Wednesday, June 19, 2024

Vaishnavism and tamil

*வைணவமும் தமிழும் - 4*

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்

பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

4. *பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:*

இப்பகுதியில் அடங்கிய நூல்களை நோக்குவோம்.

*(அ) திருக்குறள் :*

 இஃது உலகப் பொது மறையாகக் கருதப் பெறுவது. இதில் வரும் வைணவம் பற்றிய குறிப்புகளை, (1) இறைவன் பெயர்கள் (2) அவதாரங்கள் (3) இருவகை உலகுக்கும் தலைவன் என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம். (1) 

இறைவனின் பெயர்கள் : முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்னும் பெயரை நோக்குவோம். இதனை ஆதியாகிய பகவன் என்று ஒரு பெயராகவும் ஆதியும் பகவனும்
என்று இரு பெயராகவும் கொள்ளலாம். 

சிவஞான சித்தியார் பரபக்கம் பாஞ்சராத்திரி (வைணவ) மதமறுதலையில் "ஆதியாய் அருவுமாகி" என்ற செய்யுளாலும் "பாஞ்சராத்திரி நீ உன் கர்த்தாவை ஆதி என்று கூறினாய் அங்ஙனம் ஆதியாயின் ஆதிக்கு முடிவுண்டாய் கர்த்தாவும் அல்லனாவான்' என்ற அதன் உரையாலும் 'ஆதி என்ற பெயர் திருமாலுக்கு உரிய பெயராகும்.

'ஆதிமூலம் என்ற பெயரும் நோக்கற் பாலதாகும். நம்மாழ்வாரும் 'அந்தமில் ஆதியம் பகவன் என்பர்.

*பகவான் அருளிய கீதை பகவத்கீதை பகவான் வரலாறு கூறும் நூல் பாகவதம், பகவான் அடியார்கள், பாகவதர்கள் எனும் வழக்காறுகளால் 'பகவத்கீதை' 'பாகவதம்' 'பாகவதர்' எனும் பெயர்களுக்கு மூலமாகிய பகவான் என்ற சொல் திருமாலுக்கே உரிய பெயரைக் குறிக்கின்றது என்பது உறுதி.*

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

என்னும் குறட்பாக்களில் இறைவன் என்னும் சொல் உள்ளது. இறைவன் என்பதற்கு எல்லாப் பொருள்களிலும் தங்குகின்றவ்ன் என்பது பொருள். 

இது 'நாராயணன் 'விஷ்ணு', 'வாசுதேவன் எனும் பெயர்களின் தமிழ் வடிவமாதலை உணரின் இறைவன் எனும் சொல் திருமாலுக்கே உரியதாம்.


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)

என்பதில் காணப் பெறும். ஐந்தவித்தான் எனும் பெயர் ரிஷிகேசன்' (இருடிகேசன்) என்ற திருநாமத்தின் தமிழ் வடிவமாகும். 

ரிஷிகம்-இந்திரியம்: இந்திரியங்களின் தலைவன் என்னும் பொருளுடையது. அவித்தல் என்பது ஈண்டுத் தன் வயமாக்குதல் என்னும் பொருளைத் தரும். ஓராயிரமாய் உலகேழிற்கும்-பேராயிரம் கொண்டதோர் பீடுடைய திருமாலுக்குச் சிறந்தனவாய் திருநாமங்கள் 'பன்னிரு திருநாமம்' எனப்படும். 

அவற்றுள் 'ரிஷிகேசன்' என்பதும் ஒன்று. ஆகவே, பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது திருமாலுக்கு உரியதேயாகும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (8)

என்பதனுள் வரும் 'அறவாழி அந்தணன்' என்பதும் அறவனை ஆழிப்படை அந்தணனை, 'அறமுயல் ஆழிப்படையவன்' என்னும் திருவாய்மொழித் தொடர்களால் திருமாலுக்கு உரியது என்று உணரலாம்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)

என்பதில் எண்குணத்தான்' 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள்படும். இஃது இப்பொருளாதலை,

எண்பதத்தான் ஒரா முறை செய்யா மன்னவன் (548)
எண்பதத்தால் எய்தல் எளிதென் (991)

என்பவற்றில் இவற்றின் சொற்பொருளால் அறியலாம். 'எளிவரும் இயல்வினன்' (1;2;3) "யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்(1;3;4) எனவரும் திருவாய்மொழித் தொடர்களால் உறுதியாகும். 

மேலும் இறைவனின் திருக்குணங்களுள் செளலப்பிய குணம் (சுலப குணம்) என்பதனை அடியார்கள் சிறப்பித்துக் கூறுவதும் இதனை வலியுறுத்தும்.


தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)

என்பதில் தாமரைக் கண்ணான் என்ற பெயர் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்துக்கும் இல்லாமை உய்த்தறியத்தக்கது.

(2) *அவதாரங்கள்*

எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் எண்ணற்றவை. அவற்றுள் பத்து அவதாரங்கள் மிகு புகழ் வாய்ந்தவை. 

ஆனால் திருக்குறளில் குறிப்பிடப்பெற்றவை மூன்று அவதாரங்களே. 

அவை இராமாவதாரம், கிருட்டினா அவதாரம், திரிவிக்கிரமாவதாரம். 

நீதியை உரைக்க வந்த திருக்குறளில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் இவற்றைக் காட்டியுள்ளதை நோக்கின் திருவள்ளுவரின் சமயம் இன்னதென்பதை உணரலாம். 

திருமால் இராமாவதாரத்தில் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையைத் தாமே நடத்திக் காட்டினார். 

அங்ஙனம் நடந்து காட்டிய ஒழுக்க நெறி ஒன்று. கிருட்டிணாவதாரத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் எங்ஙனம்? என்பதை உபதேசவாயிலாகச் (பகவத்கீதை) சொன்ன ஒழுக்கநெறி மற்றொன்று இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்க நெறி எனவும், கண்ணனாக வந்து சொல்லியருளிய ஒழுக்க நெறி எனவும் இரட்டுற மொழிதல் என்னும் உத்திவகையால்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)
என்னும் குறளில் திருமாலின் இரண்ட வதாரத்தையும் கட்டுதல்
அறியலாம். 

கிருட்டினாவதாரத்தில் துரியோதனனிடம் "படை எடேன் அமரில் எனப் பணித்ததை" மீறி வீடுமனின் விருப்பிற்கிணங்க அவன் நடத்திய போரில் 'ஆனதெனக்கினியாக எனத் தனியாழி எடுத்தமையும் பொய்யே அறியா' தருமனை 'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது' எனத் துரியோதனன் செவிபடச் சொல்லச் செய்து அதற்குத் துரியோதனன் வேறு பொருள் கொள்ளுமாறு மயங்கச் செய்தமையும், பிறந்த பொழுதே இறந்த நிலையில் இருந்த பரீட்சித்து, பெண்களை நோக்காத பேராண்மையையுடைய ஒருவன் திருவடியால் உய்வான் எனக் கண்ணபிரான் உரைக்க, அந்நிலையில் யாவரும் முன் வராமை கண்டு 'யானே பெண்களை நோக்காதவன்' எனத் தன் திருவடியைப் பதிய வைத்து அவனைப் பிழைக்கச் செய்தமையும் முதலிய வரலாறுகளை மனத்திற் கொண்டே,

வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)

என்ற திருக்குறளைக் கூறினர் எனக் கருதலாம்.

 'புரை தீர்ந்த நன்மையைப் பொய்மை பயவாது, அங்ஙனம் பயக்கின்ற அப்பொய்மையும் வாய்மை இடத்த' என்று கூற வந்தது. கண்ணபிரானின் வரலாற்றை நோக்கியே எனக் கருதலாம்.

*'இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும் நமக்குத் தஞ்சம்'* எனும் வைணவ சம்பிரதாய ஆன்றோர் வாக்கும் இதனை அரண் செய்யும்.


திருமால் திருக்குறள் அப்பனானபின் 'மண்முழுவதும் அகப்படுத்து நின்ற பேருருவத்தைத் திரிவிக்கிரமன்' என்பர்.


விக்கிரமம்-பெருவலி, திரிவிக்கிரமம்-மூவகைப் பெருவலி, இதனை அறியாது ஒருசிலர் 'திருவிக்கிரமம்' என்று பிழைபட எழுதுவர். 

முதலாவது உலகளந்தது; அடுத்தது விண்ணளந்தது. மூன்றாவது மாவலித் தலையில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதளத்தில் ஆழ்த்தியது. 

எனவே, இவ்வகையான மூவகைவலியையும் காட்டுவதற்காகவே 'உலகளந்தான்' எனக்கூறாது 'தன்னடியாலே எல்லா உலகங்களையும் அளந்தான்' எனப் பொருள் கொள்ளுமாறு ,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

என விளக்கிய நுட்பம் உணரத் தக்கது.

முன்னம் குறளுருவாய்
மூவடிமண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே
மாலாகிப் பொன்பயந்தேன்-(பெரி.திரு. 9.4:2)
என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் இவ்வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. 

எனவே இராமன், கண்ணன், வாமனன் எனும் மூன்று அவதாரங்களையும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

(3) *இருவகை உலகுக்கும் தலைவன்"

நாம் வாழும் உலகு மண்ணுலகு. வானவர் வாழும் உலகு வானுலகு. "இருள்சேர்ந்த இன்னா உலகு" 'அளறு ஆரிருள்' எனப்படும் கீழுலகு -இவையாவும் மக்கள் பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கும் விளையாட்டுலகு எனவும், இறைவனுடைய விளையாட்டுலகம் எனவும் பொருள்படுமாறு இவ்வனைத்துலகையும் 'லீலாவிபூதி' என்பர். எம்பெருமானும் அவன் அடியார்களும் நித்தியமாய்
இன்பத்தோடு வாழும் உலகு 'முக்தி உலகு'. இதனை 'நித்திய விபூதி' என்பர். இவ்வாறு கூறுவது வைணவமரபு. இருவகை உலகிற்கும் தலைவன் திருமாலே என்பதைக் குறிக்கத் திருமாலை 'உபயவிபூதி நாதன்' என்பர் ஆன்றோர்.

4 (அ) *திருக்குறள்*

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி'
பகவன் முதற்றே உலகு (1)

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

எனும் இருகுறள்களால் இவ்வுலகிற்கு அவன் தலைவன் என்பதனை விளக்கினார்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய '(முக்தி) உலகு' எனக் குறித்தலால் 'அந்தமில் இன்பத்து அழிவில்வீடு', 'நலம் அந்தம் இல்லதோர் நாடு', 'வானோர்க்குயர்ந்த உலகு' என்றெல்லாம் ஆழ்வார்கள் சிறப்பித்துக் கூறும் நித்திய விபூதிக்கும் திருமாலே தலைவன் என்பதைக் கூறினர். எனவே 'உபயவிபூதிநாதன்' திருமாலே என உறுதி செய்தாராயிற்று.

இம்முக்தியுலகிற் சென்றவரை 'புனை கொடுக்கிலும் போக ஒட்டார்' என்றபடி அவ்வுலகிலேயே நிலைபெறுவாரன்றி ஈண்டுத் திரும்பிவாரர் என்பது வைணவ சமயக் கோட்பாடு. 

இதனை

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (356)

என்று விளக்கினார் என்பது சிந்திக்கத்தக்கது.

(ஆ) *திருவள்ளுவமாலை:*

இதில் இரண்டு பாடல்கள் உள்ளன.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் வாலறிவின்
வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாம்.அளந்தார் ஒர்ந்து (6)
இது பரணர் பாடியது, 

இதில் திரிவிக்கிரமாவதாரக் குறிப்பு உள்ளது. திருமால் தன் இரண்டு அடிகளால் புறஉலகத்தை விரும்பி அளந்தார். 

வள்ளுவர் அவ்வுலகோரின் அக உலகையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்திர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்
மாதாது பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு (21)

இப்பாடலை நல்கூர் வேள்வியார் பாடியது உபதேசிநப்பின்னை என்றும், அவள் தோள்மணந்தான் கண்ணபிரான் என்றும், உத்தர மாமதுரை அவன் அவதரித்த வடமதுரை என்றும் மாதாநுபங்கி செருக்கொழில் உடையான் என்றும் பொருள் உரைப்பர்.

No comments:

Post a Comment