*வேதத்தில்* *நட்சத்திரங்கள்* 🔯
ரோஹிணி ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவின் பிறப்பால் அளவற்ற ஏற்றம் கொண்ட நட்சத்திரம்.
ப்ரஜாபதி என்றழைக்கப்படும் பரமாத்மாவையே தேவதையாகக் கொண்ட இந்த நட்சத்திரத்தை தேவர்கள் மிகவும் விரும்புகிறார்களாம்
""ப்ரியா தேவானாம்" என்கிறது வேதம்.
கண்ணன் ரோஹிணியில் பிறந்தான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது ஸ்ரீமத் பாகவத புராணம்.
ஆனால் ஆழ்வார்கள் வேறு விதமாக பாடு கிறார்கள்.
ஸ்ரீ பெரியாழ்வார் தனது திருமொழியில் கண்ணனை நோக்கி ""நீ பிறந்த திருவோணம்" என்கிறார்.
""திருவோணமாகிய இன்று உனக்கு பிறந்தநாள். இன்றாவது நீ நீராட வேண்டாமா!" என்று யசோதைப் பிராட்டி கண்ணனிடம் மன்றாடுவதாக பாசுரமிடுகிறார் பிள்ளைத்தமிழ் பாடுவதில் முன்னோடியான பெரியாழ்வார்.
இன்னும் சில பாசுரங்களிலும் திருவோணமே குட்டிக் கண்ணனின் தாரகை எனக் கூறப்ப ட்டுள்ளது.
""திண்ணார் வெண் சங்குடையாய்! நீ பிறந்த திருவோணம்",
""அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்" (ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் பத்தாவதாக வருவது திருவோணம்).
நமக்குக் குழப்பமாக உள்ளது.
புராணம் பொய் சொல்லாது; ஆழ்வார்களோ மாசற்ற மதிநலம் உடையவர்கள்.
அப்படியானால் கண்ணன் தோன்றியது ரோஹிணியிலா? திருவோணத்திலா?
உண்மை என்னவென்றால் ச்ரவண (திருவோண) நட்சத்திரத்தை எம்பெருமானுடைய சொந்தத் தாரகையாகக் கொண்டாடுகிறது வேதம்.
இதற்கு அதிபதி ஆதிமூலமான மஹா விஷ்ணுவே ""ச்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணு: தேவதா" என்கிறது வேதம். .
ஆகையால் இறைவன் எந்த அவதாரம் எடுத்தாலும் அந்தத் தாரகை திருவோணத்தின் அம்சமாகவே கொள்ளப்படுகிறது.
இதற்கு இன்னொரு உதாரணம் நரசிம்ஹ அவதாரம். சிங்கப்பிரான் தோன்றியது ஸ்வாதி நக்ஷத்திரத்தில் .
ஆனால் பெரியாழ்வாரோ நரசிங்கன் அவதரித்தது திருவோணத்தில் என்கிறார்.
""திருவோணத் திருவிழாவில் அந்தியம் பொழுதில் அரியுருவாகி அரியை அழித்தவன்".
ஆக, எம்பெருமான் எந்த நட்சத்திரத்தில் தோன்றி னாலும் அது திருவோணமாகவே பாவிக்கப்ப டுகிறது.
வாமனனாகவும் ஹயக்ரீவனாகவும் அவதாரம் செய்த போதும் பெருமாள் தேர்ந்தெடுத்தது திருவோணத்தைத் தான்.
புண்ணியத்துக்கே இருப்பிடமாக வேதத்தால் போற்றப்படுகிறது திருவோணம். இதன் கீழ் பிறந்தவர்கள் பெருமையும் வலிமையும் மிக்கவராய் உலகையே ஆளும் திறன் படைத்தவராய்த் திகழ்வர் என்கிறது திவ்யப்ரபந்தம்
""திருவோணத்தான் உலகாளும் என்பார்களே."
மஹிமை பொருந்திய மற்றொரு நட்சத்திரம் புணர்வஸு ஆகும்.
ரகுகுல திலகனும் ஆதர்ச புருஷனுமான ஸ்ரீராமன் தனது தோற்றத்தால் பெருமைப்படுத்திய தாரகையான புனர்வஸுவின் அதிதேவதை இமையோர்களுக்கெல்லாம் தாயான அதிதி. உலகுக்கே ஆதாரமாக இந்நட்சத்திரத்தைப் போற்றுகிறது சுருதி.
நரம் கலந்த சிங்கமாய்த் தோன்றிய நரஸிம்ஹனின் அவதார நட்சத்திரமான ஸ்வாதீ, நம் எதிரிகளைத் தோற்றோடும்படிச் செய்ய வல்லதாம்.
அது மட்டுமல்ல சிங்கப்பிரானின் அருளால் நல்லன அனைத்தையும் அளிக்கவல்ல இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் தான் கருட பகவானும் ஸ்ரீ பெரியாழ்வாரும்.
சிவபெருமானின் பிறப்பால் பெருமை பெற்றது திருவாதிரை.
மூல நட்சத்திரத்தைப் பலர் ஏற்காவிட்டாலும் கல்வித் தெய்வமான ஸரஸ்வதியும் திறன் விளங்கு மாருதியான அநுமனும் தோன்றியது மூலத்திலே தான்.
ஹஸ்த நட்சத்திரம் இறைவனது திருக்கை களாகவும், சித்திரை அவனது சிரமாகவும், ஸ்வாதி கருணை பொங்கும் அவனது இதயமாகவும், விசாகம் அவனது அழகிய துடைகளாகவும் போற்றப்படுகின்றன.
கடைசி நட்சத்திரமாக வேதம் கணக்கிடும் பரணி (அபபரணி.) நினைத்தாலே அச்சமூட்டுபவரும் அழையா விருந்தாளியாக வந்து அனைவரது உயிரையும் பறித்துச் செல்பவருமான யம தர்ம ராஜா, பரணியின் அதிதேவதை.
நட்சத்திரங்கள் 27 என்றுதானே நாமெல்லாம் நினைப்பது?
அல்ல,
28 என்கிறது வேதம்.
உத்திராடத்துக்கும் திருவோணத்துக்கும் இடைப்பட்டதான ""அபிஜித்" என்ற இந்த 28வது நட்சத்திரம், படைப்புக் கடவுளான நான்முகனுக்கே ஊக்கமளித்தபடியால் இத் தாரகையில் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்கிறது வடமறை.
No comments:
Post a Comment