Saturday, July 27, 2024

M aka Mahendra nath Gupta

Courtesy: Sri. JK. Sivan
பார் போற்றும் பரம ஹம்ஸர் - 
நங்கநல்லூர்  J K  SIVAN 

  ''M ''  யார்  தெரியுமா?  -  

இவரை  ஜேம்ஸ் பாண்ட்  கதையில் தேட வேண்டாம்.  ஜே  என்கிற  அனந்தராம கிருஷ்ணனை போல  தொழிலதிபரும் இல்லை.   நீளமான தன்னுடைய  பெயர்  அவ்வளவு  மதிப்புக்குரியது அல்ல, பெருமைப் பட நான் ஒன்றுமே  செய்யவில்லையே  என்ற  அதீத  தன்னடக்கத்துடன் அதிகம் தன்னைப்பற்றி ஒன்றும் சொல்லிக்கொள்ளாத  மேதை. இன்று நமக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்  பற்றி தெரிகிறது என்றால்  உலகத்துக்கே  அவரது பெருமையை மஹிமையை வெளிப்படுத்தியவர் மஹேந்த்ரநாத் குப்தா.  அவர் தான்  M.  ராமக்ரிஷ்ணரைப் பற்றிய அவர் எழுதிய  உலகப்ரஸித்த நூல் தான்  GOSPEL  OF  SRI  RAMAKRISHNA.  பகவான் ராமகிருஷ்ணரைபற்றி  அவரது தக்ஷிணேஸ்வர வாழ்க்கை வரலாறு எல்லாம் சொல்கிறேனே  அதெல்லாம்  இந்த அற்புத நூலைப் படித்து விட்டு தான்.    இதற்கு மூல காரணமாக அமைந்த M  பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். 

ராமகிருஷ்ணரின் நெருங்கிய சிஷ்யர்களில் ஒருவர்   மஹேந்திரநாத் குப்தா.  அவர் எழுதி வைத்த நாட்குறிப்பு  தான்  மேலே சொன்ன  GOSPEL .   தக்ஷிணேஸ்வரத்தில்  ஆலயத்தில்  அன்றாடம்  ராமக்ரிஷ்ணரை தரிசிக்க யார் யார் வந்தார்கள் பேசினார்கள், பகவான் என்ன சொன்னார்  செய்தார்  என்ற விவரங்கள் வெளி உலகத்துக்கு வர முக்கிய காரணம் ஸ்ரீ மஹேந்த்ரநாத் குப்தா.  தன் அடக்கமாக  தன பெயரின் முதல் எழுத்தான  M  என்று மட்டுமே தன்னைக் குறிப்பிட்டு  ராமக்ரிஷ்ணரோடு இணைந்த தனது குறிப்புகளை  'GOSPEL   புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவர் தாய்மொழி  வங்காளியில்  இது  முதலில்  'ராமகிருஷ்ண கதாம்ருதா'  என்று வெளிவந்தது.  அபூர்வமான தகவல் நிரம்பிய புத்தகம் அது. பலமுறை படித்திருக்கிறேன். கொஞ்சம் உங்களோடும்  அப்பப்போ பகிர்ந்து கொள்கிறேன்.

1854ல் பிறந்த  M  கல்கத்தா ப்ரெசிடென்சி காலேஜில் படித்தவர்.  சமஸ்க்ரிதம்  ஆங்கிலம் தகற்றவர்.  ஹிந்து சனாதன தர்மத்தை  அறிந்ததோடு விடாமல்  பிற  மதங்களையும் பற்றி தெளிவாக அறிந்தவர். பல பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.  ஈஸ்வர சந்திர வித்யாசாகர்,  சுரேந்திரநாத் பானெர்ஜி  போன்றவருடன் நெருக்கமான நண்பர்.

 அந்த காலத்தில் அநேகமாக  எல்லோரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள்.   ஏதோ மனக்கசப்பு  காரணமாக  குடும்பத்தை விட்டு  ஒரு நள்ளிரவு  வெளியேறிய M  கல்கத்தா  பரநகரில்  இருந்த  தனது சகோதரி வீட்டில் தங்கினார்.  நிம்மதி இல்லை. 
கல்கத்தாவில் எங்கெங்கோ  அலைந்தவர்  ராமகிருஷ் ணரை பற்றி கேள்விப்பட்டு  தக்ஷிணேஸ்வரம்  வந்தார்.    ரோஜா தோட்டங்களில் சுற்றிவிட்டு  ராமகிருஷ்ணர் வசித்த அறைக்கு வருகிறார்.  அது 1882ல்   மார்ச்  மாதம் ஒரு ஞாயிறு .அன்றுமுதல் என்ன நடந்தது  என்பதை  ஒரு நேர்காணலாக  அறிவோம். 

தக்ஷிணேஸ்வரத்தில்   அம்பாள்  பவதாரிணி காளி  கோவிலில்  தங்கியிருந்த  ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு மர சாய்வு நாற்காலியில் கிழக்கே பார்த்தவாறு  சிரித்த முகத்தோடு அமர்ந்திருக்கிறார்.  எதிரே நிறைய பேர் உட்கார்ந்து அவர் பேசுவதைக்  கேட்டுக் கொண்டிருக் கிறார்கள்.  

அவரைப்பார்த்ததும்  M க்கு  தனக்குள் ஒரு  மிகப்பெரிய மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார்.  அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ''இது என்ன ஆச்சர்யம்.  நான் எதிரே பார்ப்பது சுக தேவரா, சைதன்யரா?'' பேச்சே வர வில்லை M க்கு.  பகவான் ராமகிருஷ்ணர் மற்றவர் களோடு பேசிக்கொண்டிருந்தார்:

பகவான்:  ''ஹரி, ராமா  என்ற பெயரை சொன்னாலே, கண்கள் நீரால் மறைக்கப்படுகிறது. மயிர் கூச்செரி கிறது. எதுவுமே பண்ணவேண்டாம்.  இந்த நாமங்களை சொல்லிக்கொண்டே இருந்தால் போதும்.  சந்தியா காயத்ரியின் கலக்கிறாள். காயத்ரி  ''ஓம்'' எனும் ப்ரணவத்தில்  இணைந்தவள்''

M  தீர்மானித்து விட்டார். இனி இந்த இடத்தை விட்டு, இந்த மஹானை விட்டு பிரிவதில்லை.இவரைச் சந்தித்த கணமே என்னுள் ஏதோ ஒரு மாற்றம்.  ஆனந்தமாக இருக்கிறது. 

பவதாரிணி கிருஷ்ணன்  சந்நிதிகளை  தரிசித்துவிட்டு  ராமகிருஷ்ணரின் அறைக்கு வருகிறார். காவல் 
காக்கும் ஒரு பணிப்பெண்ணை கேட்கிறார் :

 M :  '' ஸ்வாமிகள் எத்தனை வருஷமாக இருக்கிறார் இங்கு?''
''பல காலமாக''  
M : ''என்னென்ன புத்தகங்கள் படிப்பவர். வெகு அற்புதமாக பேசுகிறாரே''

''என்னய்யா  கேட்கிறீர்கள். புத்தகமா"   ஸ்வாமிகள் எந்த புஸ்தகத்தையும் இதுவரை   தொட்டதே இல்லை. நாக்கில் சரஸ்வதி இருக்கும்போது எதற்கு புத்தகம்?''  என்றாள்  அந்த பெண்..

M உள்ளே நுழைந்தார். வழக்கம்போல்  மர நாற்காலி யில் பகவான் ராமகிருஷ்ணர்.

பகவான்:  ''உட்காருங்கள். எங்கே இருக்கிறீர்கள் என்ன உத்யோகம். எதற்கு பரநகர் வந்தீர்கள்?''
தான் சொன்னது  ஏதாவது பகவான் காதில் விழுந்ததோ?'' என்று அதிசயித்தார் M . பகவான் கண்கள் சொருகி இருந்தது. தூக்கமா?  இல்லை அவ்வப்போது நிகழும்  சமாதி நிலை என்று பிறகு புரிந்து கொண்டார்.

M  : ''குருநாதா,  சாயரக்ஷை பூஜைக்கு இடையூறாக இருக்கிறேனா?''
ப:  '' இல்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை . இன் னொரு தரம் வாங்களேன்''
M : ''ஏன் நான் இப்படி காந்த சக்தி இரும்பு கம்பியை  இழுப்பது போல் இருக்கிறேன். ''இன்னொரு தரம் வா''  என்றா  சொன்னார் என்னைப்  பார்த்து.    நிச்சயம் நாளையே அவரை பார்க்க போகவேண்டும்''

  வழியெல்லாம் இதே நினைவு M க்கு.   மறுநாள்  அவரது  கால் தானாகவே  பகவானை தேடி சென்றது.  காலை
 எட்டு மணிக்கே  போய் பரமஹம்ஸர்  ஆஸ்ரமத்தில்  M  நின்றார்.

பரமஹம்சர்:  ''அட   நீயா  வா  வா. உட்காரு  .இந்த ஊர்லே தானே இருக்கே.  எங்கே வீடு?
M: "கல்கத்தாவில் தான் சுவாமி "
ப :''எந்த இடத்திலே?''
M: "பரநகர் லே  என் அக்கா வோடு தங்கியிருக்கிறேன்.. இஷான் கவிராஜ் வீட்டிலே ஐயா ."
ப:  ''ஓ  தெரியுமே இஷானை.  கேசப் சந்திர சேன்  எப்படி இருக்கார். உடம்பு சரியில்லாம இருந்தாரே''
M: " ஆமாம். இப்போ கொஞ்சம் பரவாயில்லே. ஸ்வஸ்தம் ஆகிண்டு வரார்னு  கேள்விப்பட்டேன். ''
ப:  "நான்  கேசப்  உடம்பு சரியாக போகவேண்டும் என்று அம்மா கிட்டே  தேங்காய் உடைச்சு சக்கரையோட  நைவேத்தியம் பண்ணுறேன்னு  வேண்டிண்டு இருக் கேன்.  சில நாள்  விடிகாலையில் எழுந்து   அம்மா கிட்டே கதறுவேன்.   ''உடனே அவரை  குணமாக்கிடு.  கல்கத்தா போனா  அவர் இல்லை என்றால்  யார் கூட நான் பேசுவேன்?'' என்று  அம்மா கிட்டே  கேட்டேன்?''

ஒரு நிமிஷ  மௌனம்.  பரமஹம்சர் தொடர்ந்தார்.
"உனக்கு   மிஸ்டர் குக்  என்று ஒரு வெள்ளைக்காரர் கல்கத்தா  வருவாரே. அவரை தெரியுமா.  பிரசங்கம் எல்லாம் பண்ணுகிறவர் .  ஒருதடவை  கேசப்   அவரு டைய  படகில் என்னை கூட்டிக்கொண்டு போனபோது   குக் என்கிற  வெள்ளைக்காரரும்  இருந்தார்.''

M: "ஆமாம் ஐயா. குக்  ஒரு  சிறந்த  பேச்சாளி என்று கேள்விப்பட்டதுண்டு. நேரில் கேட்டதில்லை. அவரைப் பற்றி தெரியாது.''
ப:   ''உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?''
M: "ஆமாம்  ஐயா."
 இதை கேட்டதும்  ஏதோ தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது  பரமஹம்சருக்கு.  உடல் நடுங்கியது. '' ஓ  ராமா. இவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம்!'' என தனக்குள்  முணுமுணுத்தார்.

M  இதை கேட்டதும்  ஏதோ  செய்யக்கூடாத தப்பை செய்தது போல்  தலை குனிந்து தரையை பார்த்தார். கல்யாணம்  செய்து கொள்வது  அப்படி  என்ன ஒரு பஞ்சமகா பாதகமா? ஏன்  பகவான்  இப்படி  பேசினார்?

ப:  '' குழந்தைகள் உண்டா?''
M க்கு  ''உண்டு'' என்று  பதில் சொல்லும்போது  அதுவும் ஒரு தவறோ என்று நினைக்க தோன்றியது. பரமஹம் சரும் தனக்குள் அவர்  காதுபட '' ஒ! இவருக்கு குழந்தை களும் உண்டாம்'' என்று  வருத்தமாக சொல்வதுபோல்  தெரிந்தது.

ப :   ' ஒருவரது நெற்றியை, கண்களை பார்த்தாலே  சில ஏதேதோ விஷயங்கள் சொல்கின்றன. சொல்லுங்கள்  உங்கள் மனைவி. எப்படிப்பட்டவள் . ஆன்மீக  பக்தி உணர்ச்சிகள் உண்டா,"''
M :  ''பக்தி உண்டு. ரொம்ப விஷயஞானம் எல்லாம் கிடையாது சுவாமி ''
ப:   ''ஓ ..  நீங்கள் ஞானியோ?''

M  தான் அதிகம் படித்தவர் என்ற எண்ணம் அவர் மனதில் எப்போதும் இருந்தது. ஒரு நொடியில் அது தளர்ந்தது. படிப்பு வேறு  ஞானம் வேறு என்பது புரிந்தது.  பதில் சொல்ல தெரியவில்லை.
 ..................."
 ப:   ''கடவுள் பக்தி உண்டா?
M   உண்டு  என்று பொருள் பட தலையாட்டினார். 
ப: '' உருவத்தோடா, இல்லாமலா? எப்படி நம்பிக்கை உங்களுக்கு

?M  பதில் சொல்லவில்லை.  கடவுள் உருவம் கொண்டவர் என்றால் உருவமில்லை என்பது தவறாகிறது. உருவம் இல்லாதவர் என்றால் எங்கு கடவுள் உருவம் கண்டாலும் அது இல்லை என்றாகிறது. ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே. பால் வெள்ளை திரவமாக இருப்பதை கருப்பு என்று எப்படி  ஏற்பது ?

M   ''ஐயா  கடவுள்  அருவமானவர்'' என்று நம்புகிறேன் ''

ப:  ''நல்லது.எதிலோ ஒன்றில் நம்பிக்கை தான் அவசி யம்.  அருவம் என நம்பும்போது உருவமுள்ளவர்  என்பதில் தவறு காண வேண்டாம். உங்களது நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்''.

M  அசந்து போனார். எந்த புத்தகத்திலும் இதை அவர் இதுவரை படிக்கவில்லையே. குருநாதர் மீது பக்தி வலுப்பட அவரை இன்னும்  கொஞ்சம் சீண்டிப்பார்க்க முற்பட்டார். அப்போது தானே அவரை புரிந்து கொள்ள முடியும்.

M: "குரு மஹராஜ்.  கடவுளுக்கு உருவம் உண்டு என்றால்  அவர்  வெறும் களிமண் பொம்மை  மட்டும் இல்லை யே?"'
ப: '' ஏன் களிமண்ணாக பார்க்கிறாய்.  தெய்வீக சக்தி யின்  உருவாக பார்க்கலாமே''
M:   ''இப்படி உருவ வழிபாடு செய்பவர்களுக்கு  ''கடவுள் மண் பொம்மை இல்லை. இதன்  மூலம் தான்  கடவுளை  உணரவேண்டும். மண்ணை மட்டுமே  கடவுள் என்று வழிபடாதீர்கள் என்று  சொல்லவேண்டுமில்லையா.''

ப: '' கல்கத்தா காரர்கள் இப்படித்தான்.  மற்றவருக்கு நீட்டி முழக்கி பேசுவது வெளிச்சம் காட்டுவது. தான் ஒளி தேடாமல் அடுத்தவருக்கு உபதேசிக்க அவர்கள் யார் ?  சர்வ லோக நாயகன், மாதா  சொல்லட்டுமே. இந்த உலகத்தில்  உள்ள அனைத்தும், சூரியன் சந்திரன், நக்ஷத்திரம் மனிதன் விலங்குகள் எல்லாம் படைத்த வனுக்கு தன்னை எப்படி வழிபட வேண்டும் என்று சொல்லத்தெரியாதா?  சொல்ல மாட்டானா. வழி காட்ட மாட்டானா. குருவாக மாட்டானா? நாம் யார் சொல்ல?'  செய்வது தவறு என்றால் அவனல்லவோ வழிகாட்டு வான்.  நீ பேசாமல் பக்தியும் ஞானம் பெற முயற்சி செய்''

 M  மனதில் புயல் வீசியது.  ''அவர் சொல்வது தான் சரி. தன்னை களிமண்ணாக காணவேண்டாம் என்று சொல்லாமல் ஏன் ஏற்றுக் கொள்கிறான். அருள் பாலிக்கிறானே.  எனக்கு  எதற்கு இந்த வேண்டாத வேலை. தலைவலி. முதலில் ஞானத்தை தேடுகிறேன். பக்தியை வளர்த்துக்கொள்கிறேன்.  நான் கடவுளை  கண்டிருக்கிறேனா? அவர் மேல் அன்பு உண்டா எனக்கு?  என் படுக்கையில் எனக்கே படுக்க இடமில்லை. மற்றவர்களுக்கு உபச்சாரமா?நான் உபதேசிப்பதா. இது என்ன வெறும் கணக்கா, சரித்திர பாடமா, இலக்கியமா என்ன? அறிவுபூர்வ தேடல்.  ஆம்  குரு சொல்வது எனக்கு புரிகிறது.''

இந்த சம்பவம், நடந்த உரையாடலுக்கு,  பிறகு  குரு நாதர்  முன்பு  M  வாயே திறக்கவில்லை.

இன்னும் சொல்கிறேன்:

No comments:

Post a Comment