Wednesday, May 22, 2024

Nammazhwar

*இன்று வைகாசி, விசாகம்*  - 22.05.24
*ஸ்வாமி நம்மாழ்வார்* *திருநக்ஷத்திரம்!*

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையிலுள்ள *திருக்குருகூர்* (ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி மாதம், விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!

பிறந்தது முதல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் இவர்   *மாறன்!*

மாயையை உருவாக்கும் 'சட' எனும் நாடியை வென்றதால் இவர் *சடகோபன்*!

யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் இவர் *பராங்குசன்!* 

36 திவ்யதேச எம்பெருமான்களை அந்த உறங்காபுளியின் அடியில் அமர்ந்தவாறே மங்களாசாசனம் செய்துள்ளார்!

 பன்னிரெண்டு ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு மட்டுமே "ஆசார்யர்" என்ற பெருமை உண்டு!  ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் திருமாலிடம் தொடங்கி, பிராட்டி, விஷ்வக்சேனர் ஆகியோர் பரமபத்தில் இருப்பவர்கள்! இந்த பூவுலகில் ஆசார்ய பரம்பரையில் முதலாமவர் நம்மாழ்வாரே!

*ரிக்வேதத்தின்* சாரமாய் 100 பாசுரங்கள் கொண்ட *திருவிருத்தம்*!
*யஜுர்* வேதத்தின் சாரமாய் 7 பாசுரங்கள் கொண்ட *திருவாசிரியம்*!
*அதர்வண* வேதத்தின் சாரமாய் 87 பாசுரங்கள் கொண்ட *பெரிய திருவந்தாதி*!
*சாம* வேதத்தின் சாரமாய் 1102 பாசுரங்கள் கொண்ட *திருவாய்மொழி*!
என்ற நான்கு தமிழ் பிரபந்தங்களை (1296), நான்கு வேதங்களுக்கு ஒப்பாக பணித்து *வேதம் தமிழ் செய்த மாறன்* என போற்றப்பட்டவர்!

*நம் ஆழ்வார்* என அரங்கனால்  அழைக்கப்பட்ட ஸ்வாமி, பெருமாளின் திருவடி நிலை- *ஸ்ரீசடாரியாய்* நமக்கு  ஞானம் அளித்து, நம் துயர் அறுக்கும் சுடரடியாய் அருள்பாலிக்கிறார்!

கோயில் என்றால் திருவரங்கம்!
ஆழ்வார் என்றால் நம்மாழ்வார்!
நம்மாழ்வாரை *அவயவி* (உடல்); என்றும்
மற்ற ஆழ்வார்களை *அவயங்கள்* (அங்கங்கள்) என்றும் போற்றுவர் நம் பூர்வர்கள்!

"வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்!"
-மதுரகவி ஆழ்வார் (கண்ணிநுண் சிறுத்தாம்பு)
-
*வேத தாத்பர்யத்தை தமிழிலே அருளிச்செய்த, அழகிய திருக்குருகூருக்கு தலைவரான, நம் எல்லோரையும் உஜ்ஜீவிக்கின்ற மாறன் என்கிற நம்மாழ்வாரைத் தவிர வேறொன்றையும் அறியேன்!*
🙏🙏

No comments:

Post a Comment