷணர்கள் ஆண்டு வந்த பஞ்சவடி பகுதிக்கு அனுப்பிய அண்ணனின் பேச்சை ஏற்றதுப்போல் நடந்துக்கொண்டாள் சூர்ப்பனகை. 
தக்கக் காலத்திற்காகக் காத்திருந்தாள் கரியத் திருமேனி அண்ணல் இராமரைக் கண்டு ஆசைக் கொண்ட சூர்ப்பனகை, இலட்சுமணரால் மூக்கறுபட்டாள்.
         இராவணனின் ஆணைப்படி அப்பகுதியை ஆ ண்டு வந்த தன் சகோதர்களான கர, தூஷண,திரிசிரஸிடம் தனக்கேற்பட்ட அவமானத்தைக் கூறினாள். சூர்ப்பனகை. பெரும் படையுடன் வந்தவர்களை தனியாக நின்று இராமர் அழித்ததைக் கண்ணாரக் கண்டவள், இராவணனைக் கொல்ல சரியான நபரைக் கண்டுவிட்டேன்! எனச் சூர்ப்பனகை, உள்ளத்தில் உறுதிக் கொண்டாள். 
            உடனடியாக இலங்கைக்குச் சென்று நடந்ததை அப்படியே சொல்லாமல், மாற்றி சொன்னாள் சூர்ப்பனகை. உனக்கேற்ற அழகியென சீதையைத் தூக்கிவர முயன்றபோது, இராமனின் தம்பி எனது மூக்கைஅறுத்துவிட்டான்; எனவே இராமனைப் பழிவாங்கச் சீதையை நீ தூக்கி வந்துவிடு! எனச் சீதையின் மீது இராவணனுக்கு ஆசை ஏற்படும்படி சூர்ப்பனகைச் செய்தாள். இராவணன் மீதான தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள, இராமரை, இராவணனுக்கு எதிரியாக்கினாள் சூர்ப்பனகை.   
          தன் அண்ணனான குபேரனின் மருமகளான ரம்பையை மானபங்கப்படுத்திய கொடியவனே! நம் அண்ணன் இராவணன்! என அறிந்தவள் அல்லவா? சூர்ப்பனகை. விருப்பமில்லாதப் பெண்ணை இனி நீ தொட்டால் தலை வெடித்துச் சாவாய்! என #ரம்பை, கொடிய இராட்சதன் இராவணனைச் சபித்தாள். இதனாலேயே அவன் சீதையைத் தூக்கி வந்தபின்னும் தொடவில்லை. மரணத்திற்கு அஞ்சியே சீதையைத் தொட அஞ்சினான்! இராவணன். * சில அறிவுஜீவிகள் சொல்வது போல அது அவனது நற்பண்பல்ல; உயிர்ப் பயம்!.
       எனவே அரக்கிக்கு நம் அண்ணன் பெரும் பெண்பித்தன் என்பதுத் தெரியும். எனவே சீதையின் அழகைப் பலமடங்கு வருணித்தாள் சூர்ப்பனகை; சீதையை நீ அடையாவிடில் உன் பெருமைக்கு இழுக்கு! எனத் தூண்டிவிட்டாள். அவள் விரித்த வலையில் மாட்டிய பெண்பித்தனான இராவணன், போரில் இராமரால் கொல்லப்பட்டான். இராவணன் இறந்ததைக் கண்ணாரக் கண்டுக் களித்தச் சூர்ப்பனகை, மனதார #இராமரையும்_சீதையையும்_வணங்கி விட்டு #தன்_சபதம்_முடிந்தத்_திருப்தியில் எங்கோ சென்றாள். தனது சகோதரனான விபீஷணனின் ஆட்சியின் கீழ் அவள் இருக்கவில்லை; இராவணன் ஆட்சி செய்த எந்த இடத்திலும் அவள் இருக்க விரும்பவில்லை. 

#கம்பராமாயணத்தில்
#இராவணன்_வதைப்படலத்தில் __
இராவணன் மாண்டதும், சகோதரப் பாசத்தால் #வீபீஷணன் புலம்புகிறான்__

"கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்; 
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி; நெடும்பாரப் பழி தீர்ந்தாளே..."

"பல்லால் நாக்கைக் கடித்துக் கொண்டு பழி தீர்த்துவிட்டாள் சூர்ப்பனகை..." 

__ என்று விபீஷணன் புலம்பினான் என்றால், சூர்ப்பனகைத், தன் கணவனைக் கொன்ற இராவணனைத் திட்டமிட்டு அழித்துவிட்டாள்! என்பதை விபீஷணனே ஏற்றுக்கொண்டான் என்பதாகும். இத்தகவல் வால்மீகிராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் வரும் பகுதியாகும். கம்பர், உத்தரகாண்டத்தை எழுதவில்லை என்றாலும் இராவணன் வதைப் படலத்தில் இந்தத் தகவலை வைத்து பாடியிருக்கிறார்! என்றால் இதன் முக்கியத்துவம் நமக்குப் புலனாகும். அப்படியானால் தன் சகோதரி சூர்ப்பனகை, தன் கணவனைக் கொன்ற இராவணனைப் பழி தீர்த்து விட்டாள்! என்பதை விபீஷணனே ஒத்துக்கொண்டான்! என்பதைக் கம்பர் மறைமுகமாக இப்பாடலில் வைத்திருக்கிறார்.
            உலகிற்குக் கொடிய அரக்கியாகத் தெரிந்தாலும் அவளதுப் பதிபக்தியும் , மதியூகமும்,பழி தீர்த்த மனவுறுதியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வழக்கம் போல் உண்மையை மூடி மறைத்து அனைவரும் வெறுக்கும்படி செய்யப்பட்ட பரிதாப ஜீவனே அரக்கி சூர்ப்பனகை. பிராமணக் குலத்தில் பிறந்துக் கொடிய இராட்சதனாக வாழ்ந்த இராவணனைப் புகழவும் சிலர் இருக்கையில் உண்மையை எவ்வாறு உலகறியும்? இது வால்மீகி முனிவர் எழுதிய இராமாயண உத்தர காண்டத்தில் இருந்து எடுத்தத் தகவல்.
       #ஜெய்ஸ்ரீராம் 🙏
__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment